இரா. கலையரசியின் கவிதைகள்

Kalaiyarasiyin Kavithaigal இரா. கலையரசியின் கவிதைகள்

மீன் கூடை
**************
கடல் கை விட்ட பிறகு
கண்ணீரில் மூழ்கிய மீன்கள்…
வலைகளின் வஞ்சனைகளில் சிக்கி
உயிரை இழந்து கரையைத் தொட்டன
கதம்ப மீன்கள்.

உப்புக் காற்றில் ஊர் கூடி
செத்த உடம்பை ஏலமிட
ரத்தம் ஊறிய செதிள்கள்
துடிதுடித்து இறந்து
நெய்தலில் காத்து கிடக்கின்றன.

ரகம் வாரியாகப் பிரிக்கப்பட்டவை
பெருமுதலாளிகள் பிடித்துச் செல்ல
மிச்சம் மீதி வந்து சேர்ந்தன
மிச்சம் இல்லாத வாழ்க்கைப் பாட்டில்
மீதியைக் கழித்துக் கொண்டிருக்கும்
கிழவி கஞ்சம்மாளிடம்.

முந்திக்கு பத்தாத சேலை
முகத்தின் சுருக்கங்களை மூடிட
கால்கள் களைத்துப் பின்ன
கூனாகி சாய்ந்த முதுகு
கழுத்தை நிமிர விடாமல் பிடித்தது.

கழித்து விடப்பட்ட மீன்கள்
கிழவியிள் கூடைக்கு மாறுதல்
கேட்காமலே மாறி இருந்தன.
இறந்த பிறகு நாறும் மனிதனே
மூக்கைப் பிடித்துக் கொள்கிறான்.

தட்டுத் தாடுமாறி வண்டியில்
தவழாத குறையாய் ஏற
மூக்கை அடைத்து கொண்டோர்
வாயையும் விட்டு வைக்கவில்லை.
கிழவியைத் தடுத்த தடித்த வார்த்தை
இரக்கமின்றி இறங்கச் சொன்னது.

வாயைப் பிளந்து கண்கள் திறந்து
வியந்து பார்த்தன
இறந்த மீன்கள்
கஞ்சம்மாளின் தேய்ந்த செருப்பு
சாலையில் காதல் பரப்பி
வர மறுத்து வம்பு செய்கிறது.

தலையில் அமர்ந்தபடி கண்களை
மூடி இறந்திருந்த மீன்கள்
வழியில் கண்ணில் பட்ட
மச்ச அவதாரத்தில் இருந்த
கடவுளைப் பார்த்து எதையோ
கேட்க நினைத்தது போலும்.?

சாவு
******
கண்கள் வழிந்த கண்ணீரின்
ஈரம் கிடைமட்டமாக சரிய
வானத்தை பார்த்த கண்கள்
மெல்ல தானே மூடிக் கொண்டது.
அழுகுரல்கள் அங்குமிங்கும் சிதறி

அசைவற்ற உடலை பயமுறுத்த
நீண்ட கால்களின் விரல்களை
தொட்டு பார்த்தது பட்டாம்பூச்சி.

தட்டுமுட்டு சாமான்களை ஒதுக்கி
குளியலைத் தொடங்கி விட்டனர்.
அழுத்து சலித்து வாழ்ந்த உடல்
துவண்டு விழுகவே விரும்பியது.

சாவுக்கு காத்திருந்த மனிதர்கள்
அழகாக அலங்கரித்தனர்.
பட்டு சேலை ஒன்று படர
பார்த்து பார்த்து கட்டினர்.

சவப்பெட்டிக்குள் கிடத்தபட்ட உடல்
சத்தமின்றி அமைதியாய் இருக்க
மாலைகளின் இடுக்குகளில்
முகத்தை எட்டி பார்த்தனர் சிலர்.

தாரை தப்பட்டைகள் வரிசைகட்ட
ஆளுக்கொரு மாலை அணிவித்து
பெருமை சேர்த்தனர் உடலுக்கு.

வீடு,வாசல் எல்லாம் பிரிச்சு
உயிலும் எழுதி முடிச்சாச்சு
சண்டை சச்சரவு இல்லாமல்
வராத கண்ணீர வழிச்சு
வழிச்சு போட்டாங்க புள்ளைங்க!

பூக்கார முனியம்மா நெஞ்சுல
அடித்து அழுது மாஞ்சிட்டா!
வடக்குதெரு வண்ணமயிலு
வழக்கமான சேலையில வந்திருந்தா!
பக்கத்து அக்கத்து வீட்டுக்காரங்க
வாயில துணிய வச்சு
அழுவோமா? வேண்டாமா?னு
யோசிச்சுகிட்டே இருக்காங்க.

பூக்கள் மட்டும் வாசமா இருக்க
மணத்த முகர தான் முடியல.
அழுத கண்ண தொடச்சுகிட்டு
அலாக்கா தூக்கிட்டாங்க என்னைய!
வீடு, வாசல் ஊரக் கடந்து
சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.

நல்லா தோண்டுன குழி காத்திருக்க
மண்ணக் கட்டிக்கிட இறங்கினேன்
பிடி மண்ண பூத்தூவலா தூவ
முகத்த தொட்டு பார்த்த ஆசையில
அப்படியே மேல தங்கிருச்சு.

முழுசா மூடின குழிமேட்டுல
மனுச பொழப்பு அவ்வளனுதான்னு
சொல்லிகிட்டே போன சத்தம்
கொஞ்சம் கொஞ்சமா
என்னை விட்டு போய்கிட்டே இருக்கு.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.