இந்தியாவில் உள்ள இந்துத்துவ வெறியும், இஸ்ரேலிய யூதர்களின் சியோனிச வெறியும் எப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தங்களுடைய வெறியை தீர்த்துக் கொள்கின்றனர் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் நூல் தான் இது.

இந்தியாவிலும், இஸ்ரேலிலும் இவர்களின் வெறித்தனத்தால் பாதிக்கப்படுபவர்கள் இஸ்லாமியர்களே.
அமெரிக்கா மிகப்பெரிய வல்லரசு என்று காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே செனட் சபையில் கூட இந்துத்துவ வெறித்தனம் எப்படி தனது சுயலாபத்தை நிறைவேற்றிக் கொள்கிறது என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது.

அமெரிக்காவின் கைப்பாவை தான் இஸ்ரேல் என்கிறோம். ஆனால் அந்த இஸ்ரேல்தான் இன்று உலகம் முழுதும் இருக்கின்ற தகவல் தொழில் நுட்பத்திற்கு  முதன்மையான காரணமாக இருக்கின்றது. ஆம் இந்தியாவில் பெகாசஸ் வந்தது ஞாபகம் இருக்கிறதா. அதை வழங்கியது இஸ்ரேல்தான். இன்று நமது செல்போனில் கூட இஸ்ரேலினுடைய தகவல் தொழில்நுட்பம் உளவு வேலையை செய்து வரலாம் யார் கண்டது.

இஸ்ரேல் சிறிய நாடு எனலாம். ஆனால் அந்த நாட்டில் இருந்துதான் 2014க்கு இந்தியாவிற்கான ராணுவ பயிற்சியையும், ஆயுதங்களையும் வழங்கியிருக்கிறது என்றால் எவ்வளவு அயோக்கியத்தனம். அமெரிக்காவில் கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கிற இந்துத்துவ சிந்தனை கொண்டவர்கள் பெரும்பகுதி உள்ளனர்.

தற்போதைய அமெரிக்காவில் இந்தியர்கள் 45 லட்சம் பேர் உள்ளனர். அங்கே இருக்கிற இஸ்ரேலிய வெறியர்களும், இந்துத்துவ வெறியர்களும் கூட்டு சேர்ந்து எவ்வாறு அமெரிக்காவினுடைய அரச கட்டமைப்பை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்பது பகீர் தகவலாக உள்ளது.
காஷ்மீரின் தனி உரிமை 370 நீக்கப்பட்டதற்கும், இஸ்ரேலிய சிந்தனைக்கும் மிக நெருக்கமாக உள்ளது. இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனர்கள் நுழையக்கூடாது என்பதற்கு எவ்வளவு தூரம் வேலி அமைத்து லேசர் ஒளியின் மூலம் கண்காணிக்கின்றனரோ, அதேபோல் காஷ்மீரிலும் உருவாக்கி உள்ளனர். காஷ்மீரின் நிலம் முழுவதும் பெரும்பான்மையாக இருக்கின்ற இஸ்லாமியர்களை சிறுபான்மையினராக மாற்றுவதற்காக இந்துக்களை அங்கே அதிகம் குடியேற்றுவதற்கு அனைத்து வேலையையும் செய்கின்றனர்.

இஸ்ரேலியிலும், இந்தியாவில் இருக்கிற காஷ்மீரிலும் இருக்கின்ற பழங்குடி மக்களையும் வெளியே துரத்தி உள்ளனர். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் ராணுவ வழியிலும், பொய்யை திட்டமிட்டு வதந்தியாய் பரப்புகின்ற தகவல் தொழில் நுட்ப வழியிலும் தங்களுடைய சுயலாபத்தை அடைந்து வருகின்றனர். சியோனிச, இந்துத்துவ மக்களுக்கு எளிதில் விசா கிடைப்பதற்கும், குடியுரிமை கிடைப்பதற்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இவையெல்லாம் கடந்த 2014 க்கு பிறகு அதிகப்படியான பணியாக இருந்துள்ளது. காரணம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய சித்தாந்தமே.

இந்நூலின் ஆசிரியர் அப்பப்பா அவ்வளவு தரவுகளை திரட்டியுள்ளார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நமக்குத் தெரியாத பல விஷயங்களை நமக்கு கொடுக்கிறார். ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அதிர்ச்சியாகவும் உள்ளது.

இந்நூலின் ஆசிரியருக்கு சற்றும் குறைவில்லாமல்  எளிமையாக தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார் நமது தோழர் இ.பா.சிந்தன் அவர்கள். அவருக்கும் மனமார்ந்த நன்றி!

இறுதியாக

இந்த இந்துத்துவ வெறியும், இஸ்ரேலிய யூத சியோனிச வெறியும் இன்னும் தொடர்வதற்கான சூழல் உருவாகிக்கொண்டே இருந்தால் பாலஸ்தீன மக்கள் என்கிற ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். இங்கே காஷ்மீரிலும் முற்றிலும் இஸ்லாமியர் துடைத்தெரியப்படுவார்கள். இன்னும் ஒரு சுதந்திரப் போரை மக்கள் கையில் எடுத்தாக வேண்டும். இல்லையெனில் விபரீதமாகவே முடியும். கார்பரேட்டும், மதவெறியும் ஒன்று கூடி இன்று உலகை சீரழிக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர். மதவெறியை மாய்ப்போம், மதவெறியர்களிடமிருந்து  விடுபடுவோம். மக்களை காப்போம்.

இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

               நூலின் தகவல்கள் 
நூல் : “கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்” 
 ஆசிரியர் : ஆசாத் எஸ்ஸா
 தமிழில் : இபா சிந்தன்
 வெளியீடு : எதிர் வெளியீடு 
 ஆண்டு : ஜனவரி 2024
 விலை : ரூ.399 
 நூலைப் பெற : 9942511302, 04259 226012
        அறிமுகம் எழுதியவர் 
             இரா.சண்முகசாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *