கடலுக்கு அடியில் நகரம்? – நூல் அறிமுகம்
“கடலுக்கு அடியில் நகரம்?” என்னும் புத்தக தலைப்பை பார்த்ததும் ஏதோ ஒரு அழிந்து போன நகரத்தைப் பற்றி இந்த புத்தகம் சொல்லி இருக்கிறதோ என்று எண்ணித்தான் வாங்கினேன். ஆனால் அப்படி இல்லை.
இந்தப் புத்தகத்தில் மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன. பல்வேறு இதழ்களில் பல்வேறு காலங்களில் வெளியானவை. கட்டுரைகளின் தலைப்புகள் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கின்றன.
அறிவியலுக்கும் பொது மக்களுக்குமான இடைவெளியை இந்த கட்டுரைகள் குறைக்கும் பணியை செய்திருக்கின்றன. கட்டுரைகள் ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியமாக உள்ளன. ஒவ்வொரு கட்டுரையாக நாம் பார்ப்போம்.
கடலுக்கு அடியில் நகரம்
————————————————-
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை எப்படியோ அப்படித்தான் கேரளாவின் நெற்களஞ்சியம் குட்டநாடு.
குட்டநாடு கடல் மட்டத்திலிருந்து கீழே இருக்கக்கூடிய ஒரு தாழ்வான நிலப்பகுதி. இந்த நிலப்பகுதி முழுமையும் விவசாயம் நிலமாக இருப்பது தான் இதன் பெரும் சிறப்பு.
இந்த இடத்தில் இருக்கக்கூடிய ஏரி ஏறக்குறைய 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஏரியா ஆகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஏரியும் இதுதான். ஆறு பெரிய நதிகளும் 10க்கும் மேற்பட்ட கிளை நதிகளும் இந்த ஏரியில் கலந்து அதன் நீர் ஆதாரத்திற்கு வழி வகிக்கிறது.
குட்டநாட்டில் மொத்த பரப்பளவு 500 சதுர கிலோமீட்டர் கடல் மட்டத்திலிருந்து இரண்டு அடி முதல் எட்டு அடி வரை தாழ்வாக இதன் சில நிலப்பகுதிகள் இருக்கின்றன.ஆலப்புழா மற்றும் கொட்ட நாடு பகுதிகளில் சுமார் 18 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் கேரளாவின் மொத்த அரிசி உற்பத்தியில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தேவையை இந்த பகுதி தான் நிறைவு செய்கிறது. 50 விழுக்காடுக்கு மேற்பட்ட நிலங்கள் கடல் மட்டத்திலிருந்து தாழ்வாகத்தான் இருக்கிறது.
மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் இந்த ஏரியில் உள்ள நீர் எப்படி கடலை நோக்கி திருப்பிவிடப்படுகிறது என்பதை களப்பயணமாக சென்று ஒவ்வொன்றையும் ஆய்ந்து இந்தக் கட்டுரையில் எழுதி இருப்பதை பார்த்தால் எல்லாமே அதிசயமாகத்தான் இருக்கிறது.
பால் பண்ணையில் ஒரு நாள்
————————————————————
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பால் கொள்முதல் நிலையத்தில் சேகரிக்கப்பட்டு பின்பு குளிரூட்டி தேவையற்ற கொழுப்புகளை நீக்கி மீண்டும் கவரில் அடைத்து அதனை பராமரித்து விற்பனைக்கு வரும் வரை செய்யப்படுகிற அனைத்து நிலைகளையும் இந்த கட்டுரை விளக்குகிறது.
விடியற்காலையில் நாம் பெறப்படும் பால் கவரில் இருந்து பாலைப் பிரித்து தேநீரோ காப்பியோ அல்லது பாலோ அருந்தி விடுகிறோம்.ஆனால் அது நம்மை சேர்வதற்கு அது எடுத்துக் கொள்கிற அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த கட்டுரை மேற்கோள் காட்டும் பொழுது உண்மையிலேயே பால் மீதான மதிப்பு கூடுகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை இது. மேலும் பனிக்கூழ் தயாரித்தல், தயிர் தயாரித்தல், வெண்ணெய் தயாரித்தல் போன்றவற்றையும் களப்பணியாக சென்று நேரடியான தகவல்களை கூறுகிறது.
தித்திக்கும் உள்ளூர் தொழிற்சாலை
—————————————————————-
கிராமப்புறங்களில் வெல்லப்பாகு காய்ச்சுவார்களே… அதைத்தான் இந்த கட்டுரையில் வேறு விதமாக பார்க்க போகிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இன்று வரை பயரிடக்கூடிய ஒரே தாவரம் கரும்பு தான் என தாவர வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இனிப்பு சுவைக்கு தேவையான சர்க்கரை இந்த கரும்பிலிருந்து தான் பெறப்படுகிறது.
சர்க்கரை தொழிற்சாலை ஒன்றில் நேரடியாக களப்பணி செய்து கரும்புகளின் விளைச்சல், கரும்புகளை பதப்படுத்துதல், சிறு சிறு துண்டுகளாக்குதல் அழுக்கு நீக்குதல், சுடச்சுட சாறு தயாரித்தல் அதில் சில வேதிப்பொருள்களை சேர்த்தல், கடைசியாக சர்க்கரை பெறப்படுதல் போன்ற எல்லா விவரங்களையும் ஒவ்வொரு படி நிலையாக இந்த கட்டுரை நமக்கு கூறுகிறது.
