காடர் – நூல் அறிமுகம்
காடர்களின் வாழ்வியல் தரிசனம்
நூலின் தகவல்கள் :
நூல் : காடர்
ஆசிரியர் : பிரசாந்த் வே
விலை : ரூ.130
வெளியீடு : எதிர் வெளியீடு
நூலைப் பெற : thamizhbooks.com
ஆனோ… மேரோ…
அங்க போ, அங்கோ…
போய்க்கோ, போ…
ஆனெ…
நாங்களும் வாரதீயப்பரோ
நீயும் வாரதீயப்பரோ
போ… போ… போய்க்கோ…
போ… போ…
காட்டில் நடந்து போகும்போது யானையின் பிளிறலைக் கேட்ட மணியும் மற்றவர்களும், மேலே சொன்னவற்றை உரக்க சொன்னவுடன் யானை இன்னொரு பக்கமாகப் போய் விடுகிறது.
“நம்த்தது சாண் வயிரு, அதுக்கு பெல்லா வயிறு. ஏங்க போவினா, பெணாங்காதலா… பசியில வூட்டுக்குள்ள புந்தாலும் குஞ்சு, குழந்தைகள, ஆளுகள தொட்டிருக்கா? எதுக்க வந்தாலும் கையெடுத்துக் கும்பிட்டு போ சாமினா திரும்பிப் போயிடுவானே? நாம வாயிக்கு ருசியா என்னென்ன திண்ணுறோம்? அது போற வழியில வாழ, கரும்புனு போட்டா அதுக்கு ருசியா திங்கத் தோணாதா?” என்ன அழகான புரிதல். மனிதனுக்கும் யானைக்குமான இந்தப் புரிதல் இந்த இணக்கம் உயிர்ச்சங்கிலியை தொடரச் செய்யும்.
“மனுச ஒரு சாண் வயித்திக்கு ஊரையே அடிச்சு போடறான், அம்மாம் பெரிய ஜீவன் தன் வயித்துக்கு என்ன பண்ணும்?” என்று யானைகளுக்கு வக்காலத்து வாங்கும் வள்ளியைப் போன்றவர்கள் இருக்கும் இடத்தில்தான், கும்கியை வைத்து துரத்தும், துப்பாக்கியாலும், மின்சாரக்கம்பி இன்னும் வேறு விதங்களில் கொல்லக் காத்திருக்கும் அதிகாரம் சார்ந்த மனிதர்களும், அதிகாரத்துக்கு அடிமையாகி விட்ட மனிதர்களும் இருக்கிறார்கள்.
பழங்குடிகளுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் காடுகளுக்கும் இயற்கைக்குமான இத்தகைய இணக்கமான உறவை அரசும் அதிகாரமும் கார்ப்பரேட் உலகமும் பிரிக்கும்போது இயற்கையின் சீற்றத்தை இயற்கையால் நிகழும் அழிவை எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது.
வலசை மாறும் பறவைகள், விலங்குகளைப் போல, பழங்குடி மக்களும் தங்கள் பாதைகளைத் தொலைத்து வாழ்க்கையை இழந்து போகிறார்கள். ஒவ்வொரு கதையிலும் ஒரு சோகம், ஒரு பரிதவிப்பு, வாழ்க்கை தேடிச்செல்லும் பயணம்.
மழை கொட்டித் தீர்க்கும்போது, வீடுகளின் மீது மண் சரிந்து விழுந்தது; பாறைகள் உருண்டு விழுந்தன; பூமி வெடித்து மண் விரிசல் கண்டிருந்தது. மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.
இதனால் காடர் செட்டில்மெண்ட், பட்டா தேவை, சற்றே பாதுகாப்பான இடத்தில் குடிசையில் எளிமையான வாழ்க்கை என்ற இந்த மனிதர்களின் எளிய விருப்பம் வாழும் வகையை அவர்களுக்கு அளிக்கவில்லை.
ஆனால், இந்த மக்களின் வாழ்வியலைப் பறித்து, அவர்களின் சொந்த பூயை விட்டுத் துரத்திவிட்டு, பிறருக்கு தாரை வார்த்துக்கொடுப்பதை, எதிர்க்க விரும்பினாலும் வாழ்வினை இழக்கும் காடர்களைப் பற்றிய துயரக் கதைகள்.
காடு மற்றும் காடர் சார்ந்த பத்து சிறுகதைகள் உள்ள தொகுப்பு இது. இவை கதைகள் அல்ல. உண்மை வாழ்வின் பிரதிபிம்பங்கள்.
’காட்டுமாதா கி ஜெ’ காடூர், நாடூருக்கு இடையேயான கதை முழுக்க உருவகமாக ஆட்சியை, அதிகாரத்தை, அவை சார்ந்த மனிதர்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. காடூர் எரிகையில் காடூர் ஒளிர்கிறது என்பது வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லப்பட்ட கதை.
வலசை செல்லும் யானை தானே சொல்வது போன்ற தன் கதையைச் சொல்வது மன உளைச்சலை அளிக்கிறது.
எட்டு கதைகள், இவர்களுடைய வாழ்வில் நிகழும் ஒவ்வொரு விதமான சுரண்டல்களைப் பற்றி சொல்கின்றன. இந்த சுரண்டல்களுக்கு வேறு துறைகளைச் சார்ந்த மற்ற எளிய மனிதர்களும் ஆளாகிறார்கள் என்பதை பல்வேறு விதங்களில் பிரசாந்த் எழுதியுள்ளார்.
இவர் ஒவ்வொரு இடத்துக்கும் போய் ஒவ்வொரு மனிதரின் அவல வாழ்க்கையையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கேட்டறிந்து கதைகளாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு ஆசிரியர் இங்கிருக்கும் மாணவர்களுக்கு கல்வி அளிக்க எவ்வளவு தூரம் தன் வாழ்வை பணயம் வைக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, இவர் போன்ற நல்லவர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் போன்றோர் ஜெயராஜ் போன்றோர் இணைந்து காடர் குடியை காப்பார்கள் என்னும் நம்பிக்கை பெற வைக்கிறது.
”காடும், காடரும் ஒன்னு. காடு இல்லனா காடர் இல்ல. நாட்டு ஆளு காடுல இருக்க மாட்டான். காட்டாளுக்கு காடு தா சொந்தம். இத யாராலும் மாத்த முடியாது” என்று சொல்லும்ம் முருகாத்தாவும்.
“தண்ணீல கெடக்குற மீன தூக்கி தரையில போட்டா கெடக்காதுலா, அதுமாரி தா நாங்களும். எங்கள தரையில தூக்கி போட்டுறாதீங்கய்யா” என்று சொல்லும் மூப்பனும்
“காடு தா எங்க பூமி, உசுரு. எங்க மூச்சு அடங்குனா இந்த காட்டுக்குள்ள தா அடங்கணும்” என்று காடர் குடியை நோக்கிச் செல்லும் கால்களும் காடர் குடியினரின் துயரக் கதைகளை சொல்கின்றனர்.
இயற்கை சார்ந்த வாழ்விலிருந்து எவ்வளவு தூரம் வெளியேறி பாதகங்களை செய்கிறோமோ அவ்வளவுக்கு அழிவினை நோக்கி மானுடத்தின் பாதை செல்லும்.
காட்டில் இருக்கும் பழங்குடிகள் விரட்டியடிக்கப்பட்டால், காடு சாக்காடு ஆகிவிடும்.
இயற்கையும் யானைகளும், புலிகளும், பறவைகளும், மனிதர்களும் தமக்குள்ளான பிணைப்பை எவ்விதம் சமச்சீர் உறவாகப் பேணிக் காக்கிறார்கள் என்பதை இக்கதைகளின் மூலம் உணர முடிகிறது.
இட ஒதுக்கீடு பிரச்சினையில், கல்வியை இழப்பவர்கள் குறித்து எத்தனையோ விபரங்கள் இத்தனை சதவிகிதங்கள் என்று, சதவீதங்களுடன் செய்திகளில் சொல்லப்படுகின்றன; தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்படுகின்றன. பழங்குடியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண் மருத்துவம் படிக்க முதல் முதலில் வந்தார் என்னும் செய்தி நமக்கு அவ்வளவு மகிழ்வினை அளித்தது.
ஆனால் பழங்குடியினருக்கான கோட்டாவில், தான் விரும்பிப் படிக்க விரும்பும் பாடத்தைப் படிக்க இயலாதவர்களுக்கான பிரச்சினையை, இதில் ஒரு கதை விரிவாக அலசுகிறது. எனினும் அதிலும் சோகமான முடிவே.
”எங்க ஊருல காலேஜ் போற முதல் ஆளு நானா தா இருக்கும்னு நினைச்சேன். அப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு வந்துட்டா, என்னப் பாத்து மத்தவங்களும் படிப்பாங்க. ஆனா என்னோட சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல” என்று வருத்தத்துடன் சொல்லும் மாதனைப் போல எத்தனை பேர் இருக்கிறார்களோ…
இத்தனை பேருக்குமான நிம்மதியான வாழ்க்கையை இந்த சமுதாயம் இவர்களுக்கு எப்போது அளிக்குமோ என்னும் எதிர்பார்ப்பு நிறைந்த வலியை இந்தப் புத்தகம் அளிக்கிறது.
இவருடைய எழுத்தின் வழியே இவருடன் நேராகவும் மறைந்தும் காட்டின் பசுமைக்குள் செல்கிறோம். ஆற்றின் குளுமையை ருசிக்கிறோம். யானையின், புலியின் வாசத்தை, உருவத்தை உணர்ந்து திடுக்கிடும் மனதுடன் ஒளிந்து தப்பிக்கிறோம். காட்டுக்கான பாதகத்தை விளைவிக்கும் மனிதர்களைக் கண்டு அஞ்சுகிறோம். அப்படியொரு எழுத்து இவருக்கு கைவந்திருக்கிறது.
இன்னும் பல படைப்புகள் அளித்து சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் முகம் எழுதியவர் :
மதுமிதா
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbook. com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.