ஒரு எளிய வாசகனின் பார்வை இது
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வரும் தோழர் தேனி சீருடையான் அவர்கள் மிகச் சிறந்த நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் சமூக செயற்பாட்டாளர் மற்றும் வைகை இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர்.
“கடை” “ நிறங்களின் உலகம்” “ சிறகுகள் முறியவில்லை” “ நாகராணியின் முற்றம்” என்று அற்புதமான நாவல்களோடும் “ஆகவே” “ஒரே வாசல்” “ விழுது”
“பயணம்” “மான் மேயும் காடு” “கந்துக்காரன் கூண்டு” “பாதகத்தி” என்று அற்புதமான சிறுகதை தொகுப்புகளோடும் தான் இந்த மண்ணின் எழுத்தாளன் மக்களின் எழுத்தாளன் என்பதை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வரிசையில் மேலும் அழகு சேர்க்க தற்போது வந்துள்ளது “கடல் வனம் “ என்ற சிறுகதை தொகுப்பு. அகரம் வெளியீடாக இம்முறை பனிரெண்டு புதிய கதைகளுடனும் தோழர் உமர் பாருக்கின் அற்புதமான அணிந்துரையுடனும் உங்கள் உள்ளத்திற்குள் சிறிய பெரிய வலிய உரையாடல்களை நிகழ்த்திப்பார்க்க வந்திருக்கிறார் தோழர் தேனி சீருடையான் அவர்கள்.
எனக்கு அவரிடம் எப்போதும் பிடித்தது அவருடைய எளிமையான மொழியும் நமது தோளில் பிரியமாக கை வைத்தபடி கதை சொல்லும் சிநேகிதமான பாங்கும் ஆகும். ஆடம்பரமில்லாத அவசியமான வார்த்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கடைத்தேற்றமில்லாத மனிதர்களை அவர் கதையாகப் புனையும் பாங்கு எந்த ஒரு வாசகனையும் சட்டென்று இழுத்து கதைக்குள் கொண்டு சென்று விடும் என்பது உண்மை.
அவருடைய கதை மாந்தர்கள் யாவரும் எளிதினும் எளியவர்கள் என்பதும் சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள் கடைத்தேற வழியற்றவர்கள் என்பதும் வலிக்கும் உண்மை..
சோரம் போன தாயால் கைவிடப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையான தந்தையால் குழந்தை தொழிலாளர்களாக்கப்பட்டவர்கள் உண்ண உணவும் உடுத்த உடையும் உறங்க போக்கிடமும் அற்றவர்கள் . விளிம்பு நிலையிலும் கீழான மனிதர்கள் கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள் என இப்படிப்பட்ட மாந்தர்கள் தான் திரும்ப திரும்ப இவருடைய கதைக்குள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் அக உலகம் மற்றொரு துயரமான கோணத்தில் இவரது எழுத்துக்களின் வழியே விரிந்து செல்கிறது.
கடைத்தேற வழியற்ற மனிதர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது அந்த வாழ்க்கையை அவர்கள் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையின் அவலத்தை எள்ளி நகையாடிக் கொண்டும் அதற்கு காரணமான சமூகத்தை ஆட்சியாளர்களை தங்களுக்குரிய அளவில் விமர்சித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது தான் தோழர் இந்தக் கதைகளின் வழியாக நமக்கு காட்டும் உலகம் .
“ நாகம் “ என்ற முதல் சிறுகதையின் களம் புதிது ,கதை மாந்தர்களும் புதிது. கீழடியில் நாம் நமது பண்பாட்டைத் தோண்டி கண்டடைவதைப்போல நமக்கான வழிபாட்டையும் நாம் தேடிக்கண்டடைய வேண்டும் என்பதை இந்த கதையில் அற்புதமாக சொல்லியிருக்கிறார். அதை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்
‘’ தமிழ் வழிபாடுங்குறது இயற்கையோட சேர்ந்தது . மழை மின்னல்ங்குற இயற்கை நிகழ்வுகளையும் காட்டு ஜீவிகளையும் தான் நாம சேவிச்சிட்டிருந்தோம். மனித உருவமா வணங்கப்பட்ட முதல் கடவுள் முருகன். வள்ளிக் கொறத்தியோட காதலும் காமமும் கொண்டான் முருகன். முருக வழிபாடு காதலுக்கு காதலுக்கு மரியாதை ‘’
என்ன அற்புதமான மரபு நம்முடையது ,!
‘’ஆகம விதிப்படி புரோகிதம் பண்ணத் தெரிஞசா யார் வேண்ணாலும் அர்ச்சகராகலாம்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன பெறகும் நடை மொறையில ஒண்ணும் நடக்கல ‘’
அதனால் ஒரு சாமியார் ஒரு புதிய கோயிலை நிர்மாணிக்க விரும்புகிறார் . அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும் என்று அவரே விளக்குகிறார்.
‘’ மண்ணால நாகம் மாதிரி செஞ்சு பக்கத்துல நாகம்மா கோயிலை உண்டாக்கப் போறேன். மொதல்ல குலசாமிங்கற நிலையில அதக்கும்பிடனும் .என் வம்சத்தோட குலசாமி.பெறகு பையப் பைய வளர்த்து தமிழ் சமூகத்துக்கான வழிபாடா மாத்தனும் ‘’
தோழர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா ? சாமி கும்பிடாதே என்று சொல்வதற்கு நாளாகும். ஆனால் உன்னுடைய மரபை மீட்டெடுத்து அதை வணங்கு என்று இப்போது சொல்ல இயலும்.
‘ பிறை நிலா ‘’ கதையிலும் சென்ற கதையைப் போலவே ஆசிரியரும் ஒரு பாத்திரமாக வருகிறார். தன் தங்கை இறந்து விட அதை முன்னிட்டு குடும்பதிதிற்குள் உறவுகளுக்குள் எப்படி ஒரு வெற்றிடம் உருவாகிறது என்பதையும் மனிதர்கள் இறந்தாருக்கான சடங்ககுகளை செய்யும் போது என்ன நம்பிக்கையில் செய்கிறார்கள் என்பதையும் மூட நம்பிக்கைகளுக்கு எப்படியெல்லாம் வெற்றுச் சமாதானம் சொல்கிறார்கள் என்பதையும் அருமையாக அவருக்கே உரிய எள்ளல் தொனியில் எழுதியிருக்கிறார்.
‘’ பவுனாச்சி ‘’ கதை மரண வீடுகளில் நிகழ்த்தப்படும் சடங்குகளைபற்றிய கூர்மையான அவதானிப்பு. ஒரு பள்ளிச் சிறுமியின் பார்வையில் நகரும் கதை கடைசியில் சொந்தக் குடும்பம் இல்லாத பவுனாச்சி தன் உயிலில் தன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று எழுதியிருப்பதைப்பார்த்து விட்டு , உறவுகள் எப்படி தங்களுக்குள் சண்டையிட்டு கலைந்து செல்கிறது என்பதை துல்லியமாக படம் பிடிக்கிறது.
இந்தக் கதையை வாசித்து முடித்ததும் மனிதர்கள் எதனால் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் உறவு கொண்டிருக்கிறார்கள் .பணத்திற்காக மட்டும் தானா என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
‘’ மஞ்சுளா ‘’ விழிகளற்ற பெண் எப்படி தன் அகவிழிகளை திறந்து வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்கிறார் என்பதை அருமையாக விவரித்திருக்கிறது.
‘’ நின்றான் ‘’ தீ நுண் கிருமியின் வருகைக்குப் பிறது ( கொரானா ) பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களாக மாறிப் போகிறார்கள் என்பதை ஒரு சிறு வியாபாரியின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மூலமாக சொல்லிச் செல்கிறார். இது கசப்பான எதார்த்தமான உண்மை .பெண் குழந்தைகளென்றால் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
“ தாதுப் பருவம் “ கடைத்தேற்றமற்ற பிச்சை ஏற்றுப் பிழைக்கும் அஞ்சலை ஒரு பெண்ணின் கதை. கொரானா தொற்றிற்குப் பிறகு தங்களுக்கே உணவளிக்க இயலாத மனிதர்கள் எப்படி யாசகம் கேட்கும் பெண்ணுக்கு வழங்க முடியும்? வாழ்க்கை எத்தனை கொடியது என்பதை இந்த தேனி நகர வீதிகளில் அலையும் அஞ்சலை போன்ற எத்தனை ஆதரவற்ற சீவன்களை கண்டால் தான் புரிந்து கொள்ள முடியுமா ? இந்த மாதிரியான அபலைகள் தோழர் கண்களில் மட்டும் எப்படித் தென்படுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.? ஏன் இவர் இவர்களைப் பற்றி இவ்வளவு அக்கறையாக எழுத வேண்டும் ? இவரை வாசித்தால் இவரை விட்டால் வேறு யார் இப்படிப்பட்ட மனிதர்களை எழுத முடியும் என்றே தோன்றுகிறது. . வரலாற்றை ஒரு எழுத்தாளன் பதிவு செய்வது போல வரலாற்றாசிரியன் இரத்தமும் சதையுமாக பதிவு செய்திட இயலாது என்பது எத்தனை அரிய உண்மை !
“ தங்கை ” கதையைப் பற்றி சொல்வதென்றால் வாழ்க்கையின் நெடும்பயணம் என்று ஒரே வரியில் முடித்து விடலாம்.
“ இறைப்பாலங்களும் ” ஏறத்தாழ நாகம் என்ற முதல் சிறுகதையின் களம் தான். மனசாட்சி உள்ள மனிதர்கள் அர்ச்சகராயிருந்தாலும் பக்தர்களாயிருந்தாலும் அநியாயத்திற்கு உடன் போவதில்லை என்ற எளிய விதியை சொல்லும் கதை இது.
‘ ஒரு போதும் அவர் தன்னை சிவசங்கர ஐயர் என்று சொல்லிக் கொண்டதில்லை சிவசங்ககரன் என்றோ சங்கரன் என்றோ தான் கூப்பிடச் சொல்வார் ’ இப்படித்தான் இந்தக் கதை ஆரம்பமாகிறது.
‘ கடல் வனம் ’ கதை பல வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மைச்சம்பவத்தை வைத்து பின்னப்பட்டிருப்பதாக எழுத்தாளரே கூறியிருக்கிறார்.
‘ஒருக்களித்திருந்த கதவு’ வட்டித் தொழில் செய்யும் பூபதியைப்பற்றிய கதை. இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா ? இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று உங்களை எண்ண வைக்கும் கதை இது – இன்னும் எத்தனை எத்தனை பூபதிகளைத்தான் இந்த தமழ் சமூகம் வளர்த்தெடுக்குமோ தெரியவில்லை. இப்படி ஒரு ஆதங்கம் இந்தக் கதையைப் படித்த பின் உண்டாகிறது.
‘அங்கியின் மகன் ’ தொழிலாளிகளின் தீராச்சாபத்தை வலிக்க வலிக்க உணர்த்தும் கதை. தொழிலாளியாகப் பிறந்து தொழிலாளியாகவே காலம் கழிப்பது தான் இந்தச் சமூகத்தின் சாபக்கேடு என்பதை கண்களில் நீர் கசிய அற்புதமாக விவரித்த கதை இது. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பாசம் பந்தம் உறவு என்பதெல்லாம் பணத்திற்குப் பிறகு தான் என்பது எவ்வளவு எதார்த்தமான உண்மை !
‘ குடும்பம் ’ கதை தான் இந்த தொகுப்பின் கடைசிக் கதை . இந்த தொகுப்பின் ஹைலைட்டான கதையும் கூட. ஜம்பங்கி நாரயணன் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஜம்பு எப்படி வாழ்க்கையால் கை விடப்பட்டு இறுதியில் தனக்கான எளிய வாழ்க்கையை தேடி அடைகிறான் என்பதை இந்தக் கதையினூடாக அற்புதாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
ஒரு பறவையின் பார்வையில் மட்டுமே இந்தக் கதைகளை நான் இங்கே அடுக்கியிருக்கிறேன் தவிர ஆசிரியரின் மொழி நுட்பமும் கூரிய விமர்சனமும் அங்கதமும் காட்சிகளின் விவரிப்பும் கதைகளை ரசித்துப்படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதை இங்கே சொல்லி விட விரும்புகிறேன்.
அவரின் சிறுகதைகளை அதற்கும் மேலாக விமர்சிப்பதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக தெரியவில்லை .அவரிடம் கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளமாக இருக்கின்றது- தவிரவும் நான் அவருடைய தீவிர ரசிகனும் கூட. அவரிடமே இதை நேரடியாகப் பகிர்ந்திருக்கிறேன்.
இந்தக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆவல் எனக்கு இருக்கிறது. தோழரும் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியிருக்கிறார். இன்னும் மொழிபெயர்ப்புக்கான மொழி மட்டும் எனக்கு வசப்படாமலே இருக்கிறது. அது மட்டும கிடைத்து விட்டால் நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் முதல் சிறுகதை தோழர் தேனி சீருடையானுடையதாகவே இருக்கும்.
கடல் வனம் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறு கதை தொகுப்பாகும்
வாழ்த்துக்கள் தோழர்.
புத்தகம் பற்றிய குறிப்பு:
கடல் வனம் சிறுகதை தொகுப்பு ( 12 கதைகள் அடங்கியது)
அகரம் வெளியீடு
விலை ரூ 200/-
முதற் பதிப்பு டிசம்பர் 2021
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