மனித குலத்தின் அடுத்த பயணம்
——————————————————————-
மனிதன் முதலில் நடந்து சென்றான். பிற்பாடு குதிரையில் சென்றான். அதன்பின் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு மாட்டு வண்டியில் சென்றான். பிறகு சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, கார், என தொடங்கி ஆகாய விமானம் ராக்கெட் வரை தன்னுடைய பயண நேரத்தை குறுக்கிகொண்டு பூமி முழுவதையும் அகலமான கால் கொண்டு நடக்கத் தொடங்கி விட்டான். ஆனால் அது மட்டும் போதுமா? இந்த அண்டம் முழுவதும் இருக்கக்கூடிய பிரபஞ்ச வெளியில் உள்ள அனைத்து கோள்களுக்கும் இவ்வாறாக செல்ல முடியுமா அந்த அளவிற்கு அதிவேக பயணம் சாத்தியமாகுமா என்பதை பற்றின கட்டுரை தான் இது.
வாசிக்க வாசிக்க புல்லரிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா
—————————————————————————————————-
இக்கட்டுரை ஆரியபட்டாவின் சில விவரங்களையும் சேர்த்தே தருகிறது. கிமு 476 இல் பிறந்ததாக கணிக்கப்படும் ஆரியபட்டா இந்திய வானியல் அறிஞர்களின் முன்னோடியாக கருதப்படுகிறார். புவி கோள வடிவத்தில் இருக்கிறது என்றும் அது தன்னைத்தானே சுற்றுகிறது என்ற தகவலையும் கிரகணங்கள் ஏன் உருவாகின்றன என்பதற்கு சரியான விளக்கங்களையும் கொடுத்தவர் என்றும் வட்டத்தின் பரப்பளவை கண்டுபிடிக்கும் சூத்திரத்தின் பை. π எண்ணுக்கு நான்கு இலக்கமான துல்லியமான கண்டுபிடிப்பு கொடுத்தவர் எனவும் வாசிக்கும்போதுஆரியபட்டா பற்றி எந்த குறிப்புகளையும் இல்லாத பள்ளி பாட புத்தகங்களை கண்ணுறுகிற போது நமக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.
1957ஆம் ஆண்டு மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக்-1 ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு பூமியை வலம் வரத் தொடங்கியது. ஆனால் 1970களில் விக்ரம் சாராயம் பாய் என்கிற இந்திய விஞ்ஞானி இந்தியாவிற்கான பத்தாண்டு திட்டத்தை வகுத்து முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்திலேயே தயரான முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா ஏவப்பட்டதையும் அது எதிர்கொண்ட பல பிரச்சினைகளையும் அது எப்படி தீர்க்கப்பட்டது என்பதை குறித்தும் இந்த கட்டுரை மிக அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் விளக்குகிறது.
உலக வானியல் வாரம்
———————————————–
செயற்கை கோளை பற்றியும் இஸ்ரோ நிறுவனத்தைப் பற்றியும் கூறுகிற கட்டுரை இது. செயற்கைக்கோளின் பயன்பாடுகளை இரண்டு பக்கங்களில் பட்டியலிடுவதோடு பொது மக்களுக்கு விண்வெளியை குறித்த விழிப்புணர்வு தரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்றும் குறிப்பாக மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே விண்வெளியின் பயன்களை பற்றி எடுத்துரைக்கும் பொழுது அது அவர்களை இந்த துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆவலையும் இதை பற்றி வீட்டில் உள்ள பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு உந்துகோலாக இருக்கும் என்பதையும் ஒரு வார காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திக்கின்றனர் என்றும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் இந்த “உலக வானியல் வாரம்” கொண்டாடப்படுகிறது என்கிற அரிய தகவலையும் இந்த கட்டுரை நமக்கு அளிக்கிறது.
மேலும் அதிர்வலைகள் பற்றி, காற்றைப்பற்றி, தொழில்நுட்பங்களை பற்றி, கணவு நாயகன் அப்துல் கலாம் பற்றி இன்னும் சில கட்டுரைகள் மிக அற்புதமாக இதில் படைக்கப்பட்டுள்ளன.
எளிய சொற்களைக் கொண்டு சாதாரண வாசகர்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு வரிகளை அமைத்து அரிய பல செய்திகளை கட்டுரைகள் மூலம் அளித்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள்.
அனைவருமே போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய நூல் தான் இந்த கட்டுரை தொகுப்பு .
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : கடலுக்கு அடியில் நகரம்?
நூலாசிரியர்கள்: பெ. சசிகுமார், எம். ஜோதிமணி
வகைமை: களப்பயண கட்டுரைகள்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை:140/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கடலுக்கு அடியில் நகரம் நூலை பற்றி நீண்டதொரு விமர்சனம். கட்டுரைகள் ஒவ்வொன்றும் என்ன விவரிக்கின்றன என்பதை தெளிவாக கட்டுரை விவரிக்கிறது.