கடவுளும் கணக்குப் பிள்ளையும் - கவிதை - நா.வே.அருள் | God and the Accountant - Kadavulum Kanakkupillaium - Na.Ve.Arul - Poetry - https://bookday.in/

கடவுளும் கணக்குப் பிள்ளையும் – கவிதை

கடவுளும் கணக்குப் பிள்ளையும் – கவிதை

 

நீண்ட நேரமாய்
ஒற்றைச் சோற்றுப் பருக்கையை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்
பிறகு ஒற்றை நூல் இழையைக்
கண் இமைக்காமல்
கவனித்துக் கொண்டே இருந்தான்.
அதன் பின்
ஒற்றைச் செங்கல்லை
நெடு நேரம்
வைத்த கண் வாங்காமல் நோக்கியபடி இருந்தான்

கனவுகள் அரித்த கண்கள்
எறும்புகள் மொய்க்கும் இதயம்
செயலிழந்து போன சிறுநீரகம்
எச்சிலால் எழுதப்பட்ட
ஒரு சராசரி குடிமகனின் தலையெழுத்து

தொளதொளப்பாய் ஆடிக்கொண்டிருந்தது
தொங்கு ஆணியில் மாட்டப்பட்டிருந்த
பாடம் செய்யப்பட்ட அவனது உடல்.

கால காலமாய்
மரத்துப்போன இந்தத் தொழிலில்
கைதேர்ந்த வேலைக்காரன்
ஒவ்வொரு பாடஞ்செய்யப்பட்ட பிரேதங்களைத்
தொங்கு ஆணியில்
சலிப்பே இல்லாமல் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான்

கற்பூரம் ஏற்றிக் குரலெடுத்துக் கூப்பிட்டால் போதும்
வீடு வீடாய் வேலைக்கு வந்துவிடுகிற வேலைக்காரனென்று
வதந்தி பரவியிருந்தது.
கள்ள பணக்காரர்களின்
வானளாவிய மாளிகைகளில்
கைகட்டிச் சேவகம் செய்யும்
மேஸ்திரி வேலை பார்க்கும் மேலாளர் என்று
நோபல் பரிசு பெற்ற
பொருளாதார நிபுணர் ஒருவர் சொன்ன பொய்யாம்.
ஆளாளுக்கு ஒன்று சொல்வதால்
தொடுவானங்களில் தொங்கும்
வதந்தித் தோரணங்கள்.

எது எப்படியோ
மனிதர்கள் கழிவுகளாக ஒதுக்கப்பட்டிருந்த
குப்பை மேட்டுக்கு அருகில்தான்
இந்தக் கவிதை அலுவலகம் இருந்தது.

தொலை தூரத் தேசமாய்
சுரண்டிச் சுத்திகரிக்கப்பட்ட
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்
கள்ள பணக்காரனின் கனரகத் தொழிற்சாலையில்
ஒரு பக்கம் பாரல் பாரலாய்க் கொட்டி நிரப்பப்பட்ட
மனிதகுருதி
இன்னொரு பக்கம்
மலை மலையாய்க் குவிக்கப்பட்டிருந்த
மனித எலும்புகள்

கடவுள் தரிசனத்திற்காக ஏங்கிய
என் கண்களுக்கு
ஒரு காட்சி சித்தித்தது…
கள்ள பணக்காரனிடம் கையேந்தித் தன்
பாவத்தின் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்தார்
கடவுள் கணக்குப்பிள்ளை.

எழுதியவர் : 

Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள்

நா.வே.அருள்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. அ.குமரேசன்

    ஓவியக் கண்காட்சிகளில் நவீன ஓவியங்களைப் பார்க்கிறபோது எதுவும் புரிபடாது. அதுவும் தலைப்பு இல்லையென்றால் கொஞ்சமும் பிடிபடாது. அந்த வண்ணச் சிதறல்களும் கோடுகளும் என்னவோ சொல்கின்றன என்று மட்டும் புரியும். என்னைப் பிடி பார்க்கலாம் என்று கண்ணாமூச்சிக்கு அழைப்பது தெரியும். சவாலை ஏற்றுக்கொண்டு நகர்ந்துவிடாமல் நின்று கவனித்தால், ஓவியத்தின் எல்லாத் திசைகளிலும் கண்களைச் செலுத்தினால், ஓரிடத்தில் நூலின் நுனி பிடிபடும். அதைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்றால் ஒரு கனவுலகம் காட்சிப்படும். மெய்மையுலகின் அழகோ அவலமோ அதில் பிரதிபலிக்கும். இந்தக் கவிதை அந்த அனுபவத்தைத் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *