நம்பிக்கையே முயற்சியின் வெளிச்சம்
தனிமையான மீனவனின் வாழ்வையும்; கடல்சார்ந்த நிலப்பரப்பின் அழகையும், கடலுக்கும், மீனவனுக்குள்ள உறவையும்; மீனவனுக்கும், மீனுக்குமான போராட்டத்தையும்; கிழவனுக்கும் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பையும் மட்டுமல்லாமல் ஆமைகள், நீர்ப்பறவைகள், சுறாக்கள், சூரியோதயம், அஸ்தமனம், நீலக் கரிய கடல் என தத்ரூபமாக திரைப்படம் போல செழுமையாக அலங்காரமற்ற சொற்களால் காட்சிப்படுத்தியிருப்பதால் ஆகச் சிறந்தப் படைப்பாக இன்றும் மிளிர்கிறது.
வறுமையில் உழலும் முதுமையான மீனவர்தான் சாண்டியாகோ. தொடர்ந்து 84 நாட்கள், கடலுக்குள் தன் சிறியப் படகில் சென்று, மீனேதும் அகப்படாமல், வெறுங்கையோடு திரும்புகிறார். முதல் நாற்பது நாட்கள், சிறுவன் மனோலின், இவருக்கு உதவியாக சென்று கொண்டிருந்தான். அதன் பிறகு, அதிர்ஷ்டமில்லாத கிழவன் படகில், இனி செல்ல வேண்டாமென அவன் பெற்றோர், வேறொரு படகில் மாற்றி விடுகின்றனர்.
தனிமையின் துயரம் மற்றும் தோல்வியின் வெறுமையில் உழன்றாலும், தன்னம்பிக்கையைத் துணைக்கொண்டு, ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக எதிர்கொள்ளும்போது, எண்பத்தைந்தாவது நாளன்று, படகைவிட நீளமுடைய மார்லின் மீன் தூண்டிலில் அகப்படுகிறது.
மீனை, அதன் போக்கில் விட்டு, சோர்வடையச் செய்து வீழ்த்த வேண்டும். தூண்டில் கயிறை தளர்த்தி, அதன் பின்னாலே படகு மீனின் இழுவையில் செல்லும்படி செயல்படுகிறார். படகும், மீனும் நீரோட்டத்தின் வழியே அதிவேகமாக செல்கின்றன. தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் மீன், படகைத் தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, கிழவனையும் படகோடு சாய்க்கிறது. மூன்று இரவுகள் நீடிக்கிறதிந்த போராட்டம். அடிக்கடி வலுவிழுக்கும் தன் உடலையும், சேர்ந்து போகும் மனதையும் அவர் உற்சாகப்படுத்தும் விதம் படைப்பாக்கத்தின் உச்சம்.
கடல் பயணம் என்பது நிலப் பரப்பிலிருந்து, முழுவதுமாகத் துண்டித்துக் கொண்டு, முடிவில்லா நீர்ப்பரப்பில், வானத்து நட்சத்திரங்கள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்களென முற்றிலுமாக இயற்கையோடு இணைந்துவிடுவதுதான். யாருமற்றத் தனிமையில் சிறுவனின் துணைக்காக ஏங்கும் முதிய மீனவன், விருப்ப விளையாட்டான பேஸ்பாலின் நிகழ்வுகளைக் கேட்க வானொலியிருந்தால் நன்றாகயிருக்கும் என்ற எண்ணம் தோன்றியவுடனே, ‘தேவையான சிந்தனையில் கவனம் செலுத்து’ என தனக்குத் தானே அகத்தைச் சீர் செய்யும் ஒழுங்குத் தத்துவார்த்தம்.
மூன்று நாட்களாக, அவ்வப்போது பிடிக்கும் சிறு மீன்களைப் பச்சையாக உண்ணும் சாண்டியாகோ, தூண்டிலிலிருக்கும் மீனுக்குப் கூட பசிக்குமேயென வருந்துமிடம், அன்பால் நம்மையும் சிலிர்க்க வைக்கிறது. போக, தன் இருப்பைத் தக்க வைக்க போராடும் இந்த மீனைத் தின்பதற்குக் கூட யாருக்குமே தகுதியில்லை என தனக்குத்தானே கூறுவதும் நெகிழ்ச்சி.
படகோடு மீனைக் குத்திக் கட்டியதால், மீனின் இரத்த வாடையை முகர்ந்து சுறா மீன்கள் படகை முற்றுகையிடுகின்றன. சுறாக்களுடன் போராடி, மார்லின் மீனைக் கரைக்குக் கொண்டு சேர்த்தாரா என்பதே மீதிக்கதை.
நாவலின் போக்கில் வெறுப்போ, வன்மமோ, வில்லத்தனமோ, பகையோயில்லாமல், மனிதனுக்கும் இயற்கைக்குமானத் தொடர்பை ஆழமாக பதிவுசெய்திருப்பதோடு, தன் முயற்சியில் தோற்காத மனிதனை யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற உளவியலையும் முழு முற்றாகப் பேசுகிறது.
முத்தாய்ப்பான வரிகள். “அதிர்ஷ்டம் நல்லதே. ஆனால், அதைவிட கடமைப் தவறாது காரியம் செய்வதையே நான் அதிகமாக நம்புகிறேன். அப்போதுதான் அதிர்ஷ்டம் வரும்போது அதனை நாம் ஏற்கத் தயாராகயிருக்கலாம்.”
“மனிதனைக் கொல்வது எளிது. ஆனால் வெல்வது கடினம். ” வாழ்க்கையெனும் கடலில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மார்லின் நிச்சயம் உண்டு. எங்கே, எப்போது என்பதுதான் வாழ்வின் ரகசியம். பொறுமையாகக் காத்திருந்து, தேடலையும், முயற்சியையும் இடைவிடாது கைக்கொள்வோமானால் வெற்றி நிச்சயம்.
1953ல் புலிட்சர் விருதும், 54ல் நோபல் பரிசும் பெற்ற இந்நாவலை, அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன்னுடன் எப்போதும் வைத்திருப்பார். அதிபர் சதாம் உசேன், தன் இறுதி நாட்களில் கேட்டு வாங்கி படித்த புத்தகமும் கூட. வாழ்வின் மீதான நமது பிடி தளரும் போதெல்லாம், நாமும் வாசித்து புத்துணர்வெய்தலாம்!
அமெரிக்காவில் பிறந்த இவர், (1899-1961) ஒரு செய்தி நிருபராக ஐரோப்பாக் கண்டம் முழுவதும், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆப்பிரிக்கா என்று நிறைய நாடுகள் சுற்றியிருக்கிறார். மற்ற அமெரிக்க எழுத்தாளர்களுக்கும், இவருக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு, இவர் சர்வகலாசாலைக்குச் செல்லாதவர். இரண்டாம் உலகப் போரின் போது போர் முனைகளில் முன்னணியிலிருந்து செய்திகளைச் சேகரித்திருக்கிறார். ஆழ்கடல், மீன்பிடிப்பு, குத்துச்சண்டை, மாட்டுச் சண்டை, வேட்டையாடுதல், துப்பாக்கி சுடுதல், விமானமோடுதல் ஆகிய நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறார்.
மொழிபெயர்த்த ச. து. சு. யோகியார், பல்துறை வித்தகர்; பன்னூல் ஆசிரியர்;மாபெரும் கவிஞர். பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து, பழந்தமிழ் நாடக இலக்கணமாகிய கூத்த நூலைப் பதிப்பித்தவர். ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடக நூல்களை எழுதியவர். இவருடைய படைப்பான ‘தமிழ்க் குமரி’ சாகா வரம் பெற்ற கவிதைக் கனியாகும். நன்றி!
நூலின் தகவல்கள்
நூல் : “கடலும் கிழவனும்” மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில் : ச. து. சு. யோகியார்
பதிப்பகம் : ஐந்திணைப் பதிப்பகம்
ஆண்டு : டிசம்பர் 2003
பக்கங்கள் : 120 பக்கங்கள்
விலை : ரூ 40/-
தொடர்புக்கு : 44 2433 2924
அறிமுகம் எழுதியவர்
பா. கெஜலட்சுமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: கிழவனும் கடலும் - Kizhavanum kadalum
அருமை