முத்துக்குமார் (Muthukumar) எழுதிய கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம் - Kakori Conspiracy Case - https://bookday.in/

கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம்

கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா : நூல் அறிமுகம்

இருட்டை விலக்கிய வெளிச்சம்

– பாவண்ணன்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இந்திய விடுதலைப்போரில் ஒரு முக்கியமான திருப்புமுனை. விடுதலைக்காக ஆங்காங்கே உருவாகி வந்த எழுச்சிகளிடையே ஒரு குவிமையம் உருவாவதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திரபால், கோகலே போன்ற மூத்த விடுதலை வீரர்கள் வரிசை அப்போதுதான் உருவானது. இந்த ஆளுமைகளை முன்மாதிரியாகக் கொண்டு தம் வாழ்க்கையை வாழ நினைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் உருவானார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்த கிருஷ்ண சுவாமி சர்மா என்னும் இளைஞரும் அவர்களில் ஒருவர்.

விபின் சந்திரபாலின் உரைகளால் எழுச்சியுற்று, அவரைப்போலவே பேச்சாற்றலையும் தேசபக்தியையும் வளர்த்துக்கொண்டு தேச விடுதலைக்காகப் பாடுபடவேண்டும் என்னும் கனவோடு இருந்தார் அவர். அவருடைய பேச்சாற்றல் வெகுவிரைவில் தமிழகமெங்கும் பரவியது. பல நகரங்களில் அவர் பயணம் செய்து சுதேசிப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1908இல் ஒருமுறை சென்னையிலிருந்து கரூர் நகருக்குச் சென்று சில நாட்கள் தங்கி சுதேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பினார். திரும்பி வந்த இரண்டுமூன்று மாத இடைவெளியில் அவரைத் தேடிவந்த காவல்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

பல அடுக்குகளாக நீண்ட விசாரணையின் முடிவில் அவரை நாடு கடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு மேல்முறையீடு செய்த பிறகு, அது இந்தியச் சிறையிலேயே அடைக்கும் வண்ணம் மூன்றாண்டு சிறைத்தண்டனையாகக் குறைந்தது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுரேந்திரநாத் ஆர்யா போன்றோரும் அதே சமயத்தில் ராஜதுரோகத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு அச்சிறையில் அடைப்பட்டிருந்தனர்.

தேசபக்தியின் காரணமாக சிறைத்தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொண்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒருவராக கிருஷ்ண சுவாமி சர்மா இருந்தார். விடுதலைக்குப் பிறகும் அவர் ஓய்ந்துபோய் விடாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு மீண்டும் பல்வேறு சிறைகளில் அடைபட்டு தண்டனையை அனுபவித்தார். போராட்ட வாழ்க்கைக்கிடையில் எப்படியோ நேரம் கண்டுபிடித்து இருபத்தொரு புத்தகங்களை எழுதிமுடித்த சர்மா முப்பத்தெட்டு வயதில் மறைந்துவிட்டார்.

தேச விடுதலைக்காக மகத்தான பங்களிப்பைச் செலுத்திய அந்த மகத்தான ஆளுமையான கிருஷ்ண சுவாமி சர்மா பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல எங்குமே கிடைக்காத நிலையை அடைந்தன. ஆய்வாளர் பெ.சு.மணி பெரிதும் முயற்சியெடுத்து மாவீரன் கிருஷ்ணசாமி சர்மா என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அவரைப்பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் முதன்மை ஆவணம் அதுவே. அப்பதிவில் கரூர் நகரில் நடைபெற்ற கைது தொடர்பான தகவல்கள் குறைவாகவே இருந்தன. அங்கு என்ன நடைபெற்றது, எப்படிப்பட்ட சூழலில் அவர் கைது செய்யப்பட்டார், ஒரு மேடைப்பேச்சு கைது அளவுக்கு ஏன் சென்றது என்பவை போன்ற விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

ஏறத்தாழ நாற்பது, ஐம்பது ஆண்டு காலம் அப்படியே கடந்துபோக, வழக்கறிஞரான முத்துக்குமார் தன் சொந்த முயற்சியால் பல்வேறு பிரிட்டன் காலத்து ஆவணங்களைத் தேடித்தேடி குறிப்பெடுத்து, அவற்றைத் தொகுத்தும் பகுத்தும் இருண்டுகிடந்த வரலாற்றுப் பகுதியில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார். முத்துக்குமார் பாடுபட்டுத் தேடி வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களால் கிருஷ்ண சுவாமி சர்மாவின் வாழ்க்கை வரலாறு முழுமையடைகிறது. தமிழக ஆயுவலகமும் வாசகர்களும் முத்துக்குமாருக்குக் கடமைப்பட்டுள்ளனர்.

வழக்கு இதுதான். கரூர் காங்கிரஸ் அமைப்பினர் இளம்பேச்சாளரான கிருஷ்ண சுவாமி சர்மாவை சுதேசிப் பிரச்சார நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அந்த நேரத்திலேயே காவலர்களின் கண்காணிப்புக்கு உட்பட்ட பேச்சாளராக விளங்கினார் கிருஷ்ண சுவாமி சர்மா. அவர் செல்லுமிடங்களில் எல்லாம் அவரோடு இரண்டு மூன்று காவலர்களும் சென்றனர். நாளடைவில் காவலர்களும் அவரும் சேர்ந்து பழகிப் பேசும் அளவுக்கு ஒருவரையொருவர் அறிந்தவர்களாகவே இருந்தனர். அவரவர் வேலைகளை அவரவர் செய்துகொள்வதற்கு, அந்த நட்பு இடராக அமையவில்லை. சென்னையிலிருந்து அவர் கரூருக்குப் புறப்பட்ட போது அவரோடு அந்தக் காவலர்களும் அவர் பயணம் செய்த பெட்டியிலேயே ஒன்றாகப் பயணம் செய்தனர். ஆங்காங்கே நடைபெற்ற கூட்டங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவு தொடர்பாக குறிப்புகளை அவ்வப்போது தம் குறிப்பேடுகளில் சுருக்கமாகக் குறித்துவைத்துக்கொண்டனர்.

வங்கப்பிரிவினையை ஒட்டி தேசமெங்கும் திடீர் திடீரென கலவரங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. ஆட்சியில் இருந்த அதிகாரிகளுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. தற்காப்புக்கு அவர்கள் இராணுவத்தை நம்பியிருந்தனர். ஆங்காங்கே நடைபெற்ற கலவரங்களை அடக்குவதற்கு இராணுவம் சென்று நிலைமையைச் சீர்ப்படுத்துவதும் பிறகு திரும்பி வருவதும் வழக்கமாக இருந்தது. இதனால் இராணுவத்தின் மீது பொதுமக்களிடையில் கசப்பும் வெறுப்பும் பதிந்திருந்தன. இராணுவத்துக்கு கூடுதல் உரிமைகளை வழங்கும் விதமாக சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இராணுவத்தைப்பற்றிய பேச்சே எங்கும் எழக்கூடாது என நினைத்தது அரசு. கரூரிலும் அப்போது ஓர் இராணுவமுகாம் இருந்தது.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் கரூர் நகரில் கூட்டம் நடைபெற்றது. பேச்சின் போக்கில் இராணுவத்தில் வேலை செய்யும் இந்தியச் சிப்பாய்கள் தம் ஆயுதங்களை வெள்ளை அதிகாரிகளின் திசையில் திருப்பவேண்டும் என்று சொன்னார். எதிர்பாராத விதமாக அக்கூட்டத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒரு ஒப்பந்தக்காரர் அதைக் கேட்டு எழுந்து அவருடைய பேச்சை இடைமறித்து இராணுவத்துக்கு எதிராக அனைவரையும் தூண்டிவிடுவதுபோல அவர் பேச்சு அமைந்திருப்பதாகக் குற்றம் சுமத்தினார். சுயசிந்தனைக்குப் பிறகே தன் பேச்சைப் பேசுவதாகவும் தன் பேச்சுக்காக விதிக்கப்படும் எல்லா விதமான தண்டனைகளுக்கும் தான் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார் சர்மா. அந்தப் பேச்சு அத்தோடு முடிவுற்றது. அதற்குப் பிறகும் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார் சர்மா.

இரண்டுமூன்று மாத இடைவெளிக்குப் பிறகு அந்த ஒப்பந்தக்காரர் சென்னைக்கு வந்தார். அவர் காவல்நிலையங்களில் சிறுசிறு மராமத்து வேலைகளை எடுத்துச் செய்பவர். ஒரு காவல் நிலையத்தில் அத்தகு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, கரூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இராணுவம் தொடர்பாக ஒருவர் பேசியதாகவும் தான் துணிவோடு எதிர்த்துக் கேள்வி கேட்டதாகவும் தற்பெருமையோடு குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

தற்செயலாக அவருடைய சொற்கள் மேலதிகாரி வரை சென்றுவிட, அந்த அதிகாரி, கூடுதல் விவரங்களைக் கேட்டு கரூர் நிலையத்துக்குக் கடிதம் எழுதினார். கரூர்க்காரர்கள் கிருஷ்ணசுவாமி சர்மாவின் உரை பற்றிய தகவல்களை அரைகுறையாகத் திரட்டி தோராயமான ஒரு வடிவத்தைக் கொடுத்து ஒரு சதிவழக்காக உருமாற்றினர். சென்னைக்கு வந்து சர்மாவைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். மெல்ல மெல்ல பல அம்சங்கள் அந்த வழக்குடன் இணைக்கப்பட்டு ஒரு பயங்கரவாத செயலுக்குரிய வழக்காக மாறத் தொடங்கியது. பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு சர்மா மீது சுமத்தப்பட்டிருந்த ராஜதுரோகப் பழி உறுதி செய்யப்பட்டு, அவரை நாடுகடத்தும் தண்டனை விதிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னால் அவ்வழக்கு மேல்விசாரணைக்குச் சென்றது. இரு நீதிபதிகளும் இருவேறான கருத்துகளைக் கொண்டிருந்ததால், வழக்கு பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டது. அங்கு சாதாரண மூன்றாண்டு சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடுமையான அத்தண்டனையை ஏற்றுக்கொண்டு கடலூர்ச் சிறையிலும் வேலூர்ச்சிறையிலும் தண்டனைக்காலத்தைக் கழித்துவிட்டு விடுதலை பெற்றார் சர்மா.

மேடையில் பேச்சோடு பேச்சாக எவ்விதமான நோக்கமும் இல்லாமல் சொல்லப்பட்ட எளிய சொற்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்து, அரசு அதிகாரிகளே அதைச் சட்ட விதிகளுக்கு உட்பட்ட ஒரு சதி வழக்காக மாற்றி பேசியவரை எளிதாகத் தண்டித்துவிட்டனர் என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டிய செய்தி. எளிய விசாரணை வழக்கு சதி வழக்காக மாறிவிட்டது. இப்போது படிப்பதற்கு அபத்தமாகத் தோன்றினாலும், நேற்றைய வரலாறு இப்படித்தான் இருந்திருக்கிறது. அந்நியர் ஆட்சியில் விசாரணைகள் அனைத்தையும் ஒரு சடங்காக நடத்தி, தன் முடிவையே தீர்ப்பாக வழங்கும் தன்மையை பல்வேறு காட்சிகளாக எழுதி, அனைத்தையும் கண் முன்னால் நிகழ்வதுபோல எழுதியிருக்கிறார் முத்துக்குமார்.

ஆவணக்காப்பகத்தில் ஓர் ஆவணத்தைத் தேடி எடுப்பது என்பது எளிதான செய்தியல்ல. மணற்பரப்பில் விழுந்த வைரத்துணுக்கைக் கண்டெடுக்கும் செயலுக்கு ஈடானது. ஆயிரம் பக்கங்களைத் தேடினால்தான் நமக்குத் தேவையான ஒரே ஒரு பக்கத்தைக் கண்டெடுக்க முடியும். முத்துக்குமாரின் உழைப்பினால் இதுவரை இருண்டு கிடந்த ஒரு பகுதி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சர்மா மறைந்தபோது அ.மாதவையா எழுதிய இரங்கல் குறிப்பில் ’தேசபக்தியையும் அடிமை வாழ்வில் வெறுப்பையும் தமிழர்களுக்குள் வளர்க்கக் கருதிய கிருஷ்ணசுவாமி சர்மா சில வாழ்க்கை வரலாற்று நூல்களையும் சில அரசியல் நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் சிறப்பையும் பெற்றது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சர்மா பற்றிய ஆய்வில் விருப்பம் கொண்டு உழைத்த முத்துக்குமாரின் பார்வையில் அந்த இரங்கல் குறிப்பு பட்டதுமே, அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகம் எதுவாக இருக்கும் என மற்றொரு ஆய்வை மேறுகொள்கிறார். சர்மா எழுதிய இருபத்தொரு நூல்களுமே முக்கியமானவையே. இருபத்தொரு நூல்களும் அரசின் கொள்கைகளை விமர்சிப்பவையே. எனவே எந்த நூல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் என ஒரு முடிவுக்கு வருவது சாத்தியமாகவில்லை. முத்துக்குமார் தன் தொடர்முயற்சியின் விளைவாக அந்த நூல் எதுவெனக் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்.

கெடுவாய்ப்பாக, வழக்கு ஆவணங்களிலும் அந்த நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் உயர் அதிகாரிகள் புரிந்துகொள்ள ஏதுவாக, தடை கோருவதற்கான வகையில் ஆட்சேபணைக்குரிய சில பகுதிகளை நூலிலிருந்து எடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆவணத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராதவிதமாக அவற்றைக் கண்டடைந்த முத்துக்குமார் அந்த ஆங்கிலப்பகுதிக்கு நிகரான தமிழ்ப்பகுதி இடம்பெற்ற நூல் எதுவாக இருக்கும் என ஆய்வு செய்து தன் முடிவை அறிவிக்கிறார். அது அவர் ஜோசப் மாஜினி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூலாகும்.

இன்று, ஒரு சில மணி நேரங்களில் படிக்கமுடிந்த நூலாக முத்துக்குமாரின் முடிவுகள் நம் முன் இருந்தாலும், இந்த ஆய்வுப்பயணத்தில் முத்துக்குமார் பல ஆண்டுகளைச் செலவழித்திருக்கிறார். தன்னலம் கருதாத அந்த உழைப்பின் விளைவாகவே அப்புத்தகம் இன்று நம் கையில் திகழ்கிறது. முத்துக்குமார் தமிழுலகத்தின் நன்றிக்குரியவர். கிருஷ்ண சுவாமி சர்மா மறைந்து நூறாண்டுகள் நிறைவடையைப்போகிற இத்தருணத்தில் அவரைப்பற்றி இதுவரை அறியாமல் இருந்த ஒரு பக்கத்தை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வழிவகுத்தவரை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது.

நூலின் தகவல்கள் : 

நூல் : கரூர் சதி வழக்கு – கிருஷ்ண சுவாமி சர்மா
ஆசிரியர் : முத்துக்குமார்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம் –  77, 53வ்து தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83.
விலை : ரூ.190

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *