Kala puvan's Poems கலா புவன் கவிதைகள்




சமர் பறவைகள்
•••••••••••••••••••••••••
சிறகுகளின் மடிப்புகளில்
சமர் குறிப்புகளை வைத்திருக்கும்
பறவைகள் தினம் தினம் பறக்கின்றன
தமது மூதாதைகளின் கனவை ஒரு விழியிலும்
தமது வாழ்க்கைப் போராட்டத்தை மறு விழியிலும்
சுமந்து வைராக்கியத்தை இலக்காக
ஒற்றைச் சிறகிலும் தூக்கிப் பறக்கிறது
நேற்றின் மகிழ்ச்சியையும்
இன்றைய அவலங்களையும்
நாளைய எதிர்பார்ப்புக்களையும்
தனது குஞ்சுகளுக்கு உணவுடன் ஊட்டுகிறது
சமர் பற்றிய புரிதலை
தமது குஞ்சுகளுக்குக்
கூடுகளிலேயே அறியப்படுத்துகிறது
அச்சத்தின் எச்சங்களை
தமது கழுத்தில் சுமந்து கொண்டு
தூரங்களைப் பறந்து கடக்கின்றன
இப்படித்தான் பறவைகள்
தங்கள் வானங்களில்
வாழ்க்கையை நடத்துகின்றன….
ஆமென்

நிழல்
•••••••••
என்னிலிருந்து என் முன் நீளும்
என்னிலிருந்து என்னுள் இறங்கும்
என்னிலிருந்து என் பின் தொடரும்
ஆதவனுக்கும் நிழலுக்கும் அப்படி ஒரு சம்பந்தம்
நிழலுக்கு உயிர் தருபவன் ஆதவன்
இரவு நேர நிழல்கள் விளக்குகளாலும்
மெல்லிய விளக்குகொளியாலும் ஏற்படுவன
விளக்கின் கண்ணாடியில் அமரும் சிறு கொசுவின் நிழல்
சுவரில் பூதாகரமாய்த் தெரியும்
நம்மைப் பயமுறுத்தும்
இரவு நிழலைக் கண்டு பயப்படாத குழந்தைகளும்
பெண்களும் அபூர்வம்
எப்படியிருந்தாலும் நாமும் நிழலும்
ஒன்றுடன் ஒன்றாய்ப் பின்னிப்பிணைந்து கிடப்பவர்களே
நானின்றி நிழலில்லை
நிழலின்றி நானில்லை
ஆமென்

காத்திருப்பு
••••••••••••••••••
என் கனவுகளின் மீது நிஜங்களை நீ வரைகிறாய்
முகையவிழும் மலர்க் காடுகளில் வசந்தம் வந்து வீசிப்போயிற்று
பேரன்பின் உதிர்தல் பற்றி நீயறிவாயா ?
இரவுகள் உதயமாகின்றன
பகல்கள் நீளங்களை அளக்கின்றன
அது பெருங்கடல்
ஆழத்தில் உறைகிறது

நிறங்களை
வண்ணத்துப்பூச்சிகள் வர்ணஜால வண்ணங்களாய்
மாற்றுகின்றன
அவை என்
கண்ணுக்குள் நுழைத்து என் கனவுக்குள் புகுகின்றன
நாம் இருவரும் மெளனங்களை மொழியாக்கி பேசிக்கொண்டிருக்கிறோம்
நீலோற்ப மலர்கள் வண்டினங்களின் வரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன
நம்மைப்போல……….
ஆமென்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *