குளிர் காற்றும்.. தூவானமும்.. தூறலுமாக.. கடும் மழையை நோக்கி இந்த இரவுப்பொழுது சென்று கொண்டிருக்கிறது. சென்னையில்.. நானும் வேங்கை பெரிய உடையண்ணத்  தேவனோடு  சேர்த்து 73 பேர் திருமயத்தில் இருந்து மதுரைக்கும் பிறகு அங்கிருந்து தூத்துக்குடிக்கும் அப்படியே அட்மிரல் நெல்சன் கப்பலின் மீதேறி பினாங்கு நோக்கி நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காலாபாணி எங்களின் மீது அறிவித்தது பொருட்டு கால்களில் இரும்புச் சங்கிலி பூட்டி.
எங்களின் பக்கத்தில் 73 பேரில் மூன்று பேர் பிணமாகி கிடக்கிறார்கள்.. அவர்களை கடலுக்குள் தூக்கி எறிந்து எங்களை நோய் தொற்றிலிருந்து பிரித்து எடுத்திட  லெப்டினன்ட் ராக்கெட் தனது அடிமை வீரர்களுக்கு உத்தரவிட்டு கொண்டிருக்கிறான்.. தொண்டைக்குழி முழுவதுமாக வறண்டு கிடக்கிறது.. கடல் நீர் சூழ்ந்து நிற்க குடிநீருக்காக ஏங்கிக் கிடக்கிறோம்..
கால்களில் இரும்புச் சங்கிலி பூட்டப்பட்டு ரத்தம் கசிவது அறியாத உணர்வற்ற நிலையில் படுத்துக் கிடக்கிறார்கள் பலர்.
திருப்பத்தூர் கோட்டைக்கு எதிராக இருக்கக்கூடிய அந்த பெரிய மைதானத்தில் அக்னியூ எங்களையும் சேர்த்து தூக்கில் போட்டு இருக்கலாம் மருது சகோதரர்கள் மற்றும் அந்த 498 போராளிகளோடு. அவன் அன்று வாய் தவறி வெளியே விட்ட வார்த்தை இன்று நிஜம் ஆகிக்கொண்டிருக்கிறது போராளிகள் 73 பேர் காலாபாணியாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு போய்க்கொண்டிருக்கிறோம்..
அதிகாரத்தில் இருந்தே தங்களை பழகிக் கொண்டவர்கள் அதிகாரத்தை தொடர்ந்திட எதிரிகளோடு எல்லா விதத்திலும், எந்தப் பகுதியிலும் இணைந்து கொள்வார்கள்  சூழ்ச்சியிணையும் துரோகத்தையும் துணைக்கு அழைத்து என்றதற்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு முழுவதிலும் நாம் காணலாம்.. அப்படியான வரலாற்றின் தொடர்ச்சியே மருது சகோதரர்கள் தூக்கிலிட்டமையும் அதைத்தொடர்ந்து வேங்கை பெரிய உடையணத் தேவன் உள்ளிட்ட 73 பேர் நாடு கடத்தப்பட்ட சம்பவமும் துயரமும்..
1801 ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி மருது சகோதரர்களின் தூக்கில் தொடங்கிய இந்தப் பெரும் வலிமிகுந்த சம்பவம் 11 மாதங்களின் தொடர் நாட்கள் அனைத்திலும் ரத்தம் கொட்டிக்கிடக்கும் வரலாறாக பென்கோலன் கோட்டைக்குள் 1802 வருடத்தின் செப்டம்பர் 19 அன்று தனித்து செத்துக் கிடந்த வேங்கை உடையணத் தேவன் தனித்த மரணத்தில் துயரத்தோடு நிறைவு பெறுகிறது.
1801 வழியாக நம்மிடையே வரலாற்றின் மறைக்கப்பட்ட, இல்லை எழுதாமல் கவனிக்காமல் விடப்பட்ட உண்மைகளை புனைவு கலந்து நாவலாக்கிக் கொடுத்த ஆசிரியர் மு. இராசேந்திரன் அவர்கள் அதன் தொடர்ச்சியை “காலா பாணியாக” தமிழ்ச் சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார். சிறப்பானதொரு முறையில் வெளியிட்டிருக்கிறார்கள் அகநி பதிப்பகத்தார். கள ஆய்வின்போது கிடைக்கப்பெற்ற தரவுகளை, ஆதாரங்களைக் கொண்டு புனைவுகள் கலந்த நாவலாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
சாதியத்தின் அடையாளத்தோடு சுதந்திரப் போராட்டத்தின் கூர்மையும் பிணைந்து இருந்தது என்பதை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். 73 பேர்களின் சாதிய அடையாளத்தை மீறி அதிகார ஆதிக்க வெறிக்கு எதிராக எப்படி ஒன்றுபட்டு போராளிகளாக நின்று போராடினார்கள் என்பதை நாவலுக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் நாவலாசிரியர்.
ஆதிக்கம் தங்களுக்கான அதிகாரத்தை நிர்மாணித்துக் கொள்ள எல்லாவித வஞ்சகத்தையும் கையில் எடுக்கும் என்பதற்கான உதாரணங்களை நாவல் முழுவதிலும் கொண்டு வந்திருக்கிறார்.. அதனுடைய உச்சம் தான் வேங்கை பெரிய உடையணத் தேவன் மட்டும் மற்ற போராளிகள் அனைவரிடத்திலும் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு பென்கோலன் கோட்டைக்குள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதாகும். அதிகாரத்தை எதிர்த்த கேள்வி என்பது இனி எந்த காலத்திலும் பொதுவெளிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாகவே இந்தக் காலாபாணி என்பதை கர்னல் அக்னியூ நடத்திட்ட விசாரணையின் பொழுது நிறுவி இருப்பார் ஆசிரியர்.
மக்களால் போற்றப்பட்ட மாபெரும் ராசா ஒருவனை கைதியாக்கி நடத்திக் கொண்டு போகும்போது எத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஒரு நாள் இரவு ஒத்திகையாக்கி அதற்கு எதிராக நிற்கும் பொதுமக்களை அடையாளம் கண்டு மறுநாளே தூக்கிலிட்ட சம்பவம் பெரும் துயரமும் வேதனையும் மிகுந்தது
 எழுதிய '1801' நூலுக்கு அனைத்துலகப் புத்தகப்  போட்டியில் ரூ. 6,50,000 பரிசு
டாக்டர் மு.ராஜேந்திரன்
இந்த நாவலுக்குள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட பிறகு தங்களால் நியமிக்கப்பட்ட இஸ்திமிரர் கௌரி வல்லபர் இடம் பெரிய மருதுவின் மனைவிக்கு பென்ஷன் தரச்சொல்லி உத்தர விடுகிறார்கள்.. ஆனால் பென்ஷன் தர மறுத்தும், அதோடு மட்டுமல்லாமல் மருது குடும்பத்து பெண்கள் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் சிறுவாட்டு தொகையினையும் கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதைத் தவறு என்று பிரிட்டிஷார் தாசில்தார் வழியாக கௌரி வல்லவருக்கு தெரிவிக்கும்போது அவர் தெரிவித்த கருத்து மிக முக்கியமானதாக அர்த்தம் பொதிந்ததாக யோசிக்க வேண்டியதாக நான் பார்க்கிறேன்.
“அப்படி பிரிட்டிஷ் கம்பெனி என்னை நிர்பந்தம் செய்தால் நான் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுப்பேன், இந்தப் பகுதியின் அரசனாகிய என்னுடைய அடிமைகள் மருது சகோதரர்கள், அவர்களின் குடும்பத்தார். மனுதர்ம நியதிப்படி அடிமைகளின் அத்தனையும் அரசனுக்கு சொந்தம். எனவே நான் மனுதர்ம சட்டப்படி நடந்து கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் சொல்வேன் வெற்றியும் பெறுவேன் என்கிறான்.. பிரிட்டிஷ் கம்பெனி அரசும் அமைதி காக்கிறது .
மனுதர்ம சட்டம் எத்தகைய வலிமை பொருந்தியதாக இருந்திருக்கிறது அந்தக் காலங்களில் எல்லா இடங்களிலும் என்பது தெளிவாகிறது. ஏன் இன்றும் கூட மனுவின் ஆட்சி தானே எல்லா மக்கள் மன்றங்களிலும் கோலோச்சிக்  கொண்டிருக்கிறது.
1788 ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரல் காரன் வாலிஸ் அவர்களால் சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட “நாடு கடத்தல்” தண்டனை என்பது, பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு எப்படி “காலா பாணியாக” உருவெடுத்தது என்கிற துயரமும் வலியும் மிகுந்த வரலாற்று உண்மைகளை அப்படியே பதிவாக்கி நாவலாக நம் கையில் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.
நாவலை வாசித்திடும்பொழுது நானும் என் கால்களை சங்கிலி கொண்டு வேங்கை பெரிய உடையணத் தேவன் உடன் பிணைத்துக் கொண்டேன்.. அவனின் எண்ண ஓட்டங்கள் கால்கள் நடந்திடும் பாதைகள் எங்கும் நானும் நடந்துகொண்டே கிடந்தேன் நாவல் முழுக்க.. அவனின் மூச்சுக்காற்று இன்ற பொழுது நான் விழித்துக் கொண்டேன் போராட்டத்தை தொடரும் சூழல் இன்றைக்கு வேறு வகையாக இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன்..
நாவலை வாசிக்கத் தொடங்கியதும் இருந்த ஒரு ஈர்ப்பு என்பது, பிறகு நாவலின் பல பகுதிகளில் எனது கவனங்களை சிதறடிக்கச் செய்வதாக உணர்கிறேன். நாவலின் போக்கிலேயே செல்லாமல் நாவலின் போக்கிற்கு வலு சேர்ப்பதற்காக முந்தையச் சூழலும் பல விரிவான கிளைக் கதைகளும் நாவலை பின்னுக்கு இழுத்து நிற்கிறதோ என்கிற எண்ணம் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. பல வரலாற்று சம்பவங்களை நாவலுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும் பொழுது நாவலின் உயிர் என்பது ஆங்காங்கே முடிச்சுகள் போட்டு நிறுத்தப்பட்டு விட்டதைப் போன்ற உணர்வு எனக்குள்.
ஒரே சீரான வேகத்தோடு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய இடமெங்கிலும் பல வேகத்தடைகள் இருப்பதாக நான் உணர்கிறேன். எந்த சம்பவத்தை நாம் முன்னிறுத்த விரும்புகிறோமோ அதற்கு உதவக்கூடிய வரலாற்றுச் சம்பவங்களை துணையாக வைத்துக் கொள்வதற்கும், அதற்காக மெனக்கெடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதில் துணைச் சம்பவங்களுக்காக ஆசிரியர் நிறைய மெனக்கெட்டு பல பக்கங்களை இணைத்திருக்கிறார். அவைகள் தேவைதான் ஆனால் அளவுக்கு அதிகமாக இருப்பதாக நான் பார்க்கிறேன்.. சம்பவங்களை சொல்லி நாவலை நகர்த்திச் சென்றிருந்தல் இந்த நாவல் மிகவும் சிறப்புக்குறிய ஒன்றாகி வலிமையான வலி மிகுந்த ஒன்றாக இருக்கும்..
இந்தியாவில் இருக்கும் வரலாற்று ஆவணக் காப்பகங்கள் அத்தனையிலும் போராளிகள் யார்.? துரோகிகள் யார்.?காட்டிக் கொடுத்தவர்கள் யார்.?என்பதற்கான ஆவணங்கள் நிறைந்து கிடக்கிறது.. ஆனாலும்கூட இன்றைக்கு ஆட்சியாளர்களால் வரலாறுகள் அனைத்தும் திரித்து, புதிதுபுதிதாக எழுதப்படுவதற்கான வேலைகள் திட்டமிட்டு நடந்து கொண்டே இருக்கிறது தினமும். சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இன்றைக்கு போராளிகள் எனப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டு இடைச்செருகல் வேலை நடந்து கொண்டிருக்கிறது. 12000 ஆண்டுகளில் ஆன இந்திய வரலாறு  எங்கிலும் தாங்களே பெருமைக்குரியவர்கள், மேன்மைக்கு உரியவர்கள் என எழுதிக்கொள்ள.. எழுதிவைக்க ஒரு குறிப்பிட்ட இனக் கும்பல் குழுவாக இன்றைக்கு ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட ஒரு பாசிசம் தலையெடுக்கும் சூழலில் மெய்யான வரலாற்று ஆய்வாளர்கள் பலரால் உண்மைகளை தற்கால சமூகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கட்டாயத்தை காலம் அவர்கள் மேல் சுமத்தி இருக்கிறது. அதனை உள்வாங்கி சரியானதொரு பொழுதிலே இந்த நாவலை கொண்டு வந்து சேர்த்து இருக்கக்கூடிய அன்பிற்குரிய டாக்டர் மு. இராசேந்திரன் அவர்கள் பெரும் பாராட்டுதலுக்கு உரியவர் ஆவார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் பிரிட்டிஷ் கம்பெனியால் நாடுகடத்தப்பட்ட முதல் அரசனின் கதையை நிஜத்தை  நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு வரலாற்று வலி கொண்ட நிகழ்வாகும்.
காலா பாணி
நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
டாக்டர் மு ராசேந்திரன் இஆப
அகநி வெளியீடு
கருப்பு அன்பரசன்.
One thought on “நூல் அறிமுகம்: காலா பாணி – கருப்பு அன்பரசன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *