நூல் அறிமுகம்: கிருஷ்ண. வரதராஜனின் *காதல் வரம்* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: கிருஷ்ண. வரதராஜனின் *காதல் வரம்* – பா.அசோக்குமார்



“காதல் வரம்”
கிருஷ்ண.வரதராஜன்
சாதனா பதிப்பகம்
பக்கங்கள்:200
₹.200/-

புத்தக வாசித்தலை ஊக்குவிப்பதற்காக சாதனா பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றதற்காக பரிசாக வழங்கப்பட்ட புத்தகமே இது. இந்நூல் 18+ என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிமுகமும் 18+ என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமணத்திற்கு பின் நீடிக்க வேண்டிய காதலை அனைவரும் வரமாக உணர்ந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்வதற்காக நாவல் வடிவில் உருவாக்கிய எழுத்தாளர் அவர்களுக்கு முதற்கண் பாராட்டுக்கள். பொறுத்துத்துறப்பாக குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் கவனத்திற்குரியவை.

கதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையாக இருந்தபோதிலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கதாபாத்திரங்களின் பெயர்களையே சூட்டியிருப்பது தொடக்கத்தில் அலுப்பாக தோன்றியது. பல கதாபாத்திரங்கள் குறித்து மாறி மாறி வருவதால் உண்டாகும் குழப்பம் தவிர்க்க திருப்பி படிக்க வசதியாக இருந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.

இருபது வருடங்களுக்கு முன்னர் டாக்டர்.மாத்ருபூதம் அவர்களின் ஆலோசனை கதைகளாக இருக்குமோ என்ற பார்வையிலேயே நாவலில் பயணிக்கத் தொடங்கினேன். “புதிரா ? புனிதமா?” என்ற திரைப்படத்தின் காட்சிகளும் வந்து வந்து போயின. கணவன் மனைவிக்குள் நிகழும் உறவுச் சிக்கல்களை சிறுகதை வடிவில் பின்னி எஸ்.கே என்ற செக்ஸாலஜிஸ்ட்டுடன் பொருத்தமாக இணைத்த விதம் சிறப்பாக அமைந்துள்ளது.

எஸ்.கே என்ற டாக்டர் சாந்தகுமாருக்கும் அவர் மனைவிக்குமான நிகழ்வுகளை “அகத்திணை ” மற்றும் “புறத்திணை” என்று ஒவ்வொரு பகுதியிலும் பெட்டிச் செய்தியாக கூறியுள்ள நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கவிதைகளே. இவற்றை மட்டுமே அவ்வப்போது வாசித்தாலே நமது அகக்கண்கள் திறந்து மணவாழ்க்கை வசந்தமாகும் என்பதே எனது எண்ணம்.



இளவயதில் தினமலர் – வாரமலரில் விரும்பி வாசித்த அனுராதா ரமணனின் “அன்புடன் அந்தரங்கம்” பகுதியை நினைவூட்டுவதாக எஸ்.கே அவர்களின் மருத்துவ ஆலோசனை பகுதிகள் அமைந்துள்ளதாக எனக்கு தோன்றியது. ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகளாக அவரது மருத்துவமனையில் அவர் எழுதி வைத்துள்ள வாசகங்கள் மிகுந்த கவனத்திற்குரியவையே…

திருக்குறளில் காமத்துப்பாலுக்கு எஸ்.கே அவர்கள் வழங்கும் முக்கியத்துவமும் அதற்கு அவர் தரும் விளக்கமும் உன்னதமானதே. இந்நூலில் ஓரிடத்தில் எஸ்.கே நினைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள ” நான் எனது மனைவியுடன் இவர்கள் கூறுவது போல் தவறாக நடந்து கொள்கிறேனா?” என்று சுய மதிப்பீடு செய்து கொள்வது போல் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்து கொள்ள இந்நூல் நிச்சயமாக உதவும்.

“சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை” என்று சொல்லிக் கொண்டே ஏதுமறியா நிலையிலேயே நாம் பயணிக்கிறோம் என்பதை தோலுரித்துக் காட்டும் வேலையை இந்நூல் செய்வதாகவே அனுமானிக்கிறேன். டாக்டருக்கும் வழக்கறிஞர் தோழிக்குமிடையேயான காதல் அத்தியாயம் அர்த்தமுள்ள அற்புதமான கவித்துவமான காதல் கவிதையாகவே புனையப்பட்டுள்ளது. “ஆண்மைக்குறைவு” என்ற பதம் குறித்தான கேள்வி நமது அறியாமையை பதம் பார்ப்பதாகவே அமைந்துள்ளது.

ஆலோசனை மையத்தை நாடுவதில் தம்பதியர் காட்டும் சுணக்கத்தையும் செக்ஸாலிஸ்ட் பணியின் மீது சமூகம் காட்டும் கீழ்மைத்தனத்தையும் பகிரங்கப்படுத்தவும் தவறவில்லை எழுத்தாளர். முட்டுச்சந்தில் இந்த மருத்துவமனை நடத்துவதற்கான காரணத்தைக் கூறும் இடம் கிண்டலுடன் அமைந்த கவலையளிக்கவல்லதே…

இன்று நடைபெறும் பல விவாகரத்து நிகழ்வுகளை தடுப்பதற்கு இந்நூலும் ஒருகாரணமாக அமைந்தால் அதுவே இந்நூலுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த வெகுமதியாக அடியேன் கருதுகிறேன். அதற்கு “இந்நூலை தம்பதியர் இருவரும் முதலில் தனித்தனியே படித்து பின்னர் இருவரும் இணைந்து படித்தல் நலம்” என்ற எழுத்தாளரின் வேண்டுகோளுடன் நானும் உடன்படுகிறேன்.

என்னை பொறுத்தவரை குறிப்பாக ஆண்கள் அவசியம் வாசிக்க வேண்டுமென்றே கருதுகிறேன். உடல் மனநல ஆலோசகரைச் சந்திக்க யாரும் முனைவதில்லை என்பதே நமது சமூகத்தின் சாபக்கேடே… இல்லறத்தின் மேன்மையை உணர பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள சிறிதளவேனும் புதிய வாசலை ஆண்களின் மனதில் திறக்கும் இந்நூல் என நம்புகிறேன்.

டாக்டரின் பயிற்சி முகாமில் நடைபெறும் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி மெருகேற்றி இருக்கலாமோ (சிறிது அயர்ச்சியூட்டும் வண்ணம் வசன அமைப்பு) என்று எண்ணம் உண்டாகிறது. நாளும் மனைவியை உடற்தேவைக்கு மட்டுமே நாடும் கணவனுக்கு ஏற்படும் விபத்து மட்டுமே அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. தேவையற்ற திணிப்போ என்ற ஐயமும் மேலிட்டது. அனுதினமும் உடற்சுகம் நாடிய கணவனுக்கு வந்துள்ள துன்பநிலையை அறிந்து மனைவி உதவுவதாக கூறும் செய்தி சவுக்கடியே…



நீலப்படம் பார்க்கும் கணவனுக்கும் மனைவிக்குமான உரையாடல் மிக மிக இன்றியமையாத பகுதியாகும். சிறு வயது முதலே பாலியல் வன்கொடுமைக்கு இரையாகும் கதாபாத்திரத்தின் கதை பாலியல் விழிப்புணர்வாக உருமாறும் நிகழ்வுகள் கவனிக்கத்தக்கவை. அழகு தான் பிரச்சனையாக இருக்குமென்று அறிந்திருப்போம். “சேலை கட்டத் தெரியாது” என்பதெல்லாம் பிரச்சனையாகி விஸ்வரூபம் எடுக்கும் கதை மிக ரம்மியமானது. விலை மாதுவின் வலியை கூறிக் கொண்டே இல்லறத்தின் பால் ஆண்கள் திரும்ப அவள் கையாளும் உத்தியை கூறிய விதம் போற்றுதலுக்குரியது.

இங்ஙனம் இந்நாவல் குறித்து பலவற்றை கூறிக் கொண்டே இருக்கலாம். காமம் உடல் சார்ந்தது அல்ல; மனம் சார்ந்தது என்ற தெளிவு இருந்தாலும் சுய பரிசோதனை செய்து கொள்ள இந்நாவலைப் படிக்க முனையலாம். இந்நூலின் ஆசிரியர் கிருஷ்ண.வரதராஜன் அவர்களாக இருந்தாலும் செக்ஸாலிஸ்ட் டாக்டர் ஒருவரின் உண்மைப் பதிவுகளாக இருப்பதால் இதனை அனைவரும் அறிந்து கொள்ளுதல் நலமென்றே கருதுகிறேன்.

இல்லறத்தில் தடுமாறுபவர்களும் தடம் மாற யோசிப்பவர்களும் கட்டாயம் வாசிக்க முனையலாம். இல்லறத்தில் ஈடு இணையற்ற தம்பதிகளாக (made for each other) வாழ்ந்து வருபவர்களும் மேலும் தங்களது இல்லறத்தில் காதல் ரசம் பூத்துக் குலுங்க இந்நூலை வாசிக்க முனையலாம். கூட்டுக் குடும்ப வாழ்க்கையை தவறவிட்ட சமூகத்தில் தம்பதியரை வழிகாட்ட இதுபோன்ற நூல்கள் வெளிவருவது சமூகத்திற்கு நலம் பயக்குமென்றே கருதுகிறேன்.

மது போதையின் காரணமாக சீரழியும் இல்லற வாழ்க்கை குறித்த தெளிவும் இடம்பெற்றிருக்கலாம் என்றும் தோன்றியது. இல்லறத்தைப் பேணுவதில் ஆண்களுக்கே கூடுதல் பொறுப்புள்ளது என்பதை உணர்த்த இந்நூல் முயன்றுள்ளது என்பதே உண்மை. இங்கே பிரச்சனையே ஆண்கள் தானே என்பதே நிதர்சனம். ஆலோசனை மையத்திற்கு இந்நாவலில் செல்வது போல் எத்தனை கணவர்கள் செல்லத் துணிவார்கள் என்பது கேள்விக்குறியே.

இதுபோன்ற டாக்டர்களும் வழக்கறிஞர்களுமே சமூகத்திற்கு இன்றைய தேவையென கருதுகிறேன். டாக்டருக்கும் டாக்டரின் மனைவிக்கும் வழக்கறிஞருக்கும் எழுத்தாளருக்கும் மிக்க நன்றி. திருமண பரிசாக இந்நூலை வழங்க சிபாரிசு செய்கிறேன்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *