நூல் அறிமுகம் : கடவுள் சந்தை (உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது) – மீரா நந்தா | மதிப்புரை மதிவாணன் பாலசுந்தரம்

நூல் அறிமுகம் : கடவுள் சந்தை (உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது) – மீரா நந்தா | மதிப்புரை மதிவாணன் பாலசுந்தரம்

“சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்” என்கிறது கல்லாடம். தமிழில் Secularism என்பதை மதச்சார்பின்மை என்று சுட்டுவது பெருவழக்காகி விட்டது.கல்லாடம் ‘உலகியல்’ என்கிறது. ஆங்கிலச் சொல்லின் பிறப்பும் ‘உலகியல்’ என்பதை உறுதிப்படுத்துகிறது. வலைவழிச் சொற்பிறப்பியல் அகராதியொன்றன் விளக்கம் ஏறத்தாழக் கல்லாடத் தொடரின் ஆங்கில மொழிபெயர்ப்புப் போலவே உள்ளது.

இயற்கை, சமூகம் ஆகிய துறைகளில் எழுச்சியுற்ற அறிவியல் பார்வை சார்ந்ததாக ஐரோப்பிய அறிவொளிக் காலத்தோடு இந்த ‘உலகியல்’ என்னும் கருத்துநிலை மேற்கிளம்பியது என்பர். சமயஞ்சாராத ஒரு பார்வையின் தேவை முன்னரே நிலவியதற்குத் தமிழ்ச் சமூகவரலாற்றில் திருக்குறள் ஒரு சான்றாக நிற்கிறது.

ஆனாலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழில் secularism என்பதைச் சமயத்தோடு சார்த்தி ஓர் எதிர்மறைத் தொடராலேயே சுட்ட நேர்ந்திருக்கிறது.

கோமாளிமேடை: புத்தக அறிமுகம் ! கடவுள் ...

இந்தத் தொடர் பற்றி மற்ற இந்திய மொழிகளில் தேடியபோது இந்தியச் சமூகத்தில் மதத்தின் / மதங்களின் சார்பு எதிர்மறையிலும் தொக்கி நிற்பதாகத் தோன்றுகிறது.

இந்தியாவில் மதத்தின் இடத்தை, மதத்தில் நிகழும் மாறுதல்களை எளிதில் கணித்துவிட இயலாது. இந்தியாவில் மதச்சார்பற்ற கருத்துநிலை பெரும் பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது.

மதம் எளியோர்க்கு இதயமற்ற உலகின் இதயமாக மட்டும் இல்லை. பொருளாதார மேம்பாடும் வாழ்க்கைப் பாதுகாப்பும் உடையோரும் நவீன மருத்துவர்களும் அறிவியல் துறையாளர்களும் ஏன் அறிவியலாளர்களுமே கூட மதத்திலிருந்து விடுபடாதது மட்டுமன்றி மேன்மேலும் மதச்சடங்குகளில் ஆர்வங்காட்டுகின்றனர்.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்” என்கிற பழைய, ஆசைக்குத் தடைபோடுகிற ஆன்மிகவாதம் ஆட்டம் கண்டிருக்கிறது.

நடுத்தர உயர்நடுத்தர வர்க்கத்தின் பேராசையை நியாயப்படுத்திக் குற்றவுணர்ச்சியை நீக்கி ‘அனைத்துக்கும் ஆசைப்படு’ என்பதை உபதேசிக்கும் புதிய ஆன்மிகவாதிகள் காடு கொன்று நாடு ஏய்த்துப் பெருங்கடை திறக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் காசைக் கொட்டுகிறார்கள். பழைய மத அடிப்படைவாதிகள் இவர்களோடு கைகோக்கிறார்கள். அதிகாரம் ஆசீர்வதிக்கிறது.

புறநிலை நடப்புகளை விடவும் சடங்குகள் முதன்மை பெறுகின்றன. கைதட்டலிலும், விளக்கேற்றலிலும் பெருந்தொற்று நோய்க்கெதிரான நடைமுறைத்தீர்வுகள் பின்னுக்குத் தள்ளி மறக்கடிக்கப்படுகின்றன.

எப்படி?

மீரா நந்தா ஆய்ந்தெழுதிய The God Market: How Globalization is Making India More Hindu (2011) என்னும் நூலைக் ‘கடவுள் சந்தை – உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது’ எனப் பேரா.க.பூரணச்சந்திரன் தமிழாக்கியிருக்கிறார்; அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது (2017). படித்துப் பாருங்கள்.

கடவுள் சந்தை - Kadavul Santhai - Panuval.com - Online ...

“அர்த்தமுள்ள மதச் சார்பற்ற வெளிகளையும் மதச்சார்பற்ற பொதுக் கலாச்சாரத்தையும் உருவாக்குவதைவிட இன்று இருக்கும் இந்தியாவுக்குப் பெரிய சவால் வேறு எதுவுமில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் பிற எவரும் சகபணியாளர்களாக, அண்டை வீட்டாராக, நண்பர்களாக வாழக்கூடிய வெளிகளை மேலும் நாம் உருவாக்க வேண்டியுள்ளன.

இந்தியாவின் சாதனைகளுக்கும் குறைகளுக்கும் மதச்சார்பற்ற , ‘உள்ளடக்குகின்ற’ (இன்குளூசிவ்) விளக்கங்களை நாம் உருவாக்க வேண்டும். ஏழைகளாக, தத்தளிக்கின்றவர்களாக உள்ள வெகுமக்களைக் கடவுளர்கள், சாமியார்கள் ஆகியோரின் கருணையில் மட்டும் விடாமல், அவர்களுக்கு மேலும் வாழ்க்கை சார்ந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்” (ப.244)

என்பதே இந்நூலின் முத்தாய்ப்பு. கடந்த ஒன்பதாண்டுகளில் இன்னும் மோசமாகிவிட்டது. மனப்பான்மை என்னும் நிலை கடந்து நேரடியான சட்டப்பூர்வ ஒதுக்கல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

சிறுபான்மையினர் மீதான குறைந்தபட்ச அனுதாபத்தையும் ஒழித்துக்கட்ட ஒரு பெருந்தொற்றுநோய்ச் சூழலைக்கூட பயன்படுத்தும் அளவுக்குக் கொடூரம் அரங்கேறி வருகிறது. இவர்களா இப்படி என்று அதிர்ச்சியடையும் அளவிற்கு நம் ‘தூய’இலக்கியவுலகின் மேட்டுக்குடிக் கண்ணியவான்கள் பெருங்கூச்சலால் இந்த மத அடிப்படைவாத நெருப்புக்கு நெய் வார்க்கிறார்கள்.

பெரும்பான்மை மத அடிப்படை வாதத்திற்கு வாய்ப்பை வலிந்து நல்கும் சிறுபான்மை மத அடிப்படைவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டும்.

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் ...

இப்போது மார்க்சிய ,நேருவிய , பெரியாரியச் ‘சூத்திரங்’களைக் கிளிப்பிள்ளைப் பாடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தால் இவையும் மூட நம்பிக்கையின் பாற்படுமேயன்றி வேறில்லை.

குறிப்பாக மார்க்சியர் ஒன்றைக் கருதலாம். மார்க்சியம் புறநிலை நடப்பைக் கணித்துச் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டது மார்க்சியம். அந்த வகையில் இப்போதைய பொருளாதார சமூகப் போக்கில் மதத்தின் இடத்தை ஆராய்ந்து செயல்பட வேண்டும். இத்துறையில் பிறர்தம் முயற்சிகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

மீரா நந்தா , ‘விரிவான வாசிப்புக்கு’ என்னும் பின்னிணைப்பில் சில நூல்களைப் பரிந்துரைத்திருக்கிறார். இப்போது மேலும் பல கட்டுரைகளும் நூல்களும் வந்திருக்கலாம்.

ஆய்வுகள் ஒருபுறமிருக்க அன்றாட வாழ்வில் மக்கள் மனப்பாங்கையும் நடத்தையையும் போக்குகளையும் மாற்றங்களையும் நோக்கும் வாய்ப்பு மதச்சார்பற்ற இயக்கத்தோர்க்கு இருக்கிறது. இதில் கூர்மை வேண்டும்.

—————————————–

1.c.1300, “living in the world, not belonging to a religious order,” also “belonging to the state,” from Old French seculer (Modern French séculier), from Late Latin saecularis “worldly, secular, pertaining to a generation or age,” from Latin saecularis “of an age, occurring once in an age,” from saeculum “age, span of time, lifetime, generation, breed.” – etymonline.com

2.secularism என்பதன் கூகுள் மொழிபெயர்ப்புகளேயன்றிப் பின் வரும் மொழி ஏதுமறியேன்.மலையாளத்தில் மதேதரத்வம் (മതേതരത്വ matētaratvaṁ மத +இதரத்வம் போலும்) என்கிறது கூகுள்.

கன்னடத்தில் ஜாத்யதீதெ (ಜಾತ್ಯತೀತತೆ Jātyatītate ஜாதி + அதீததெ போலும் – ‘நாடு கடந்த’ என்பதையொத்த பொருள் குறிப்பதாகக் கொண்டால் , Secularism என்பதற்கு இப் பொருளும் உண்டு . ஆனால், மதச்சார்பு கடந்த என்னும் பொருளில் வழங்குகிறது என்று தோன்றுகிறது) மராத்தி, வங்கம் , பஞ்சாபி, இந்தி போன்ற மொழிகளில் தர்மநிரபேக்ஷதா என்பது அவ்வம் மொழி ஒலிப்பிற்கேற்பச் சற்று வேறுபடுகிறது(धर्मनिरपेक्षता Dharmanirapēkṣatā என்பது மராத்தி , தர்ம + நிர்+ அபேக்ஷதா போலும்). கூகுள் பெயர்ப்பை மட்டும் கொண்டு பார்த்தால் பெரும்பாலான இந்திய மொழிகளில் மதம் என்னும் சொல்லைச் சார்ந்து எதிர்மறையாகவே Secularism என்பது குறிக்கப்படுகிறது.

தெலுங்கு விதிவிலக்காக லௌகீக வாதம் (లౌకికవాదం Laukikavādaṁ) என்று குறிப்பிடுவது தமிழ் ‘உலகியல்’ பார்வையில் மகிழ்ச்சியளிக்கிறது.

– மதிவாணன் பாலசுந்தரம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *