வரலாற்றுச் சம்பவங்களின் ஊடாக கற்பனை பாத்திரங்களைச் சேர்த்து உருவாக்கப்படும் புனைவுகளை ‘ஹிஸ்டாரிக்கல் பிக்‌ஷன்’ என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். தமிழில் அத்தகைய வகை நூல்களை நிறைய வாசித்ததில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் சமீபத்தில் வாசித்து முடித்த நாவல்தான் ஆங்கிலத்தில் ரியனான் ஜென்கிங்ஸ் ஷேங் எழுதி, தமிழில் பத்மஜா நாராயண் அவர்கள் மொழிபெயர்த்துள்ள “கடைசி வைஸ்ராயின் மனைவி”.
பொதுவாக மன்னர்கள் காலந்தொட்டே வரலாறு என்பது ஏதோ தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையாகவும், அவர்களின் பாராக்கிரமங்கள் மற்றும் வீழ்ச்சியைப் பேசுவதாகவே அமைந்திருக்கும். ஆனால் உண்மையில் அது எத்தனையோ முகம்தெரியாத நபர்களையும் சேர்த்துக் கொண்டியங்கும் ஒரு மாபெரும் சுழற்சி. அப்படி நகரும் பயணத்தில் வரலாற்றின் மாபெரும் தருணங்களை அருகில் இருந்து காண்பவர்களாகவும், ஏதோ ஒரு விதத்தில் அதில் பங்குபெறுபவர்களாகவும், அதேசமயத்தில் எழுதப்படும் அந்த வரலாற்றின் பக்கங்களின் கடைசி முற்றுப்புள்ளியாகக் கூட இடம்பெறாமல் மறைந்து போனவர்களும் உண்டு! அப்படி ஒரு கதாபாத்திரத்தை கற்பனையாக உருவாக்கி அதன் வழியாக ஒரு சரித்திர தருணத்தை மறு உருவாக்கம் செய்யும் படைப்பே இது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் இங்கிலாந்து தனது காலனியாதிக்கப் பிடியினை தளர்த்தும் முடிவிற்கு வந்து செயலாற்றிய தருணம். முக்கியமாக இந்தியாவிற்கு விடுதலை தருவதென தீர்மானித்து அதற்கான செயல்திட்டங்களை வகுத்தளிக்க, செயல்படுத்த ஒருவரைத் தீர்மானிக்கிறது. அவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான லார்ட் மவுண்ட் பேட்டன். அவருடன் அவரது மனைவியான எட்வினாவும் ‘வைஸ்ரினாக’ (வைஸ்ராயின் மனைவி) இந்தியா வருகிறார். இவர்களுடன் எட்வினாவின் பள்ளித் தோழியான லெட்டீஷியா வாலஸ், வைஸ்ராயின் சிறப்பு உதவியாளராக இந்தியா வருகிறார். நாவல் முழுக்க அவரது செல்லப்பெயரான ‘பிப்பி வாலஸ்’ என அழைக்கப்படும் இந்த கற்பனை பாத்திரம்தான் நமது கதைசொல்லி!
நேரு மற்றும் மவுண்ட் பேட்டன் மனைவி ...
அவர்கள் 1947-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியா வந்து இறங்கும் போது, இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்னும் தனிநாடு என்னும் ஜின்னாவின் கருத்தாக்கத்தால், அதன் விளைவுகளால் இந்தியாவில் ஒரு உள்நாட்டுக் கலகம் வெடித்து கொந்தளித்துப் பெருகக் காத்திருந்தது. ஆரம்ப கட்ட வன்முறைகள் துவங்கியிருந்தன. இத்தகைய சூழலில் அனைத்துப் பிரிவு தலைவர்களுடன் இணைந்து பேசி, அதிகார மாற்றத்திற்கான செயல்திட்டத்தை வகுத்து விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டிய சிக்கலான பெரும்பொறுப்பு மவுண்ட்பேட்டன் தலையில். அத்தகைய சூழலில்தான் அப்போதைய காங்கிரஸ் தலைவர் நேருவுடன், மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவிற்கு ஆழமான நட்பு உருவாகிறது.
புதிதாகத் தோன்றவுள்ள இருநாடுகளின் உருவாக்கம், அதனோடு தொடர்புடைய ரத்தமும் சதையுமான லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்வு, அரசியல் மற்றும் அதிகார மட்டச் சிக்கல்கள், உள்ளும் புறமும் கணிக்க இயலாதவாறு கனன்று கொண்டிருக்கும் தனிமனிதர்களின் ஆளுமைகள், ஈகோக்கள் என அனைத்திற்கும் நடுவில் இந்த இருவரின் நட்பு பயணமாகிறது. அதற்கு மவுன சாட்சியாக நமது பிப்பி வாலஸும்!
இந்திய வரலாற்றின் பல்வேறு ஆரம்பகட்ட முக்கியத் தருணங்கள் பிப்பியின் கண்வழியாக இந்தநாவலில் நமக்கு காண்பிக்கப்படுகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பான கலவரங்களின் கொடூரங்களைக் காட்சிப்படுத்தக் கூடிய வகையில், அப்போதைய பஞ்சாப் மாகாண கஹீதா கிராமத்திற்கு வைஸ்ராய் & வைஸ்ரினின் விசிட் மற்றும் அகதி முகாம் காட்சிகள், 1947-ல் சிம்லாவில் நடக்கும் அதிகார மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை தருணங்கள், வங்காளத்தின் “நோ ஆக்‌ஷன் டே” காலகட்ட காட்சிகள், குறிப்பாக கொத்தாக பிணங்களைச் சுமந்தபடி தில்லி வந்துசேரும் அந்த ரயில் மற்றும் இந்தியாவின் சுதந்திர தின தருணங்கள், காந்தியின் மரணம் என அனைத்துமே 99 சதவீத நிஜத்துடனும், பிப்பி வாயிலாக ஆசிரியரின் 1 சதவீத கற்பனையுடனும் நம்முன் எழுத்தின் வாயிலாக உலா வருகின்றன.
thelastvicereine hashtag on Twitter
அதேபோல நாம் இந்திய வரலாற்றுப் புத்தங்களில் மட்டுமே படித்திருக்க கூடிய எத்தனையோ ஆளுமைகள் பற்றிய சம்பவங்கள், புனைவின் சாத்தியத்துடன் நுணுக்கமான அவதானிப்புகள். குறிப்பாக இந்தியரான வி.பி.மேனன். அதேபோல் ஆறுமாதங்களுக்கு மேல் நேரம் எடுத்து பிரிக்க வேண்டிய இந்திய – பாகிஸ்தான் எல்லைக் கோடுகளை, நிர்பந்தம் காரணமாக ஆறே வாரங்களில் நிர்ணயம் செய்துவிட்டு, இந்தியாவின் சுதந்திர தினத்தன்று லட்சக்கணக்கான மக்களின் துயரத்தைப் பார்க்க, அவர்களின் சாபங்களை வாங்க மனமின்றி , தில்லியை விட்டு விரைந்தோடும் சிறில் ராட்க்ளிஃப்.
இவர்கள் இருவரும் சிறு உதாரணங்கள் மட்டுமே. இதுபோல் எத்தனையோ பேர். இவர்கள் எல்லாம் இருக்கும்போது மகாத்மா காந்தி இல்லாமலா? இதற்கு நிகராக பிப்பி போலவே மருத்துவர் ஹரி, பிப்பியின் பணியாளர் ஜமுரத்கான், கொல்டி எனும் பெண், சிம்லாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஜேன் ஓவிங்க்டன் என எத்தனையோ பாத்திரங்களின் வழியாக நகரும் இந்த முக்கியப் படைப்பை நண்பர்கள் வாசித்து மகிழுங்கள். என்னால் அத்தனையையும் எழுத முடியுமென்று தோணவில்லை. 🙁
இந்த நாவலில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மொழிபெயர்ப்பாளர் பத்மஜா நாராயணின் சீரிய பங்களிப்பு. இதுபோன்ற வரலாற்றை ஒட்டி உருவாகும் கற்பனை கலந்த படைப்புகளுக்குத் தரவேண்டிய கூடுதல் அக்கறை மற்றும் ஈடுபாடு சார்ந்த சிறப்பான மொழிபெயர்ப்பு.
Etleboro.org - Inside Lord Mountbatten and wife Edwina's ...
இறுதியாக.. வழக்கம் போல நற்றிணை பதிப்பகம் நூலைச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. ஆனால்…நாவலின் சரித்திர சம்பவங்களின் காலவரிசை குறித்து மூன்று பக்கங்கள், நூலாசிரியர் ரியனானின் ஒப்புகை ஒரு மூன்று பக்கங்கள் (please don’t miss this), பின்னர் நூல்சார் குறிப்புகள் மற்றும் பிப்லியோக்ராபி என மொத்தமாக பத்து பக்கங்களை ஒதுக்கியுள்ள அதேநேரம், மொழிபெயர்ப்பாளர் பற்றி, அவரது பிற ஆக்கங்கள் குறித்தெல்லாம் ஒரு பக்கம் கூட இல்லை என்பது ஒரு வாசகனாக எனக்கு பெருங்குறையாக உள்ளதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.  🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *