(அன்னம் வெளியீடாக, சுந்தர்காளி மற்றும் பரிமளம் சுந்தர் மொழிபெயர்ப்பில் ‘காஹா சத்தசஈ தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத கவிதைகள் அறிமுகமும் மொழிபெயர்ப்பும்’ என்ற நூல் குறித்த பதிவு.)
‘காதா சப்த சதி’ எனும் பிராகிருத அகப்பொருள் நூல் அனைவரும் ஒன்று. இது சங்க இலக்கிய அகத்திணை நூலைப் போன்றது என்பதால் அனைவராலும் ஈர்க்கப்பட்ட நூலாக இருந்து வருகிறது. திருக்குறளில் காமத்துப்பாலுக்கு மட்டும் கண்ணதாசன் ஒரு கவிதை உரை எழுதினார் அல்லவா! இன்னும் பலர் எழுதியிருக்கக் கூடும். அதைப்போல இவற்றை மொழிபெயர்ப்பதும் இவற்றைப் பற்றி எழுதுதலும் ஆய்வுகளும் தொடர்கின்றன.
‘காதா சப்த சதி’ என்பது சமஸ்ருதத்தில் வழங்கப்படும் பெயர்., ‘காதா என்றால் ஒரு நான்கு அடிகளாலான ஒரு யாப்பு வகை. ‘சப்த சதி’ (7X100=700) 700 செய்யுள்கள் கொண்ட நூலாகும். இரண்டிரண்டு பகுதிகளாக நான்கடியில் அமையும் இந்த யாப்பில் முதல் பகுதியில் 30 மாத்திரைகள் (முதலடி 12 + இரண்டாமடி 18), இரண்டாம் பகுதியில் 27 மாத்திரைகள் (முதலடி 12 + இரண்டாமடி 15) எனவும் இருக்கும்.
அன்று இந்தியாவின் வடபகுதியில் சிறப்புற்றிருந்த பிராகிருதம் பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியாக இருந்தது. மேலும் இது அவைதீக சமயங்களின் வாகனமாகவும் அமைந்தது. இது பல்வேறு வடிவங்களில் மக்களிடம் புழங்கி வந்தது. அதிலொன்றான மகாராஷ்டிரீ பிராகிருதத்தில் அமைந்த இந்த அகப்பாடல் நூலுக்கு ‘காஹா சத்தசஈ’ என்ற ஒலிப்புடன் இந்நூலில் எழுதப்படுகிறது. ஏற்கனவே சம்ஸ்கிருத வழக்கில் உள்ள ‘காதா சப்த சதி’ என்றே தலைப்பில் பயன்படுத்தி உள்ளே விளக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஹால(ன்) எனும் வாதசாகன அரசன் இதைத் தொகுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதிலும் இடைச்செருகல், யார் எழுதியது என்பது குறித்த சர்ச்சைகள் உண்டு. இதன் காலம் கி.பி.200-450க்கு இடைப்பட்டது என்ற கருத்து உள்ளது. இவற்றின் விந்தியமலை, கோதாவரி, நர்மதி, தபதி ஆகியன சொல்லப்படுவதால் ஆந்திர, மகாராஷ்டிரா பகுதியில் தோன்றியது வெளிப்படை என்று முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது. இந்நூல் குறித்த விரிவான அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘காதா சப்த சதி’யின் சில பாடல்களை த.நா. குமாரஸ்வாமி முதலில் தமிழில் மொழிபெயர்த்தார். 1978 இல் இரா. மதிவாணன் ‘ஆந்திர நாட்டு அகநானூறு’ என்ற 412 பாடல்களின் மொழிபெயர்ப்பைத் தந்தார். 1981 இல் பன்மொழி அறிஞர் மு.கு.ஜகந்நாத ராஜா 500 செய்யுள்களை அகவற்பா வடிவில் மொழியாக்கியுள்ளார். இந்நூல் கவிதை வடிவிலான முதல் முயற்சி இதுவேயாகும். இங்கு 215 பாடல்கள் புது வடிவம் பெற்றுள்ளன.
சங்க இலக்கியத்துடன் நெருங்கிய உறவு ‘காதா சப்த சதி’க்கு உண்டு. அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் தமிழ் அகப்பாடல்களுடனான ஒற்றுமைகளை விரிவாக எழுதியுள்ளார். அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவற்றுடன் ஒப்பிட்டு நிறைய ஆய்வுகளும் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இந்நூலில் ஐந்திணை ஐம்பது, கலிங்கத்துப்பரணி ஆகியவற்றுடன் தலா ஒரு பாடல் ஒப்பிடப்படுகிறது. பண்பாட்டு வேறுபாடுகள் காரணமாக எழும் முரண்பாடுகளும் சுட்டப்படுகிறது.
பதினெண்கீழ்க்கணக்கு அறவியல் நூற்களான நான்மணிக்கடிகை, நாலடியார் போன்ற நூல்களுடனும் ஒப்பீடு நிகழ்த்தப்படுகிறது. “காதா அகக்கவிதை என்பதால் அது அறத்தைத் தனக்கே உரிய கவிதை மொழியில் விவரிக்கிறது. (நான்மணிக்) கடிகை அறநூல் என்பதால் சொல்லவந்த அறத்தை ஓரிரு சொற்களில் போதிக்கிறது”, என ஆய்வாளர் மு.ரமேஷ் தந்து ‘எந்தை’ நூல் கட்டுரையொன்றில் கூறுகிறார். .(பக்.225, ‘எந்தை’ – மு.ரமேஷ், ‘வெல்லும் சொல்’, வெளியீடு)
அகப்பாடல் என்றால் ஊடல் இல்லாமலா? அட்டைப்படம் சிவனுடன் பார்வதி கொண்ட ஊடலைச் சித்தரிக்கும் சிற்பத்துடன் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சு.கண்ணனின் சிற்ப விளக்கக் குறிப்பும் இடம்பெறுகிறது. பகீரதன் தவத்தால் வந்த கங்கையை தன் தலையில் தாங்கிக் கொண்ட ‘கங்காதர முர்த்தி’யின் செயலால் ஊடல் கொண்ட பார்வதி முகம் திரும்பி கண்களில் ஊடல் நிறையக் காட்சியளிக்கும் சிற்பத்தை வாசிப்பது இனிய அனுபவமாக இருக்கும். புராணக்கதை என்றாலும் ‘கங்கைப்பெண்’ணைத் தலையில் தாங்கினால் தலைவிக்கு ஊடல் வருவது இயல்பன்றோ!
இத்தொகுப்பிலுள்ள ஊடல் பாடல் ஒன்று:
“என்ன துணிச்சல் உனக்கு
கண்ணாளா,
எந்தத் தவறுகளை மன்னிக்கச் சொல்கிறாய்
ஏற்கனவே செய்தவையா?
இப்போது செய்துகொண்டிருப்பவையா?
அல்லது இனிச் செய்யவிருப்பவையா?”,
(பக்.73, எண்: 175, காஹா சத்தசஈ சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்)
இவற்றை சுவைக்காதவன் சுதந்திரமான இருந்து என்ன பயன்? நாட்டிலிருந்தாலும் சிறையிலிருப்பதற்கு ஒப்பாவான். இப்பாடல்களின் நயம், சுவைக்கு அப்பாடல்வரிகளிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு:
“காஹாக்கள்
பாடல்கள்
யாழிசை
அணுக்கமான பெண்
சிலர் இவற்றைச் சுவைத்ததேயில்லை
அதுவே அவர்தம் தண்டனை”,
(பக்.40, எண்: 66, மேலது)
மு.கு.ஜகந்நாத ராஜாவின் அகவற்பா நயத்தையும் இந்நூலுள்ள கவிதை வடிவையும் ஒப்பிட்டு ரசிக்கலாம். எடுத்துக்காட்டாக, இருட்டில் சென்று காதலனைக் காண பகலில் கண்ணை மூடிக்கொண்டு நடக்கும் ஒத்திகை.
“இன்றுயான் நடுநிசி இருட்டி லந்தச்
செல்வனைக் காணச் செல்ல வேண்டும்
என்றவள் கண்ணிமை இறுக மூடி
இல்லந் தனில்நடை மெல்ல பயின்றாள்”
(காதா: 3-49, மு.கு.ஜகந்நாத ராஜா)
“இன்றிரவு
காரிருட்டில் சென்று கலக்கவேண்டும் அவனை என்கிறாள்.
விழிகளை இறுகமூடி
வீட்டை வலம்வந்து ஒத்திகை பார்க்கிறாள்”,
(பக்.35, எண்: 47, காஹா சத்தசஈ சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்)
தனிமையை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல் ஒன்று,
“நோயுற்றிருக்கிறது இந்த ஊர்
துணையிருப்போர் மோசமான ஆண்கள்
என் பார்வையை
என் மகிழ்வை
என் துயரை
என் சிரிப்பைப்
பகிர்ந்துகொள்ள யாருமில்லை”,
(பக்.35, எண்: 44, காஹா சத்தசஈ சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்)
இந்தப் பாட்டில் கோதாவரி உண்டு; அது இடத்தைச் சுட்டுகிறது. ‘எழுதுகோல்கள்’ கொஞ்சம் இடையூறுதானே!
“இனியவளே, போ. கண்ணீரைத்துடை.
தோழிமாரும் எழுதுகோல்களும் உண்டு உன் கணவன் ஊரில்.
மலைகளினூடே வீழ்ந்துபெருகும் கோதாவரியும் உண்டு”,
(பக்.41, எண்: 67, காஹா சத்தசஈ சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்)
நிலா மகளின் அழகை வெளிப்படுத்தும் பாடல்கள்:
“கட்டிளங்காளையே,
நிலவின் ஒவ்வொரு நிலையையும்
கண்டுகளிக்க வேண்டுமெனில்
அவளது அழகிய முகத்தைப் பார்
தன் மேலாடையை மெல்லமெல்லத்
தன் தலைவழியாக அவள் கழற்றி எடுக்கையில்”,
(பக்.95, எண்: 244, மேலது)
“மகளே, எச்சரிக்கை!
இன்று முழுநிலாநாள்
இன்றிரவு வெளியில் படுத்துறங்காதே
தவறுதலாக
ராகு உன் முகத்தை விழுங்கிவிடப்போகிறான்”, (ராகு – பாம்பு)
(பக்.94, எண்: 242, மேலது)
“ஒவ்வொருமுறை நிலா நிறையும்போதும்
கடவுள்
அதைக் கொண்டுபோய்ப் பதுக்குகிறார்
உன் முகத்துக்கு நிகராக”,
(பக்.94, எண்: 243, மேலது)
பழம் நூலொன்றை வேறு மொழியில் பெயர்ப்பது சற்று சவாலானது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். அதிலும் நவீன கவிதை வடிவில் யாப்பிலக்கணச் செய்யளைத் தடம் மாற்றுவது கூடுதல் கவனம் வேண்டுவதும், சிக்கலானதும் கூட. இருப்பினும் அவற்றை இவர்கள் திறம்படக் கையாண்டுள்ளனர்.
சில இடங்களில் சங்கப்பாடலுக்குரிய தொனி, குறிப்பு ஏதுமின்றி வெளிப்படையான உரைநடை போல அமைகிறது. இவை சாதாரணமான பாலியல் எழுத்துபோல நம்மைக் கடக்கின்றன. இதன் குறை மூலத்திலா, மொழியாக்கத்திலா என்பதை இரண்டையும் அறிந்தவர்களே சொல்ல இயலும். இந்நூலில் 251 பாடல்கள் கவிதையாகியுள்ளன. இந்த வரிசை எண்களுடன் மூலப் பாடல்களின் எண்களை இணைத்திருக்க வேண்டும். அடுத்தடுத்த வாய்ப்புகளில் முழு ‘காதா சப்த சதி’யையும் தடம் மாற்றித் தரலாம்.
நூல் விவரங்கள்:
காஹா சத்தசஈ (தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத கவிதைகள்
அறிமுகமும் மொழிபெயர்ப்பும்)
மொழியாக்கம்: சுந்தர் காளி பரிமளம் சுந்தர்)
முதல் பதிப்பு: 2018
பக்கம்: 96
விலை: ரூ. 100
வெளியீடு:அன்னம்
மனை எண் 01,
நிர்மலா நகர்,
தஞ்சாவூர் – 613007.
மின்னஞ்சல்: [email protected]
அலைபேசி: 7598306030