Kadaisi Bench Book by N Periyasami Bookreview by Vijayarani Meenakshi. நூல் அறிமுகம்: ந. பெரியசாமியின் "கடைசி பெஞ்ச்" (கவிதைத் தொகுப்பு) - விஜயராணி மீனாட்சி




கவிதைத் தொகுப்பின் தலைப்பே வசீகரம். ஏன் வசீகரமெனில் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு படிப்பு தவிர்த்து அத்தனை சாமர்த்தியங்கள் கைவரப்பெறுவதில்லை. ஆனால் கடைசி பெஞ்ச் மாணவர்கள்தான் பெரும்பாலும் வாழ்வியல் எதார்த்தங்களை எளிதாக உள்வாங்கி எதிர்நீச்சல் போடும் திறமையாளர்களாயும் மனித அறத்தோடும் இருப்பதாக, உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

இந்தக் கவிதைத் தொகுப்பில் பதின்பருவத்து குழந்தைகளுக்கான அவர்களின் மனநிலையை அழகாக எளியமொழியில் பதிவேற்றி இருக்கிறார் தோழர் பெரியசாமி. நாடடங்கின் போதான இந்த இரண்டாண்டு எல்லோரையும் ஆட்டிப்படைத்து அச்சமூட்டிய தீநுண்மி குழந்தைகளின், பதின்பருவத்துப் பிள்ளைகளின் கல்வியை பாதித்ததோடு மட்டுமின்றி உளவியலாகவும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியதை மறுப்பதற்கில்லை.

பதின்பருவத்து பால்யத்தை நினைவூட்டும் வகைமைக் கவிதைத் தொகுப்பு முதன்முதலாக அநேகமாக இருவாகத்தான் இருக்கும். அதற்காகவே கவிஞருக்கு வாழ்த்துகள்.ஆசிரியரின் தாய்மை மலர்ச்சியைத் தரும் அதேவேளை பருவமடைதலின் கூடடங்கும் மனநிலையையும் சொல்கிறது இருவேறு கவிதைகள், அந்த இரண்டு கவிதைகள் :
1.
‘வகுப்பறை விலக்கு’
கன்றெனத்துள்ளி
கடுகெனப் பொரிந்து
கலகலப்பாக வகுப்பில் இருப்பவள்
கண்சோர்வுற்று
அசதியாக அமர்ந்து
தவிப்போடு இருப்பவளைக் கண்ட
ஆசிரியை அருகில் சென்று
ரகசிய உரையாடலில்
கொண்டு வராததை அறிந்து
தன் கைப்பையை
தாய்மையோடு கொடுத்தனுப்பினார்
நாப்கின் மலர்ச்சியைத் தந்தது.
– * – * – * –

2.
‘ரகசிய பொய்’
என்றைக்கும் இல்லாது இன்றைக்கு
அம்ம்மா அம்ம்ம்மாவென
அழைத்த மகளைப் பார்த்து
எதற்கிந்த கொஞ்சல் என்றாள்

பிரவினுக்குப் பிறந்தநாள் இன்று
எல்லோரையும் வீட்டிற்கு கூப்பிட்டு இருக்கான்
மாலை வர லேட்டாகும்

சரிசரி
மறக்காம அப்பாகிட்ட
பொண்ணுங்க வீட்டுக்கு
போய்வந்ததா சொல்லிடு
– * – * –

மேற்கண்ட இந்தக் கவிதை போன்ற ‘தலைமுறை’ என்னும் தலைப்பிலான கவிதையில் வேறொரு அம்மா ஆண்பிள்ளைகளுடனான நட்பை அவர்கள் பற்றிய பேச்சை விரும்பாத. வேறொரு அம்மாவாக இருப்பதையும் அவதானித்ததை அறியமுடிகிறது.

கடிதம் எழுதும் கலை அருகிப்போய்விட்ட இந்தக் காலத்தில் கடிதத்தின் வாயிலாக சொல்லத்தெரியாத ஏதோவொரு உணர்வை உடலின்மொழியில் கடத்தும் வல்லமையை இழந்ததை உணரமுடிகிறது.

தினப்படி ஏ.சி. காரில் பயணிக்கும் சிறுவனொருவனின் பயணத்தின் ஊடான காற்றின் மொழியறிதல் ஒரு திரைப்படத்தில் தம்பி ராமையா, நம்மள மாதிரி காத்த காசுகுடுத்தாம்மா வாங்கப் போறாங்க?” என்று சொல்வது நினைவில் வந்துபோனது.

ஆக இந்த நாடடங்கு காலம் எல்லோரையும் ஏதோ ஒருவிதத்தில் இயங்க வைத்தது என்ற நம்பிக்கையையே இளையோருக்குச் சொல்ல வேண்டும் என்ற எதார்த்தத்தை எளிய மொழியில் பதின்பருவ உளவியலை கவிதைத் தொகுப்பாக கொண்டுவந்திருக்கிறார் தோழர் பெரியசாமி இந்த “கடைசி பெஞ்ச்”ல்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *