கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை
“நாங்கள் எதுக்குய்யா சாகணும் உழைக்கப் பிறந்தவர்கள் நாங்கள்”
பொது நன்மைக்காக பாடுபடுவதன் மூலம் தங்களை சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது காரல் மார்க்ஸ்…..
இப்படிப்பட்ட அற்புத வரிகளோடு,தோழர் கே.சாமுவேல்ராஜ் அணிந்துரையோடு தொடங்குகிறது இந்த நூல்.
பசித்த வயிறுகளோடும், பாளம் பாளமாய் வெடித்த கால்களோடும், உருக்கு போன்ற நெஞ்சுறுதியோடும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் இந்த வரலாற்று நூல் .
தேச விடுதலைக்காக மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிற கம்யூனிஸ்ட் இயக்கம் தான் உண்மையான தேசப்பற்றுள்ள இயக்கம் ஆகும்.
தோழர்கள் பி. இராமமூர்த்தி எம்வி. சுந்தரம், ஜீவானந்தம், ஐ மாயாண்டி பாரதி, கே எஸ் பார்த்தசாரதி, ஏ.பாலசுப்பிரமணியன், எம்.ஆர்.வெங்கட்ராமன், கல்யாண சுந்தரம், சீனிவாச ராவ், உமாநாத் இது போன்ற முதுபெரும் தலைவர்களோடு போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்து போராடியவர் தான் தோழர் எஸ்.பெரியசாமி.
கடைகோடி கிராமத்தில், ஏழை கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்து மாநில அரசையே எதிர்த்து படை நடத்திய தளபதியாக, தமிழக தொழிற்சங்க வரலாற்றில் நீங்காத முத்திரை பதித்தவர், வர்க்க போராளி தோழர் பெரியசாமி ஆவார்.
தோழர் பெரியசாமியின் எழுச்சிமிக்க போராட்டங்களும், தியாகமும் தான் அடுத்தடுத்த தலைமுறைக்கு உறுதியையும் நம்பிக்கையையும் வர்க்க உணர்வையும் ஊட்டுபவை.
மகாத்மா காந்தியின் பக்தராக இருந்த தோழர் பெரியசாமி தன்னுடைய தியாகம் மிக்க போராட்டங்களின் மூலம் கம்யூனிஸ்ட் ஆக பரிணமித்தார் என்பது வரலாறு. கைத்தறி நெசவாளர்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டபோது ராமநாதபுரம் சதிவழக்கில் கைதாகி 42 மாதங்கள் (3 – 1/2 ஆண்டுகள்) சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் வர்க்க போராளி பெரியசாமி.
கம்யூனிசம் என்பது வாழ்வியல் நெறிமுறை சாதி, மதம், இனம், மொழி கடந்து பாட்டாளிகளை ஒன்று சேர்க்கும் என்ற வழிமுறைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தோழர் பெரியசாமி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தன்னுடைய 16 வயதில் இருந்து பொது வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார் பெரியசாமி.
துவக்கத்தில் விடுதலைப் போராட்டத்திலும் பின்னர் விவசாயிகளுக்கான போராட்டத்திலும் தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கான போராட்டத்திற்கும் தலைமை தாங்கி வழி நடத்தியவர்.
1952 ஆம் ஆண்டு கடும் நெருக்கடியை சந்தித்தது கைத்தறி தொழில். கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் கடும் பசியால் பாதிக்கப்பட்டு மிகவும் நெருக்கடி உள்ளாக்கப்பட்டார்கள்.
அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித முயற்சியும் அரசு மேற்கொள்ளவில்லை. சகத் தோழர்களுடன் திட்டமிட்டு சென்னை நோக்கி நடைப்பயணம் செல்ல முடிவு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 103 தொழிலாளர்களுடன் தொடங்கியது இந்த போராட்டப் பயணம் . பட்டினி பட்டாளத்தில் வருபவர்கள் ஒழுங்கு கட்டுப்பாடுடன் வரவேண்டும் காலில் செருப்பு அணியக்கூடாது குடை பிடிக்கக் கூடாது எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டது இந்த பயணத்தில் தொடர்ந்து வருபவர்கள் வெற்றியுடன் தான் திரும்ப வேண்டும் என்ற முழு நம்பிக்கையுடன் போராட்ட பயணத்தை 1952 அக்டோபர் 25 இல் துவங்கினார்கள்.
இப்பயணமானது டி. கல்லுப்பட்டி திரும்பலாம் திருப்பரங்குன்றம் மதுரை நகர் சின்னாளபட்டி திண்டுக்கல் வடமதுரை மணப்பாறை திருச்சி உறையூர் தஞ்சாவூர் கும்பகோணம் குத்தாலம் மாயவரம் சீர்காழி சிதம்பரம் கடலூர் நெல்லிக்குப்பம் விழுப்புரம் திண்டிவனம் மதுராந்தகம் செங்கல்பட்டு தாம்பரம் வழியாக சென்னையை டிசம்பர் 3 ஆம் தேதி 40 நாட்களுக்குப் பின் வந்து அடைந்தது.
வறுமையில் வாடி போராட்டக் களத்தில் குதித்த போராட்ட வீரர்களுக்கு வழி நெடுகும் உணவு உடை மற்றும் தங்குமிடம் வழங்கி மிகுந்த வரவேற்பு வழங்கி உற்சாகமூட்டியுள்ளார்கள்.
முதுபெரும் தலைவர் தோழர் பி ராமமூர்த்தி முயற்சியில் மிகுந்த போராட்டத்திற்கு பின்பு அன்றைய மாகாண முதல்வர் ராஜாஜியை சந்திக்க அனுமதி கிடைத்தது.
கைத்தறி நெசவாளர்களின் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தனர். ஆனால் ராஜாஜி மிகுந்த கோபத்துடன் நிவாரணம் தர முடியாது உடனடியாக ஊருக்குச் செல்லுங்கள் இல்லையெனில் கடல் இருக்கு … போய் கடலில் விழுந்து சாகுங்கள் என்று மிகுந்த கோபத்தோடு கர்ஜனையிட்டுள்ளார்.
பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த தோழர் பெரியசாமி நாங்கள் எதுக்கையா சாகனும்… நாங்கள் உழைக்கப் பிறந்தவர்கள்… எங்களுக்கு வேலை கொடுக்க வழியில்லாத சர்க்காரை நடத்தும் மந்திரிமார்கள் நீங்கள் வேண்டுமானால் சாகலாம் என்று ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.
தோழர் பி ராமமூர்த்தி ராஜாஜியிடம் கரை போட்ட வேஷ்டி சேலை ரகங்களை கைத்தறிக்கே ஒதுக்குவது என உத்தரவிட வேண்டும் என்றும் இதன் மூலம் கைத்தறி தொழிலாளருக்கு வேலை கிடைக்கும் எனவும் அறிவுரை வழங்கினார் இதை ஏற்றுக் கொண்டார் ராஜாஜி.
அதைத்தொடர்ந்து தான் இன்றுவரை பொங்கல் தீபாவளி காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய காலங்களில் கைத்தறி துணிகளுக்கு ரிப்பேர் முறையில் அரசு கைத்தறி ஆடைகளை வாங்கி தொழிலாளர்களை பாதுகாத்து வருவது இந்தப் போராட்டமே காரணமாகும்.
தொடர்ந்து தன்னுடைய போராட்டப் பயணத்தில் 90 ஆண்டுகள் வரை செயல்பட்டுக் கொண்டே இருந்தார். 1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி கருத்து வேறுபாடு காரணமாக பிளவுபட்டது. இது இவருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தன்னுடைய போராட்டத்த பயணத்தை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து கொண்டே இருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டினி பட்டாள பாதயாத்திரை நினைவாக நினைவகம் ஒன்றையும் தனது சொந்த செலவில் நிர்மாணித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தனித் தனியாக அருகருகே இடம் வாங்கி தன்னுடைய சொந்த செலவில் அலுவலகத்தையும் கட்டிக் கொடுத்தார். அருகிலே நூலகத்தையும் நிர்மாணித்து பெரும் புரட்சியை செய்தார் தோழர் பெரியசாமி.
இது போன்ற போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட தோழர் பெரியசாமி வரலாற்று நூல் அனைவரும் வாசிக்க வேண்டும். அரசியல் இயக்கங்கள் தொழிற்சங்க இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
நூலினை பதிவு செய்த நூல் ஆசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.அர்ஜுனனுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
இது போன்ற வரலாறுகளை ஆவணப்படுத்துவதன் மூலம் நமது வருங்கால இளைஞர்களுக்கு இது மிகவும் வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
நூலின் விவரங்கள்:
நூல்: “கைத்தறி நெசவாளர்களின் விடிவெள்ளி தோழர் எஸ்.பெரியசாமி போராட்ட வாழ்க்கை”
ஆசிரியர்: கே.அர்ஜுனன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்)
வெளியீடு: இந்திய தொழிற்சங்க மையம் விருதுநகர் 626001.
தொடர்பு எண்: 9443437800
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
✍️MJ. பிரபாகர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
