இந்தக் கைபேசியை
பிடித்திருக்கும்போது
ஜிஎஸ்டியைப் போல் எகிறிக்கொண்டிருக்கிறது
என் பதற்றம்
ஆனால் இன்னும் நீ
அழைத்த பாடில்லை
தொடு திரையை
தொடுவதற்கும் முன்பே
விரல்களை நிறுத்தி விடுகிறது
இந்த மனது
இந்த நாட்டில் எல்லாமே
அரசியலாகப் போய்விட்டது
ஆளும் கட்சிகளும்
எதிர்க்கட்சிகளும்
மலிவாக
அரசியல் செய்வதை தவிர்த்து
இப்போது ஆளுநர்களும்
அரசியல் செய்ய
ஆரம்பித்து விட்டார்கள்
இதில் நம் காதல் மட்டும்
அரசியல் செய்யாமல்
போய் விடுமா என்ன ?
செம்புலப் பெயர் நீர் போல் இருந்த நீ அற்றைத் திங்கள் ஆகிவிட்டாய்
அன்புடை நெஞ்சம் கலந்திருந்த நானோ
யாரோகியரோ என்று ஆகிவிட்டேன்
தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றுவது போல்
நம் காதலின் அலைவரிசைகளையும்
மாற்றிக் கொண்டிருக்கிறான்
யாரோ ஒருவன்
எப்படி காதலிக்க வேண்டுமென்று
நாம் கேட்காத போதும்
அதை சமைப்பது எப்படியென்று
ஆலோசனைகளை வாரி வாரி
வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தொழில் நுட்ப வல்லுநர்கள்
இந்த தேசத்தில்
நம் ரசனைகளை
நாமே தீர்மானிக்க முடிவதில்லை
நம் நேசத்தை
நாமே உறுதிப்படுத்த
முடிவதில்லை
நம் கடவுள்களை கூட
நாமே வணங்க முடிவதில்லை
நம் காதலை மட்டும்
நாமே தீர்மானிக்க முடியுமென்று
அசட்டுத் தனமாக
நீ நம்பலாமா?
கவிதை 2
என் கனவிற்குள் அத்து மீறி நுழைந்து
என்னிடம் கிசு கிசுத்தது
தொங்கு வால் நட்சத்திரம்
‘’என்னை வந்து தனிமையில் பாரேன் ’’
விழிப்புற்று மொட்டை மாடி வந்து நோக்கினேன்
எனக்காகவே காத்துக்கொண்டிருந்தது
என்னிடம் வந்து பிரியம் வழிய
பேச ஆரம்பித்தது
நட்சத்திரங்களின் மொழி தெரிந்தவன் என்பதால்
உன்னிடம் மட்டுமே மறைக்காமல் சொல்கிறேன் கேள்
ஜென்ம ஜென்மமாய் விழித்திருக்கும் சாபம் பெற்றவர்கள்
இருளின் மடியில் தலைசாய்த்திருப்பது ஏன் தெரியுமா?
சாபங்களை தீர்த்து விட அல்ல
வரமாக்கிவிடவே
நான் குழம்பி நிற்க
புரியவில்லையா உனக்குப்புரியவேயில்லையா ?
என்று கேட்டு விட்டு தொடர்ந்தது
நட்சத்திரங்கள் மனிதர்களாகப் பிறக்கிறார்கள்
அதுவும் ஆண்களாக பெண்களாக கள்ளமற்ற குழந்தைகளாக
தாங்கள்நட்சத்திரங்களாக வாழ்ந்த காலத்தில்
நேசித்தவர்களின் ஞாபகம் அற்றவர்களாக
தூங்குவதற்கு அலைகிறார்கள்
அணுக்களில் நட்சத்திரங்களை
சுமந்து கொண்டு
நீயும் நட்சத்திரக் கனவுகள் கண்டு கொண்டிருப்பவன்தானே?
நான் மௌனிக்க
அப்படியென்றால் நீயும் ஒரு ஆதி நட்சத்திரமாய் இருந்து
மனிதனாக சபிக்கப்பட்டவன் தானே என்று உரத்துக்கேட்டது
நான் திகிலடைந்து போய் நிற்க
இரவு விடைபெறும் முன்
இருளை எங்கே ஒளித்துவைத்துவிட்டுச்செல்கிறது
சொல் பார்க்கலாம்
வானத்திலா பூமியிலா இல்லவே இல்லை
இடைவெளி விட்டு
மனிதர்கள் மனத்தில் தான் மனதில் தான்
என்று கதறி தேம்பியது
ஒரு நிமிடத்தின்
ஆயிரத்தில் ஒரு பங்கில்
ஒரு கண்ணீர் துளியில்
நான் சூல் கொண்டு
மீண்டும் கண்விழிக்க
நட்சத்திரத்தை காணவில்லை
என்னையும் தான்
கவிதை 3
நாம் மரங்களாய் இருந்தால் என்ன?
சொற்கள் தேடாமல்
வெள்ளை காகிதம் நாடாமல்
காற்றில் கவிதையை எழுதிக்கொண்டு
இலை நடனமிட்டபடி
பச்சையங்களில்
கசியும் நிலவை தேக்கி
நட்சத்திரங்களுக்கு
ஜாதகம் கணித்து
நாம் மரங்களாய் இருந்தாலென்ன?
துளித் துளியாய்
நம் உடலில் பாய்ந்து சிலிர்த்திடும்
இந்த ஜென்மத்து பெளர்ணமிகளை கணக்கிட்டுக் கொண்டும்
நுரைத்துப்பொங்கி வழியும்
நினைவுப் பிசினை
மரப் பட்டைகளாய் மாற்றிக் கொண்டும்
இலைச்சருகளால் வாழ்க்கையை ஆசீர்வதித்திக் கொண்டும்
நாம் மரங்களாய் தான்இருந்தாலென்ன?