நூல் – காற்றின் புழுக்கம்
ஆசிரியர் – ஆரூர் தமிழ்நாடன்
வெளியீடு – பேசும் புதிய சக்தி பதிப்பகம்.
🌷
ஆரூர் தமிழ்நாடன்
—————————— —
தனது 19 ம் வயதில் கலைஞர் மு.கருணாநிதிக்கு வெண்பா எழுதியவர். மூன்று உலகத் தமிழ் மாநாட்டுகளில் இவருடைய கவிதை தேர்வு பெற்று, பரிசும் பெற்றவர்.
உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் நடந்த கவியரங்க மேடைகளில் எல்லாம் இவர் இல்லாமல் நடந்தது இல்லை எனலாம். திருவாரூரில் ஏராளமான கவியரங்கம் மூலம் தமிழை வளர்த்த பெருந்தகை.
நக்கீரன் இதழின் தலைமைத் துணையாசிரியராக பணி புரிந்து வருபவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
மரபுக்கவிதைகளின் மன்னர். மொழி வளமும் எழுத்து வளமும், சொல் வளமும் புகுந்து விளையாடும். புதுக்கவிதைகளின் சொற்கோ. நடிகர் பொன்வண்ணன் அவர்கள் ஒரு முறை இவரின் புதுக்கவிதை படித்து விட்டு “நவீன திருவள்ளுவர்” என புகழ்ந்துரைத்தார்.
திருவாருரை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இப்புத்தகம் ஒரு தனி ரகம். மரபுக்கவிதைகளின் சொர்க்கபுரியை இங்கு காணலாம்.
🌷
தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தமிழறிஞர்களையும், தமிழ் வல்லுனர்களையும் உருவாக்குவதே கனவாய்க் கொண்டு செயல்படுவர். மொழியையும், அதன் வளத்தையும் புதுமை செய்யவும், தமிழை வளர்ப்பதோடு, புதுநெறிகளையும், திசைகளெங்கும் தமிழை நூல் வழியாக கொண்டு போய் சேர்த்து தமிழின் சுவையை எல்லா நாட்டிற்கும் கொண்டு போய் சேர்க்கும் அரும் பணியை செய்ய வேண்டுமென இளைய சமூகத்தை தமிழ்ப் பணி செய்ய மரபால் பூச்செண்டு தருகிறார்.
தமிழ்த்தேர்
——————–
வடம்பிடித்துத் தமிழ்த்தேரை இழுக்க வேண்டும்
வகையறிந்து மொழிவளத்தைப் புதுக்க வேண்டும்
அடம்பிடித்துத் தமிழ்வளர்க்கும் எண்ணம் வேண்டும்
அகம்படித்துப் புறம்படித்து நிமிர வேண்டும்
தடம்பிடித்துப் புதுநெறிகள் வளர்க்க வேண்டும்
தக்கபடி தமிழ்மணத்தை நுகர வேண்டும்
இடம்பிடித்துத் திசையெல்லாம் தமிழை நாட்டி
எங்கெங்கும் அதன்விளைச்சல் பெருக்க வேண்டும்.//
🌷
ஒரு கவிஞரின் நெஞ்சுக்குள் இருந்து வரும் வரிகள் ஆத்மார்த்தமானது. உணர்வுப்பூர்வமானது. பாரதிதாசன் “மானுட சமுத்திரம் நானென்று கூவு” என்று பாடினார். மானுடத்தின் மீதான பேரன்பை தன் ஒவ்வொரு வரிகளிலும் சொல்லச் சொல்ல மனித வாழ்வு எத்தகையது என மதிப்பை உணரச் செய்கிறார் ஆசிரியர். எனது உறவென்பது “மானுடக் கூட்டம்” என்று ஒளவையின் ஒரு வரியாய் உலக மனிதர்களிடத்தில் பேரன்பை விதைக்கிறார். மரபுக் கவிதையெங்கும் மனித இதயங்களை நடுகிறார்.
மானுடம் என் உறவு
—————————— —-
என்கன வென்பது பசியறு உலகம்
என்சுக மென்பது சூதறு மனிதம்
என்னிசை என்பது இயற்கையின் பாடல்
என்தவ மென்பது வியர்வையின் வெகுமதி
என்னூர் என்பது உலகப் பெருவெளி
என்னுற வென்பது மானுடக் கூட்டம்
என்மகிழ் வென்பது உலகின் மகிழ்வு
என்துய ரென்பது பிறர்படும் துயரம்
இரவும் பகலும் என்னிரு கைகள்
வரவும் செலவும் வாழ்வின் சுவாசம்
சிறகுகள் இருப்பது சிகரங்கள் அளக்க
உறவுகள் இருப்பது உயிர்வரை சேர்க்க
பறவைகள் இசைக்குப் பாடல்கள் புனைவேன்
கறையிலாப் பொழுதால் காலத்தை அளப்பேன்
உறக்கத்தில் கூட உயிர்ப்பாய் இமைப்பேன்
திறவாத் திசையிலும் பூக்கள் வளர்ப்பேன்.//
🌷
எளிமையான சொற்களில் உலகத்தைப் படைப்பது அரிது. அந்த உலகத்தை தமது கவிதைத் தேரில் கவலைகள் இல்லா ஓர் உலகத்தைப் படைப்பது ஆசிரியரால் மட்டுமே முடியும். அதை நம்பிக்கையோடு விதைக்கிறார். தனது ஆழமான சொல் மணிகளால் விதைக்க விதைக்க அற்புதமான கவலையில்லா மானுட உலகு மறுமலர்ச்சியாய் விடிவதை காண்பேன் என நம்பிக்கையூட்டி நெகிழ்ச்சி செய்கிறார் ஆசிரியர்.
கவிதைகளின் ஆழமும், நடையும் சுடரேந்தி புது வழிக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது பெருங்கவிஞரின் அற்புதமான வரிகள்.
கவலையில்லா உலகம்
—————————— ———-
எவரும் எழுதாக் கவிதைகளை- நான்
எழுதித் தீர்ப்பேன் இதமாக!
சுவரே இல்லாத் திசையெங்கும்-நான்
சுவடு பதிப்பேன் சுகமாக!
எவரும் தொடராப் பாதைகளை-நான்
இயற்றி நடப்பேன் சுடராக!
கவலைகள் இல்லா ஓருலகை-நான்
காண்பேன் கவிதைகள் வழியாக!
🌷
கசலை, ஹைகூவை, கவிதையை, சாமான்யர்களுக்கு தன் மொழியால், உரைநடைக் கவிதையால் கொண்டு போய் சேர்த்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். கவிதைகளின் உயரமாக கருதப்படும் கவிக்கோவின் மேன்மை பற்றி தனது மரபுக் கவிதையால் மீட்டுகிறார். “திருவிழியில் மனிதம்” எனும் சொல்லாடல் கவிக்கோவின் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறார். மொழியின் பயணமும், அவை தரும் ஆழமான கருத்தும் பதினாறு வரிகளில் கவிக்கோவை கவிதை உருவமாக தீட்டுகிறார். கவிதையை வாசிக்க வாசிக்க நமது முன் கவிக்கோ கவித் திருமுகமாக புன்னகை செய்கிறார். அதை இந்த மரபுக் கவிதை மூலம் உணரலாம்.
வானம் தந்த கவிக்கோ
—————————— ———-
பறந்துவிட்ட கவிக்குயிலே, கவிதைக் கோவே!
பறப்பதற்கு வானத்தை விட்டுச் சென்றாய்.
சிறகசைப்பில் உன்னிடத்தில் நளினம் கற்றேன்
சிந்திக்கும் வழித்தடத்தைக் கொஞ்சம் கற்றேன்
திறந்திருந்த உன்மனதில் வானம் கற்றேன்
திருவிழியில் மனிதத்தை முழுதாய்க் கற்றேன்
இறந்தாலும் இறவாத உன்னி டத்தில்
என்னைநான் பலவாறாய்க் கற்றுக் கொண்டேன்.
தானத்தில் உன்தானம் கவிதை தானம்
தமிழுக்கும் அதுதானே ரத்த தானம்
ஞானத்தில் உன்ஞானம் உயர்ந்த ஞானம்
ஞாலத்தின் ரகசியங்கள் உணர்ந்த ஞானம்
வானத்தில் உன்வானம் வசந்த வானம்
வைகறையாய் வழிகிறது உந்தன் கானம்
மோனத்தில் உன்மோனம் ஆழ்ந்த மோனம்
முத்தமிழின் சிகரம் நீ வணங்கு கின்றேன். //
🌷
கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரிகளும் வரமாய்ப் பொழிகிறது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கான கவிதையாய் அமைகிறது. கனவு, தமிழின் மேன்மை, செங்கோன்மை, அஞ்சாமை என துல்லியமாய் கவிதை பேசுகிறது.
என்னவெல்லாம் வேண்டும் என்பதற்கு இலக்கணமாக தொலைநோக்கு சிந்தனையை கவிதையில் வைத்த விதமே தனித்துவம்தான். ஆதலாலே வரிகளும் தனித்துவமாய் மலர்களை ஏந்திப் பேசுகிறது.
வேண்டுவன வேண்டும்
—————————— ————
கனவெல்லாம் மெய்ப்பட வே வேண்டும்! – எங்கள்
கற்பனைகள் நனவாகிக் கைசேர வேண்டும்!
நினைவெல்லாம் உயர்வுறவே வேண்டும்!-கண்முன்
நீள்கின்ற வழியெல்லாம் மலர்பூக்க வேண்டும் !
தினம்தினமும் கவிதைவரம் வேண்டும்!-எட்டுத்
திசையெங்கும் இசைபெருகி வழிந்தோட வேண்டும்!.
மனமொத்து ஒழுங்குறவே வேண்டும்!-வைய
மக்களெல்லாம் உறவாகித் தோள்சேர வேண்டும்!
பேரறிவின் செங்கோன்மை வேண்டும் !- எங்கும்
பெருமிதமும் பேரன்பும் தழைத்தோங்க வேண்டும்!.
நேரத்தே செயலாற்ற வேண்டும்! – என்றும்
நேர்மைக்கு முடிசூட்டிப் பாராட்ட வேண்டும்!
பாரறியத் தமிழாள வேண்டும்! – ஈரப்
பாடல்கள் உயிர்தீண்டி மகிழ்வூட்ட வேண்டும்!.
யாருக்கும் அஞ்சாமை வேண்டும்! -யாவும்
யாவர்க்கும் பொதுவென்று விதிசெய்ய வேண்டும்!
🌷
மொழியின் தன்மை, மொழி சொல்லும் அளவு, மொழி பேசும் இயல்பு, அவற்றினூடே என்னை மொழி பெயர்த்தால் என் பெயர் “தன்னம்பிக்கை”யென கவிதையின் வரிகளில் விதையாகிறார் ஆசிரியர்.
இவ்வரிகளின் தன்மையில் ஆழ்ந்து பார்த்தால் கண்ணதாசன் நம்மை அறியாமலே மிளிர்வார். ஆகச்சிறந்ததொரு கவிதையாய் நம்மை வழிப்படுத்துகிறது.
மொழி பெயர்ப்பேன்
—————————— ——
மரணத்தின் விளிம்பினிலும்
புன்னகைப்பேன் – வெற்று
மெளனத்தில் அடங்கையிலும்
பாட்டிசைப்பேன்!
இரவுகளைப் பகலாக
மொழிபெயர்ப்பேன்- நான்
இறந்தாலும் இறவாமல்
வாழ்ந்திருப்பேன்!
🌷
மழை என்று எங்கு குரல் கேட்டதும் நாம் மழையாகிறோமோ இல்லையோ? மழலையாகி விடுகிறோம். ஊரில், தெருவில் மட்டுமல்ல முகநூலில் கேட்டாலோ மழை பொழியும் காணொளியைப் பார்த்தாலோ மழலையாகி மனதைப் பறிகொடுக்கிறோம்.
ஆனால் ஆசிரியரின் பேரன்பு மழையே நமக்கு உயிரூட்டுகிறது. கனவை வார்த்தெடுக்கிறது. மரத்தின் நிழலாய் நம்மை அமர வைத்து பேரன்பாய் மழைக் தூறல் செய்கிறது. அன்பில் மழையாய் நம்மை நனைக்கிறது.
சொட்டச் சொட்ட கவிதையில் பேரன்பாய் மனது நனைகிறது
நனைகின்ற மழை
—————————— —
என்விழியில் இமைக்கின்ற இமையே வாழ்க!
என்நினைவாய் இருக்கின்ற நினைவே வாழ்க!
என்கனவைக் காண்கின்ற கனவே வாழ்க!
என்பசியைப் புசிக்கின்ற பசியே வாழ்க!
என்னுயிர்க்கு உயிரூட்டும் உயிரே வாழ்க!
என்னுடலின் அணுவான அணுவே வாழ்க!
என்நிழலில் இருக்கின்ற நிழலே வாழ்க!
எனதன்பில் நனைகின்ற மழையே வாழ்க!
🌷
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றார் பாரதி. அவர்கள் இல்லையென்றால் நாம் என்னவாகிப் போயிருப்போம்? பெண்மை நம்மை வாழ வைக்கும். உயர்வான பெண்மையை போற்றுகிறது இக்கவிதை. உலக மகளிருக்கான உன்னதமான கவிதையாக மிளிர்கிறது. ஒவ்வொரு வரியையும் வாசிக்கையிலும் நம்மை அறியாது கைகள் கூச்செறிகின்றன.
பெண்கள் பற்றி சிறப்பம்சமாய் பேசுகிறது. அவர்களின் நிஜங்களை, ஒற்றைக் கால் தவமாய் நிற்பதை, உலகிற்கான பெரும் வெளிச்சம் என்பதை பேராண்மையோடு பேசுகிறது. அடர்த்தி மிகு சொற்களால் பெண்களுக்கு ஆபரணம் சூடுகிறது.
உலகின் உயிர்ப்பு
—————————— —
உலகின் கருவறை எங்கள் பெண்கள்!
உலகின் இயக்குநர் எங்கள் பெண்கள்!
உலகின் உழைப்பு எங்கள் பெண்கள்!
உலகின் உயர்வு எங்கள் பெண்கள்!
உலகின் அறிவகம் எங்கள் பெண்கள்!
உலகின் அன்பகம் எங்கள் பெண்கள்!
உலகின் வெகுமதி எங்கள் பெண்கள்!
உலகின் பெருமை எங்கள் பெண்கள்!
.
உலகின் கனவு எங்கள் பெண்கள்!
உலகின் வெளிச்சம் எங்கள் பெண்கள்!
உலகின் தெளிவு எங்கள் பெண்கள்!
உலகின் வலிமை எங்கள் பெண்கள்!
உலகின் பாதை எங்கள் பெண்கள்!
உலகின் பயணம் எங்கள்பெண்கள்!
உலகின் இரக்கம் எங்கள் பெண்கள்!
உலகின் இதயம் எங்கள் பெண்கள்!
உலகின் பாடல் எங்கள் பெண்கள்!
உலகின் கவிதை எங்கள் பெண்டிர்!
உலகின் மதிப்பு எங்கள் பெண்கள்!
உலகின் உயிர்ப்பும் எங்கள் பெண்கள்!
🌷
மரம் பார்க்கும் போதெல்லாம் நமக்குத் தோன்றுவது அதன் வேர்தான். விதையிலிருந்து செடியாய் மலர்வதற்கு ஆணி வேர் கீழ் பரப்பி, நீர் தேடி அலைந்து, விதையின் தோல் உடைத்து, சிறு சிறு மண் துகளை தள்ளி முளைத்து பச்சையம் அரும்பி இருக்கையில் பார்க்கும் மனது குளிர்ந்து விடும். அப்படியான மரங்கள்தான் எல்லா உயிர்களுக்கும் வேடந்தாங்கல்.
மரம் தரும் சேதி நாளும் புதிதுதான். தனக்கு மரம் போதிப்பதை வாழ்வியலாகப் பேசப் பேச நம் நெஞ்சை மெல்ல கனக்கச் செய்கிறது கவிதை. //தன்னந் தனியாய் நிற்கும் எனக்கு ”தனிமை” உலகை உணர்த்தியதே // எனும் வரிகளில் ஒட்டு மொத்த மனித ஜீவ நாடிகளைத் தொட்டுத் தொட்டுப் பேசுகிறது. ஒரு வகையில் மரமும் மனிதனும் ஒன்றே. எத்துணை பெரிய உண்மையை இயல்பாய் கவிதைக்குள் வைத்து நதியாய் கடந்து செல்கிறார் ஆசிரியர்.
மரத்தின் பாடல்
—————————
துயரப் பறவைகள் அமரும் கிளையாய்த்
துவண்டு காற்றில் அசைகின்றேன்.
உயரப் பறந்த நினைவுக ளெல்லாம்
ஒதுங்கிச் செல்லவும் இசைகின்றேன்.
என்மேல் விழுந்த மழையும் வெளியிலும்
என்னை நனைத்து உலர்த்தியதே!
தன்னத் தனியாய் நிற்கும் எனக்குத்
தனிமை உலகை உணர்த்தியதே!
இரவும் பகலும் இலையாய் என்மேல்
எழுதிய கவிதைகள் உதிர்க்கிறது!
வரமாய் வந்த பூக்களும் ஏனோ
உதிர்வதை எண்ணி அதிர்கிறது.
🌷
மனிதருக்கு எப்படியான ஆசைகள் வந்தால் நல்லது என்பதை எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு மனிதனின் மனமாய் இதயமாய் வரைகிறது இக்கவிதை. மனிதர்களுக்கான மனதை வருடும் கவிதையாய் மலருகிறது.
நாம் நமது கனவுகளையும் ஆசைகளையும் நினைக்கும் போதெல்லாம் பலித்து விடாதா? நன்றாக இருந்து விட மாட்டோமா? எனும் குழப்ப நிலைக்குள் ஆழ்மனம் சிந்திக்கும். அவையெல்லாம் ஒதுக்கி விட்டு, இப்படியாக நினைத்து நாம் நம்மை நெறிப்படுத்துவோம். நம் நினைவுகளை மடை மாற்றி நேர்மறையோடு நினைத்து இயங்குவோமே என மரபுக்கவிதை மூலம் புதுநெறியைப் புகுத்துகிறார் ஆசிரியர்.
பலிக்கின்ற ஆசைகள்
—————————— ——–
வலிக்காத கனவுகளே இரவில் வேண்டும்!
வதைக்காத நினைவுகளே மனதில் வேண்டும்!
ஒலிக்காத இசையொன்றே என்னுள் வேண்டும்!
ஒடிக்காத பொழுதுகளே எனக்கும் வேண்டும்!
பலிக்கின்ற ஆசைகளே வரவும் வேண்டும்!
பயன்மிக்கப் பொழுதுகளில் வாழ்தல் வேண்டும்!
சலிக்காத இன்பங்கள் வருதல் வேண்டும்!
சாய்கையிலும் சாயாமல் இருக்க வேண்டும்!.
வீரசோழன்.க.சாே.திருமாவளவன்

