காடோடி – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : காடோடி
ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : காடோடி பதிப்பகம்
விலை: ரூ. 342
தொடர்புக்கு : 44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற கிளிக் செய்யவும் : thamizhbooks.com
காடோடி: பன்னாட்டு வணிக அரசியல் காடுகளைச் சீரழிப்பதை வலி நிறைந்த குரலில் சொல்லிச் செல்லும் நாவல்.
தான் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் உயரதிகாரியின் மனநிலையைக் கதைசொல்லி படம்பிடித்துக் காட்டுவதில் நாவல் தொடங்குகிறது. இந்தோனேசியாவின் போர்னியோ காட்டில் நன்கு பருத்து உயர்ந்த நெடுமரத்தை அண்ணாந்து பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரி திரு.குவான் தன் இரு கைகளையும் அகல விரிக்கிறார். காதலியை அணைப்பது போல மரத்தைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார். மர வணிகரான அந்த மனிதருக்குத்தான் அந்த மரத்தின் மீது என்னவொரு காதல்! ”என்னவொரு அருமையான மரம்!” என வியக்கும் அவர் அந்த மரத்தை மீண்டுமொருமுறை கண்களால் அளவிடுகிறார். “எப்படியும் ஐயாயிரம் டாலருக்குப் போகும்”. என்கிறார் அப்படியானால் மரத்தின் மீதான அவரது காதல் வெறும் டாலர் காதல்தானா? நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குவானைப் பொறுத்தவரை மரம் என்றால் அது இலைகள் அல்ல; பூக்கள் அல்ல; காய்கள் அல்ல; கனிகளும் அல்ல; ஏன்; மரமே அல்ல. மரம் என்றால் அது டாலர், டாலர், டாலர் மட்டுமே” என்பதை அறிய முடிகிறது. மூன்று பாகங்களில் முன்னூறு பக்கங்களாக விரியும் நாவலைப் படிக்கும்போது இயற்கையை அழித்து லாபம் தேடும் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களின் வெறியைக்கண்டு மனம் பதறுகிறது. காட்டின் அழிவைக்கண்டு கண் கலங்குகிறது.

அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் காட்டைப் பல தொகுதிகளாகக் கூறுபோட்டு மரங்களை வெட்டி எடுக்கின்றன. நாள்தோறும் மரங்களை அறுக்கும் சங்கிலி வாட்களின் ஓசை காட்டில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மரங்கள் முறிந்து வீழும்போது அதன் உச்சியில் கூடு கட்டிய பறவைகளும் அழிகின்றன. மரத்தின் மீது உயிர்வாழும் மற்ற விலங்கினங்களும் அழிகின்றன. அழிவின் ஓசை காடெங்கும் எதிரொலிக்கிறது. இந்தோனேசியா தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளிலிருந்து ஏழை உழைப்பாளிகள் அடிமைகளாக அங்கே அழைத்து வரப்படுகிறார்கள். அற்பக் கூலிக்கு மரங்களை வெட்டி, டிராக்டர்களில் இழுத்துச் சென்று துறைமுகங்களில் நிற்கும் கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள். அவர்களுக்குத் தெரியாது –தாங்கள் வெட்டிச் சாய்க்கும் மரங்களின் விலை பல மில்லியன் டாலர்கள் என்று. ஆபத்தான இவ்வேலையில் ஈடுபடும் புர்கான் எனும் தொழிலாளி மரத்தின் அடியில் விழுந்து நசுங்கிச் சாய்கிறான். வேலை நிமித்தம் உயிரிழந்த உழைப்பாளிக்கு ஈவு இரக்கமற்ற நிறுவனம் இழப்பீடு ஏதும் வழங்க முன்வரவில்லை.
கவிகையின் அழிவுக்குச் சாட்சியமாக கதைசொல்லியுடன் ஒமர், ஜோஸ்னா, ரலா, பிலியவ், யொகன்னா போன்ற கதாபாத்திரங்களும் இந்த நாவலில் நடமாடுகிறார்கள். நெஞ்சைப் பிழியும் காடழிப்புக் காட்சிகளுக்கு இடையில், ரலா என்ற தொல்குடி பெண்ணிடம் கதைசொல்லி தன்னுடைய மனதைப் பறிகொடுப்பதாக நாவலில் இடம் பெறும் காதல் கதை வாசகர்களைச் சற்றே இளைப்பாறச் செய்கிறது.
பிலியவ் கதாபாத்திரம் இந்த நாவலின் உன்னதமான படைப்பு. காட்டின் தொல்குடி முதியவரான பிலியவ் பாத்திரத்தின் மூலம் இயற்கையை நேசிக்கின்ற, பிரதிபலன் பாராமல் மனிதர்களை நேசிக்கின்ற, தான்நேசிக்கும் காட்டை அழிப்பவர்களிடம்கூட அன்பு பாராட்டுகின்ற அற்புதமான மனிதரை நக்கீரன் படைத்துள்ளார். அந்தப் பாத்திரத்தின் மூலம் காடு பற்றிய பல்வேறு கமுக்கங்களை நமக்குக் காட்சிப்படுத்தி வைக்கிறார்.
தொல்குடிகளும், காடும் வெவ்வேறு அல்ல. மரமும் அதன் பட்டையும் போல் அவர்கள் இருவரும் ஒன்றோடு ஒன்றாய் இணைந்தவர்கள். ஒருவருக்கொருவர் அவர்கள் பேசிக் கொள்கின்றனர். கதைசொல்லியும், மரம்வெட்டு முகாமின் பத்தாம் தொகுதி அதிகாரி ஒமரும் வேலை பார்க்கும் இடத்தில்தான் அக்காட்டின் மூதாய் மரம் வானுயர்ந்து வளர்ந்து நிற்கிறது. தனக்கு வரவிருக்கும் அழிவைத் தடுக்கச் சொல்லி பிலியவ்விடம் மூதாய் மரம் கேட்டுக்கொள்கிறது. பிலியவ் மூதாய் மரத்தை வெட்ட வேண்டாம் என்று ஒமரிடம் சொல்கிறார். ஒமரும் நிர்வாகத்திடம் சொல்லிப் பார்க்கிறார். ஆனால் நிர்வாகத்தின் மேலிடம் அதைக் கேட்கத் தயாரில்லை. மரம் வெட்டப்படுகிறது. காட்டின் ஆன்மா உயிரிழக்கிறது.
போர்னியோவின் மழைக்காட்டில் கதைசொல்லி காணும் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவை. அவருக்கு மனித இனத்தின் மூதாதை விலங்குகளான பத்து பிரைமேட்டுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது. குபுங் எனப்படும் சறுக்கிகளைப் பார்க்கிறார். அது வௌவாலுக்கும் முந்தைய பறக்கும் பாலூட்டி. அழிவின் விளிம்பில் இருக்கும் இவ்வதிசய பிராணிக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது என்பதைக் கதைசொல்லி அறிகிறார். வெட்டப்பட்ட மூதாய் மரம் நின்றிருந்த இடத்துக்குச் செல்கிறார். வெட்டப்பட்டு எஞ்சி நிற்கும் அந்த மாபெரும் மரத்தின் அடிப்பரப்பின் குறுக்குவெட்டுத் தோற்றமே மிக அகன்று இருக்கிறது. இரும்பு வடக்கயிறு போட்டு இழுத்ததில் அதன் தோல் உரிந்து புண்ணாகியுள்ளது. ’வலிக்கிறதா’? என்று அவருக்கு அந்த மரத்திடம் கேட்கத் தோன்றுகிறது. அடுக்கடுக்கான அதன் உள் வளையங்களை எண்ணிப் பார்க்கிறார். எத்தனை ஆண்டுகள்? அதனை எண்ணிமாளவில்லை.” இத்தனை ஆண்டுகளையும் உன்னுள் அடுக்கி உன் ஆயுளாகக் கொண்டிருந்த நீ, இக்கடைசி வெளி வளையக் காலத்தில் எங்களிடம் வந்துசேர்ந்து இறுதியாக உன் ஆயுளை இழந்துவிட்டாய். உன் கடைசி வெளிர் நிற வளையத்தைத் தொடுகிறேன். குற்ற உணர்வில் கூசுகிறேன். மூதாய் மரமே! மன்னிப்புக் கோருகிறேன். உன்னுடைய இலைகளையும், கிளைகளையும் அறிந்தே வெட்டினோம். உன்னையும் அறிந்தே வீழ்த்தினோம். மன்னிப்புக் கோருகிறேன்! மூதாயே! மன்னிப்புக் கோருகிறேன்!” என்று கதறி அழுதவாறு வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பரப்பின் மீது படுக்கிறார். எங்கிருந்தோ வந்த பிலியவ்வும் அவரருகே படுத்துக் கொள்கிறார். மூதாய் மரத்தின் அழிவை காட்டின் அழிவின் முற்றுப்புள்ளியாகவே பிலியவ் கருதுகிறார்.
காடுகள் அழிவதும், செம்பனைத் தோட்டங்கள் அங்கே முளைப்பதும், இந்தியா போன்ற நாடுகளில் பாமாயில் இறக்குமதி அதிகரிப்பதும் தானாக நடப்பதில்லை. அவை அனைத்துக்கும் கார்ப்பரேட்டுகளின் வணிக ஈடுபாடுதான் அடிப்படை. அதுவே ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் காடுகள் அழிய, சுற்றுச் சூழல் சீரழியக் காரணம் என்பதை காடோடி நாவல் நம் கண்முன் நிறுத்துகிறது. நிலம், மலை, காடு, கடல், நீர்நிலைகள் என்று அனைத்து இயற்கை வளங்களும் மனிதனின் பேராசையால் சீரழிகின்றன.
போர்னியோ காட்டின் அழிப்பை பேட்ரிக் ரூக்சல் இயக்கியுள்ள ’க்ரீன்’ ஆவணப்படம் உணர்ச்சி மிகு காட்சிகள் வழிச் சித்தரிக்கிறது. ’மரப்பாச்சி’, ’கழுதைப்புலி: ஒரு கானகத் தோட்டி’ போன்ற படைப்புகளில் கோவை சதாசிவம் காடுகளை, கானுயிர்களைப் பண்பாட்டு விழுமியங்களுடன் உணரச் செய்கிறார். ப.ஜெகநாதனும், ஆர்.பானுமதியும் இணைந்து எழுதியுள்ள ‘தட்டான்கள், ஊசித்தட்டான்கள்; ஓர் அறிமுகக் கையேடு’ எனும் நூல் சிறந்த சூழலியல் குறித்த கையேடாகத் திகழ்கிறது. தமிழில் இது போன்ற நாவல்கள், ஆவணப்படங்கள், பிற படைப்புகள் இப்பிரச்சனையைப் பேசுவதன் மூலம் சூழல் குறித்த மனித குலத்தின் அக்கறை தென்படுகிறது. அந்த அக்கறை சற்று ஆறுதலையும் தருகிறது. காடோடி போன்ற சீரிய படைப்புகளின் வழி சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நக்கீரனை வாழ்த்திடுவோம்.
எழுதியவர் :
பேரா.பெ.விஜயகுமார்
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் ‘thamizhbook.com’ இணையதளம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஒரே மூச்சில் படித்து முடித்த நூல் காடோடி. இந்நாவலின் ஆசிரியர் திரு.நக்கீரன் அவர்களை இருகரம் கூப்பி கண்ணீருடன் கும்பிடும் தோன்றுகிறது. மனிதர்கள் இவ்வளவு கெட்டவர்களா என கேள்வி கேட்கத் தூண்டும் நூல். இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தம் இல்லை. நீண்ட நெடிய பரிணாம வளர்ச்சியில் மனிதன் சற்று நேரம் முன்பு பிறந்த அரக்கக் குழந்தை. மாறு; இல்லாவிட்டால் சாவு உறுதி என அறைந்து சொல்லுகிறது இந்நாவல்.