கச்சேரி மாயக்கா – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : கச்சேரி மாயக்கா (குறுநாவல்)
ஆசிரியர் : பொன் விக்ரம்
பக்கம் : 104
விலை : 120
வெளியீடு : கெளரா பதிப்பகம்
வாசிப்பு இயக்கத்தில் அறிமுகமான இனிய நண்பர் பொன். விக்ரம் அவர்களின் 10 ஆவது நூல் கச்சேரி மாயக்கா எனும் குறு நாவலாக ஒளிர்கிறது.
தலைப்பே வித்தியாசமாக இருந்தது அது என்ன கச்சேரி, கச்சேரிக்கும் மாயக்காளுக்கும் என்ன சம்பந்தம் நூலிற்குள் புகுந்தால் தான் தானே விளக்கம் கிடைக்கும் புகுந்தேன். அந்தக் காலத்தில் நீதிமன்றத்திற்கும் காவல் நிலையத்திற்கும் சென்று வருபவர்களை கச்சேரிக்கு போவதாக ஒரு அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். இன்றும் கூட வீட்டிற்கு தாமதமாகவோ ஏதேனும் பிரச்சனையுடனோ போவோர்களை வீட்டிற்கு போ இன்னைக்கு நல்ல கச்சேரி இருக்கு என்று சொல்லக் கேட்கிறோம்.
நாவலாசிரியர் பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு எனும் ஒரு அபாரமான கதைக்களத்தை பின்னிறுத்தி அதன் வழியே தனது மூதாதை பெண்ணொருத்தியின் கதையை புனைந்துள்ளார். மிக விரிவான நாவலாக வர வேண்டிய கதையை மிகச் சுருக்கமான குறுநாவலாக பிரமாண்டமான திரைப்படத்தின் முன்னோட்டமாக மிகச் சாதாரணமாக எழுதிக் கடந்துள்ளார். வாசிக்கும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மொத்தமே 5 காட்சிகள் மட்டுமே மீதமுள்ள காட்சிகளை தேடி வாசக மனம் அலை பாய்கிறது.
பொன் .விக்ரம் அவர்கள் ஏற்கனவே 500 பக்கங்களில் இரண்டு நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். அவருக்கு ஒன்றும் இது கடினமான காரியமில்லை ஏனோ நேரம் எடுத்துக் கொள்ளாமல் சற்று அவசர கதியில் வெளியிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.
மூதாதையை தேடி புத்தூர் என்ற புத்தனூர் மலைக்கு போகிறார். அங்கே தாத்தன் வீரணனையும் பாட்டி மாயக்காளையும் அவர்களின் அருமை பெருமைகள் குறித்து ஒரிரு அத்தியாயங்களில் எழுதி கடந்துள்ளார். இதனால் அவர்கள் குறித்த சித்திரம் அழுத்தமாக பதிவாகவில்லை. அதே மாதிரி சிறுமி வீரம்மாளின் துர்மரணம் அதனால் பழிக்கு பழிவாங்க 10 பேரை கொல்லும் வீரணன் அது குறித்த காட்சிகள் ஏனோ தானோவென்று அத்தியாயங்களை கடத்தியுள்ளார்.
வானம் பொய்த்ததால் உழவு வேலைகள் நின்று போய் பஞ்சம் தாங்காமல் களவிற்கு சென்று அநியாயமாய் செத்துப் போய் அனாதையாய் கிடக்கும் வீரணன் உடலை காவல் துறையினர் கைப்பற்றி ஊராரை சாட்சி சொல்ல அழைத்தால் எவரும் வாயை திறக்கவில்லை. காட்டி கொடுத்தால் ஊரே கைரேகை சட்டத்தில் உள்ளே போகும் என்ற நிலையில் வீரணன் மனைவி மாயக்காள் காவல் நிலையம் சென்று இறந்து கிடக்கும் கணவனை ஊர் நன்மைக்காக இல்லையென்று பொய் சொல்கிறாள். அந்த பொய்யால் ஊர் பழிச் சொல்லிலிருந்தும் ரேகைச்சட்டத்திலிருந்தும் காப்பாற்றப்படுகிறது.
அதன் பின்புலக் காட்சியாக பெருங்காமநல்லூர் படுகொலை மிகச் சுருக்கமாக விவரிக்கப்படுகிறது. காவல் நிலையத்தில் சாட்சி சொல்லும் மாயக்காள் நிலை குறித்து மிக உருக்கமாக விவரிக்கிறார். கவிநயத்துடன் கதையை நிறைவு செய்கிறார்.
ஏராளமான எழுத்துப் பிழைகள் அதிலும் என்னுரையில் அவரே சொல்லுகிறார். பதிப்பகத்தார் என்னுடைய இரண்டு நாவல்களை ஒரு புள்ளி கூட மாற்றாமல் பிரசுரம் செய்ததாக . புள்ளியை மாற்றாமல் இருக்கலாம் ஆனால் பிழைகளை சரி செய்யாமல் வெளியிடுவது மிகப்பெரிய பிழை தானே எழுத்தாளரே
அபாரமான எழுத்தாற்றலும் கதை சொல்லும் உத்தியும் தெரிந்த எழுத்தாளர் பொன் விக்ரம் அவர்கள் விரைவாக இதன் தொடர்ச்சியை விரிவாக எழுதி வெளியிடுவார் என்று நம்புகிறேன். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்
எழுதியவர் :
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.