இன்றைய அவசர காலத்தில் வாசிப்பு அருகி வரும் கோலத்தில் மூன்று வரிகளையாவது வாசிக்கட்டும் என்ற நோக்கில் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களின் கற்பனையில் அவர்களது தூரிகை வண்ண வண்ணக் கவிதைகளை வியக்குமளவிற்குப் படைத்து வருவது கண்கூடு.
அத்தகைய இளைஞர்களுள் குறிப்பிடத் தக்கவராக இளைஞர் அ.சுந்தர செல்வன் சிறந்த ஹைக்கூ கவிஞராகத் திகழ்கிறார் எனின் மிகையன்று. அவரது கவிதைகளில் அழகியல், அரசியல், கற்பனைத் திறன், வியப்பூட்டும் உத்தி என சிறப்பம்சங்கள் பளிச்சிடுவது மகிழ்வளித்து அவரைப் பாராட்டத் தூண்டுகின்றன.
இவரது முதல் நூலே தேர்ந்த நூலாகத் திகழ்வது சிறப்பு. “காற்றில் அசைகிற காலம்” எனும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 152 ஹைக்கூக்களுமே ஒன்றையொன்று விஞ்சுமளவிற்கு போட்டியிடுகின்றன எனின் மிகையன்று.
அன்றாடம் நாம் காணும் சாதாரண காட்சிகள் கவிஞருக்கு அசாதாரணமாகத் தோன்றுவதும் அதன் விளைவாகச் சிறந்த ஹைக்கூக்கள் பிறப்பதுமாய் இந்நூலில் அனேக ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன.
மார்கழி மாதங்களில் கோலத்தின் ஊடே பூ வைத்துப் பார்த்தவர்கள்தாம் நாம். ஆனால் நமக்குத் தோன்றாத கற்பனை கவிஞருக்கு எப்படித் தோன்றியிருக்கிறது எனப் பாருங்கள்.
செடிகள் இல்லாத
வாசலிலும் பூத்தது பூ
மார்கழி மாதம்
சாதாரணமாக வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி மயங்கி விழவில்லை என தன் கற்பனையால் நம்மை அசர வைக்கிறார் கவிஞர்.
பறித்த பூக்கள்
தெருவெல்லாம் பூத்தன
இறுதி ஊர்வலம்
முதல் இரு வரிகளுக்குப் பிறகு என்னதான் கற்பனை செய்து பார்த்தபோதும் மூன்றாவது வரி பிடிபடவில்லை. ஆனால் கவிஞரின் பிடிக்குள் வசமாக சிக்கியது மூன்றாவது வரி.
சுமந்து சென்ற பசியை
இறக்கி வைத்தது
காலை உணவுத் திட்டம்
வீட்டில் அடுப்பெரிய
மாதா மாதம்
உரிமைத் தொகை
எனும் பாக்களில் அரசின் நலத் திட்டங்களால் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மட்டுமல்லாமல் குடும்பத்திற்கே பயன் கிட்டுவதை இயல்பாய் சொல்லிச் செல்கிறார் சுந்தர செல்வன்.
கதவுகள் அடைக்கப்பட்டன
யாசகம் வேண்டிய குரல்
வீட்டில் பிச்சைக்காரர்கள்
எனும் பாவில் கருமிகளையும்
ஆலயத்தில் பாலியல் வன்கொடுமை
கடைசிவரை மௌனம் கலையவில்லை
எனும் பாவில் கடவுளையும் கவிஞர் ஓங்கி அறைவதைக் காணமுடிகிறது.
பள்ளியில் சாதி வெறி
மாணவர் கைகளில்
வண்ணக்கயிறு
என்று மாணவர்கள் மத்தியிலும் சாதி நிலவுவதைக் குறியீடாகக் கூறும் கவிஞர்,
மாணவர்களும்
கற்றுக் கொடுக்கிறார்கள்
எல்லோரும் சமம்
எனக் குறிப்பிடுவது நம்பிக்கை அளித்தாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிறது.
தூக்கியெறியப்பட்ட
பழைய ஆடை
யாரோ ஒருவருக்குப் புத்தாடை
என மூன்று வரிகளில் வறுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
முதலாளிகளின் திடீர் உபசரிப்பு
உழைப்புளிகள் மகிழ்ச்சி
உழைப்புச் சுரண்டல்
சங்கத்தைக் கலைக்கவே
சங்கம் அமைத்தார்கள்
பெருமுதலாளிகள்
போன்ற பாக்களில் கவிஞரின் வர்க்கப் பார்வை புலனாகிறது. இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை செயலாளர் என்பதையும் நினைவூட்டுகிறது.
வானம் தனக்குத் தானே
வண்ணமடித்துக் கொண்டதோ
வானவில்
இன்னமும் யாருமே எழுதாத
ஒற்றை வெள்ளைத்தாள்
நிலா
போன்ற கவிதைகள் கவிஞரின் கற்பனை வளத்தைப் பறை சாற்றுகின்றன.
ஹைக்கூ கவிதைகளில் மூன்றாம் வரிக்கு மகிமையும் சிறப்பும் உண்டு. அவ்வகையில் ஏராளமான கவிதைகள் சிறப்புப் பொறுகின்றன. அவற்றுள் சில:
விழுதுகள்
வேர்விடத் தொடங்கின
பிறந்தான் பெயரன்
மனிதனால் கட்ட
முடிவதேயில்லை
பறவையின் கூடு
கவிஞரின் சமூக அக்கறைக்கும் இச்சமூகம் தீர்வு காண வேண்டிய தேவைக்குமான கவிதையாக
இறங்கினான்
பிறகு எழவேயில்லை
மலக்குழி மரணம்
முக்கியத்துவம் பெறுகிறது.
சிறப்பான இத்தொகுப்பில் சில திருத்தங்கள் இருக்கலாமோ என முன் மொழியவும் வேண்டியுள்ளது.
வண்ணப் பூக்களைப்
பேதமின்றிச் சேர்த்தார்கள்
கலப்புத் திருமணம்
என்றிருப்பதை “சாதி மறுப்புத் திருமணம்” என்றும்
முதுமை வந்தும்
குழந்தை முகம் மாறவேயில்லை
புகைப்படத்தில்
என்றிருப்பதை குழந்தை என்ற வார்த்தையை இரண்டாம் வரியிலிருந்து எடுத்து மூன்றாம் வரி முடிவில் சேர்க்கலாம் எனத் தோன்றுகிறது.
வாசக மனங்களை சலனப் படுத்தும் ஹைக்கூக்களை மாலையாக்கி வழங்கியுள்ள கவிஞர் அ. சுந்தரசெல்வனின் “காற்றில் அசைகிற காலம்” எனும் இந்நூலை அகநி வெளியீடு சிறப்பாக பதிப்பித்துள்ளது பாராட்டுக்குரியது. இந்நூலை வாங்கிப் படிப்பதும் பரப்புவதும் இன்றைய தேவை.
பெரணமல்லூர் சேகரன்
நூல் : காற்றில் அசைகிற காலம் (ஹைக்கூ கவிதைகள்)
ஆசிரியர் : அ.சுந்தர செல்வன்
பக்கங்கள்: 64
விலை : ₹80
வெளியீடு : அகநி வெளியீடு
3 பாடசாலை வீதி
அம்மையப்பட்டு
வந்தவாசி 604408
திருவண்ணாமலை மாவட்டம்
பேசி:9444360421

