(எதிர் வெளியீடாக ஜூன் 2019 இல் வெளியான, வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய ‘கடற்கோள் காலம்’ என்ற நூல் பற்றிய  பதிவு.)

    சுனாமி, ஒக்கி, கஜா என்ற பேரிடர்களுக்கு பின்னணியில் நெய்தல் நில மக்களான கடலோடிகளின் வாழ்வியல் துயரங்களையும் இனியாவது அரசுகளின் பாராமுகம் முடிவுக்கு வரவேண்டும், அதற்கு அவர்கள் அணிதிரள்வதும்  அரசியல் பங்கேற்பும் அவசியம் என்பதை இந்நூல் கட்டுரைகள் உணர்த்துகின்றன. இவற்றிலுள்ள 12 கட்டுரைகளில் பெரும்பாலான கட்டுரைகள் ‘இந்து தமிழ் திசை’யில் வெளியானவை. தமிழக நெய்தல் பழங்குடிகளான மீனவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள், சூழலியல் எனப் பல தளங்களில் இயங்கி வரும் நூலாசிரியர் ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர்.

    “கரைக்கு வந்த சிற்றலையில் கால் நனைத்துவிட்டு கடலைப் பார்த்துவிட்டதாக கற்பிதம் செய்துகொண்டிருப்பவர்களின்”, எண்ணிக்கை அதிகம் என்பதை அறிமுகத்தில் உணர்த்துகிறார் ஆதவன் தீட்சண்யா. மீனைப் பற்றிப் பேசுவது, உண்பதையும் தாண்டி கடலோடிகளைப் பற்றி அறிவதும் அவர்களையும் உழைப்பாளிகள் வர்க்கம்  என்பதைப் பொதுச்சமூகம் உணர வேண்டிய தேவையையும் இது வலியுறுத்துகிறது.

   2004 சுனாமி மறுகட்டுமானம் பெருந்தொல்வியடைந்தது. அதிலிருந்து மீள்வதற்கு அரசே அனுமதிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சுனாமி மீனவர்களை கடலைவிட்டு அப்புறப்படுத்த ஆதிக்கங்களுக்கான கருவியாகப் போனதுதான் மிச்சம். சுனாமி மட்டுமல்ல, கடற்கரை மேலாண்மை அறிவிக்கை (2007), மீன்வள ஒழுங்காற்று மசோதா (2009), பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மசோதா (2009), மீன் இறக்குமதிக் கொள்கை, ஒருங்கிணைந்த மீன்வளக் கொள்கை அறிக்கை (2014), கடல் உயிரின வளர்ப்பு மசோதா (2018)  என மீனவர்களுக்கான சுமத்தப்பட்டப் பேரிடர்கள் அளவைல்லாதவை. (பக்.24)

    சுனாமி, ஒக்கி, கஜா உள்ளிட்ட எந்தப் பேரிடர்களிலிருந்து நமது அரசுகள் பாடங்கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் எந்த முகமையும் சுனாமிப் பேரிடர் சூழலை பண்பாட்டுப் புரிதலுடன் அணுகவில்லை; மக்கள் பங்கேற்பிற்கு முழுதும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நமது தோல்விகள் தொழில்நுட்பப் போதாமையினால் அல்ல; அணுகுமுறைக்கோளாறுகளால் நிகழ்கிறது. இது குடிமைச் சமூகத்தின் தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும். (பக்.30)

     டெல்டா மாவட்டங்களில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களை ‘கஜா மீள்சந்திப்பு’ கட்டுரையில் விவரிக்கிறார். 1964 தனுஷ்கோடி புயலிலிருந்து அரசுகள் ஏதேனும் பாடம் கற்று, அதன்மூலம் மக்களைத் தயார்படுத்தியுள்ளதா என்றால், இல்லை என்பதே ஒற்றைப் பதிலாக இருக்கமுடியும். நிலநடுக்கங்கள் வரும்பொது (பூஜ்) ஓடுவேய்ந்த வீடுகளை அமைத்துக் கொள்கிறோம். கஜா போன்ற புயல்களின்போது இவை கடும் சேதத்தைச் சந்தித்தன. வேதாரண்யம் கோடியக்கரை வனப்பகுதியும் முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் அலையாத்திக்காடும் பேரழிவைச் சந்தித்தன. மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அழிந்தன. தென்னை, மா, முந்திரி, வாழை, பலா போன்ற பலவகையான தாவரங்கள் உருக்குலைந்தன. இதிலிருந்து படிப்பினைகள் பெறவில்லை என்பது ஒருபுறமிருக்க, சேத மதிப்பீடுகள், புள்ளிவிவரங்கள், இழப்பீடுகள் எல்லாம் அலங்கோலமானவை. முறையான எந்தப் புள்ளிவிவரங்களும் அரசிடம் இல்லை.

   2004 சுனாமிக்குப் பிறகு பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), தேசியப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை (2009), தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்ட ஆவணங்கள் (2016) எல்லாம் வருகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் (NDMA) நடுக்கடல் புயல் தாக்குதல், புயல் மேலாண்மை குறித்து எவ்விதப் புரிதலும் இல்லை. (பக்.47) மீனவர்களுக்கு நவீனத் தகவல் தொடர்பு, மீட்புத் தொழில்நுட்பத்தில் பயிற்சியளித்து, பேரிடர் மீட்பில் அவர்களின் மரபறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறார். (பக்.56) பல்வேறு வெள்ள, புயல் மீட்பு நடவடிக்கைகளில் மீனவர்களின் அளப்பரிய பங்கை அறிவதுடன், மனித நேயத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். (பக்.64)

     பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகக் கடப்பாட்டிற்காக (CSR – Corporate Social Responsibility) ஆண்டுதோறும் நிறைய தொகைகள் ஒதுக்கப்படுகிறது. இந்தியன் ஆயில். பாரத் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி போன்ற அரசின் நிறுவனங்கள் பட்டேல் சில நிறுவ ₹ 2850 கோடியை அளித்தன. ஆனால் புயல், வெள்ளப் பேரிடர்களில் மக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகளில் இவை உதவ முன்வருவதில்லை. இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்காத, உரிய இழப்பீடுகள் வழங்காத மத்திய அரசு பட்டேல் சிலைக்கு 3000 கோடியைச் செலவிடுவது அரச வன்முறையாகத்தானே இருக்க முடியும்!

  “ஓவ்வொரு திணைநிலமும் தனித்தன்மை கொண்டது. நகரங்கள் தனித்துவமான் திணைச்சூழலை உருவாக்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை முறைகள் திணைநிலங்களின் வாழ்வியலோடு இணைந்து உருவாக்கப்பட வேண்டும். நாளடைவில் பேரிடர் மேலாண்மை நம் அன்றாட வாழ்வின், பண்பாட்டின் ஒரு பகுதியாகி விடவேண்டும்”, (பக்.72) என்று குஜராத் அடித்தள மக்கள் பேரிடர் மறுகட்டுமானத்தின் போது பண்பாட்டிற்கு ஒவ்வாத எல்லா முன்வைப்புகளையும் நிராகரித்ததைக் குறிப்பிடுகிறார். (பக்.72)

தந்துகி: May 2019

   “மீனவர்கள் கரை சேர்க்கும் அறுவடையில் ஃபார்மலின் நச்சினை தடவுவதில்லை. அதற்கான தேவை எழவும் இல்லை. ஆழ்கடல் மீனவர்கள் கூட மீன்களைத் துள்ளத்துடிக்க நொறுக்கிய பனிக்கட்டிகளிட்டு சேமிப்பறையில் வைத்து, அப்படியே கரையிறக்குகிறார்கள்”, (பக்.77) இடைநிலை வணிகர்களின் பேராசையைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய  அரசுத்துறைகளின் வேலைகளாகும். பங்கேற்பு / கூட்டுறவு முறையில் மீன் பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், தொழிலில் அடித்தட்டு மக்களை ஈடுபடுத்தும் மீன்வளத் திட்டம் காலத்தின் தேவையெனவும் வலியுறுத்தப்பட்டுகிறது. (பக்.78)

    காஷ்மீரில் தீவிரவாதம் என்ற பெயரில் காணமலடிக்கப்படும் விதவைகளின் நிலை மிகவும் மோசமானது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, திரும்பி வருவார்களா என்பதை அறிய முடியாத நிலை எவ்வளவு கொடூரமானது? (பார்க்க: கஷ்மீரில் பாதி விதவைகள் – மு.குலாம் முகமது, வெளியீடு” வேர்கள், சென்னை) அதைப்போல வக்கற்ற அரசுகளால் காணாமற்போன கடலோடிகளை இழந்த குடும்பங்களின் (கடல் விதவைகள்) நிலையை சொல்லில் வடிக்க இயலாது. கணவனை இழக்கும் உறவு இழப்புத் துயரத்துடன் கூடவே, குடும்பத்தின் சுமையும் அப்பெண்களின் மீது விழுகிறது. அவர்களுக்கு உளநல ஆதரவும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை ஊட்ட வேண்டியதும் அவசியம். நைஜிரியப் பழங்குடி சமூகத்தில் ஒரு தாய் இறந்துவிட்டால் அந்தச் சமூகம் தாயை இழந்த மகனுக்குத் தாயாகி பராமரிக்கிறது. அத்தகைய சூழல் இங்கு அறவே இல்லை. (பக்.84)

     “பேரிடரைப் பெண்ணின் கண்களின் வழியாக நாம் இன்னும் பார்க்கத் தொடங்கவில்லை, (பக்.86), நெய்தல் சமூகங்களின் பொருளாதாரம் பெண்ணின் தோள் மீதுதான் உட்கார்ந்திருக்கிறது”, (பக்.87) இந்நிலையில் “விதவைகள் மறுவாழ்வு என்றாலே தையல், உணவுப் பண்டம் தயாரிப்பு போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்படுவது”, (பக்.89)  அபத்தம். ஒரு கிராமத்தில் ஒக்கி அபலைகள் 25 பேரும் தையல் கற்க, ஏற்கனவே இங்கு இருக்கும் 12 தையல் கலைஞர்களுடன் சேர்ந்து வாழ்வாதாரத்தை எப்படி பெறமுடியும், என்று வினா எழுப்புகிறார். (பக்.89)

   மணற்கொள்ளை, எண்ணெய்க் கசிவு, இறால் பண்ணைகள், அனல், அணு மின்நிலையங்கள், வேதித்தொழிலகங்கள் போன்றவற்றால் நடக்கும் கடலழிப்பும், அலையாத்திக் காடுகளின் அழிவும் நூலில் விவாதிக்கப்படுகின்றன. தமிழகக் கடற்கரைகளில் எழுந்த இறால் பண்ணை எதிர்ப்புகளை, கடல் உயிரின வளர்ப்பு மசோதா – 2018 தகர்த்து, இறால் வளர்ப்பைச் சட்டப்பூர்வமாக்குகிறது.

    “கடலோடிகளின் மரபறிவு, கடலை வெறும் நீராய்ப் பார்ப்பதில்லை, அவர்களைப் பொறுத்தவரை கடலின் வரைபடம் என்பது நீர்முடிக்கிடக்கும் நிலமும்தான், ‘உயர் ஓத எல்லை’ என்று கடலின் நகர்விற்கு எல்லை வகுப்பது தொல்லியல், வரலாற்றுப் புரிதலோ அறிவியல் அடிப்படையோ அற்றது”. (பக்.106) என்கிறார்.

    பருவநிலை மாற்றப் பேருரை நிகழ்த்தும் இயற்கை அன்பர்கள் வார இறுதியில் கடற்கரைக் குப்பைகளைப் பொறுக்குவதற்குப் பதிலாக சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை மக்களையும் கடலையும் ஊடறுத்து சீனப்பெருஞ்சுவர்போல நீண்ட பங்களாக்களில் குடியேறியுள்ள மேட்டுக்குடிகளிடம் இந்தக் கடற்கரை மணல்வெளி உங்களுக்கு மட்டுமானதல்ல என்று உணர்த்த வேண்டும் (பக்.117) என்று எழுதுகிறார்.

      ‘அரசியல் ரீதியான  அணிதிரட்டலுக்கு’ பா.ம.க.வை எந்தளவிற்கு முன்னுதாரணமாகக் கொள்ள இயலும் என்பது மிகவும் சிக்கலான ஒன்று. இதை அறிமுகத்தில் ஆதவன் தீட்சண்யா சுட்டுகிறார்.

    பிரதிநிதித்துவம் சாராத அரசியல் பங்கேற்பு, அரசு இயந்திரத்தில் (கொள்கைத் தளங்களில்) பங்கேற்பு, பொதுச் சமூகத்துடன் உரையாடல் ஆகிய மூன்றையும்  கடற்கரைப் பூர்வகுடி மீனவர்கள் செய்ய வேண்டிய இடையீடுகளாக இனங் காண்கிறார். (பக்.125)

    “குஜராத் கலவரத்தின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தாக்கப்பட்டார்கள். நேரடியாகப் பாதிக்கப்பட்டார்கள். பல்வேறு விதமான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்”, (பக்.83) என்று சொல்வது சரியாகுமா? இஸ்லாமியர்கள் என்று எழுதுவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை?

நேர்காணல் – Leena Manimekalai

  “சாதிகளாய்ப் பிரிந்துகிடக்கும் மீனவ இனக்குழுக்களின் பண்பாட்டு ஒருமை, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களின் வாழ்வாதார, வாழிடச் சிக்கல்களில் நிலவும் பொதுமை”, (பக்.25) எடுத்துக்காட்டப்படுகிறது.

 “மரபணு மாற்றப் பயிர்கள் தாய்மண்ணுக்குக் கேடு;

மதம் மாறிய மனிதர்கள் தமிழ் இனத்துக்குக் கேடு”, (பக்.67) என்பது போன்ற வெறுப்புணர்வு பரப்பல்கள் அடித்தட்டு மக்களிடத்திலும் வேர் பிடிக்க மதவெறி சக்திகள் பலவழிகளில் செயல்புரிகின்றன. இத்தகைய ஒன்றுதிரட்டல்கள் பழங்குடிகள், மீனவர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் நடக்கின்றன. இவற்றைக் களைய ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியமானதாகின்றது.

       “பூங்காவின் உள்ளே, கோடியக்கரை முனையை அடையாளம் காட்டும் பிரித்தானியர் கால நடுகல்லின் அருகே, சோழர் காலக் கலங்கரை விளக்கம் சிதைந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் நிற்கிறது”, (பக்.42) இதிலென்ன கம்பீரம் இருக்க முடியும்? எல்லாம் ஆதிக்கம், வல்லாண்மையின் குறியீடுகள்தானே! சோழர்கள் ஆதிக்கம் மட்டும் சுகமாக இருக்குமா?

   “சொந்த மண்ணை இழந்து அகதிகளாய்ப் பிற நாடுகளில் வாழும் ஈழத்து முக்குவர்களிடம் நிலவும் ஆழமான இன அரசியல் புரிதலை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்”, (பக்.121) இன அரசியல் குறித்த எச்சரிக்கையும் தேவை. இவை இறுதியில் மத அரசியலில் ஒன்றிணையும் அபாயமும் இருக்கிறது.

   கடலோடிகள் என்பது கடல் மீனவர்களை மட்டுமே குறிப்பதாக உள்ளது. மீன்பிடித்தல் என்பது தொல்மனிதர்களது தொழில். எனவே, இவர்கள் பழங்குடிப் பட்டியலுக்குள் வரவேண்டும் என்பது நியாயமானதே. ஆனால் வாக்ரிகள் போன்றவர்களை இன்னும் பழங்குடிப் பட்டியலுக்குள் கொண்டுவரவில்லை. உள்நாட்டு மீனவர்கள் நிலையும் மோசம்; அவர்களைப் பற்றிய குரலும் எழவேண்டும் மீனவர்கள் ஒருங்கிணைப்பில் அவர்களையும் உட்படுத்த வேண்டும்.

 

நூல் விவரங்கள்:

 கடற்கோள் காலம்

வறீதையா கான்ஸ்தந்தின்

 முதல் பதிப்பு: ஜூன் 2019

பக்கங்கள்: 128

விலை: ரூ. 140

 வெளியீடு: எதிர் வெளியீடு,

96, நீயூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

பேச: 04259 226012  9942511302

இணையம்:  ethirveliyedu.in

மின்னஞ்சல்: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *