கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்) | Kairathi 377

எல்லோருக்குமான உலகில் எதன் பொருட்டாவது எல்லோரையும் எடை போடும் பழக்கம் மானுடப் பிறவியில் மட்டுமே மாறாமல் நீள்கிறது.

அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு, மதம், ஜாதி, நிறம், பணம், மொழி, பாலினம் என பல மாறுவேடம் அணிகிறது.

நவீனம் பெருகியும் நாகரிகம் மாறியும் உடலில் ஏற்படும் உயிரியல் மாற்றங்களை மானுடம் ஏன் இன்னுமும் உணர மறுக்கிறது எனும் அடிப்படைக் கேள்வியே
முன்வைக்கிறது கைரதி 377.

கைரதி என்னும் சொல்லாடல் மாறிய பாலினர்களுக்கான நிரந்தர நம்பிக்கையாகவே இத்தொகுப்பில் இடம்பெறுகிறது.

“ஓலையாக்கா லாக்கப், அதிகாரமிகுந்த காவல்துறை அத்து மீறும் போது தெய்வமாகும் ஓர் கைரதியின் கதை.

முழுக்க வலிமிகுந்த தொகுப்பென்பதை முதல் கதையிலேயே எழுத்தாளர் அடையாளப்படுத்துகிறார். அடுத்தடுத்த கதைகளுக்கு ரணமோடு நம்மை நகர்த்த
வாசகர்களை தயார்படுத்துகிறார்.

இதரர்கள் இல்லத்தில் இடம் கொடுக்க மறுக்கும் மானுடக் கூட்டம், விண்ணப்ப படிவங்களிலும் மூன்றாம் பாலினர் மீதான வெறுப்பை விதைப்பதையும், அதை எதிர்த்து கேள்வி எழுப்பும் சட்ட ரீதியான போராட்டங்களையும் முன்னெடுக்கும் கதை.

சுயநலத்திற்காக அழைத்து வரப்படும் கைரதி சமையலில் கெட்டிக்காரி.

மாதவிடாய் சார்ந்த மூன்றாம் பாலின ஏக்கங்கள், நாப்கின் நுகர காத்திருக்கும் நாசிகள் என சமூகத்தில் பேச வேண்டிய, விழிப்புணர்வு தரக்கூடிய தரமான படைப்பு.

பூமிக்கு இன்னும் தேவை நிறைய பூர்விகாக்கள்.

தொகுப்பில் ஆறுதலான கதை நஸ்ரியா ஒரு வேசக்காரி.

இஸ்லாமிய பின்னணியில் வாழ்ந்த பெண் ஆணாக வாழ நினைத்து ஆணாகவே வாழ்ந்த கதை.

உறுப்புகள் சார்ந்த உளவியல் எண்ணங்களை நுட்பமாக கையாண்ட கதை.

மாத்தாராணி கிளினிக் பெற்றவர்களால் கைவிடப்படும் கைரதி மருத்துவராக மாறி நிற்கும் பெரும் நம்பிக்கை அளிக்கும் கதை.

துடி துடிக்க வைத்த எழுத்தாளரின் விரல்கள் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது இக்கதையில்.

மூன்றாம் பாலினர்களுக்கான தனி கழிவறை இல்லா சோகமே அடையாளங்களின் அவஸ்தை.

இயற்கை உபாதைகளைக் கழிக்க மூன்றாம் பாலினம் படும் பாடு பெரும்பாடு.

பொது புத்தியோடும் வன்மத்தோடும் திரியும் மிருகக் கூட்டங்கள் இதைப் பற்றி சிந்திக்கப் போவதுமில்லை.

அரசாங்கமும் இதை ஒட்டிய தீர்க்கமான திட்டத்தை வகுக்கப் போவதுமில்லை.

பாதுகாப்பிற்காக கொண்டு வந்த சட்டம், அதிகாரத்தின் பெயரில் பழி சுமத்துவதற்காகப் பயன்படுவதையும், மரணத்திற்கும் மேலான கொடுமைகளை மூன்றாம் பாலினம் எதிர்கொள்வதையும், சமூகத்தில் தப்பிக்க வழியின்றி பலியாடு ஆவதையும் உள்ளபடியே பதிவு செய்கிறது 377 ஆம் பிரிவின் கீழ் கைரதி.

தொகுப்பில் எனை வெகுவாக பாதித்த கதை ஜாட்ளா. உதவித்தொகைக்காக சான்றிதழ் வாங்க செல்லும் கைரதி, மனிதமற்ற பிணங்களால்
நொந்து போகும் அழுத்தமான கதை.

அருவருப்பாகவே பார்த்து வாழும் அறிவற்றவர்களுக்குள் இருக்கும் அசிங்கமான எதிர்பார்ப்பை வெளிக்கொணர்கிறது ஜாட்ளா.

பரபரப்பான எழுத்து பதபதக்க வைக்கும் நிகழ்வுகள் இழப்புகளை சந்திக்கும் இனத்திற்கான நியாயம், மனிதம் அடங்கிய பார்வை, பொதுப்புத்தியை எதிர்த்த கேள்விகள் என ஒட்டுமொத்த மக்களுக்கான அறம் சார்ந்த படைப்பு கைரதி 377.

எண்ணற்ற தகவல்களோடு, நம் சீரற்ற சிந்தனைகளோடு உரையாடல் நிகழ்த்தும் படியான, மூன்றாம் பாலினம் சார்ந்த உளவியல் எண்ணங்களை வெளிப்படையாகப் பேசும் தரமான தொகுப்பு.

 

நூலின் தகவல்கள் 

நூல் : கைரதி377

நூலாசிரியர் : மு. ஆனந்தன் 

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ.120

நூலினைப் பெற : 44 2433 2924

 

எழுதியவர் 

க. மணிமாறன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *