முகநூலில் வெடுக்கென்ற வேகத்தில் கடந்து விடும் அற்புதக் கவிஞர்களின் கவிதைகளை புத்தகமாய் கைகளில் ஏந்திப் பார்க்கும் போது அதன் கனம் ஆழம் இன்னும் சிறப்பாய் விளங்குகிறது.கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாய் கவிஞர்.சௌவி அவர்களின் கவிதையை வாசிக்கிறேன்.இவர் உண்மையில் ஓர் நட்சத்திரக் கவிஞர் தான்.
ஒரு இயல்பான மனிதனோடு தான் இந்த உலகம் தன் மொழியில் பேசிக் கொள்ளும்.
தனது முதல் புத்தகத்திலேயே அதிக பேரன்போடு அவர் அணுகியுள்ள அத்தனை இயல்புகளிலும் தன்னை இயற்கையின் எல்லா துண்டுகளிலும் நிறுவியிருக்கிறார்.
“கடலைத் தேடிப் போகும் மழைத்துளி”.
ஆசிரியர் : கவிஞர்.சௌவி.
கவிஞர்.இரா.பூபாலன் அவர்களின் தேர்ந்த அற்புத உரையோடு புத்தகத்தின் மீதான ஆவல் இன்னும் விரிகிறது.
வீடு முழுக்க சொற்களை நிரப்பியவரை சமாதானப்படுத்த யாருமில்லை கைவிடப்பட்ட கணமொன்றில்.நனைய நனைய வானமாகிப்போனவரின் எத்தனையோ கவிதைகளில் இயற்கூறுகளும் அதைச் சார்ந்து உலவும் நியதிகளும் கைகளில் வந்து லாவகமாய் விழுகிறது.
பேரன்பும் ஓர் யதார்த்த உட்கடத்தியே.தன்மைச் சூழலிலிருந்து முன்னிலைப்படுத்தும் அன்பின் வித்துக்களுக்கு இவர் சொற்களை தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்.
“அவள் புன்னகைக்கிறாள்.
சாலையோரத்து மரயிலைகள் யாவும்
இதய வடிவம் பூண்டன.”
சட்டென்று தோன்றி விடும் யதார்த்த பாவனைகளுக்கு ஆலாபனைகள் தேவையில்லை.
“நம்பிக்கை பூங்கொத்தை நீட்டுமென்றே இந்தப் பகலை அணிகிறேன்.”
விடியலை நோக்கி விடுக்கும் மறைமுக சவால் இது.
மழையில் நனையும் போது நட்சத்திரங்களை சிந்திப்பதும்..நட்சத்திரங்களு க்குள் மழையைத் தேடுவதும்..நிலவொளியின் நிறத்திற்கு தன் எண்ணப் பூச்சுகளை மேற்கொண்டு அழகூட்டுவதுமாய் நிறைய இயற்கை கவிதைகள் இவரின் சொற்களின் சித்தத்தில் முக்தியடைந்திருக்கிறது.
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…”
இயற்கையின் சாமர்த்தியங்களின் முன் ஒவ்வொரு மனிதனும் செயற்கையிழந்து தோற்றுப் போகிறான்.நேர்த்தியான வரிகள்.
“தேவையானவர்களையும்
அத்தனை அவசியமில்லாதவர்களையும்
சேர்த்து தான்
சுமக்கிறது பூமி.”
பாரபட்சம் காட்டாத பூமியைப் போலவே இக்கவிதை வரிகளும் நேர்முகச் சாடலை வெளிப்படுத்தியுள்ளது.
இன்னும் இரவுகள்..நிலவுகள்..கனவுகள் என ஒவ்வோர் அணுவின் அசைவுக் குறிப்புகளிலும் தன்னையிறுத்தி மிக மெல்லிய உணர்வுக் குவியல்களாய் கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர்.
டீச்சர் எங்கிருக்கீங்க.? என்ற கேள்வியோடு இறுதிப் பக்கம் சுமையாய் முடிகிறது.
வாசகனை வெல்லும் வரியொன்றின் குறிப்பை எழுதாமல் நகரவியலாது.
” உதிர்ந்த இறகை மறுபடி பறக்க வைக்க..
குழந்தைகளைத் தவிர
பூமியில் யாருமில்லை”.
எத்துணை அற்புத மனநிலை.மீளமுடியாத வரிகள்.
வாசிக்க வாசிக்க காதுமடல் மடித்த பக்கங்கள் நிறைய.இங்கே குறுமடலையே என்னால் வாசிக்க முடிந்தது.மனதின் ஆசுவாசங்களே கவிதைகளாய் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாய் அவர்தம் உரையில் சொன்னது சரிதான். அவ்வாறே அழகாக எளிதாக வார்த்தைகள் பயணப்பட்டிருக்கிறது.அன்போடும் மகிழ்வோடும் இன்னும் எழுத்துப் பணியைச் செம்மையாய் தொடர வாழ்த்துகிறேன் கவிஞர்.சௌவி.
அடுத்த படைப்பை எதிர்நோக்கிய வாழ்த்துக்களோடு.
புத்தகம் பற்றிய தகவல் :
“கடலைத் தேடிப் போகும் மழைத்துளி”
ஆசிரியர் :கவிஞர் சௌவி
வெளியீடு : தேநீர் பதிப்பகம்.

