பரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித்தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார். அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான  செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய்  மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்பினார்.

அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும் மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன்கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான். அதன்பின் பரீஸ் எழுதியுள்ளவற்றை அவர் வார்த்தைகளிலேயே அளிக்கிறேன்.

“அறைக்கு வந்தபின் கைகளையும், முகத்தையும் கழுவிவிட்டு அறைக்குள் வந்து அவன் தன் உடைகளைக் களையலானான். ஏதோ பொத்தென்று தரையில் விழுந்தது. நான் திரும்பிப்பார்த்தேன். அங்கே கண்டதை என்னால் நம்ப முடியவில்லை. தரையில் பொய்க்கால்களை வைத்தான். அவன் கால்கள் இல்லாத விமானி! அதிலும் சண்டை விமானம் ஓட்டி! இன்று மட்டும் ஏழு போர்ப் பறப்புகள் நிகழ்த்தி, இரண்டு பகை விமானங்களை வீழ்த்தியவன்! இது முற்றிலும் நடக்கக்கூடாததாகத் தோன்றியது.

ஆனால் அவனது பொய்க்கால்கள் இராணுவப்பாங்கான பூட்சுகள் லாகவமாக அணிவிக்கப்பட்டுத் தரையில் கிடந்தன. அவற்றின் கீழ் முனைகள் படுக்கைக்கு அடியிலிருந்து துருத்திக்கொண்டிருந்தன. அங்கே ஒளிந்திருக்கும் ஒரு மனிதனுடைய கால்கள் போல் காணப்பட்டன அவை.  அந்தக் கணத்தில் என்னுடைய பார்வை குழப்பம் அடைந்ததாகத் தென்பட்டதுபோலும். ஏனெனில், விமானி என்னைப் பார்த்து தந்திரமும் மனநிறைவும் ததும்பும் புன்னகையுடன் கேட்டான்.

‘நீங்கள் முன்பு இதைக்கவனிக்கவில்லையா என்ன?’

‘இப்படி இருக்கும் என்ற எண்ணமே எனக்கு உண்டாகவில்லை.’

‘ரொம்ப நல்லது! ஒரு புதிய ஆளிடம் அதுவும் ‘பிராவ்தா’ செய்தித்தாளிலிருந்து வந்திருப்பவரிடம் இத்தகைய அபூர்வத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாமல் எங்கள் ரெஜிமென்டில் உள்ளவர்கள் எப்படி விட்டுவிட்டார்கள்?’

‘ஆனால் இது கண்டறியாத சேதியாயிற்றே. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தைச் செலுத்துவதும், போரிடுவதும் நம்பவேமுடியாத அருஞ்செயல் அல்லவா? விமானப்படை வரலாறு இம்மாதிரி நிகழ்ச்சியை இதுவரை அறிந்ததே இல்லையே.’

அதன்பின்னர் அலெக்சேய் மெரேஸ்யெவ் தன் கதையை பரீஸிடம் கூற, அவர் கேட்டுப் பதிவு செய்து, நமக்கு அளித்துள்ள கதைதான் உண்மை மனிதனின் கதை.

 பரீஸ் பொலெவோய்
பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின்  கதையை நான்கு பாகங்களாக பரீஸ் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் ஜெர்மானியர்களுடன் நடந்திடும் சண்டையில் அலெக்சேய் மெரேஸ்யேவின் விமானம்  சிதறிவிழுதல், அதிலிருந்து எப்படியோ தப்பிப்பிழைத்த அலெக்சேய், தங்கள் ஆட்கள் இருக்கும் திசைநோக்கி, பனிப்புயலினூடே 18  நாட்கள் தவழ்ந்து வந்தது, அவன் வருவதைக் கண்ணுற்ற இரு சிறுவர்கள், ஊருக்குள் அவனுக்கு உறுதுணையாக இருந்த  மிஹாய்லா தாத்தா, கிராமத்துப் பெண்கள், ‘கொரில்லா’ கோழி சூப் வைத்துக்கொடுத்த கிழவி உட்பட அனைவரையும் மிகவும் உன்னிப்பாக முதல் பாகத்தில் வர்ணித்திருப்பார் பரீஸ்.

இரண்டாம் பாகத்தில் மருத்துவமனையில் அலெக்சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவன் அதனை எதிர்கொள்வதையும், அவனுக்கு உற்ற நண்பர்களாய், தோழர்களாய், செயல்பட்ட சக நோயாளிகள், மருத்துவத்தாதிகள் மற்றும் மருத்துவரை பரீஸ் பொலேவோய் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அலெக்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்சமயத்தில் எப்படி இருந்தான்? அவனை அனுமதித்த மருத்துவர், தலைமை மருத்துவரான வஸீலிய் வஸீலியெவிச்சிடம் கூறும்போது, “இவனுடைய நிலைமை அபாயகரமானது.

கால் விரல் எலும்புகள் நொறுங்கியிருக்கின்றன. இரண்டு பாதங்களிலும் தசையழுகல் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் முக்கியமானது அளவுகடந்த சோர்வு. இவன் நொறுங்கிய பாதங்களுடன் பதினெட்டு நாட்கள் தவழ்ந்தும், ஊர்ந்தும் ஜெர்மானியப் பின்னணியிலிருந்து வெளியேறியதாக இவர்களுடன் வந்த இராணுவ மருத்துவர் எழுதியிருக்கிறார்.”

இவ்வாறு மிகவும் மோசமான நிலைமையில் அனுமதிக்கப்பட்ட  அலெக்சேயை அங்கே அவனுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கமிஸாரும், மருத்துவத்தாதிகளும், தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச்சும்  எப்படி அவனுக்குத் தைரியம் கொடுத்து பேணிப் பாதுகாத்தார்கள் என்பதை வாசகர்களாகிய நம் கண்கள் குளமாகும் அளவிற்கு பரீஸ் வர்ணித்திருப்பார்.

அலெக்சேயின் கால்கள் இரண்டும் எடுக்கப்பட்டுவிடுகின்றன. அவன் இனி விமானியாக முடியாதே என்ற கவலையில் அலெக்சேய் நொறுங்கிப் போய்விடுவான்.  கமிஸார் எப்படி எப்படியெல்லாமோ ஆறுதல் அளிக்க முயற்சித்திடுவார். எனினும் அவனை சமாதானப்படுத்தமுடியவில்லை.  வீரம் விளைந்தது நாவலின் பாவல் கர்ச்சாகின் எப்படி கண்களை இழந்தபின்னரும் வாழ்ந்து காட்டினான் என்பதை எடுத்துக்கூறுவார். பாவல் கர்ச்சாகின், அலெக்சேயுக்கும் நண்பன்தான். எனினும் அவன் விமானியல்லவே என்று அலெக்சேய் கூறிவிடுவான்.

அந்த சமயத்தில், ஒருநாள் ஒரு  பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. ஒருவன், தனக்கு ஒரு கால் இல்லாத நிலையிலும், பொய்க்கால் பொருத்திக்கொண்டு, விமானத்தை ஓட்டியதாகக் கூறுகிறது,  அந்த செய்தி. இதை எடுத்துக்கொண்டு வந்து, அலெக்சேயிடம் விவரிக்கிறார், கமிஸார். இதைக் கேள்விப்பட்டவுடன் அலெக்சேய் உற்சாகம் கொள்கிறான். ஒருசில நிமிடங்கள்தான் அந்த உற்சாகம் நீடிக்கிறது. பின்னர் மீண்டும் சோர்ந்துபோய்விடுகிறான். கமிஸார் என்னவென்று கேட்கிறார்.  “அவனுக்கு ஒரு கால்தான் இல்லை. ஆனால் எனக்கு இரு கால்களும் இல்லையே,” என்கிறான் அலெக்சேய்.

பயணம்: நான் படித்த புத்த்கங்கள்-4 ...

அப்போது கமிஸார் அவனிடம், “நீ சோவியத் குடிமகன்” என்கிறார். “சோவியத் குடிமகன்” என்று இயந்திரம்போலத் திருப்பிச் சொன்னான் அலெக்சேய். அவனுடைய வெளிறிய முகம் உள்ளிருந்து பரவிய ஏதோ செம்மையால் ஒளிர்ந்தது. வியப்பும், மகிழ்வும் பொங்கும் விழிகளுடன் எல்லோரையும் பார்த்தான். அதன்பின் தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பொய்க்கால்கள் மூலமாக கடுமையாகப் பயிற்சி பெற்று, இயல்பானவர்கள் நடப்பதைப்போலவே பொய்க்கால்களுடன் நடக்கும் அளவிற்குத் தன்னை உருவாக்கிக்கொண்டான்.

இவை அனைத்தையும் இரண்டாம் பாகத்தில் நாம் படித்திடலாம்.

கதையின் மூன்றாம் பாகத்தில் மீண்டும்  போர் விமானியாவதற்காக அலெக்சேய் மேற்கொள்ளும் முயற்சிகளைப்  பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அவனிடம் உள்ள அசாத்திய திறமையைக்கண்டு ஆச்சர்யப்படுவதும், இறுதியில் அவனுக்குக் கால்கள் கிடையாது என்று தெரியவருகிறபோது தங்கள் கையறுநிலையைத் தெரிவிப்பதும், எல்லாவற்றையும் வெற்றிகொண்டு அலெக்சேய் போர் விமானியாவதையும் மூன்றாவது பாகத்தில் நாம் பார்த்திடலாம்.

நான்காவது பாகத்தில் போர் விமானிகளிலேயே முன்னுதாரணமாகத் திகழும் அலெக்சேயை நாம் பார்க்கிறோம்.

அதேபோல் இந்நவீனத்தில் மற்றுமொரு முக்கியமான பாத்திரப்படைப்பு அலெக்சேயின் காதலியாக வரும் ஓல்கா.  என்னை உருவாக்கிய தோழர்களில் ஒருவர் தோழர் எம்.ஆர். அப்பன்.  பெண்கள்  குறித்துக் கூறுகையில் அவர் ஒரு சொற்றொடரை அடிக்கடி கூறுவார். “பெண்கள் இயக்கத்திற்குள் அவ்வளவு எளிதாக வரமாட்டார்கள். ஆனால், வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள் அளவிற்கு உறுதியாக எவரும் இருக்கமாட்டார்கள்,” என்பார்.  உண்மை. சோவியத் இலக்கியங்கள் அனைத்திலும் இதனை நாம் காணமுடியும்.

தாய் நாவலில் நிலோவ்னாவாக இருந்தாலும் சரி, வானவில்லில் வரும் ஒலினாவாக இருந்தாலும் சரி. இந்த நவீனத்தில் வரும் ஓல்காவும் அப்படிப்பட்டவர்தான். அவரும், சோவியத் செஞ்சேனையில் சேர்ந்து முன்மாதிரி வீரமாதர்களில் ஒருவராகத் திகழ்வாள். அலெக்சேய்க்குக் கால்கள் இரண்டும் இல்லை என்பதை ஓல்கா அறிந்திருந்தாள். ஆனால் எதற்காகவோ அதை அவன் சொல்லத் தயங்குகிறான் என்பதைப் புரிந்துகொண்ட ஓல்கா, அதனைக்காட்டிக் கொள்ளாமலேயே அவனுக்குத் தைர்யமூட்டும் விதத்தில் அவனுக்குக் கடிதங்களை எழுதிக்கொண்டிருப்பாள்.

தோழர் எஸ்.ஏ.பெருமாள் இந்நவீனத்திற்கு எழுதியுள்ள மதிப்புரையில் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியிருப்பதேபோன்று, “நான் உயிரோடு இருக்கும்வரை உன்னை எதிர்பார்ப்பேன், எப்போதும் எந்த நிலையிலும் உன்னை எதிர்பார்க்கும் இடம் ஒன்று இருக்கிறது என்பதை மனதில் இருத்திக்கொள். முத்தங்கள் என் அன்பே” என்று எழுதியிருப்பாள்.

இவ்வாறு உண்மை மனிதனின் கதையைப் படிக்கும் எவராக இருந்தாலும், படிப்பதற்கு முன்பிருந்ததைவிட படித்ததற்குப்பின் தன் உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பொங்கிவழிவதை உணரமுடியும்.  இது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *