நூல் அறிமுகம்: “கடைசி மழைத்துளி” – பா. அசோக்குமார்“கடைசி மழைத்துளி”
அறிவுமதி
கவிதா பப்ளிகேஷன்
பக்கங்கள்: 80
₹. 50

1996 ஆம் ஆண்டு முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட கவிதை நூல். கவிஞர் அறிவுமதியின் கவிதைகள் தனிப்பெரும் கவனத்தை ஈர்ப்பவையே… தமிழ் திரைப்படப் பாடல்களில் கூட ஆங்கில மொழி கலப்பில்லாமல் மெட்டுக்கு பாட்டு எழுதும் தனித்திறமிக்கவரே கவிஞர் அறிவுமதி அவர்கள். இக்கவிதை நூலில் சூழலியல் சார்ந்த கருத்துக்கள் ஹைக்கூ வடிவில் அமைத்து சிந்தனைகளைத் தூண்டிவிட்டுள்ளார் கவிஞர் அவர்கள்.

மழை 10
பசுமை 10
வெண்மை 10
நீலம் 10
சிவப்பு 10
கறுப்பு 10
தமிழன் 10
காதல் 10
பிரிவு 10
பெண்மை 10
வள்ளுவம் 10

இக்கவிதை நூலில் மேற்கூறிய 11 தலைப்புகளில் தலைப்பிற்கு 10 ஹைக்கூக்கள் என்ற முறையில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ரத்தினவொளிச் சுருக்கமாக நெற்றியிடி வார்த்தைகளாக நமது வறண்டபூமி நெஞ்சில் ஈரமழை கவிதைகள் பொழிந்து சூழலியல் வானவில் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார் என்றே எண்ணுகிறேன்.

இந்நூலில் மற்றுமொரு சிறப்பும் காத்துக் கிடக்கிறது. “வல்லினம், மெல்லினம், இடையினம்” என்ற தலைப்புகளில் இக்கவிதை நூலுக்கு மணிமகுடங்கள் சூட்டியுள்ளனர் மூவர். இந்நூலின் அணிந்துரையில் கவிஞர் வண்ணதாசன் அவர்கள் “மெல்லினம்” என்ற தலைப்பில் கவிதை வடிவில் வெண்சாமரம் வீசி ஆற்றுப்படுத்த முயல்கிறார் கவிஞர் அறிவுமதி அவர்களை. “இடையினம்” என்ற தலைப்பில் தமது எண்ணக் குமறல்களை அள்ளித் தெளித்துள்ளார் கவிஞர் அறிவுமதி அவர்கள். “வல்லினம்” என்ற தலைப்பில் “காசி ஆனந்தன்” அவர்கள் தமது கடந்த கால துயர நினைவுகளை அசை போட்டு அசத்தியுள்ளார் வசன கவிதைகளாக…இக்கவிதை நூலில் யான் வியந்த சில கவிதை வரிகளை மட்டும் மேற்கோளிட்டு காட்ட முனைவதே இந்நூலுக்கான அறிமுகத்திற்கு போதுமானதாகக் கருதுகிறேன். ஒரு கவிதை வானத்திற்கு ஒரு நட்சத்திரக்கவியே மின்னல்தானே…
~

பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை
~

ஈரமற்ற நிலம்
வெடிப்பில் கிடக்கிறது
கொக்கின் பிணம்
~

கிளை கிடைக்காத சோகம்
அமர்ந்தது புறா
கல்லறைச் சிலுவை
~

வீட்டுக்குள் குரோட்டன்சுகள்
தொட்டிக்குள் மீன்கள்
வானம் தொலைத்த நகரம்
~

கொரில்லா வீரன்
கையில் துப்பாக்கி
காத்திருக்கும் புல்லாங்குழல்
~

கறுப்பின் குரல்தான்
பறவை என்பதால் மறந்தார்களோ
குயில் பாட்டு
~திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு… அட
முடியவில்லை மீன் பிடிக்க
~

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை
~

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டிச் சக்கரத்தில் நசுங்கியது
நழுவிய புல்லாங்குழல்
~

மணவறை
மெதுவாகப் பெருக்குகிறாள்
முதிர்கன்னி
~

இரண்டு அடி கொடுத்தால்தானே
திருந்துவாய்
வாங்கிக்கொள் வள்ளுவனிடம்.
~

முத்துக்கள் பத்தில் ஒரு முத்து மட்டுமே இங்கே சிந்தியுள்ளன… ஒரு முத்தம் போதும்தானே ஓராயிரம் முத்தங்கள் பின்தொடர… முழுவதும் அள்ளி பருக, முத்துக்குளியல் நிகழ்த்த இக்கவிதை நூற்கடலில் குதித்தால் மட்டுமே சாத்தியமாகுமோ….

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.