கபிலன் வைரமுத்து எழுதிய “நித்திலன் வாக்குமூலம்” நாவல் புத்தகம் | Kabilan Vairamuthu's Nithilan Vaakumoolam Tamil Book Review | www.bookday.in

கபிலன் வைரமுத்து எழுதிய “நித்திலன் வாக்குமூலம்” அறிவியல் புனைவான நாவல் – நூல் அறிமுகம்

“நித்திலன் வாக்குமூலம்” – நூல் அறிமுகம்

வக்கிரத்திற்கு விலைபோன அறிவியல்..! 

– முனைவர் சி.ஆர். மஞ்சுளா

மனித இனத்தை வழிநடத்துவதற்கு ஆளுமைமிக்க தலைவர் மிக அவசியம்.  மக்கள் பாதுகாப்பாக உணர்வதற்கு ஒரு தலைவரின் பங்களிப்பு முக்கியமானது.  அடிப்படைத் தேவைகளான பசியாற உணவு, அணிந்து கொள்வதற்கு ஏற்ற ஆடைகள், வாழ்வதற்குப் போதுமான வசிப்பிடங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது சமுதாயத்தின் கடமை.  கல்வி வளர்ச்சியையும், தொழில் செய்வதற்கான வாய்ப்பினையும் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.  பிறப்பின் அடிப்படையில் கொடுமைக்கு ஆளாக்கப்படும் மக்கள், பாலினத்தைக் காட்டி அடிமைநிலைக்குத் தள்ளப்படும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகியோரின் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் அரசை மக்கள் கொண்டாடத் தவறியதில்லை.

சம வாய்ப்பும், போதுமான வசதிகளும் இல்லாத சமுதாயத்தில் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கும்.  பல நேரங்களில் புரட்சி வெடிப்பதற்கும் காரணமாக அமைந்து விடும்.  ‘’ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதியது அன்று இவ்வுலகத்து இயற்கை’’ என்று புறநானூறு, மனிதர்கள் முரண்பட்டுச் சண்டை போடுவது பல காலமாக நடந்து வருகிறது என்று சொல்லும் அதே வேளையில் போர்களைத் தடுப்பதற்காகத் தூது சென்ற ஔவையார் பற்றிய பாடல்களையும் சேர்த்தே பதிவு செய்து வைத்திருக்கிறது.  மக்களை ஒன்று திரட்டி, ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் கருத்தில் கொண்டு, சமுதாய வளர்ச்சிக்குப் பங்காற்றும் தலைவனை வரலாற்றின் பக்கங்கள் கல்வெட்டுகளாகக் குறித்து வைத்திருக்கின்றன.

மாறாக – பெரும்பான்மையினர் என்ற கொள்கைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் அரசு விரைவில் வீழ்ச்சி அடைவது உறுதி.  சாதாரண மக்களின் கருத்துக் காது கொடுக்காமல், அவர்களின் நலனில் அக்கறை காட்டாமலிருக்கும் கொடுங்கோல் ஆட்சியை மக்கள் போராட்டமே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.  முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சி முடிந்து போனதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.  வரலாறு தெரியாமல் போனால், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றே வாழ்க்கை நகரும்.  இட ஒதுக்கீட்டில் கல்வி பெறும் இன்றைய இளைய சமுதாயம் இட ஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல், தன்னுடைய சக தோழருக்குக் கிடைக்காத சலுகைகள் தனக்கு மட்டும் கிடைத்திருக்கிறதே, இது தனக்குத் தேவைதானா? என்று கேள்விக் கேட்டு இட ஒதுக்கீட்டை ஒதுக்கும் முட்டாள்தனமே அரங்கேறும்!

ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நடந்து செல்வதற்கும் தடை போடப்பட்ட காலத்தையும், ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மேலாடை அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலையும், அவ்வளவு ஏன் இன்று கூட கோயில்களில் தலித் மக்களை உள்ளே விடாத அவல நிலை பற்றிய புரிதல் இல்லாத இளைய சமுதாயத்திற்குப் புரிய வைக்கக்கூடிய நல்லாசிரியனாக காலந்தோறும் படைப்பாளிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர்.  அப்படியான ஒரு படைப்பாகக் குற்றப்பரம்பரை பற்றிப் பேசக்கூடிய ‘நித்திலன் வாக்குமூலம்’ என்ற கவிஞர் கபிலன் வைரமுத்துவின் நாவல் வெளிவந்திருக்கிறது.  மூன்று பாகங்களாக – ‘ஆகோள்’, ‘மாக்கியவெல்லி காப்பியம்’ தொடர்ந்து ‘நித்திலன் வாக்குமூலம்’ என்று வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  வரலாற்றின் பக்கங்கள் இயற்கை வளங்களால், மனித மாண்புகளால், நாகரிக வளர்ச்சியால் நிறைந்திருக்கும் என்று நம்பி இருப்பவர்களுக்கு அதனுடைய இன்னொரு முகத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது படைப்பு.

உலகம் முழுக்க ஆதிக்கம் செய்யக்கூடிய மனநிலை இருப்பவர்கள் அதிகார நிலைக்கு வந்துவிட்டால் சாதாரண மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது மக்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வு வாசகனுக்கு வந்துவிடுகிறது.  குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் மக்களுக்கு எழுத்தாளர் தன் நாவலை மூன்று பகுதிகளாக எழுதிப் படையலாக்கித் தன் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.  பெருங்காமநல்லூர் கலவரத்தைப் பற்றித் தெரியாத சமுதாயம் இந்த நாவலை வாசித்த பிறகு அந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க ஆசைப்படும்.

நித்திலன் வாக்குமூலம் – மூன்று படலங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது.  கதையில் உலா வரும் கதாபாத்திரங்கள் தமிழ்ப் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.  நெய்தல், செங்காந்தள், சிந்தா அமுதன், கணிதன், மலைய மாடன், பரிசல், யாழி போன்ற கதாபாத்திரங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்ற உணர்வை நமக்குத் தருகிறது.  சமுதாயத்தில் புரட்சி செய்வதற்கு ஆயுதங்கள் அவசியமில்லை.  அறிவார்ந்த நாகரிக சமூகம் இலக்கியப் படைப்பின் வழியாகச் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கிவிடும்.  அந்த வகையில் சமீப காலமாக – தேசப்பற்று, தீவிரவாதி ஆகிய சொற்கள் சொந்த நாட்டு மக்களையே அச்சுறுத்தும் சொற்களாக மாறி வருகின்றன.  இந்த அரசியலை மிகுந்த எச்சரிக்கையுடன் பதிவு செய்திருக்கிறது படைப்பு.

அரசின் திட்டங்களுக்கு, அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு காட்டும் மக்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து, இன்னும் கூடுதலாக வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகப் பொதுமக்களிடம் காட்டிச் சொந்த மக்களையே காவு வாங்கும் எதேச்சதிகாரம் கொண்ட அரசைப் பார்த்து யார் கேள்வி எழுப்புவது?  இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக, அந்த வேலையைத் தானே செய்து முடித்திருக்கிறார் கபிலன் வைரமுத்து.  படைப்பாளி கலை உணர்ச்சி மிக்கவன்.  அதிலும் கவிஞன் என்றால் கேட்க வேண்டுமா என்ன, தாகூரின் கவிதைகளை, கவிஞர் பொன்மணி வைரமுத்துவின் கவிதைகளைக் கதையின் ஊடாகச் சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறார் நாவலாசிரியர்.

‘’நீ என்னுடன் பேசாய் எனில்

உனது மௌனம் கொண்டு

என் இதயம் நிறைப்பேன்

இரவு வானம் தலை குனிந்து

தன் நட்சத்திர கண்கள் கொண்டு பார்ப்பது போல

அசையாமல் காத்திருப்பேன்’’

என்ற கீதாஞ்சலியின் கவிதையக்க் கதையில் எழுதி நம்மையும் ரசிக்க வைக்கிறார்.

கதையில் கையாளப்படும் உவமைகள் நறுக்குக் கவிதை போல நம்முடைய இதயங்களில் வந்து ஒட்டிக் கொள்கின்றன. இந்தக் கதையில் வரும் சின்ன மாயனும் நெய்தலும் காதலர்கள் சின்னமாயனுக்கு மூன்றாண்டுகளாக மறதி நோய் தாக்குகிறது.  பிறகு ஒருநாளில் தன்னுடைய நினைவுகளை மீட்டெடுக்கும் அவன் நெய்தளுடன் பேசியபடி தாகூரின் கவிதைகளை வாசிக்கிறான்.  கவிதைத் தொகுப்பின் அட்டைப் படத்தில் இருக்கும் தாகூரின் தாடியைத் தடவிப் பார்க்கிறான்.  அது நெய்தலின் காத்திருப்பைத் தடவுகிற உணர்வைத் தந்தது என்ற வரிகள் காத்திருப்பின் துயரத்தைச் சொல்லும் அமரத்துவம் பெற்ற உவமை.  சங்க இலக்கியங்களில் பாடப்படும் பாலைத் திணைப் பாடல்களின் புதிய நீட்சி!

செயற்கை நுண்ணறிவுச் செயலி ‘டேக்சி’ மூலம் அதிகார வர்க்கம் சாதாரண மக்களை ஒடுக்க நினைப்பதற்கு எதிர்வினையாற்றும் சமுதாய அக்கறை கொண்ட நித்திலன் இறப்புக்கு அவன் உடலில் இருந்த ரசாயன நஞ்சுதான் காரணம் என்பதை ஒரு செவிலியின் மூலமாகத் தெரிந்து கொண்ட மனைவி செங்காந்தள்.  சொல்ல முடியாத துயரத்தில் இருந்த அவளை இந்த உண்மை ஒவ்வொரு நாளும் அரித்துக் கொண்டே வந்தது.  அவளுடைய மனநிலையை ஒரு மலைப்பாம்பு போல் சுற்றிக்கொண்டு நகர விடாமல் செய்தது என்று விவரித்திருப்பார்.

நித்திலன் இறந்த பிறகு அந்த வீடு பாதையற்ற ஒரு வனக்கோயிலைப் போல் கிடந்தது என்ற உவமையும், தோட்டத்துச் செடிகள் உயிர்ப்போடு இருந்தன, அவை தமக்குள் தேக்கி வைத்திருந்த நித்திலனின் நினைவுகளைப் புதுமலர்களாய்ப் புதுப்பித்துக் கொண்டிருந்தன என்ற உவமையும் மிகுந்த கவனம் பெற்றவை.  மேலும், தோட்டத்தில் பெய்யும் மழையை யாராலும் இப்படி வர்ணிக்க முடியாது.  குழந்தை வரைந்தது போல் தோற்றமற்ற ஒரு தோட்டம் உண்டு.  தோட்டப்பாதையில் பூத்திருந்த செடிகளின் செவிமடல்களைத் திருகிக் கொண்டே சடசடவெனப் பெய்தது மழை என்று மழையைக் கொண்டாடித் தீர்க்கிறார் எழுத்தாளர்.  அதே மழை ஐஸ் வண்டிகாரனைப் பின்தொடரும் ஏழைச் சிறுவனைப் போல சின்னமாயனை விடாமல் துரத்தியது மழை என்று ஒப்பீடு செய்வது தனித்துவமானது.

மனிதன் தன் பேராசைக்காக இயற்கையை அழித்து வருவதால் பருவ காலத்தில் வரவேண்டிய மழை பொய்த்துப் போகிறது.  புயல்மழை மட்டுமே சாத்தியமாகிறது.  புவி வெப்பமடைவதால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.  கவிஞர் தன்னுடைய கற்பனையிலிருந்து 2060ஆம் ஆண்டில் இயற்கைச் சீற்றம் எப்படி நிகழும் என்று நினைத்துப் பார்க்கிறார்.  அப்போது ஒளிவெள்ளம் என்ற இயற்கைச் சீற்றம் தோன்றக்கூடும் என்று எச்சரிக்கை செய்கிறார்.  திடீரென்று ஒரு காலைப் பொழுதில் எல்லா இடத்திலும் பெரும் வெளிச்சமாக, மஞ்சளும் – சிவப்பும் கலந்த அந்த வெளிச்சம் சென்னை மாவட்டத்தையே மூடிக்கொண்டது.  அந்த ஒளி வெள்ளத்தில் தாவரங்களும், பூச்சிகளும், மனித இனமும் கண்களுக்குப் புலப்படாமலே போய்விட்டன.  கிட்டத்தட்ட நெருப்பு பிடித்து விட்டதோ என்று மக்கள் பயந்து போயினர்.

அந்த வெளிச்சம் சுட்டெரிப்பதாக இல்லை என்றும் இதமாக இருந்தது என்றும் மூன்று மணி நேரத்தில் அது பணி விலகுவது போல விலகி விட்டது என்றும் முடிக்கிறார்.  நகரங்களில் கோடைக் காலத்தில் இது போன்ற ஒளிவள்ளம் தோன்றும் என்று செய்தி வாசிக்கப்பட்டது என்று கதையில் கற்பனைக்கும் இடம் கொடுக்கிறார்.  இப்படி எந்தப் பாதிப்பும் இல்லாத இயற்கைச் சீற்றம் ஏற்படுவதாக இந்தக் கதையில் எழுத்தாளர் பேசுகிறார்.  ஆனால் உண்மையில் இயற்கைச் சீற்றத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்குமா என்ற சிந்தனையை நம் சிந்தனைக்கு விட்டுச் செல்கிறார்.

நவீனக் கருவிகள் பல வகையிலும் பொதுமக்களைக் கண்காணித்து வருகின்றன.  தனிப்பட்ட வாழ்க்கை என்பது தொலைந்து போய்க் கொண்டிருக்கிறது என்ற வருத்தத்தை எல்லா நதிகளும் ஒரு கடலில் கலப்பது போல 21ஆம் நூற்றாண்டில் உருவான பெரும்பாலான தகவல்சார் தொழில்நுட்பங்கள் கண்காணிப்புக் கருவிகளாக வளர்ந்து நிற்கின்றன என்று வேதனையோடு பதிவு செய்கிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட தானியங்கிப் பேருந்துகள் என்ன காரணத்தினாலோ சில நேரங்களில் பயணிகள் ஏறும்போதே கதவடைத்துக் கொள்கின்றன.  இதனால் குழந்தைகள் உயிர் பறிபோயின.  தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிப்பதற்காக நெய்தல் பல வழிகளில் முயற்சி செய்கிறாள்.  கதவு திறப்பதில் கோளாறு, இருக்கைகளில் தேவையற்ற ஒளி எழுப்புதல், இருக்கைகளுக்கிடையில் திடீரென பலூன் பலகை எழும்புதல், கொடுக்கப்பட்ட வழிப்பாதையைப் பின்பற்றாமல் இருப்பது, தேவையற்ற நிறுத்தங்களில் நிற்பது, நீல நிறத்தை அவ்வப்போது சிவப்பு நிறமாக மாற்றிக் கொள்வது – இப்படி வினோதமான முறையில் பேருந்து இயங்கியதால் அப்பாவி உயிர்கள் பலியாயின.

இந்தக் குளறுபடிகள் எதனால் நிகழ்கின்றன என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாகவே இருக்கிறது.  பேருந்தைச் சோதனை ஓட்டமாக ஓடவைத்துப் பார்க்கும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஆனால் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது சில பிரச்சினைகள் உண்டாகின்றன.  உயிர்கள் பலியாவது பெருங்கொடுமை!  இந்த மென்பொருளை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியிருந்தது என்ற குறிப்பைத் தவிர இந்தக் கோளாறைச் சரி செய்வதற்கான எந்த விவரமும் கிடைக்கவில்லை.  இந்த இடத்திலிருந்து துப்பறியும் வேலையைத் தொடங்குகிறாள் நெய்தல்.  நித்திலனின் மரணத்தில் இருக்கும் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முனைகிறான் சின்னமாயன்.  இந்த இரண்டு புதிருக்கான விடை ஒரே புள்ளியில் இணைவதாகக் கதை நகர்வது சுவாரசியமானதாக மாறுகிறது.

இதற்கிடையில் தெருவில் திரியும் மனிதர்களைப் பற்றிக் கவலை கொள்கிறது படைப்பு.  காலங்காலமாகத் தெருவில் அலையும் மனிதர்களுக்கு யார் இருக்கிறார்கள்?  அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?  அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் தெருக்களில் வசிக்கும் மனிதர்களைப் பார்த்தும் பார்க்காமலும் கடந்து போகிறோம்.  வருங்காலத்திலும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்ற வகையில் நாவல் யோசிக்கிறது.  தெரு மனிதர்கள் என்று அழைக்கப்படும் தெருவில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன காரணங்களால் இப்படியான மனப்பிறழ்வுக்கு ஆளாகின்றனர் என்பதை ஒரு படைப்பாளிதான் சிந்தித்துப் பார்க்க முடியும்!

போதைப் பொருள் பழக்கம், காலநிலை ஒவ்வாமை, மெய்நிகர் அயர்ச்சி, வறுமை, வெறுமை, மதவெறி, பதவிப் பேராசை போன்ற காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு அலைகின்றனர்.  வசதியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்த்துச் சிகிச்சை பெறவைக்கின்றனர்.  வசதி இல்லாத பாதிக்கப்பட்ட மக்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  இன்னும் சிலர் வன்முறைகளிலும், நாசவேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

கருணைக் கொலை செய்யவும், அவர்களுக்கென்று தனிமுகாம் அமைக்கவும் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஆணை பிறப்பிப்பதாக, ஆலோசனை வழங்குவதாக இந்தப் படைப்பு நம்மை அச்சுறுத்துகிறது.  மேலும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளைப் போல இந்த மனிதர்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றங்கள் கருத்து தெரிவிக்கின்றன.  இப்படியான கதையமைப்பில், நாய்களுக்கு நீதி பெற்றுத் தர மனித இனம் போராடியது, ஆனால் மனிதர்களுக்குப் போராடுவதற்காக நாய்கள் தயாராக இல்லை என்று நையாண்டி செய்யப்படுகிறது.  ‘‘பிராணி வதையைத் தடுத்திட சங்கம் ஒன்று இருக்குது மனித வதையைத் தடுத்திட சங்கம் ஒன்றும் இல்லையோ’’ என்று முன்பொரு கவிஞன் குமுறியதைப் போல நாவலும் ஆதங்கம் கொள்கிறது.

1924ஆம் ஆண்டு நடந்த வைக்கம் போராட்டத்தை மகாதேவர் பேரணி என்று இந்த நாவல் மூலமாகக் கதாசிரியர் குறிப்பிடுகிறார்.  வைக்கம் மகாதேவர் கோயிலுக்குள் ஆதிக்க சாதி மக்களைத் தவிர மற்றவர்களால் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில்கூட நடப்பதற்கு அனுமதி இல்லை.  மகாத்மா காந்தியடிகள் ஆலய நுழைவுப் போராட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தார்.  உயர்சாதி இந்துக்கள் தீட்டு வந்துவிடும் என்று கூச்சலிட்டனர்.

அவர்கள் சட்டத்துறையில் வேலை பார்த்து வந்ததால் எப்படியெல்லாம் சட்டத்தைத் தங்களுக்காக வளைத்துக் கொள்ள முடியும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தனர்.  கோயிலைச் சுற்றியிருக்கும் பாதை பொதுவழி அல்ல, மற்ற சமூகத்தினர் இந்தப் பாதையில் நுழைவது கோயில் மரபை மீறும் செயலாகும்.  இது குடிமக்களின் அமைதியைக் கெடுக்கும்.  எனவே இதை அனுமதிக்கக்கூடாது என்று பலரும் கையொப்பமிட்டு மனு கொடுத்தனர்.  இதனால் மாவட்ட நீதிபதி ஓர் ஆணை பிறப்பித்தார்.  திருவாங்கூர் குற்றவியல் சட்டப்பிரிவு 127கீழ் இந்தப் பேரணிக்குத் தடை விதிக்கப்படுகிறது என்பதே அந்த ஆணை.

மதுரை கோரிப்பாளையத்தில் பணியாற்றி வந்த வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் இந்த ஆணையைப் பார்த்துவிட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.  அவருடைய எண்ணத்தில் மகாதேவர் பேரணி அழுத்தமான உருவத்துடன் தோன்றியது.  வைக்கம் போராட்டத்துக்கு மீசை முளைத்து விட்டதற்கான உறுதியாகத் தெரிந்தது என்று பதின்பருவ இளைஞர்களின் உடல் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.  ஜோசப் ஜார்ஜ் என்பது அன்றைய சாதாரண மக்களின் வாயிலிருந்து ரோசாப்பூ துரை என்றே வெளிப்பட்டது என்று காலவோட்டத்தைக் கதையோடு சேர்த்துப் பிணைத்திருக்கிறார் எழுத்தாளர்.

தீண்டாமைக்கு எதிரான பேரணி போது ஒடுக்கப்பட்ட மக்கள் வரும் பாதை மரக்கட்டைகளாலும், மண் மூட்டைகளாலும், தடுப்புச் சுவர்கள் அமைத்தும் மூடப்பட்டிருந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது விவசாய திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும் பொதுமக்களும் போராடுவதற்காக தில்லிக்கு வரும்போது, அவர்கள் வரும் சாலைகளை இரும்பு கம்பிகளால், தடுப்புச் சுவர்களால், சாலைகளை வெட்டி வைப்பதனால் தடுக்க முயற்சித்த அரசின் பயங்கரவாதம் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.

அப்போது நடந்த தீண்டாமைக் கொடுமையைச் சீன யாத்திரிகர் வழியாக வாசகனுக்குக் கடத்த முயற்சி செய்கிறது நாவல்.  பா ஹைன் என்ற சீன யாத்திரிகர் கேரள பகுதிக்குள் நுழைந்தபோது சிலர் கையில் இரண்டு மரக்குச்சிகளைத் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டே நுழைந்தனர்.  அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று சீன யாத்திரிகர் விசாரித்தபோது அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் ஊருக்குள் அவர்கள் வருவதை இப்படி ஓசையெழுப்பி அறிவிக்க வேண்டும் என்றும் முன்னறிவிப்பில்லாமல் வருகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.

போர் வீரர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் செய்ய பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் தேவைப்பட்டது. இந்தத் தோலைப் பதப்படுத்தும் வேலையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.  ஊருக்கு எல்லையில் இறந்து போன பன்றிகளையும், ஆடுகளையும் அப்புறப்படுத்தி விட்டு, அவற்றின் தோலை உரித்து நீரில் அலசி, மூலிகைகளைத் தடவிப் பதப்படுத்தி, ஊருக்குப் பொதுவான சேமிப்புக் கூடைகளில் வைத்துவிட்டு அவர்கள் மீண்டும் மரக்குச்சிகளைத் தட்டிக் கொண்டே வந்த வழியில் திரும்ப வேண்டும்.  இப்படி ஊருக்காக உழைப்பவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்.

‘படைவீடு’ என்ற நாவலிலும் இதுபோல் விலங்குகளின் தோலைப் பதப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பொதுக்குளத்தில் நீர் எடுக்கக் கூடாது என்று அன்றைய மக்கள் சம்புவராயர்கள் என்கின்ற தமிழரசர்களிடம் முறையிட்டனர் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.  உழைக்கும் மக்களைக் கௌரவிக்காத சமுதாயம் உயர்வடைவதில்லை.  இந்தக் கருத்தைப் புரிய வைப்பதற்குப் படைப்புகள் ஓயாமல் போராடிக் கொண்டே இருக்கின்றன.

சமத்துவத்தையும் – சமூக நீதியையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக ஈரோட்டுப் பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தினார்.  அவருடைய உரை பொதுமக்களைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது என்பது வரலாறு.  இதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.  நியாயத்திற்காக மக்களைத் திரட்டுவதில் தனித்தன்மை பெற்றவர் என்பதால், மக்களோடு மக்களாகச் சிறைச்சாலையில் அடைக்காமல் அவருக்குத் தனிச் சிறைச்சாலை ஒதுக்கப்பட்டது.  ‘’கூட ஆளுகள போட்டா அவனுகளையும் தீவட்டியா மாத்தி புடுவாருனு அவர மட்டும் ஒத்தையா அடச்சு வச்சிருக்காங்க’’ என்று கதையின் ஊடாக தந்தை பெரியாரின் போராட்ட குணத்தை இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முயற்சி செய்கிறது நாவல்.

பாதுகாப்பு என்ற பெயரில் ஒவ்வொரு தனிமனிதனும் கண்காணிக்கப்படுகிறான்.  நம் கையில் இருக்கும் திறன்பேசி நம்முடைய எண்ணவோட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தகவல்களைத் தந்து கொண்டே இருக்கிறது.  மனதில் நினைப்பதையும் தெரிந்து கொள்கிறது என்றால் தனிப்பட்ட வாழ்க்கை என்பது முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டது என்றே சொல்லவேண்டும்.  இது அதிகாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் கவலை தரும் செய்தி.  எனவே தன் காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத் தகவல்களைக் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுடன் கால ரயில் மூலமாகச் சென்று பகிர்ந்து கொண்டிருக்கிறார் நித்திலன்.

சக மனிதர்களை நம்ப முடியாத சூழலை இன்றைய அறிவியல் உருவாக்கி வைத்திருக்கிறது. அறிவியல் மீது பழி போட்டு விட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது.  அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமானதை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள், இந்த அறிவியல் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.  ஆதிக்க மனநிலை கொண்டவர்கள் சாமானியர்களை ஒடுக்கக்கூடிய ஒரு மறைமுகமான யுத்தம் இது என்பதை நித்திலன் வழியாக நாவலாசிரியர் சொல்லி அதிர்வை உண்டாக்குகிறார்.

ஆதிக்கவாதிகள் பயன்படுத்தத் துடிக்கும் அறிவியல் சாதனம் கொடூர முகங்காட்டும் என்பதற்கு தாமஸ்மூர் என்பவரின் வழக்கே போதுமான சாட்சி.  இந்த வழக்கைப் பற்றி நீல் ஹோமர் நித்திலனுக்குச் சொல்வதாகக் கதை அமைக்கப்பட்டிருக்கும். நீல் ஹோமர் காவல் ஆணையத்தின் ரகசிய தளபதி.  ஆனால் அதை மறைத்துக் கொண்டு அறிவியல் அறிஞர் என்ற முகமூடியோடு வலம் வருகிறார்.  இன்னும் சொல்லப்போனால் அவரை ஒரு பொருளாதார அடியாள் என்றே சொல்லலாம் என்ற தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது நாவல்.  இலண்டனில் நள்ளிரவில் தாமஸ்மூரின் மகிழுந்து தடுப்பைத் தாண்டி எதிரில் வரும் வண்டியோடு மோதிவிட்டது.  இருதரப்பினருக்கும் சிறிய காயங்களைத் தவிர உயிர்ச்சேதம் இல்லை.

தடுப்பில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு தனக்கு இடையூறாக இருந்ததே விபத்திற்குக் காரணம் என்று மூர் குற்றம் சாட்டினார்.  மற்றபடி மது அருந்தி விட்டோ, குறித்த வேகத்தை விட அதிகமாகவோ அவர் செல்லவில்லை.  இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தது. செயற்கை நுண்ணறிவு சட்டச் செயலியிடம் வழக்கு போனது.  அது பல வகையில் ஆராய்ந்து கடைசியாக தாமஸ்மூர் மீது குற்றம் சாட்டியது.   தனிப்பட்ட இரண்டு நபர்களின் பெயர், வயது, எடை, தொழில், நிறம், ஓட்டுநர் உரிமம், குடியுரிமை, பொருளாதாரம் என்று பல வகையிலும் இந்தச் செயலி ஆராயத் தொடங்கியது.

கடைசியாக இருவருடைய பெயரின் அடிப்படையில் தகவலைத் திரட்டியது. தாமஸ்மூர் என்பவர் 17ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக அரசுக்கு எதிராகப் போராடிய ஐரிஷ் கவிஞர்.  அரசை எதிர்ப்பவர்களுக்கு இந்தச் செயலி ஒருநாளும் துணை போகாது என்ற வகையில், தற்போதைய தாமஸ்மூரும் 2030களில் நகராட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரே விபத்துக்குக் காரணமானவர் என்று தீர்ப்பு சொல்லிவிட்டது.  இவரின் முன்னோர்கள் அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தால் பழக்க குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் என்பதாலும், அந்த மரபணு இவரின் உடலிலும் இருக்கும் என்பதாலும் இந்தத் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லாமல் அமல்படுத்தப்பட்டது.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் குற்றவாளியாகப் பார்க்கும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதே நித்திலனின் கனவு.  நுண்ணறிவு மானுடத்தின் நீட்சியாக வளர வேண்டுமே தவிர அதிகாரத்தின் நாக்காக இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டார் நித்திலன்.  அக்காலத்தில் உருவான இங்கிலாந்தின் தண்டனைச் சட்டத்தைப் போல இந்தியாவிலும் இதைப்போல 1870இல் குற்றப் பழக்கமுடையவர் என்று குறிப்பிட்ட இனத்தின் மீது ஒரு சட்டம் உருவாகிறது.  பிறப்பிலிருந்து குற்ற முத்திரை குத்தப்படுகிறது.  இங்கிலாந்தில் உருவான சட்டத்திற்கும், இந்தியாவில் உருவான சட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.  இதனால் 1902-ல் காவல்துறைக்குச் சிறப்பு அதிகாரமும் வழங்கப்படுகிறது.

1949ஆம் ஆண்டு இந்தச் சட்டம் ரத்தாகிறது.  ஆனாலும் சுமத்தப்பட்ட பழி அழியவில்லை.  செயற்கை நுண்ணறிவுவரை தொடர்கிறது.  இதை மாற்ற வேண்டும் என்ற கதாசிரியரின் விருப்பமே இந்த நாவலின் மையக் கருத்து!  இதை முற்றிலும் ஒழிப்பதற்கு எந்தக் காலத்தில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதோ அந்தக் காலத்திற்குப் போய் ஆவணங்களை அழித்தால் தான் இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயலிக்கு அது சார்ந்த தகவல்கள் கிடைக்காமல் போகும் என்று கற்பனை செய்தாலும் நூலாசிரியரின் சமுதாயச் சிந்தனை வியக்க வைக்கிறது.  ஆவண அழிப்பைச் செய்வதற்காக சின்னமாயன் புறப்படுகிறான்.  காவல் கண்காணிப்பைத் தாண்டி ஆவணங்களை ஏற்றி வரும் கப்பலை அவனால் அழிக்க முடிந்ததா என்பதற்கு விடை காண்பதே கதையின் முடிவு.

மனிதனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், பலநேரங்களில் மனிதனுக்குள் இருக்கும் மிருகத்துக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டது கெடுவாய்ப்பு.  இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயலி இன வரலாற்றை வாசிப்பதற்காக எழுதப்பட்டது.  மனிதர்களின் பலவீனமான வரலாறுகளை வாசித்துத் தெரிந்து கொண்ட செயலி ஒரு பூதக்கரடியாக உருமாறிக் கொண்டது.  “ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எதைத் தருகிறது என்பதை விட, ஓர் அதிகாரம் அடுத்த அதிகாரத்திடம் எதை ஒப்படைக்கிறது என்பதை விட, மனித அறிவு கணினி அறிவுக்கு எதைக் கடத்துகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது’’ என்ற கருத்தை நித்திலன் மூலமாகப் பேசுகிறார் ஆசிரியர்.  இனி நித்திலனை விட்டுவைத்தால் அதிகாரம் மதிப்பிழந்து போகும் என்று தீர்மானிக்கும் நீல் ஹோமர் ஒரு திட்டம் தீட்டுகிறார்.  நித்திலனுக்குப் பிடித்தமான பெண்ணின் உருவத்தில் ஓர் இயந்திரப் பெண்ணை உருவாக்கி அவள் கையால் ரசாயனக் கலவையைக் கொடுக்க வைத்து நித்திலனைக் கொன்றுவிடுகிறார்.

கிராமத்துப் பண்பாட்டை, நாட்டுப்புறக் கதைகளைக் கேட்டு வளர்ந்த சமூகம் நம் தமிழ்ச் சமூகம்.  இன்று அந்த அனுபவம் வாய்க்கப் பெறாமல் இருக்கிறோம்.  2060இல் நடக்கும் ஒரு கதைக்குள் நாட்டுப்புறக் கதையைச் சேர்க்கும் எழுத்தாளனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  சின்னமாயன் தன் காதலி நெய்தலுக்குப் பவளக்கருப்பன் கதையைச் சொல்கிறான்.  வீர சின்னம்மா என்ற பெண் சிறிய வயதில் காட்டில் தனியாக நடந்து வந்த போது மின்னல் தாக்கி அவளின் கண்பார்வை பறிபோனது.  அப்போது காட்டுக்குள் வந்த இளம் சிறுவனான பவளக்கருப்பன் தன்னுடைய கண்களை அவளுக்குக் கொடுத்து விட்டான்.

மற்றவர்களுக்குச் சேவை செய்வதால் தெய்வ நிலைக்கு உயர்ந்த பவளக்கருப்பன் தன் காவல் எல்லையில் யாராவது தவறு செய்தால் அவர்கள் கண்ணை எடுத்துக் கொள்வான்.  அப்படித்தான் இந்தக் கதைகளின் வில்லனாக வரும் மாக்கியவெல்லியின் கண்களை அவன் பிடுங்கிக் கொண்டதாக சின்னமாயன் கதையை முடித்தான்.  இதைக் கேட்டதும் பவளக்கருப்பன் கண் மருத்துவர் என்று நெய்தல் சொல்ல, கோபித்துக் கொண்ட சின்னமாயன் ஒவ்வொரு சமுதாயத்திலும் சில நம்பிக்கைகள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்று சொல்லி, அதைக் கேலி செய்வது முறையா என்று கேள்வி எழுப்புகிறான்.  இது நெய்தலை நோக்கிய கேள்வி அல்ல, நம்மை நோக்கிய கேள்வி!

விலங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு உயர்த்தியது உழைப்பு என்று அழுத்தமாகப் பேசுகிறது படைப்பு.  பல காலமாக உழைத்துக் கொண்டிருந்த குரங்குகள் பின்னாளில் மனிதனானது என்றும் எந்தக் குரங்காவது இப்படி மனிதனாக மாறுவோம் என்று கற்பனை செய்திருக்குமா என்றும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.  ஆனால் உழைப்பு எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தியிருப்பதால், அது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது, கடவுளுக்கும் மேலானது!  மனித உழைப்பையும், தெய்வ நம்பிக்கையையும் சம கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறது நாவல்.  குலதெய்வ வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, நாட்டுப்புற நம்பிக்கைகள், வழக்காறுகள் என்று பலவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது நாவல்.  பரபரப்பான இந்த நாவலில் காதல் உணர்வுகளைத் தெறிக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர்.  நெய்தலை ரசிப்பதை மட்டுமே பிறவிப் பயனாகக் கொள்ளலாம் என்று சின்னமாயன் நினைப்பதிலிருந்து, முத்தம் பரிமாறிக் கொள்வது என்று காதல் மாறாமல் பயணப்படுகிறது கதை.  ஆங்காங்கே அவர்களினுடைய தொடுஉணர்வும் வாசகர்களைக் காதல் மனநிலைக்கு அழைத்துச் செல்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“நித்திலன் வாக்குமூலம்”
ஆசிரியர்:
கபிலன் வைரமுத்து
வெளியீடு:
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை:₹.300
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 முனைவர் இரா. மஞ்சுளா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *