புத்தக அறிமுகம்: காட்டில் உரிமை – பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய வீரன் பீர்ஸா முண்டாவின் கதை.! – பெ.விஜயகுமார்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பீர்ஸா முண்டாவின் பெயரும், கலகமும் எல்லா வகைகளிலும் நினைவுகூரத் தக்கது. பொருள் பொதிந்தது. அவனது போராட்டம் அந்நியர் ஆட்சிக்கு எதிராக மட்டுமின்றி சமகால நிலப் பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோட்டா நாக்பூர் பகுதியில் பீர்ஸா முண்டாவின் தலைமையில் நடந்த கலகத்தை ‘ஆரண்யெர் அதிகார்’ என்று வரலாற்றுப் புனைகதையாக பிரபல வங்காள எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான மகாசுவேதா தேவி அளித்துள்ளார்.

வரலாற்று நிகழ்வை புனைகதையாக மாற்றுவது சவாலான செயல். அதிலும் பொருள்முதல்வாத நோக்கில் வரலாற்றைக் கண்டறிய விரும்பும் மகாசுவேதா தேவி மீது அது மேலும் கூடுதலான பொறுப்பைச் சுமத்துகிறது. பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த நூலை சு.கிருஷ்ணமூர்த்தி ‘காட்டில் உரிமை’ என்று பெயரிட்டு அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முண்டா பழங்குடி மக்களின் வரலாறு, சமூக அமைப்பு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அவர்களது கிளர்ச்சிக்கான காரணங்கள் ஆகிய அனைத்தையும் வரலாற்று உண்மைக்கு மாறாமல் மகாசுவேதா தேவி சித்தரித்துள்ளார். நாவல் இலக்கியத்துக்கான அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய இந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை. மேலும் சரத் சந்திரர் விருது, ஞான பீட விருது, ரமான் மாக்சேசெ விருது, பத்மபூஷன் விருது ஆகிய விருதுகளையும் மகாசுவேதா தேவி பெற்றுள்ளார்     

எழுத்தாளர்களுக்கான சமூகப் பொறுப்பில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள மகாசுவேதா தேவி, தம் கருத்துக்களை எழுத்தில் வடிப்பதோடு நில்லாமல் பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு தம்மை இணைத்துக் கொண்டு அவர்களுக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டவர். மேற்கு வங்காளத்தின் லோதா, சபார் ஆகிய பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அவர்களின் துயர் துடைப்பதிலும் துணையாக நின்றார். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் தீவிர இடதுசாரி இயக்கங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ’ஜான்சிர் ராணி’, ’ருடாலி’, ’ஹஜர் சௌராசீர் மா’ போன்ற நாவல்களையும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி, சு ...

1890ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் நாள் ராஞ்சி சிறையில் பீர்ஸா முண்டா என்ற விடுதலைப் போராளி உயிர் துறந்தான். சிறை சூப்பரிண்டெண்ட் ஆண்டெர்சன் அவனது நாடியைப் பிடித்துப் பார்த்து மரணத்தை உறுதி செய்தார். தனிமைச் சிறையில் கை, கால், இடுப்பு அனைத்தையும் இணைத்த சங்கிலியைத் தூக்கிக் கொண்டே காற்றும், வெளிச்சமும் குறைவான சிறிய அறையில் ஓராண்டுக்கும் மேலாக அவன் அடைபட்டுக் கிடந்துள்ளான். தொடர்ந்து இரத்த வாந்தி இருந்தும் பீர்ஸாவுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் கொடுக்கப்படவில்லை. பீர்ஸாவின் மரணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  அவனுடைய சகதோழர்கள் 217 பேருக்கும் உடனே தெரிய வந்தது. அதுநாள் வரை பீர்ஸாவின் அறையிலிருந்து கேட்கும் சங்கிலிச் சத்தமே அவர்களுக்கு நம்பிக்கை ஒலியாக இருந்து வந்துள்ளது. அந்த சத்தம் கேட்கவில்லை என்றதும் அவர்கள் அதிர்ந்து போகின்றனர். 

பீர்ஸாவை பகவானுக்கு இணையாகக் கருதி வழிபட்டனர் என்பது சிறை அதிகாரிக்குத் தெரியும். இருந்தும் அவர்களை பீர்ஸாவுக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கவில்லை. உயிருடன் இருந்த பீர்ஸாவை விடவும் இறந்து போன பீர்ஸாவைக் கண்டு அதிகார வர்க்கம் அதிகம் பயந்தது. அன்றிரவே அவனது உடலை எரித்துவிடச் சொல்லி ஆணையிட்டார். உதவி சூப்பரிண்டெண்ட் அமூல்யபாபு ”முண்டா இனத்தினர் இறந்த உடலை அடக்கம் செய்வதே வழக்கம்” என்று சூப்பரிண்டெண்ட் ஆண்டர்சனிடம் சொல்லியும் அவர் கேட்கத் தயாரில்லை. அமூல்யபாபுவுக்கு பீர்ஸாவிடம் இருந்த பரிவையும் பாசத்தையும் ஆண்டர்சன் நன்கு அறிவார். இறுதிச் சடங்கில் அமூல்யபாபு பங்கேற்க வேண்டாம் என்றும், கீழ்நிலை ஊழியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் கட்டளையிட்டார். டில்லியிலிருந்த வைஸ்ராய் கர்ஸன் பிரபுவிலிருந்து சோட்டா நாக்பூரிலிருந்த ஆங்கிலேய அதிகாரிகள், ஜமீந்தார்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகள் என்று ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பீர்ஸாவைக் கண்டு அஞ்சி  நடுங்கினர். இவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்த பீர்ஸா யார்?

பீர்ஸா 25 வயதே ஆன இளைஞன். அவனும், அவனுக்குப் பின்னால் அணிவகுத்த முண்டா இன மக்களும் வில்லையும், அம்பையும் மட்டுமே கைகளில் ஏந்தி வந்தனர். துப்பாக்கி ஏந்தி வந்த ஆங்கிலேயே அரசின் காலாட்படையையும், குதிரைப் படையையும் சந்தித்து மடிந்து வீழ்வதற்கு அவர்கள் அனைவரும் தயாராயினர். கோமணத்தை மட்டுமே சீருடையாக அணிந்து வந்த அவர்கள் வேண்டியதெல்லாம் பரம்பரை பரம்பரையாக தாங்கள் வாழ்ந்து வந்த காட்டின் உரிமை மட்டுமே. அவர்கள் வணங்கும் ஆரண்ய மாதாவின் புனிதத்திற்குக்  ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பதற்கு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் களத்தில் இறங்கிப் போராடத் துடித்தனர். அவர்களுக்குத் தலைமை ஏற்று வழி நடத்திய வீரன் பீர்ஸாவை பகவானாக ஏற்றுக்கொண்டனர். அவன் தோற்றுவித்த பீர்ஸாயித் மதம் அவர்களின் போற்றுதலுக்குரிய மதமாகியது. அவன் முழங்கிய ”உல்குலான்” (புரட்சி) என்ற மந்திரச் சொல்லுக்கு அவர்கள்  கட்டுப்பட்டனர். வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை, ’உல்குலான் இல்லையேல் வீர மரணம்’ என்று சூளுரைத்தனர். 

சுகானா முண்டா – கர்மி தம்பதியினர் கூல்காட்டி கிராமத்தில் தங்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஐந்து குழந்தைகளில் பீர்ஸா மட்டும் சற்று வித்தியாசமாகவே வளர்ந்து வந்தான். சிறு வயதிலேயே டுயிலா எனும் இசைக் கருவியை மீட்டுவதிலும், புல்லாங்குழல் இசைப்பதிலும் வல்லவன். வீட்டின் வறுமை அவனிடம் பல கேள்விகளை எழுப்பியது. காட்டோ எனப்படும் கஞ்சி மட்டுமே அவர்களின் உணவாகும். காட்டில் கிடைக்காத ஒரு பொருள் உப்பு. வீட்டில் உப்புக் கட்டி வைத்திருப்பது மிகப் பெரிய ஆடம்பரம்.  பீர்ஸாவின் தாய் கர்மி தன் பிள்ளைகளுக்கு மட்டும் உப்பிட்டுவிட்டு, தான் எப்போதும் உப்பில்லாத கஞ்சியையே குடிப்பார். சோட்டா நாக்பூர் பகுதியிலிருந்த காடுகளும், மலைகளும் முண்டாக்களின் மூதாதையர்கள் வாழ்ந்த இடம். அந்த அடர்ந்த காடும், நெளிந்து வளைந்து பல அடுக்குகளாக நீண்டிருந்த அந்த மலையும் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அவர்கள் வணங்கும் தெய்வம் ஆரண்ய மாதா. அவள் ஆட்சி செய்யும் அந்தக் காட்டுக்கு அவர்களால் ஒருபோதும் தீங்கு நேரிடாது. காட்டை அழித்தால் தங்களின் வாழ்வே அழிந்துவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கியது ஆபத்து. ஆங்கில அதிகாரிகளின் பொழுதுபோக்கு காட்டில் வேட்டையாடுவது. காட்டின் வளங்களைக் கண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் ஆட்சி அதிகாரத்தை காட்டிற்குள்ளும் நிலைநாட்ட எண்ணினர். காட்டிலிருந்த பூர்வகுடிகளை விரட்டி அடிக்கத் திட்டமிட்டனர். ஜமீந்தார்களை ஏவிவிட்டனர். அதிகமான வரியைக் கொடூரமாக வசூலித்தனர். நிலங்களைப் பறித்துக்கொண்டனர். 1890களில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது முண்டாக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தனர். லேவாதேவிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்தனர். உண்ண உணவின்றி பசியில் மடிந்தனர். வெள்ளைக்கார பாதிரியார்கள் கிறித்துவத்தைப் பரப்ப மலைகளிலும், காடுகளிலும் சர்ச்சுகளைக் கட்டி வந்தனர். கத்தோலிக்க பாதிரியார்களும், புராட்டஸ்டண்ட் பாதிரியார்களும் போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டனர். முண்டாக்களில் சிலர் கிறித்துவத்தில் சேர்ந்தனர். உணவையும், படிப்பையும் அவர்களுக்கு கொடுத்த கிறித்துவம், அவர்கள் வேண்டிய விடுதலையை வழங்கவில்லை. காட்டின் உரிமையைக் கொடுக்கவில்லை. இந்து நிறுவனங்களும் ஆன்மீகம் பேசிட முண்டாக்களிடையே வந்தன. மகாபாரதம், ராமாயணம் கதைகளை அவர்கள் சொன்னார்கள். மதச் சாமியார்கள் அனைவரும் அந்நிய அதிகாரிகளுக்கும், ஜமீந்தார்களுக்கும், லேவாதேவிக்காரர்களுக்கும் ஆதரவாகவே நின்றனர். 

பீர்ஸாவும் எட்டு வயதில் பாதிரியார்களின் பள்ளியில் சேர்ந்து ஆரம்பக் கல்வியை முடித்தான். மேலும் படிப்பைத் தொடர தொலைவிலிருக்கும் மிஷன்காரர்கள் நடத்தும் பள்ளிக்குச் சென்றான். அங்கு கல்கத்தா நகரத்திலிருந்து வந்திருந்த அமூல்யபாபு என்ற இளைஞனின் நட்பு கிடைத்தது. இருவரும் முண்டாக்கள் அடிமைகளாக நடத்தப்படுவது பற்றி வேதனையுடன் பேசிக்கொள்வார்கள். பீர்ஸாவுக்குப் படிப்பைத் தொடர மனமில்லை. தன் இனத்தைச் சேர்ந்தவர்கள் வயிற்றுப் பசியால் அல்லாடும்போது தான் மட்டும் மிஷனரிகள் கொடுக்கும் நல்ல சாப்பாட்டுடன் சுகமாக வாழ்ந்திட விரும்பவில்லை. ஏற்கனவே சர்தார்கள் எனப்படும் மலைவாழ் மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தை தொடங்கியதை அறிகிறான். அவனும் முண்டா மக்களை அரசுக்கு எதிராகத் திரட்ட நினைக்கிறான். பீர்ஸா படிப்பை இடையில் விடவேண்டாம் என்று நண்பன் அமூல்யபாபு கெஞ்சுகிறான். ”என்னுடைய மனமெல்லாம் முண்டாக்களின் விடுதலை குறித்தே இருக்கிறது. என்னால் படிப்பைத் தொடர முடியாது” என்று சொல்லி பீர்ஸா மிஷனை விட்டு வெளியேறி விடுகிறான். பீர்ஸா மிஷனைவிட்டு வெளிவந்தது கண்டு அவன் பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் அவன் நோக்கத்தை அறிந்து மகிழ்கின்றனர். பீர்ஸாவின் குடும்பம் முழுவதும் அவனுக்கு ஆதரவாக நிற்கிறது. அவனுடைய தாய் கர்மி  முண்டாக்களின் தலைவனாகத் தன் மகன் பீர்ஸா திகழ்வது குறித்து பெருமை அடைகிறாள். அதே சமயம் அவன் சாவை நெருங்குகிறான் என்று அவள் உள்மனம் உணர்த்துகிறது. 

பீர்ஸா உடனடியாக களத்தில் இறங்குகிறான். ’காட்டில் உரிமை’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மக்களைத் திரட்டுகிறான். முண்டாக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். மலைகளின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்துகிறான். அவனுக்கு ஆதரவு பெருகுவது கண்டு அதிகார வர்க்கம் நடுங்குகிறது. சோட்டா நாக்பூர் டெபுடி கமிஷனர். ராணுவத்தின் உதவியை நாடுகிறார். ராணுவம் பீர்ஸாவைப் பிடிப்பதற்காக மலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை நடத்துகிறது. 

C:\Users\Chandraguru\Pictures\Birsa Munda captured.jpg

பீர்ஸா அன்றைய பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஒரு மலை உச்சியில் இரவு தங்குகிறான். அவனுடன் நடைபயணத்தில் இருக்கும் பெண்களிடம் நெருப்பை மூட்ட வேண்டாம்; அரிசியை வேகவைக்காமல் ஊறவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறான். ஆனால் அரிசிச் சோறு சாப்பிட விரும்பிய ஒரு பெண் அடுப்பைப் பற்ற வைத்துவிடுகிறாள். மலையில் புகை எழும்பும் இடத்தை அடையாளம் கண்டு ராணுவம் நெருங்கி விடுகிறது. பீர்ஸா தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் கைதாகிறார்கள். மலையிலிருந்து சங்கிலியால் கட்டி இழுத்து வருகிறார்கள். வழியெங்கும் பெண்கள் அவர்களை வாழ்த்துகிறார்கள். 

C:\Users\Chandraguru\Pictures\Birsa-Madras-Courier-02.jpg

விசாரணைக் கைதிகளாக அடைக்கப்படும் அவர்கள் சிறையில் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களைப் பார்க்க வரும் குடும்பத்தினருக்கு  அனுமதி மறுக்கப்படுகிறது. தன்னுடன் மிஷன் பள்ளியில் படித்த அமூல்யபாபு சிறையில் அதிகாரியாக இருப்பது கண்டு பீர்ஸா வியப்படைகிறான். அமூல்யபாபு முண்டாக்களின் கோரிக்கையின் நியாயத்தை அறிந்தவன். சூப்பரிண்டெண்ட் ஆண்டர்சனின் கெடுபிடிகளை மீறி முண்டா கைதிகளுக்கு அமூல்யபாபுவால் எந்த உதவியும் செய்திட முடியவில்லை. பலமுறை முண்டாக்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்டுள்ளான். அவர்கள் அனுபவித்து வந்த கொடூரச் சிறை வாழ்க்கை அவர்களின் மனதைச் சிறிதும் சிதைக்கமால் இருந்தது கண்டு வியந்தான். அதற்கான காரணம் அவர்கள் பீர்ஸாவின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே என்பதறிந்தான். கல்கத்தாவில் இருக்கும் பத்திரிக்கைகள் சில முண்டாக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கட்டுரைகள் வெளியிடுகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஆங்கிலேயேர்கள் சிலரும் முண்டாக்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். ஜேக்கப் என்ற ஆங்கிலேய வழக்கறிஞர் முண்டாக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடுகிறார். ஓராண்டுக்கும் மேலாக விசாரணக் கைதிகளாக வைத்திருப்பது அனைத்துச் சட்டங்களுக்கும் எதிரானது என்று வாதிடுகிறார். காவல் துறை வேண்டுமென்றே விசாரணையை முடிக்காமல் .இழுத்தடிக்கிறது. கைதிகளை நீதிமன்றத்திற்கு பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் நடத்தியே கூட்டிச் செல்வதும், திரும்பவும் கொண்டு வந்து அடைப்பதுமாக இருக்கின்றனர். போதுமான உணவும், மருத்துவ  வசதியும் இல்லாததால் சிறைக்குள் சில கைதிகள் இறந்து விடுகின்றனர். இறுதியில் பீர்ஸாவையும் மரணம் தழுவுகிறது. ஆங்கிலேய அதிகாரிகள் ’அப்பாடா!’ என்று பெருமூச்சு விடுகின்றனர்.

பீர்ஸாவின் மரணத்திற்குப் பின் பெரும்பான்மையான கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அவர்களின் தூக்கு தண்டனையைக் குறைப்பதற்காக தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜேக்கப் போராடுகிறார். அமூல்யபாபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு கல்கத்தா செல்கிறான். ”நீங்கள் ஏன் பதவியை ராஜினாமா செய்கிறீர்கள்” என்று ஜேக்கப் கேட்டதும் “என்னுடைய படிப்பையும், பதவியையும் கொண்டு உரிமைகள் கேட்டுப் போராடிய மக்களுக்கு சிறிதளவும் உதவிட முடியவில்லை. எனக்கு முண்டாக்கள் போல் ஆயுதம் ஏந்திப் போராடும் துணிச்சலும் இல்லை. அவர்களின் போராட்டத்திற்கு எவ்வகையிலும் உதவிடாத இப்பதவியில் இருந்ததை இழுக்காகவே கருதுகிறேன். மிச்சமுள்ள வாழ்க்கையை காலனியம், அடிமை வாழ்வு, அதற்கெதிரான போராட்டங்கள் இவை குறித்த வினாக்களுக்கு விடைகள் தேடி கழிப்பேன்” என்கிறான்.

C:\Users\Chandraguru\Pictures\b_munda_5.jpg

பீர்ஸா முண்டாவின் உருவப்படம் 1989 அக்டோபர் 16 அன்று மக்களவைத் தலைவர் டாக்டர் பல்ராம் ஜாக்கர் அவர்களால் இந்திய நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. பீர்ஸாவின் தியாகம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.

-பெ.விஜயகுமார்