kaaraan book reviewed by senthil kumar நூல் அறிமுகம்: காரான் - இரா.செந்தில் குமார்
kaaraan book reviewed by senthil kumar நூல் அறிமுகம்: காரான் - இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது வாழ்வில் மிக விலை உயர்ந்தது எது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் கவனம் என்று. ஒரு சிறு கவனக்குறைவு நம் வாழ்வையே புரட்டி போடும். அப்படி தான் குருவம்மா வாழ்வையும் ஒரு கவனக்குறைவு சூரையாடுகிறது. நம்மோடு பயணம் செய்த உயிர் நம்முடன் இல்லை என்றால் எவ்வளவு வலியும் வேதனையும் ஏற்படும் என்பதை எழுத்தில் சொல்ல முடிவது சந்தேகமே.

காரான் கதை வழியே அதன் பெயர் காரணம் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் என அவற்றோடு வாழ்ந்த அனுபவத்தை கதை ஏற்படுத்தியது.

ராஜீ முதலாளி தொழிலாளர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டாலும் சென்னையனை அரவணைத்து வேலைக்கு வைத்திருந்தது தனது சுயலாபத்துக்காக தான் என்பதை ஊன்றி வாசித்தால் மட்டுமே புரியும். மேலோட்டமாக வாசித்தால் ராஜீ முதலாளி சென்னையனை நன்றாக உதவி செய்ததாகவே புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் அதற்கு பின்னால் மறைந்திருக்கும் முதலாளித்துவ கோர புத்தி மிக மோசமானது.

ஒரு செடி மரமாக மாறுவதற்கு எவ்வளவு சிரமங்களை சந்திக்குமோ அதை விட அதிக சிரமங்களை சந்திக்கிறார் கமலக்கண்ணன் தனது தையல் தொழிலில். புதுத்தளிர் விட்டு வளர எத்தனிக்கும் சமயத்தில் அதனை உடைத்து போடுகிறது நவீனம் ஏற்படுத்தும் போட்டி . மாறி வரும் நடப்பை புரிந்து கொண்டு தொழிலில் நவீன மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிற்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்கிறது கதை.

கொடிவழி நாவலில் இடம்பெற்ற சில காட்சிகள் பொண்வண்டுக் காலம் கதையாக விரிகிறது. எனது பள்ளி காலத்தை நினைத்து பார்க்க வைத்த அருமையான கதை. பொண்வண்டை காண்பதே எங்களுக்கு அப்போது அரிதானதாக இருக்கும். எப்போதாவது கண்ணில் தட்டுப்படும் அதை பார்க்கவே எங்களுக்குள் போட்டா போட்டி நடக்கும். அதை விலை கொடுத்து வாங்குவது எனக்கு புதியதாக இருந்தது. அந்த கதையின் இறுதி வர்ணிப்புகள் மிக அழகானவை.

தெரு நாய் குட்டி மீது சிறுவர்களுக்கு ஏற்படும் அன்பு அளப்பரியது. அத்தகைய ஒரு அன்பான கதை வெள்ளை வெயில். வறுமை எங்குள்ளதோ அங்கே கொடையாக அன்பு நிரம்பி வழியும் என்பதற்கு இக்கதை ஒரு சான்று. குட்டி நாய்க்கு பால் ஊற்ற பாடுபடும் அசோகன் இறுதி முயற்சியும் தோற்றுப்போக அதற்கு உணவு கிடைத்ததா இல்லையா என்பது ஓர் அதிரடி திருப்பம்.

மிக முக்கியமான கதை காட்டில் பெய்யும் நிலாக்கள். பேருந்தின் இரவு பயணத்தில் நடக்கும் சம்பவத்தின் விவரிப்பு தான் கதை என்றாலும், இது தோழரின் நேரடி அனுபவமாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன். திருநம்பி/ நங்கைகள் மீது சமூகம் கட்டமைத்துள்ள கற்பிதத்தின் பிரதிபலிப்பாக பேருந்தின் எல்லா மனிதர்களும் இருப்பது எதார்த்தம் ஒருவரைத் தவிர. அவருக்கு அந்த கற்பிதம் உடைய பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணமாக நான் கருதுவது வாசிப்பின் வழியே அவர்களின் வலியை உணர்ந்ததால் என்பேன். அந்த கதை குறித்த முன்னுரையில் தோழர் கல்யாண்ஜி மாற்று மருத்துவர் உமர் பாரூக் என்று குறிப்பிட்டு இருப்பார். அதனை மரபு மருத்துவர் என்று தான் கதையில் சரியாக தோழர் குறிப்பிட்டு இருப்பார். அது மாற்று மருத்துவம் அல்ல மரபு மருத்துவம் என்று கல்யாண்ஜி தோழருக்கு தெரியபடுத்தி அடுத்த அச்சில் அதனை திருத்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொரானா காலம் மேல் தட்டு மக்களை நோய் பயத்தால் பாதித்தது என்றால் அடித்தட்டு மக்களை வேலையின்மையால் கடுமையாக பாதித்தது. இதனை பேசு பொருளாக்கி சிறப்பாக புனையப்பட்ட கதை கொஞ்சம் சிரிங்க சிறுகதை. வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பத்தை வடி தண்ணீர் ஊற்றி காப்பாற்றும் மாமியும் ரோட்டில் நின்று வண்டியை பிடித்துக்கொண்டு அபராதம் போடும் காவலர்கள் சமூகத்தின் நேரெதிர் பிம்பங்கள்.

தோழர்கள் மறைமுகமாக சரசுக்கும் மாடசாமிக்கும் உதவும் காட்சிகள் வாசகனை பலவாறு சிந்திக்க வைக்கும். தோழர்கள் வழங்கிய 500 ரூபாய் பணத்தை இவர்கள் சரியான நபருக்கு கொடுத்து விடுவார்களா அல்லது இவர்களே செலவு செய்து விடுவார்களா என்பதை நமது கையில் ஒப்படைத்துவிட்டு நகர்ந்து கொண்ட தோழரின் சிந்தனை சிறப்பானது.

என்னை பாதித்த மற்றொரு கதை பசிக்கி. நான் அக்குபங்சர் சிகிச்சை பெற்ற காலத்தில் தான் பசி குறித்து புரிந்து கொண்டேன். நான் புரிந்து கொண்ட பசி சோற்றை பசி வந்த பிறகு சாப்பிட வேண்டும் என்பது தான். ஆனால் இங்கே சொல்லப்பட்ட பசி பசிக்கும் போது சோறு கிடைக்காதது பற்றியது. இரண்டுக்கும் தலைகீழ் வித்தியாசம் உள்ளது.

உள்ளதிலேயே சுகமானது பசி என்று நான் புரிந்து வைத்திருந்தேன். ஆனால் உள்ளதிலேயே கொடுமையானதும் பசி தான் என்பதை கதையை வாசித்த பிறகு புரிந்து கொண்டேன். பசித்த வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அதை விட வறுமை இருக்க முடியுமா? அத்தகைய வறுமையிலும் மக்கள் வாழ்கின்றனர் என்பதை கண் முன்னே நிறுத்துகிறது கதை.

ஒரு தலைமுறை இடைவெளியில் மனிதர்களின் மனநிலை எப்படி தலைகீழ் மாற்றம் பெற்றுள்ளது என்பதை கடல் மூச்சு சிறுகதை வெளிப்படுத்துகிறது. சுந்தர மகாலிங்கம் தனது தம்பி மகன் சிவானந்தத்தை சென்னையில் சென்று பார்க்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றினாரா இல்லையா என்பதை அன்பொழுக சொல்கிறது கதை.

மகாலிங்கம் கனவில் கண்ட சென்னையும் நிஜத்தில் கண்ட சென்னையும் அது மட்டுமா கனவில் கண்ட மகனும் நேரில் காணப்போன மகனும் பொருந்தி போனார்களா இல்லையா என்பதை வாசிப்பு சுவையோடு சொல்லிய விதம் சிறப்பானது.

தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட மன சங்கடத்தால் ஏற்பட்ட பிரிவை எப்படி ஒட்ட வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள அவனை வரச்சொல்லடி சிறுகதை உதவும். மாதவராஜ் தோழரின் க்ளிக் நாவலில் சொல்லப்பட்ட அணுகுமுறை திருமணத்திற்கு முந்தையது, இதில் சொல்லப்பட்டுள்ளது திருமணத்திற்கு பிந்தையது… கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான்.

இறுதி கதையான நாளைக்கும் அம்மா சில டப்பாக்களை வாங்குவார் சிறுகதை வணிகநிறுவன பிரதிநிதிகளின் உண்மையான அவலத்தை அலசுகிறது. எனது நெருங்கிய நண்பன் எக்விடாஸ் வங்கியின் வசூலிப்பாளராக இருந்து பணி அழுத்தம் காரணமாக கடந்த வாரம் தான் வேலையில் இருந்து நின்றான். அவனது வாழ்வை அப்படியே படம்பிடித்துள்ளது இந்த கதை. வசூலிப்பும் விற்பனையும் எவ்வளவு சிரமமானது என்பதை களத்தில் நின்று பார்த்தால் மட்டுமே புரியும் வெளியே இருந்து பார்த்தால் அவர்களின் வலியை புரிந்து கொள்வது கடினம். ஆனால், தோழர் சிறு பிசகு இல்லாமல் அவர்களின் வலியை அப்படியே கடத்தியுள்ளார்.

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசுகிறது. அவர்களின் வலியை நமக்குள் கடத்தி அவர்களின் அன்றாட வாழ்வினை புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வை முன்னேற்ற நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.

நன்றி

இரா.செந்தில் குமார்
தொட்டியம்
8144552819

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *