கப்பற்படையில் பொறியாளர் நரசய்யா (Narasayya) எழுதிய கடலோடி (Kadalodi) - நூல் அறிமுகம் | இந்தியாவின் கடல்வணிகம் - https://bookday.in/

கடலோடி (Kadalodi) – நூல் அறிமுகம்

கடலோடி (Kadalodi) – நூல் அறிமுகம்

தமிழில் தம் துறை சார்ந்த அனுபவப்பதிவுகளை யாரும் எழுதுவதில்லை என்று நான் பல காலமாகப் புலம்பி வருபவன். ஆனால், தன் துறை சார்ந்த அனுபவங்களை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் மிக அற்புதமாக எழுதியிருப்பதை இத்தனை காலம் தாழ்த்திப் படித்தது குறித்து உண்மையிலேயே வெட்கமாக இருக்கிறது. கப்பற்படையில் பொறியாளராகவும், அங்கிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்த்தகக் கப்பல்களில் பொறியாளராகவும் பணியாற்றி, எவருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் மூத்த எழுத்தாளர் நரசய்யா அவர்கள். இப்போது அவருக்கு வயது 90க்கு மேல். 1972ல் வாசகர் வட்டத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல் இப்போது சிறுவாணி வாசகர் மையத்தின் சார்ப்பாக பவித்ரா பதிப்பகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக அக்காலத்தில், (ஏன் இக்காலத்திலும் கூடத்தான்) வீட்டில் கோபித்துக் கொண்டு ராணுவத்திற்குச் செல்பவர்களாகத் தான் தென்னிந்தியர்கள் இருந்தோம். சீக்கியர்களைத் தவிர, மற்ற அனைவரும் பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், நரசய்யா வீட்டில் அப்பாவின் ஆசியோடு கப்பற்படைக்குச் செல்வது வியப்பாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் கப்பற்படையில் 1949ல் இவர் சேரும்போது அதிகாரிகள் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்கள்தான். கப்பற்படையோடு சேர்ந்து இவரும் வளர்கிறார். இந்தியாவின் முதல் விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்தைக் கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர். அதற்காக இங்கிலாந்தில் பயிற்சி. அயர்லாந்திலிருந்து கொண்டு வருகிறார்கள்.

கப்பற்படையின் பயிற்சிகள், கண்டிப்புகள், தண்டனைகள், அதிலிருந்து கற்றுக் கொள்பவை, அதிகாரிகளின் நடத்தை, வெளிநாட்டு அனுபவங்கள் என்று யாருக்கும் எளிதில் கிட்டாத அனுபவங்கள். இந்த அனுபவங்களை ஏதோ இந்தியன் நியூஸ் ரீல் என்று அந்தக் காலத்தில் போடுவார்களே, அந்த பாணியில் இல்லாமல், மிகவும் ரசிக்கத் தக்க வகையில் எழுதியிருப்பது தனிச் சிறப்பு. பின்னாளில் வர்த்தகக் கப்பல்களில் பணி புரிந்த அனுவங்கள், அப்போது சென்ற நாடுகள், உலகின் பல்வேறு நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், கப்பல்களின் வகை என்று எதை எதையோ தொட்டுத் தொட்டுச் சென்றாலும் கூட, எல்லாவற்றையும் மிகத் திறமையாக, ஒரு கோர்வையாக எழுதியிருக்கும் எழுத்து வன்மை நம்மை வியக்க வைக்கிறது. வர்த்தகக் கப்பலில் பணியாற்றும் போது, பங்களா தேஷ் விடுதலைக்கான போர் வர, மீண்டும் கப்பற்படை அழைக்கிறது. நரசய்யாவிற்கு போர் அனுபவமும் கிடைக்கிறது. நமக்கும் அந்தப் போர் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

இந்தியாவின் கடல்வணிகம், கப்பல் தொழில் பற்றிய இரு அத்தியாயங்கள் மிக முக்கியமாக என்னைக் கவர்ந்தன. பண்டைய கடல் வணிகம் பற்றி தொல்காப்பியரிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறார். போஜராஜனின் யுக்தி கல்பதரு என்ற சமஸ்கிருத நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அர்த்தசாஸ்திரம், புறநானூறு, வின்சென்ட் ஸ்மித், கனோஜி ஆங்கரே என்று எங்கெங்கிருந்தெல்லாமோ மேற்கோள்கள் காட்டி மிகச் சில பக்கங்களில் இந்தியக் கடல் வணிகம், கப்பல்கள், கப்பற்படையின் வரலாற்றை அற்புதமாக எழுதியிருக்கிறார்.

வரலாறு என்றாலே நாம் அறியாத விஷயங்களின் மாபெரும் கடல் என்று தான் நான் பொருள் கொள்வேன். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நம் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய வரலாறு மட்டுமே நாம் பரவலாக அறிந்திருக்கிறோம். ஆனால், டாடாவின் கப்பல் கம்பெனியும் பிரிட்டிஷாரால் சதி செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டிருக்கிறது. ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஜோதேந்திரரின் கப்பல் கம்பெனிக்கும் இதே கதிதான். 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி ஆரம்பிக்கப்படுகிறது. லால்சந்த், நவரோத்தம் மொரார்ஜி என்ற இருவர் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரை எதிர்த்து கப்பல் கம்பெனி நடத்துகிறார்கள். இந்திய கப்பல் வணிகத்தின் முன்னோடிகள் இவர்கள்தான். இவர்கள் பட்ட துன்பங்களை எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறார் நரசய்யா. தேசவிடுதலைக்கு நாம் அறியாத எத்தனை எத்தனையோ பேர் எத்தனை எத்தனையோ இன்னல்களைப் பட்டிருப்பதை அறிய மெய்யாகவே நாம் அறிந்தது கைமண்ணளவு கூட இல்லை என்பது தெரிகிறது.

160 பக்க சிறிய நூல்தான். ஆனால் மிக நேர்மையாக எழுதப்பட்ட நூல். இராணுவ அனுபவங்கள் என்றாலேயே, ஒரு வித போலி தேசபக்தி, பெருமிதம் பொங்க அவை எழுதப்பட்டு விடும் அபாயம் இருக்கும். இந்த நூலில் ஒரு இடத்திலும் அவ்வாறு இல்லை என்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. நான் அப்படியே தேசத்திற்காக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, எல்லையில் பனிமழையில் வீர சாகசம் செய்தேனாக்கும் என்பது போன்ற உருட்டு ஒரு இடத்திலும் இல்லை. இராணுவக் கட்டுப்பாடு என்ற பெயரில் மேலதிகாரிகள் அடிமட்ட வீரர்களைப் பாடாய்ப் படுத்துவதைக் கண்டு கோபப்பட்டு எழுதுகிறார். 1946ல் கப்பற்படை எழுச்சிக்கு பிரிட்டிஷ் அதிகாரிகளின் எந்த விதமான நடவடிக்கைகள் காரணமாக இருந்தனவோ, அவை 1949ல் நரசய்யா கப்பற்படையில் சேரும் காலத்திலும், அதற்குப் பிறகு அவர் பணிபுரிந்த 15 ஆண்டுகளிலும், துளியும் மாறாவில்லை. பிரிட்டிஷ்காரனோ, இந்தியனோ அதிகாரி அதிகாரியாகத் தான் இருக்கிறான் என்பதை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

கப்பற்படைக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருந்தாலும், அதில் பணிபுரிந்த காலம் முழுவதும் நான் அதைத் திட்டிக் கொண்டே தான் இருந்தேன் என்று மிக நேர்மையாக எழுதியிருக்கிறார்.

நேர்மையாக எழுதப்படும் எந்தப் படைப்பும் காலம் கடந்து நிற்கும். பல தலைமுறை வாசகர்களாலும், மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் என்பதற்கு நரசய்யாவின் கடலோடி ஒரு நிரந்தர சாட்சி.

நூலின் தகவல்கள் : 

நூல் : கடலோடி
ஆசிரியர் : நரசய்யா
பதிப்பகம் : பவித்ரா பதிப்பகம்
பக்கங்கள் : 160
விலை : ரூ.180
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/kadalodi/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

ச.சுப்பாராவ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *