காமுத்துரையின் இலக்கிய எழுத்து கிராமிய மணங்கமழும் பூந்தோட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதரின் பேச்சு மொழியையும் செயல் நடைமுறைகளையும் உன்னிப்பாய்க் கவனித்துப் பதிவு செய்யும் ஆற்றல் பெற்றவர். இவரின் சமீபத்திய நாவல் “கடசல்.” கடசல் என்றால் கடைவது. முன்னுரையில் நாஞ்சில் நாடன் சொல்லியிருப்பது போல “கடைசல் பொதுமொழி; கடசல் என்றால் அகராதியில் பதியப்படாத மக்கள் மொழி. அதாவது ஒரு பொருளை இன்னொரு வடிவத்துக்கு உருமாற்றம் செய்வது கடசல். பாலைக் கடைந்தால் தயிர் ஆவதும் பருப்பைக் கடைந்தால் சாம்பார் வருவதும் மனிதன் சமயலில் கண்டடைந்த உருமாற்றச் செயல்பாடுகள்.
இயந்திரவியலில் கடைசல் ஒரு முக்கியமான உருமாற்றச் செயல்பாடு. இன்றைய நிலையில் பூமிப் பரப்பும் பிரபஞ்சவெளியும் புது வகையிலான வாழ்வியல் பண்பாடுகளையும் நாகரீகக் கோடுகளையும் வரையக் காரணமாய் இருப்பது இந்த இயந்திரவியல்தான். 18ஆம் நூற்றாண்டில் உலகம் புதுப்பாதை அமைத்துப் பயணிக்கிறது என்று காரல் மார்க்சும் ஏங்கல்சும் வரலாற்று ரீதியான உண்மையைக் கண்டுபிடிக்கக் காரணம் பிரம்மாண்டமான இந்த இயந்திரவியல் கோட்பாடுதான். பட்டறைத் தொழில் என்று அவர்கள் அதற்குப் பெயர் சூட்டினார்கள்.
இன்று மெக்கானிக்கல் தொழில் நுட்பம் உலகமெங்கும் கோலோச்சுகிறது. சின்னக் குண்டூசி முதல் பெரிய விமானங்கள் வரை அந்தத் தொழில் நுட்பம் பிரயோகிக்கப் படுகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. படிப்பறிவில்லாத சாமன்யன் முதல் மெத்தப் படித்த விஞ்ஞானிகள் வரை இயந்திரவியல் மூலம் பிரபஞ்சத்தைப் புதுமைப் படுத்துகின்றனர். அதைக் கருவாக எடுத்து நாவலாக்கியிருக்கிறார் காமுத்துரை. சாமான்யனின் மொழியில்,,, சாமான்யனின் புரிதலுக்கான நடையில்.
வாழ்க்கையை வாசித்து, மக்களைப்பற்றி மக்கள் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது நாவல். முக்கியமாக பெண்களின் நடைமுறைச் சித்திரங்கள் மற்றும் பேச்சுமொழி. அதோடு சிறுவர்களுடையதும்.
அநேகமாக 70களின் காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. ஒரு பைசாவுக்குப் பொரிகடலையும் ரெண்டு பைசாவுக்குத் தேங்காச் சில்லும் வாங்கிய காலம் அது. சிறார் உழைப்பு சட்டரீதியாக இல்லாவிட்டாலும் சமூகரீதியாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. காரணம் வறுமை. பாண்டியே இந்நாவலின் கதாநாயகன்; கைலாசம் துணைக் கதாபாத்திரம்தான். கைலாசத்திடம் அடிவாங்கி மிதிவாங்கித் தொழிலைக் கற்றுக் கொள்கிறான். ஒருகட்டத்தில் அடி தாங்காமல் வேலைக்கு வராமல் நின்றுகொள்கிறான் பாண்டி. என்ன முயன்றும் அவனை ஒர்க்சாப்புக்கு வரவைக்க முடியவில்லை. அப்போது கைலாசத்தின் மனைவி செண்பகம் சொல்கிறாள். ”தொழில் செய்யிற எடத்துல அடிக்யாம செய்யாம இருக்க முடியுமா? பள்ளியோடத்துல அடிக்கிறாங்களேங்குறதுக்காக பள்ளியோடம் போகாம இருந்துருவாகளா? கூரமேல சோத்தப் போட்டா ஆயிரங்காக்கா.” குழந்தை உழைப்பை நியாயப் படுத்தும் சமுதாய மொழி இது.
இந்த நாவலின் இன்னொரு முக்கியப் பகுதி நமது நாட்டுப்புற விளையாட்டுகள். குறிப்பாக சிறுவர்களின் வீதி விளையாட்டு. (சிறுவர்கள்தான் வீதியில் இறங்கி விளையாடுவார்கள். பெரியவர்கள் வீட்டுக்குள் இருந்து தாயம், பள்ளாங்குழி ஆடுவார்கள்.) பம்பரம் சுற்றுவது, கோலிக் குண்டு அடிப்பது, செதுக்கு முத்து, கல்லா மண்ணா ஆகிய ஆட்டங்களின் உள்ளார்ந்த நுட்பம் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் பல நாட்டுப்புற விளையாட்டுகள் இருக்கின்றன. பாச்சாக்கல். ஒரு காலால் கட்டம் தாண்டுவது, நொண்டியாட்டம்! அவையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. பணக்கார விளையாட்டுகளான கிரிக்கெட், ஹாக்கி போன்றவை கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன.
நாவலின் துவக்கம் விருவிருப்பாய் இருக்கிறது. பெரிய தொழில்காரனாகிய கைலாசத்தின் மனைவி செண்பகம் தூக்குமாட்டிச் சாகப் போகிறாள். பக்கத்துவீட்டு சுமதி, மச்சுவீட்டுக்காரம்மா, பெரியம்மா, செட்டியாரம்மா தெய்வானை எல்லாருமாய்க் காப்பாற்றுகிறார்கள். கைலாசம் வேறு பெண்ணோடு தொடுப்பில் இருப்பதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.
ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய நமது சமூக அமைப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு களவு கொண்ட ஆண்களைக் கொண்டிருந்தது. “அவங் ஆம்பள; சகதி கண்ட எடத்துல மிதிச்சு தண்ணி கண்ட எடத்துல கழுவுவாங்; நீதான் பொருத்துப் போகணும்” என்று பெண்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. நெஞ்சு நிமிர்த்திப் பேசும் ஆண்களைப் பார்த்து, “ஒரு வப்பாட்டி வக்ய வக்கில்லாத பய, என்னா மனியம் பண்றாம்பாரு” என்று, ஆணுக்குப் பெருமிதம் பொங்கும் சங்கதியாய்க் கட்டமைத்தார்கள். செண்பகம் போன்ற சில பெண்கள் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். எதிர்ப்பு என்பது தற்கொலை செய்வது அல்லது கோபித்துக் கொண்டு பிறந்தகம் போவது. ஆண்களின் இந்த சகவாசத்துக்குக் காரணம் பெண்கள் வீட்டு வேலைக்காரிகளாகவோ வயல்வெளி உழைப்பாளிகளாகவோ இருந்த்துதான். பெண் தன்னளவில் ஒழுக்கமாய் இருக்கவேண்டும் என்பதுதான் சமூகவிதி.
கைலாசம் தனது அசட்டுத்தனமான தவறுகளுக்கு மனைவிமேல் பழிபோடுகிறான். அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறதாம். உடுக்கையடித்துப் பேயோட்டிய பின் சரியாகிறாளா அப்படியேதான் இருக்கிறாளா என நாவலில் சொல்லப்படவில்லை. பேய் என்பது மனிதனின் உளவியல் பாதிப்பா, மனசின் எதிர்மறைச் செயல்பாடா’ தெரியவில்லை. ஆதுர சாலை நாவலில், அ. உமர் பாரூக் சொல்கிறார், புற மனசில் தேங்கியிருக்கிற பழைய ஞாபகங்களின் பிரதிபலிப்பு என்று. விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப் படாத அமானுஷ்ய சக்தியைப் பற்றி எழுதும்போது ஒரு படைப்பாளி அது பற்றிய ஓர் உண்மையை அல்லது தனது கருத்தைச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பொய்மை வெற்றிக்கொடி நாட்டிவிட்டுக் கடந்து போய்விடும்.
நெஞ்சை நெகிழவைக்கும் பாத்திரம் பாண்டி. குடும்ப வறுமையால் படிப்பை நிறுத்துவிட்டு ஒர்க்சாப்புக்கு வந்து அடிபட்டு மிதிபட்டு வறுமையற்ற வாழ்வை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்ற துடிப்போடு இரவு பகலாய் உழைக்கிறான். அவனும் ஒரு டர்னராய் உயரவேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்குள் பெரிய கம்பனிகள் வந்து ஒர்க்சாப் ஓனர்களையெல்லாம் தொழிலாளிலளாய் மாற்றி விடுகிறது. தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கும்படியான கார்ப்பரேட் கட்டமைப்பு நிலைகொண்டபின் அவனின் எதிர்காலக் கனவு கருகிவிடுகிறது.
அவ்வையார் நோம்பு பற்றிய விவரணை சிறப்பாகப் பதியமாகி இருக்கிறது. அது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கும்பிடப் படுகிறது. அவ்வையார் நோம்பு, சுமங்கலி பூஜை போன்ற பெயர்கள் அதற்கு உண்டு. இது நில உடமைச் சமுதாயத்தின் விழாவாய் இருக்கக் கூடும். பெண்கள் எல்லாரும் நிர்வாணமாகி, லிங்க உருவில் கொழுக்கட்டை பிடித்து, ஆண்களுக்குத் தெரியாமல் அவர்களாகவே உண்டு முடித்து விடுவார்கள். லிங்கம் ஆண் உறுப்பு. அது கடைசிவரை தனக்கு வாய்க்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுதல். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் கணவன் சாவுக்குமுன் தன் சாவு நிகழவேண்டும். இத்தனை பெரிய தியாகிகளைத்தான் ஆண்வர்க்கம் அடாவடித் தனமாய் அடக்கி வைத்திருக்கிறது.
நாவலில் காலப் பதிவு சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு பைசாவுக்குத் தின்பண்டம் கிடைத்த காலம் 1970 அல்லது அதற்கு முந்தைய காலமாய்த்தான் இருக்க முடியும். ஸ்ரீராம் தியேட்டரில் திரிசூலம் படம் போடுவதாக வருகிறது. 80களின் துவக்கத்தில் வந்த படம் அது. அதே போல பாலு அண்ணன் பாண்டியைப் பார்த்து “ரஜினி மாதிரி இருக்க” என்கிறார். ரஜினிகாந்த் கதாநாயகத் தன்மையோடு போற்றப் பட்டச்து 83க்குப் பிறகுதான். கொஞ்சம் முயன்றிருந்தால் இந்தக் காலப் பிழையைத் தவிர்த்திருக்கலாம்.
கைலாசம் ஒரு ஸ்த்ரீலோலன்; வசந்தாவுக்குக் கணவன் சரியில்லை; இருவரும் ஊரை விட்டு ஓடிவிடுகிறார்கள். சில நாட்களில் கைலாசம் திரும்பிவந்து தன் குடும்பத்தோடு சேர்ந்து விடுகிறான்; வசந்தா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. இத்தகைய கவனமின்மைதான் நாவலின் கட்டுமானத்தைச் சிதைக்கிறது.
தேனியைவிட அல்லிநகரம் பெரிய ஊர். தேனி நகரமாகிவிட்டது. அல்லிநகரம் கிராமமாகவே இருக்கிறது. கிராமிய வாழ்வியல் பண்பாடும் ஒர்க்சாப் நடைமுறைகளும் இந்த நாவலைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. சிலபல பிழைகள் நிவர்த்திக்கப் படக்குடியவையே. நாவலின் நடையழகும் வாழ்வியல் சித்தரிப்பும் வாசனை உள்ளிழுத்துக் கொள்கின்றன.
நூல்: கடசல் நாவல்
ஆசிரியர்: ம. காமுத்துரை
வெளியீடு: எழுத்து பிரசுரம்
விலை: ரூபா 350/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

