நூல் :  காடோடி நாவல்
ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : அடையாளம்
விலை : 270
பக்க :  340
புத்தகம் வாங்க இங்கு க்ளிக் செய்யவும்: thamizhbook.com

வெறும் முன்னூறு ரூபாயில் இன்பச்சுற்றுலா செல்ல வேண்டுமா?

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிக் கொண்டிருந்த காலம் அது. “மருத்துவமனைகளில் இடம் இல்லை. அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. இடுகாட்டில் இடம் இல்லாததால் சடலங்கள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன”. போன்ற அறிவிப்புகளே எங்கும் நிறைந்திருந்தது. போதாக்கு றைக்கு நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தினமும் ஒரு இறப்பு செய்தியை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பயமும் மனஉளைச்சலும் தொற்றிக் கொள்ள, அதிலிருந்து விடுபட நிறைய மறதியும் கொஞ்சம் அமைதியும் தேவைப்பட்டது. அவ்வளவு தான் போர்னியா தீவு என்னை வாரி அணைத்துக் கொண்டது. கடவுச் சீட்டு இல்லையென்றேன்; வேண்டாம் என்றது. இபாஸ் இல்லையென்றேன்; தேவையில்லை என்றது. பிறகு எதற்கு தாமதம்? கிளம்பலாமா?

ரசோங் குரங்கு
அதுதான் என் முதல் படகு பயணம். கினபத்தாங்கன் நதியின் நீண்ட படகு பயணத்தை தொடங்கும் முன், மிக நீண்ட சாலை பயணத்தையும் முடிக்க வேண்டியிருந்தது. கினபத்தாங்கனிலிருந்து வடக்கு நோக்கி திரும்பி லோக்கன் ஆற்றின் மீது மிதக்க தொடங்கியிருந்தது படகு. இருபுறமும் மரங்களடர்ந்த பொள்ளாச்சி – ஆனைமலை சாலையில் பயணம் செய்யும் போதெல்லாம் அதன் எழிலில் மயங்கி வண்டியில் ஊர்ந்து செல்லும் எனக்கு லோக்கன் இன்ப அதிர்ச்சி தந்தது. ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த மரங்கள் லோக்கனை வெயிலுக்கு காட்டாமல் வளர்த்துக் கொண்டிருந்தன. லோக்கனின் வழிப்பாதையை தவிர எங்கு திரும்பினும் பசுமை. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பறவை ஆர்வாலர்கள் வந்தால் கூட எந்த புள்ளினத்தின் ஒலி இது என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு கலவையான ஒலிகளால் கானகம் நிரம்பியிருந்தது. ஆனால் லோக்கனோ அதன் ஆழத்தில் கொஞ்சி விளையாடும் மீன்களை கண்ணாடிபோல் தெளிவாக காட்டி அமைதியாக சென்று கொண்டிருந்தது. லோக்கனின் தாகம் தீர்க்கும் பல ஓடைகளில் ஒன்று இடப்பக்கமாக மேற்கிலிருந்து ஓடிவந்து கலந்தது. இதற்கு மேல் படகு செல்லாது. இனி காணப்போவதெல்லாம் காடு காடு காடு மட்டும் தான். கொரோனாவினால் ஏற்பட்ட வலி கரைந்து கொண்டிருந்த தருணம் அது.

தனியாக தான் போனேன். ஆனால் அங்கு சென்றதும் முதலில் துவான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். பின் ஒமர் வந்தார். யுவன்னா, இல்லை அன்னா வந்தாள். ஜோஸ்சும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். காடுகள் ஒளித்து வைத்திருந்த ஆர்மோனியப் பெட்டியை கண்டெடுக்க அவனே கற்றுக் கொடுத்தான். ஜோஸ்ஸின் சொந்தக்காரி ரலாவின் பாடல்களுக்கு இசை கருவிகளே தேவையில்லை. இவர்களுடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் சிலர். அப்புறம் பிலியவ். ‘எனக்கு வண்டியில் பயணம் செய்ய தெரியாது’ எனக் கூறி என் பேரன்புகளை பிடுங்கி சென்றவர். படேல் சிலையருகே பாதங்களுக்கு பக்கத்தில் மோடி நிற்பது போன்ற காட்சியில் மூதாய் மரத்தையும் என்னையும் பொருத்திக் கொண்டிருந்த வேளையில் ஒமர் சொன்னார், உலகில் இவ்வளவு உயரமான மரவகைகள் அமேசான், ஆப்பிரிக்க காடுகளில் கூட கிடையாது. என்னையும் அறியாமல் என் தலை அதை ஆமோதித்து அசைந்து கொண்டிருந்தது. எங்களுடன் வா! நீ காண வேண்டியது நிறைய உள்ளது என்று ஜோஸ் சொல்லி முடிப்பதற்குள் நான் தயாரான வேகத்தைப் பார்த்து அனைவரும் வெடித்து சிரித்தனர்.

ஐம்பூதங்களில் மூன்றிற்கு காடு சம்பளத்துடன் கூடிய கால வரையறையற்ற விடுப்பு கொடுத்து விட்டது போலும். கண்ணுலையே படல. நிஜமாகத்தான் சொல்றேன். பல நூற்றாண்டுகளாய் சேமித்த இலை மேல்மண் மக்குகளால் சில அடி உயரம் வரை மூடப்பட்டிருந்த நிலம். ஓங்கியுயர்ந்து அடர்ந்து படர்ந்து வளர்ந்த மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம். சூரிய ஒளி புகமுடியாததனால் வெப்பத்திற்கு (நெருப்பு) தடை. ஆனால் வளிக்கும் (காற்று), அதனை குளிரூட்டும் சிற்றோடைகளுக்கும், குளங்களுக்கு (நீர்) மட்டும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்டும் வேலை. இப்படி அடர் வனத்தின் குளிர்ந்த கவிகையில் மூன்று நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன்.

நான் பார்த்ததையெல்லாம் சொன்னால் நீங்கள் எல்லாரும் உடனே கிளம்பி அங்க போயிருவீங்க…கொஞ்சம் பயண களைப்பில் இருந்தாலும் உங்களுக்காக சில விஷயங்களை மட்டும் சொல்றேன்….. நம்ம ஊருல இருக்குற குரங்குகளெல்லாம் ஒரு மாறி மரப்பட்டை கலர்ல தான இருக்கும். இங்க அடர் செம்மஞ்சள் கலர்ல ஒரு குரங்கை பாத்தேன். அதுக்கு மூக்கு வேற தும்பிக்கை மாதிரி இருக்கு. ஒமரிடம் கேட்டேன், ரசோங் குரங்குகளாம். இங்கு தவிர உலகில் வேறு எங்கும் இல்லையாம்.

காட்டின் தாவரவியலையும், விலங்கியலையும் கரைத்து குடித்திருந்த ஒமர்தான் அந்த மூன்று நாட்களுக்கும் என் ஆசான். அதைப் போலவே உலகிலேயே மிகச் சிறிய குளம்புள்ள பாலூட்டியான கூரன் பன்றி, குள்ள யானை, வேதிவால் குருவி, இருவாசி பறவைகள், லயாங் லயாங் குருவி, பறக்கும் பாம்பு, பறக்கும் தவளை, பறக்கும் அணில், உராங் ஊத்தான், ஐந்தடி உயரமுள்ள தேன்கூடு, ஓரடி நீளமுள்ள குச்சிப் பூச்சி, பல அடி நீளமுள்ள மலைப்பாம்பு, டைனோசர் காலத்து தொன்மையான துபையா, தேன் குடிக்கும் ஒளவால், பெர்பாஞ்சாட் எனும் தொடை பருமனுள்ள காட்டு கொடி, பகட்டு கோழி, தாடி பன்றி, தெம்படாவ், பன்றிவால் குரங்கு, சாம்பல் குரங்கு, கலோய் மீன், சும்பித்தான்……. ஆமாங்க …இந்த பட்டியல் சற்று நீளமானது தான்..

