KALAI ILAKKIYA SANGATHIGAL கலை இலக்கிய சங்கதிகள்

விட்டல்ராவின் “கலை இலக்கிய சங்கதிகள்”

 

வாசிப்பு, ஆளுமைகள், நூல் விமர்சனங்கள், ஓவியம் குறித்த 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விட்டல்ராவின் தீர்க்கமான சமரசமற்ற கருத்துக்கள் வாசிப்பில் புதிய திறப்புகளை சாத்தியப்படுத்த வல்லவை.

எண்பதுகளில் தொடங்கி தினமணி நாளிதழ்களையும், 90களில் இந்தியா டுடே இதழ்களையும் தொடர்ச்சியாக வீட்டில் வாசித்திருக்கிறோம். சகோதரச் சண்டைகள் கூட நடந்திருக்கின்றன.

ஒருவர் வாசித்து முடிக்கும் வரை மற்றவர் கண்களில் அகப்படாமல் இருக்க இதழ்களை ஒளித்து வைத்த நிகழ்வுகளும் நடந்தது உண்டு. கால ஓட்டத்தில் தீவிரமாக வாசித்தவர் லௌகீகங்களில் உந்தப்பட்டு அந்நியப்படுதலும், மிதமான வாசிப்பு ஆர்வம் கொண்டவர் வாசிப்பின் மாயச் சுழலில் சிக்கிக் கொள்வதும் நடந்து விடுகிறது.

உண்மையில் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்டுவிடும் வாசிப்பு பழக்கமே நாளடைவில் வளர்ந்த மனிதனை ஆற்றுப்படுத்தி, வாழ்வின் எதிர்பாராமைகளையும் வலிதரும் ஏமாற்றங்களையும், எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை அளிக்கிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள வாசிப்பு குறித்த கட்டுரைகளை வாசித்தபோது நினைவுக்கு வந்தவை மேற்கண்ட வரிகள்.

க.நா.சு, லா.ச.ரா, ந.பிச்ச மூர்த்தி, அசோகமித்திரன் போன்ற தமிழ் இலக்கிய பேராளுமைகளை மிக அழகாக நினைவுகூரும் வகையிலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

‘நடைபாதை’ என்ற அற்புதமான நாவலை படைத்த இதயனை நினைக்கையில் யாரை நொந்து கொள்வது என்று விளங்கவில்லை. உண்மையில் விட்டல்ராவ்கூட தனது மேதமைக்குத் தகுதியான இலக்கிய அந்தஸ்தை தமிழில் பெற்றுள்ளாரா என்பதே ஐயத்திற்குரியது.

தினமணி கதிரிலும், சுடரிலும் அவரது கட்டுரைகளை சிறுவயதிலேயே புரிந்தும், புரியாததுமாக வாசித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. மா.அரங்கநாதனின் முத்துக்கறுப்பன் கதைகளுக்கு நானும் ரசிகன்தான். நற்றினை யில் அவரது படைப்புகள் முழுத் தொகுப்பாக வெளியான போது உடனடியாக வாங்கி வாசித்து மகிழ்ந்தேன்.

வெறும் வாசகனாக மாபெரும் படைப்பாளிகளை அணுகும்போது ஏற்படும் புரிதல்களை, இயல்பிலேயே கலை மேதமை கொண்ட விட்டல்ராவ் போன்ற ஆளுமைகள் தமது எழுத்துக்களின் மூலம் ஏற்படுத்திவிடும் வெளிச்சங்கள், உறுதிப்படுத்தி நமது ரசனை குறித்த நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தித் தருகின்றன.

மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்களின் முன்னுரை இந்நூலின் சிறப்புகளில் ஒன்று. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூலை சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டிருக்கும் ஜெய்ரிகி பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்.

                 நூலின் தகவல் 

நூல் : “கலை இலக்கிய சங்கதிகள்”

ஆசிரியர் : விட்டல்ராவ்

வெளியீடு : ஜெய்ரிகி பதிப்பகம்

பக்கங்கள் : 204 பக்கங்கள்

                 எழுதியவர் 

சுப்பிரமணியன் சரவணன் 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *