புத்தகத் தலைப்பு:- கடவுள், மதக்கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும்
ஆசிரியர் :- டாக்டர் கோவூர்
தமிழாக்கம் :- த. அமலா
நூல் வெளியீடு :- அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : – 432
விலை :- 325/-
வணக்கம் நண்பர்களே,
எப்போதுமே ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டால் அவற்றுக்கு நிட்சயமாக இரண்டு பக்கங்கள் உண்டு. இவை பலதரப்பட்ட வடிவங்களில், கொள்கைகளில், முரண்பாடுகளில், வேறுபடுவதைக் கவனிக்கலாம். அதிகமாக இவை சாதக, பாதக அம்சங்களைக் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அரசியலிலும் சரி, மதக்கோட்பாடுகளிலும் சரி, மனித சமுதாய வாழ்க்கையிலும் சரி, இப்படியாக அவை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து அன்று தொடக்கம் இன்றுவரை, ஏன் இனிவரும் காலங்களில் கூடத் தொடர்கதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அண்மையில் நான் வாசித்து ஆச்சரியப்பட்ட நூல்களில் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்த நூல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லக்கூடிய, மக்களாலும், மதவாதிகளாலும் மறைக்கப்பட்ட, என் கண்முன்னால் இருக்கவே இதற்குத் தகுதி இல்லை என்று தூக்கி எறியப்பட்ட, மிகவும் யதார்த்த உலகில் அன்றாட வாழ்க்கைக்கு எது முக்கியமோ அவற்றை ஒதுக்கித் தள்ளிய, சென்ற ஆண்டு காலப்பகுதியிலே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று போராடிய ஒருவர் படைத்த நூல் தான், கடவுள், மதக்கட்டுக்கதைகளும் காசு பறிக்கும் சாமியார்களும் என்ற நூலாகும் நண்பர்களே.
இதனை மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்த ஆசிரியர் த. அமலா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அவரது மொழிமாற்றம் மிகவும் சிறந்த முறையில், பந்திகளும் சரி, தமிழ் வசனஅமைப்புகளும் சரி, கண்டிப்பாக வாசிக்கும் வாசிப்பாளர்களுக்கு எந்தவிதத் தடங்கல்களும் இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வரிகளில் இலகு நடை கையாண்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள்.
அவர் தான் டாக்டர். கோவூர் அவர்கள். மத்திய திருவிதாங் கூரிலுள்ள வைதீகக் குடும்பம்தான் அவருடையது . புனித தோமையரால் மத மாற்றம் செய்யப்பட்ட பிராமணக் குடும்பங்களில் ஒன்றுதான் கோவூர் தறவாடு என்று அந்த வீட்டுக்காரர்கள் பெருமை கொண்டிருந்தனர் . அதுமட்டுமல்ல , மார்த்தோமா . சபையை தோற்றுவிப்பதில் பெரும் பங்கு வகித்தவரும் அந்த சபையின் முதல் விகாரி ஜெனரலும் அந்த சபையின் குருக்களில் முதன்மையானவருமான கோவூர் அய்புதோம்மா கத்தனாருடைய மகனாகத்தான் பேரா . ஏ . டி . கோவூர் 1898 ஏப்ரல் 10 ஆம் நாள் திருவல்லாவில் பிறந்தார் .
டாக்டர் கோவூர் தனது திருமணத்தின் போது விடுத்த நிபந்தனை கொஞ்சம் விசித்திரமானதாக இருந்தது. பிரிய விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் பிரிந்துவிடலாம் என்ற நிபந்தனையின் மூலமாகவே அவர் குஞ்ஞம்மை க் கைபிடித்தார். அவர் 1974 ஆம் ஆண்டுவரை அயராது அவருடன் பயணித்து மறைந்தார்.
டாக்டர் கோவூர் அவர்கள் தனது பட்டப்படிப்புகளை முடித்து, திருமணமானபின் மனைவியுடன் அதிக காலம் இலங்கையில் தான் வாழ்ந்து தனது மத மறுப்புக் கொள்கைகளைப் பரப்பி வந்தார். பகுத்தறிவு நூல்களை அதிகம் விரும்பி வாசித்த கோவூர் அவர்கள், தனது பெற்றோர் விரும்பிய மத ஆசாரங்களையும், பில்லி, சூனியம், பேயாட்டம், செய்வினை இது போன்றன உண்மையில் இருக்கிறதா? அப்படி என்றால் என்ன என்ற கேள்விகள், மக்கள் இந்த மூடநம்பிக்கையை எப்படி நம்புகிறார்கள், இதற்கான ஓட்டுமொத்த துன்பங்களுக்கும் என்ன காரணம் என்று அறிய, தனது பயணத்தை ஆரம்பிக்கிறார்.
குறிப்பாக, பைபிளில் உள்ளநடைமுறை வாழ்க்கையில் நாம் பின்பற்றவேண்டிய சில கோட்பாடுகளை கடுமையாகக் கண்டித்து, இவற்றை நாம் எந்த வகையில் பின் தொடர்வது, கடவுள் சொன்னதாக அதில் குறிப்பிட்டவற்றில் உதாரணங்களுடன் (புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள) படித்த மத மகான்கள் முன், எந்த விதத்தில் இவை சாத்தியமாகும்? என்கிறார் ஆசிரியர் டாக்டர் கோவூர் அவர்கள். இவற்றுக்கு அவர் தரும் விளக்கங்களை இந் நூலில் பல இடங்களில் ஏராளமான தலைப்புகளுக்குக் கீழ் விரிவான விசாரணைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
தனது பேராசிரியர் வேலைகாரணமாக இலங்கை சென்ற கோவூர், அங்கே யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் ஆசிரியராகக் கடமையாற்றியபோது, தென்னிலங்கை மக்களிடம் பேய்த் தொல்லை , பில்லி சூன்யம் , மந்திரவாதம் ஆகியவை மிக அதிகமாக இருந்தன . மூட நம்பிக்கைகளின் நடுவிலுள்ள வாழ்க்கை அந்த விசயத்தில் அதிக ஆய்வு நடத்த அவரைத் தூண்டியது . ஹிப்னோட்டிசத்தில் அவர் ஈடுபாடு கொண்டதும் இந்தக் காலகட்டத்தில்தான் . ஆவி , குட்டிச் சாத்தான் , பூதம் முதலியவை எங்கே இருக்கின்றன என்று அறிந்தாலும், அங்கே சென்று விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வருவதை இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார் கோவூர் .
1971,1975,1976 ஆம் ஆண்டுகளின் இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய அளவில் தெய்வீக ஆற்றல் மறுப்பு மகாநாடுளைப் பெரிய அளவில் நடத்திய டாக்டர் கோவூர் அவர்கள், உலக ஐக்கிய சிந்தனையாளர்கள் இயக்கத்தின் உறுப்பினரானார். பின்னர் ஆங்கிலேயர்களும் சில மலையாளிகளும் சேர்ந்து உருவாக்கிய இலங்கை பகுத்தறிவாளர் சங்கத்தில் உறுப்பினரானார். 1959 ல் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அச்சங்கத்தின் தலைவர் பதவியை மேற்கொண்டு, பல உலக பகுத்தறிவாளர் சங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி (அங்கு சுற்றுப் பயணங்களை செய்து) தொடர்ந்தும் தனது பணியை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் கோவூர் தனது வாழ்நாளில் தெய்வீக மாந்தர்களிடம் தன்னுடன் போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தபடியேதான் இருந்தார். ஆனால் யாரும் அதில் சிக்கிக்கொள்ளவில்லை என்றே கூறுகின்றார். இதற்கு அவர் ஒரு லட்சம் ரூயாய் பரிசு (1970-1978) தருவதாகக் கூட அறைகூவல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதப்பரப்புனர்கள், போதகர்கள், சோதிடர்கள், மந்திரவாதிகள் யாராக இருந்தாலும், மக்களை ஏமாற்றாமல் தங்கள் தெய்வீக சக்தியை நிரூபிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிட்டத்தட்ட 107 சிறிய தலைப்புகளைக் கொண்ட இந் நூலை கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டும். பைபிளில் இருந்து பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர் கோவூர் அவர்கள், மற்றைய மதத் தவறுகளையும் காட்டத் தவறியதில்லை. அதேசமயம் அந்தக் காலகட்டங்களில் பல வகையான, மிகக் கடுமையான எதிர்ப்புகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது. இருந்தும் இறுதிவரை தனது கொள்கையிலிருந்து பின்வாங்காது தனது பணியை மக்களுக்குப் புரியும் படி நகர்த்தியே சென்றுள்ளார். அறிவியலோடு மதம் போட்டி போடமுடியாது என்றும், இன்றைய பல்துறை வளர்ச்சிக்கு மனிதனின் இடைவிடாத ஆராய்ச்சியே மூலகாரணம் என்றும், அப்படியிருந்தும் ஏதோ ஒரு விதத்தில் இன்றும் மக்களின் மூடநம்பிக்கை தொடர்வதைக் காணலாம்.
பைபிள் நூலில் கூறப்பட்டுள்ள ஆன்மீக கோட்பாடுகளில் பலவற்றை கடுமையாகத் தாக்குகிறார் டாக்டர் கோவூர் அவர்கள். பைபிளும் சமூகசிந்தனைகளும் என்ற பகுதியில் கடவுளின் உத்தரவை இஸ்ரவேலர்கள் அப்படியே பின் பற்றினார் கள் . அவர்கள் முப்பத்து இரண்டாயிரம் கன்னிப் பெண்களைப் பிடித்துக் கொண்டு வந்தனர் . அவர்களில் 32 கன்னியரை கடவுளுக்கு அளித்தனர் . ஆயிரம் கன்னிகைக்கு ஒரு கன்னிகை என்பது தான் கடவுளின் பங்கு . செக்ஸ் களியாட்டக்களத்தில் இந்த தெய்வங்களிலிருந்து கிறித்தவ தெய்வம் கொஞ்சமும் பின்வாங்கியிருக்கவில்லை . குளத்தில் குளித்த கோபிகைகளை மரத்தின் மீது ஏறி அமர்ந்து ஒளிந்து பார்த்த கிருஷ்ண பகவானைப் போலவே கர்த்தரும் தன் படைப்புகளின் நிர்வாண உடலைப் பார்த்து ஆனந்தமடைவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் .
மேலும் அவரது கூற்றுப்படி, பைபிள் ஆய்வில் புகழ்பெற்றவரான மார்ஷல் ஜே . கோ வின் உலகில் புனித பைபிளைப்போல மனிதனை தீய வழியில் செலுத்தத் தூண்டுகின்ற வேறொரு நூல் இல்லை என்று கூறுகின்றார் . பொய் , சதி , திருட்டு , அடிமைமுறை , கொலை , வன்முறை , கூட்டுக் கொலை , தகாத உறவு , விபச்சாரம் , ஒரினச் சேர்க்கை , நிர்வாணம் , ஆபாசம் , இணை சேர்தலில் ஆபாசம் , அச்சுறுத்தல் , துன்புறுத்தல் ஆகியவை பைபிள் ஆதரிக்கவும் சரியானது என்று வாதிடவும் செய்கின்ற குற்றச் செயல்களில் சில மட்டும்தான் என்கிறது. ஆதி மனிதனது தோற்றம், அவர்களின் கடவுள் எது? எதனை அவர்கள் வழிபட்டார்கள், அதனைத் தொடர்ந்து மனிதன் எப்படியான கடவுள் என்ற கூட்டுக்குள் சிக்கிக் கொண்டான், போன்ற பல விடயங்களை போட்டு உடைக்கிறார் டாக்டர் கோவூர் அவர்கள்.
தொடர்ந்து ஆசிரியர் டாக்டர் கோவூர் கேட்கிறார், நம்முடைய கல்வி நிறுவனங்களில் பைபிளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கலகம் விளைவிக்கின்ற கிறித்தவர்கள் அந்தத் தேவைக்காகப் பிடிவாதம் பிடிப்பதற்கு முன்னால் அந்த நூலை ஒருமுறை படித்துப் பார்ப்பார்களா ? இதுபோன்ற பல அறிவுசார் விளக்கங்களையும், விஞ்ஞான மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்றும், அயராது பாடுபட்ட ஆசிரியர் டாக்டர் கோவூர் அவர்கள் 1978 செப்டம்பர் 18 நாள் காலமானார். அவர் சொன்னபடியே அவரது உடல் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்குப் பகுத்தறிவாளர் சங்கத்தின் சார்பில் கையளிக்கப்பட்டது.
அறிவியலாளரும் அறிஞரும் பகுத்தறிவாளருமான ஏ.டி. கோவூர் அதிகமாக எழுதவில்லை . எழுதியவையும் நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவை அல்ல . பிற்காலத்தில் கோவூரின் கட்டுரைகள் நூல் வடிவில் தமிழ் , ஆங்கிலம் , மலையாளம் மொழிகளில் வெளிவந்தன . தமிழில் மிகக் குறைவாகவே கோவூரின் கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன . அந்தக் குறையைப் போக்கும் வகையில் ‘ அலைகள் வெளியீட்டகம் ‘ இன்று அனைத்துக் கட்டுரைகளையும் வெளியிட முன்வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
பேயாட்டம் ஆடவும், உயிர் உடலைவிட்டு அந்தரத்தில் நிற்பதையும், ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளின் உடலில் ரசாயனத் தியதிகள் ஏன் அறம் புறமாக ஓடுகின்றன, இதுபோன்ற பல உயிரியல் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளை துண்டு துண்டாக இந்நூலையில் தந்திருப்பது அவரது அறிவின் தெளிவினைக் காணக்கூடியதாக உள்ளது.
இறுதியாக அவரது அறைகூவல் என்னவென்றால், தனது மரணம்வரை, தெய்வீக ஆற்றல் உண்டென நிரூபிக்கிறவர்களுடனான விவாதம் தொடரும் என்று முடிக்கிறார்.
கடைசியாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் டாக்டர் கோவூர் அவர்கள் மூடநம்பிக்கைகளை அடியோடு அறுத்து எறியவே பாடுபட்டார். இடைத்தரகர்கள், போலிச்சாமியார்களை இனம் காட்டி அவர்கள் விடும் புலுடாக்களை படம் பிடித்துக் காட்டி, அதற்கான விடைகளையும் இங்கே விளக்கமாகத் தந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இந்நூல் ஒவ்வொரு பகுத்தறிவாளர்கள் கைகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.
நண்பர்களே, என்னைப் பொறுத்தவரை, நாங்கள் வாசிக்கும் போது உண்மையிலேயே நாம் அறியப்படாத, ஆச்சரியப்படக்கூடிய ஏதோ ஒன்றை நம் வாசிப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். அதே போல் சிலவற்றைப் பற்றி (வாசிப்பிலிருந்து) சிந்திக்கிறோம். அதனைச் செயல்படுத்தவும் முயற்சிக்கிறோம். அந்த வகையில் ஆசிரியர் டாக்டர் கோவூர் அவர்களின் இந்நூலை வாசிப்பதனால் சில திருப்புமுனைகளை நீங்கள் உள்வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது நண்பர்களே. வாசியுங்கள்..
நன்றிகள்.