காட்டுன்னா பல்வேறு மரங்களும் உயிரினங்களும் இருப்பது இயல்பு தானேனு நீங்க நினைக்கிறது கேக்குது. ஆனா மற்ற காடுகளில் இருப்பது போன்று அல்ல. நான் வாசித்த பட்டியலில் பெரும்பாலானவை ஓரிடவாழ்வி. இந்த காட்டை தவிர உலகில் வேறு எங்கேயும் இவற்றை காண முடியாது. இந்த காட்டை பற்றிய மேலும் ஒரு சுவையான உண்மையை ஒமர் என்னிடம் கூறினார். நான் உங்களிடம் கூறுகிறேன். குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை நாம் அறிவோம். அந்த குரங்கு இனத்திற்கே முன்னோடியாக உள்ள விலங்குகளை பிரைமேட் என்று கூறுவார்களாம். அது உலகெங்கிலும் பரவி இருந்தாலும் சுமார் பத்து பிரைமேட்கள் ஒன்றாக இந்த காட்டில் உள்ளதாம். ஆம். நம் பத்து முப்பாட்டனையும் நான் பார்த்து விட்டேன். அதில் ஒன்று தான் நாற்பத்தினான்கு விலங்கு. அந்த விலங்கில் ஆந்தையின் கண்கள், வௌவாளின் காதுகள், குரங்கின் வால், தவளையின் கால் என 44 வகையான விலங்குகளின் உறுப்புகள் இருந்தது. நான் மெரண்டுட்டேன். இறுதியாக,கதிரவன் கரையும் நேரத்தில், உலகிலேயே வௌவால்கள் அதிகம் வசிக்கும் கோமதோங் குகையிலிருந்து பல ஆயிரம் வௌவால்கள் வெளியேறிய காட்சியும், கோடான கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்திருந்த காட்சியும் இந்த பயணத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது…….

உங்களுக்கும் அங்க போகணும்னு தோணுதா? இந்த பெருந்தொற்று காலத்திலும் இது சாத்தியமாகுமானு சந்தேகமா இருக்கா? அதுவும் வெறும் முன்னூறு ரூபாயில்.சாத்தியம்தான் நக்கீரனின் காடோடி நாவலை வாசித்தால். ஆமாங்க. இவ்வளவு நேரமும் நான் படித்த காடோடியில் உள்ள போர்னியா தீவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தேனே தவிர நான் சென்று வந்ததை பற்றி அல்ல. கதையை சொல்லும் துவான், என் கையை பிடித்துக் கொண்டு கூட்டிப்போகும் உணர்வை அவர் எழுத்தில் தோய்த்திருந்தார் நக்கீரன்.

இக்கதை போர்னியாவைப் பற்றியது அல்ல. அங்கு வாழும் வாலில்லாக் குரங்குகள் பற்றியும் அல்ல. அங்குள்ள குளங்களிலும் அருவிகளையும் வளர்க்கும் ஓடைகளை பற்றியும் அல்ல. காடுகளை போற்றி பாதுகாத்து வாழும் திடோங், முருட் இனங்களை பற்றியதும் அல்ல. காட்டிலுள்ள மரங்களிடம் உரையாடும் பிலியவ் பற்றியும் அல்ல. மரங்களினுள் வாழும் கொற்றவை பற்றியும் அல்ல. அந்த கொற்றவையை கொல்ல வரும் வெட்டுமர கம்பனியை பற்றியதும் அல்ல. தன்னை வாழ வைக்கும் காட்டின் அழிவிற்காக கவலைப்படும் பகட்டு கோழியை பற்றியதும் அல்ல. மொத்த காடும் அழிந்து போர்க்களத்தின் இறுதி காட்சியை நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், மூதாய் மரத்தின் வெட்டப்பட்ட அடிமரத்தின் அருகில் சென்று, உரிந்த பட்டையை தடவி வலிக்கிறதா? என கேட்ட துவானைப் பற்றியும் அல்ல. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் பற்றியது. குரங்கின் மூளையை உயிருடன் சுவைக்கும் இரக்கமில்லாதவர்கள் பற்றியது. எதற்கு வாங்குகிறோமென தெரியாமலே பொருட்களை வாங்கி குவிக்கும் பேராசைக்காரர்கள் பற்றியது. ஆம் நம்மை பற்றியது. என்னைப் பற்றியது.

சூரியா சுந்தரராஜன்
9943763750

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *