சிறுகதை: கலையும் மௌனம் – ஜனநேசன்     வாட்ஸ்-அப்  என்னும் கட்செவி அஞ்சல்  சினுசினுத்தது. பார்த்தேன். “ இன்று மாலை ஆறுமணிக்கு  மௌனவிரதம்  கலைகிறோம்  . அன்பர்களுக்கு பகிரவும் . “ – பூஜ்யஸ்ரீ அன்பானந்தசாமிகள் . சொற்கள் ஒளிர்ந்தன. மணி மூன்றைக் கடந்திருந்தது .

என்ன, சாமிகள் திடீர்ன்னு  மௌனம் கலைகிறார் . உலகில் அமைதியும், ஆரோக்யமும் , மக்கள் துயர் நீங்கவும் மௌனவிரதம் பூணுவதாக அறிவித்து  கடந்த ரெண்டுமாதமா மௌனம்  பூண்டிருந்தார். இப்போது    திடீர்ன்னு மௌனம்  கலைகிறேன் என்கிறாரே உலகில் அன்பும் , அமைதியும் ஆரோக்யமும்  தவழத் தொடங்கி விட்டதா ? கொரோனா கொடுங்கிருமி அழிந்து விட்டதா … இல்லை  ஊடக வெளிச்சத்துக்காக  இப்படி அறிவிக்கிறாரா? 

இவர் மௌனவிரதம்  அறிவிக்கும்போது  ஒரு ஊடகக்காரர்  கேட்டார், “ பூஜ்யஸ்ரீசாமிகள் மௌனவிரதம் இருந்தால்  உலகில்  அமைதியும் ஆரோக்யமும்  வந்திருமா …? “ 

“ நாம், பூஜ்யஸ்ரீ அன்பானந்தசமிகள் ,  எமது சிந்தனையை ,விழைவை  விதைக்கிறோம். உங்களைப் போன்ற  ஊடக அன்பர்கள்  உலகமெங்கும் கொண்டு சேர்க்கிறீர்கள் . இது மக்கள் மனதில் பதிந்து அமைதி , ஆரோக்ய வழியில் சிந்திக்கவும் இயங்கவும்  செய்யும் . மனமே கோவில், நற்சிந்தனையே மந்திரம்.” என்று பேட்டியை  முடித்துக் கொண்டார்.

அவர் ஊடக ஒளிர்வை கருத்து  பரப்பு கருவியாகவே   பயன்படுத்திக் கொள்வார். ஆனால்  அவர்  விளம்பரப் பிரியர் அல்லர். ஒருமுறை  தனது பக்த அன்பர்களைத் திரட்டி அப்பகுதியில்  உள்ள  சாலை சுங்கச்சாவடியை  இரண்டாயிரம்  நாட்டு மரக்கன்றுகளுடன்  முற்றுகையிட்டு இரு மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்தை முடக்கிவிட்டார். சாவடி   நிருவாகிகளை  வரச்செய்து விட்டார். அந்தச் சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட  சாலையில் இருபக்கமும்  அந்த மரக்கன்றுகளை  நட்டால் தான்  கலைந்து போவோம் என்று  சாலையிலே உட்கார்ந்து விட்டார்.  வேறேவராக  இருந்தால் சுங்கச்சாவடி நிருவாகிகள் காவல் துறையின ரைக் கொண்டு மிரட்டியோ, தள்ளுமுள்ளு , கல்லெறிதல்ன்னு கலவரத்தை  உருவாக்கியோ   கலைத்து விட்டிருப்பார்கள். பூஜ்யஸ்ரீ அன்பானந்தசாமிகள் இருபது வருசங்களுக்கு மேலாக இப்பகுதியில் ஆஸ்ரமம் நடத்தி வருபவர். மக்கள் மத்தியில்  செல்வாக்குள்ளவர். எல்லோருக்கும்  உதவக் கூடியவர். அவரை பகைத்துக் கொள்ள முடியாது.

“ சாலையை பராமரிப்பது தவிர மரம் நட்டு பராமரிப்பது  எங்கள் வேலை இல்லை . ஆகவே தயவுசெய்து  இரு மாநில எல்லையில் உள்ள இந்த  சாலை முற்றுகையைக் கைவிட்டு உதவவேண்டும் “  நயந்து மேலாளர் பேசினார். சாமிகள் கொண்டு வந்த கோப்பிலிருந்த  ஆவணத்தை எடுத்து காட்டி , இந்தப் பகுதியில் நான்குவழிச் சாலை போடுவதற்கு வெட்டப்படும் மரங்களுக்கு  ஈடாக சாலையின் இருபக்கமும் நிழல் தரும்  நாட்டு மரங்களை நட்டு பராமரிக்க ஒத்துக்கொண்ட  ஒப்பந்த வாசகத்தை சாமிகளே  வாசித்து தமிழிலும்  சொன்னார். இது  தொடர்பாக  நீதிமன்றங்கள்  உத்தரவிட்டும் , நீங்கள் ஒத்துக் கொண்டதை செய்ய வில்லை. குளிர்ந்த பூமி இன்று வெக்கை காடாகத் தகிக்கிறது. ஆகவே இந்த சாலை முற்றுகை.
இதைக்கேட்டு விழிபிதுங்கிய மேலாளர், “ இது டில்லியில் உள்ள நிர்வாகம் தான்  முடிவெடுக்க முடியும் . நாங்கள்  எதுவும்  செய்ய இயலாது . நீங்கள் தயவுசெய்து எங்கள் மீது கருணை காட்டி போக்குவரத்துக்கு  ஒத்துழைப்பு கொடுங்கள். இருபக்கமும் இருமாநில சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில்  காத்துக் கிடக்கின்றன. இருமாநில மக்களுக்கு  உதவுவதற்காக  கருணையோடு முற்றுகையை கைவிடுங்கள் சாமிகளே”,  என்று கெஞ்சி காலில் விழப் போனார் .  ஊடகங்கள்  மூலம்  செய்தி அறிந்து  மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும்  வந்து விட்டனர். அவர்களிடம்  மேலாளர்  முறையிட்டார்.ஆட்சியரும் , காவல்துறை கண்காணிப்பாளரும் , தரையில் துண்டை விரித்து  அமர்ந்திருந்த  சாமிகளிடம்  குனிந்து , முறையீட்டைக் கேட்டனர். சாமிகள் , “ மாவட்ட அதிகாரிகள்  எமக்காக குனியவேண்டாம் , இந்த நியாயத்துக்காக  குனியுங்கள்” என்று எழுந்து  அந்த சாலை ஒப்பந்தக் கோப்பைக் காட்டினார். அந்தக் கோப்பின்  சாராம்சமும் , நீதிமன்ற உத்தரவுகளும்  அதிகாரிகள்  அறிந்ததே  . மாவட்ட ஆட்சியர்  சுங்கச்சாவடி மேலாளரை அழைத்து  , “ இன்றே  ஆள்களை விட்டு  உரிய இடைவெளிகளில்  குழி தோண்டி இந்த மரக்கன்றுகளை  நட்டு , அவை வளரும் வரை நீரூற்றி , வேலிபோட்டு , பராமரிக்கணும்.. இந்த வேலைகளை முடித்து  இன்னும் ஒரு வாரத்துக்குள்  அறிக்கை தரவில்லை  என்றால் உங்கள் சுங்கச்சாவடி  சுங்கம் வசூலிக்க அனுமதிக்க மாட்டேன். இதற்கான உச்சமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்  நடவடிக்கை எடுப்பேன் ” என்று மாவட்ட ஆட்சியர்  கண்டிப்பான குரலில் சொன்னார்.

மேலாளர் தனியே போய் யாரிடமோ  அழுவதுபோல் இந்தியில்  பேசினார். பின், மாவட்ட ஆட்சியரிடம்  “ சாலையின் இருபக்கங்களிலும்  மரங்கள் நட்டு ஒரு வாரத்திற்குள்  அறிக்கை தருகிறோம் . மரங்கள் வளரும் வரை பராமரிக்கவும்  ஒத்துக்கொள்கிறோம் “ என்றார். சாமிகள் , மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் பரஸ்பரம்  நன்றி தெரிவித்துக் கொண்டனர். சாமிகள்  கையசைக்க  ஆஸ்ரம அன்பர்களும் , பொதுமக்களும் முற்றுகையை விலக்கி கொண்டனர். இருமாநில வாகனங்களும் நகரத் தொடங்கின.                                                       சாமிகள் மேலாளரிடம் , “  மக்களை  மதியுங்கள். அவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். “ ஊடகர் ஒருவர்  குறுக்கிட்டு , “ ஆன்மீக ஆஸ்ரமம் நடத்தும்  தங்களைப் போன்ற சாமிகள்  அரசியல்வாதியைப் போல் சாலை மறியல்  நடத்துகிறார் என்று குற்றச்சாட்டு  சொல்லப்படுகிறதே சாமிகள்  “  “ நாம்  அரசிடம் சம்பளம் பெரும் அரசு ஊழியர் அல்லர் . எங்களுக்கு  மக்கள் மனதை , வாழ்வியலை  மேம்படுத்துவதே நன்னடத்தை நெறிகள்.    பேசமுடியாத குரலற்ற அன்பர்களுக்காத் தான் பேசுகிறோம் .நல்ல தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், மோசமான  தீர்ப்பைத்  தவிர்க்கவும் இப்படி மக்களைத் திரட்ட வேண்டியதிருக்கு !. “  இந்த சம்பவம்  ஊடகங்கள் மூலம் நாடுமுழுவதும் பரவியது. சாலையோர  மரங்கள் நட அங்கங்கே  இயக்கங்கள்  தொடங்கின.

அவர்  சாமியார் என்ற அந்தஸ்தை  நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார் . அந்தப் பகுதியில் பசிபட்டினி என்று வருவோருக்கு, அவரவருக்கு  தக்க வேலையும் , உணவும் , எளியமுறையில் தங்கவும் வாய்ப்பளிக்கிறார் . முல்லையாறு பாயும் அப்பகுதியில் தரிசாகக்  கிடந்த நிலங்களின்   உரிமையாளர்களிடம் பேசி  அவற்றை தமது இறைப்பணி இயக்க அன்பர்கள்  மூலம்  விளைநிலங்களாக்கினார். அந்த  மாவட்டத்திலேயே  தங்கள் அமைப்பு பெரிய அளவில் விவசாயம் செய்து விவசாய விளைபொருள்களை உற்பத்தி செய்து, விவசாய பொருளாதாரத்தையும் , விவசாயிகளையும் பாதுகாக்கும் அமைப்பு. அதனால் மாவட்ட வளர்ச்சி ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு   அனுப்பவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்  அனுமதி பெற்றுவிட்டார். அக்கூட்டங்களில்   இறைப்பணி இயக்கம் சார்பாக ஒருவர்  கலந்து கொள்வார். மாவட்ட வளர்ச்சிக்கு வரும் நிதி , அதை உரியவாறு செலவு செய்வதை கண்காணித்து  ஊழல் நடைபெறுவதைக் கட்டுப் படுத்தி வருகிறார். மாவட்டநிர்வாகம் சீராக நடைபெற உதவியாக இருப்பதால்  மாவட்ட நிருவாகத்துக்கும் சாமிகளால் நல்ல பெயர். இம்மாவட்டத்தில்  வேலையின்மையோ, அடிப்படை மருத்துவ வசதி இன்மையோ இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது . இப்படி  அவரது இயக்கத்தின் மூலம் நடைபெறும் செயல்பாடுகளைக் கண்டு  அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும்  கவனிப்பிக்குள்ளானது.                                                             

அவரது  இயக்கப் பணிகளைப் பாராட்டி உலகெங்கும்  இருந்து  பெரும் பணக்காரர்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கிடைக்கும்  ஒவ்வொரு ரூபாய்க்கும் முறையாக கணக்குகளைப்  பராமரிக்க பத்துபேர் கொண்ட குழுவே இருக்கிறது . இவரைக் கண்காணிக்க மத்திய அரசு பல நபர்களை  இவரது  இயக்கத்தில் ஊடுறுவச் செய்துள்ளதும்  அவர் அறிந்தே வைத்திருக்கிறார். ஆகவே படு சூதானம் , பதனம், சொல்லிலும் செயலிலும் இருக்கும்.

இவரைப் பேட்டிகாணும்  ஊடகக்காரர்கள் , “ சாமிகள், உங்களது பேச்சும் , செயலும்  கம்யுனிஸ்ட் கொள்கைக்காரர் மாதிரி தெரியுதுன்னு சொல்றாங்க. நீங்க கம்யுனிஸ்ட் சாமியாரா ?”

“நீங்க  உங்க மனசில எம்மைப்  பற்றி என்ன வேண்டுமென்றாலும்  மதிப்பீடு  செய்ய உரிமை உங்களுக்கு உண்டு. அதை நாம்  தடுக்க இயலாது.  நாம் யாராக , எப்படி இருக்க வேண்டுமோ , யாரை முன்னோடி யாகக் கொள்ள வேண்டுமோ , அப்படியே  நடக்கிறோம். எமக்கு முன்னோடியாக புத்தரும் , திருவள்ளுவரும், திருமூலரும், அவரை அடியொட்டிய சித்தர்கள் பலரும், வள்ளலாரும் , டால்ஸ்டாயும் , ரஸ்கினும் காந்தியும்  இருக்கிறார்கள். மக்கள்  தொண்டில்  இவர்களைப்  பின்பற்றும் நாம் , மகான் மார்க்ஸையும் பின்பற்றுவதாக நீங்கள் கருதினால்  நமக்குத் தடையில்லை. மக்கள்பணி மூலம் இறைவனைக் காண்பதே எம் நோக்கம்.  நடமாடும் கோயில் நண்பர் நாம்.  நாமாருக்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். இது தான் எம் அறவியல் . இதில் அரசியல் கண்டால் ,அது உங்கள் மதிப்பீடு சார்ந்தது. “                                                 

இன்னொருவர்  கேட்டார். “ சாமிகள்  தங்கள் பூர்வாசிரமம் பற்றி …”  “ நதிமூலமும் , ரிஷி மூலமும் உலகார் பார்ப்பதில்லை  “ மற்றொருவர் கேட்டார்;  “ சாமி உங்கள் ஆசிரம நடைமுறைகள்  பிற ஆஸ்ரம நடைமுறைகளில்  மாறுபட்டிருக்கிறது  என்ற விமர்சனம் உள்ளதே “  “ எமது ஆஸ்ரமம் . நம்பிக்கையிழந்த மனிதர்களை வாழ்விக்கும்   நம்பிக்கையாகவும் மனிதரை மேம்படுத்தும் வாழ்வியல் நடைமுறை களுக்கு  ஒத்திசைந்ததும் ஆகும் . நீங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். பாருங்கள் , விவாதியுங்கள். எமக்கு மறைமுகத் திட்டம் ஏதுமில்லை. !” என்ற  ஒரு விளக்கத்தை சாமிகள் கொடுத்தபின்  இதுமாதிரி கேள்விகள் எழவில்லை. ஆனால்  சாமிகள்   நடைமுறையில்  எப்போது சறுக்குவார்  என்று  வலை விரித்துக் காத்திருப்போர்  பலர் உண்டு. பலர்  சாமிகளை தம் மேடையில்  பயன்படுத்திக்  கொள்வர். ஆனால் சாமிகள் எதிலும் சிக்காமல்  தமக்கான  அடையாளங்களோடு  செயல்படுகிறார்.சாமிகள் சொன்னது போல் கட்செவிஅஞ்சல்  செய்தியை எங்கள்  நண்பர் குழுவில்  பகிர்ந்து விட்டு  அவரை சந்திக்க புறப்பட்டேன். சாமிகள் பூர்வாஸ்ரமத்தில்  எனது பள்ளித் தோழர். அப்போது அவரது பெயர் நாகையா. நாகேஷ்  என்று கூப்பிடுவோம். நாங்கள்  இருவரும் சுருளிபட்டியில் ஆரம்பப் பள்ளியிலும், பின் ராயப்பன்பட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு  வரையிலும்  ஒன்றாகப் படித்தோம். நல்லா படிப்பான். விளையாடுவான். சினிமா பார்ப்பான். எங்களை விடக் கூடுதல் நேரம்  நூலகத்துக்கு போவதும்  அங்கேயே படிப்பதும், வீட்டிற்கு எடுத்து  வந்தும்   புத்தகம் படிப்பதுமாக இருப்பான். நான் பக்கத்தில் பாளையத்தில் கல்லூரி படிப்புக்குப் போனேன். அவன் அப்பாவுக்கு துணையாக  விவசாயம் பார்க்க வேண்டிய நிர்பந்தம்.                                                        

அப்போது  அஞ்சல்வழி கல்வி  அறிமுகமான காலம்.  அவன்  அஞ்சல்வழியில்  படித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான். மழை பொய்த்தது. உணவுக்கே  பஞ்சம் வந்தது. இருந்த  நிலத்தை  விற்று  தங்கைக்கு  திருமணம் செய்வித்தார்கள். அவன் குடும்பத்தை பராமரிக்க  கேரளாவில்  ஏலத்தோட்டதுக்கு வேலைக்குப் போனான். தனது ஒரேமகனுக்கு  நல்ல வாழ்க்கை அமையவில்லையே என்ற கவலையில்  அப்பா  இறந்தார்.  அம்மாவுக்கு துணையாக ஊரில் தங்கி  விவசாயக்கூலி வேலைக்குப் போனான் . வாட்டும் வறுமையிலும்  அவன்  நூலகத்தில்  வாசிப்பதை விடவில்லை.                                                           

நான்  ஆசிரியர் பயிற்சி  விடுமுறை நாள்களில்  நாகேசுடன்  அளவளாவுவேன். அவனது வாசிப்பின்  ஆழமும் விரிவும்  எனக்கு ஆச்சரியமாக இருக்கும். கல்லூரியில்  முதுநிலை படித்த எனக்கே பல சந்தேகங்களைத்  தீர்ப்பான். எனக்கு முதுநிலை ஆசிரியர் பணி திண்டுக்கல்லில் கிடைத்தது . அவனை ஊரில் சந்திக்கும் போது எப்படியாவது  அஞ்சல்வழியில் ஒருபட்டம்  படித்து சர்விஸ் கமிஷன் தேர்வு எழுது . நீ நிச்சயம் பாஸ் பண்ணி விடுவாய் . எனக்கு மேல் உயர்ந்த அதிகாரியாகி விடுவாய்  என்றெல்லாம் உற்சாகப் படுத்துவேன்.  அவன்  விரக்தியோடு  சிரித்து பெருவிரலைச் சுண்டி கைகளை விரித்து காசு இல்லை என்று தெரிவிப்பான். எனக்கு  மனசு வலிக்கும்.

அப்புறம்  அடுத்தடுத்த  விடுமுறைகளுக்கு வரும்போது அவனைப் பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் அவனது அம்மா  இறந்து விட்டதாகவும்  அவன் சுருளி அருவிக்கு  வருவோருக்கு  வழிகாட்டியாகத் திரிகிறான். அங்குள்ள  சாமியார்களோடு சேர்ந்து  கஞ்சா குடிக்கப் பழகிக் கொண்டான்  என்று ஊரில் சொன்னார்கள். அவனைப் பார்க்க வாய்க்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகளும் பிறந்தன. கம்பம் நகருக்கு பணிமாறுதல் பெற்று வந்து விட்டேன். அப்போது  அறிவொளி இயக்கம் நடந்தது. அதில் நானுமொரு  ஒருங்கிணைப்பாளராக  இருந்தேன். கிராமப்புறங்களில்  கல்வியறிவின் முக்கியத்தைச்  சொல்ல நாகேசை அழைத்து கிராமப்புற மக்களுக்கு கதைகள். பாட்டுகள் மூலமாக சொல்லச் செய்தேன். அந்த நாள்களில் எங்களோடு  உற்சாகமாகப் பேசுவான். அவனது பேச்சில் ஈர்ப்பும்  நம்பிக்கையும்  இருக்கும். ஆனால் அவனது வாழ்க்கை  வறண்டிருக்கும். அவனை  பல ஊர்களில் எழுத்தறிவு  கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங் களில் கலந்து கொள்ளச் செய்தோம். அவனது  பங்கேற்பு நிகழ்ச்சிக்கு உத்வேகம் ஊட்டும். அவன்  எங்களோடு சாப்பிடுவான். ஆனால் அவனது  பணிக்கான சிறு மதிப்பூதியம்  கொடுத்தால் வாங்க மறுத்து விடுவான். எங்களுக்கு  மனது  பிசையும். குற்றவுணர்வு உறுத்தும். இருந்தாலும்  இந்த விழிப்புணர்வு  பிரச்சாரங்களின் போது  அவன்  தனது வாழ்வின் துயரங்களை, அவனை மயக்கும் கஞ்சாவை மறந்திருக்கிறானே  என்று தொடர்ந்து அவனை பயன்படுத்தி வந்தோம்.  

இந்த சமயத்தில்தான்  கரசேவை செய்வதற்கு இந்த மாவட்டத்தில் இருந்து இலவசமாக  அயோதிக்கு ஆள்கள் அனுப்பபடுகிறார்கள் .இதில் கலந்து கொள்பவர்களை அலகாபாத் , மதுரா ,காசி, ஹரிதுவார், ரிஷிகேஷ்  முதலான ஊர்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என்று  சுருளி தீர்த்த  சாமியார்கள் நாகேசையும்  அழைத்தனர். இலவசமாக ஊர்சுற்றும் ஆசையில்  அவனும் கிளம்பிவிட்டான். அந்தப்  பேரிடிப்புக்கு போனவர்கள் திரும்பி விட்டார்கள். உள்ளூரில் மக்கள் இரண்டுபட்டுப் போனது பார்த்து  மனம் கசந்து புழுங்கினர். அவர்கள் வடக்கே அந்த ஊரில் அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன்  என்று  எவரிடமும்  பேச்சில்லை. தொண்டையில் சிக்கிய முள்போல்  விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியாமல்  மனதில் புழுங்கினர் . நாகேசும் , சாமியார்களும்  திரும்பவில்லை. என்ன  ஆனார்கள்  ஏதானர்கள்  தகவல் இல்லை.

ஐந்து வருடம்  கழித்து, நாகேசிடமிருந்து  கடிதம்  வந்தது. “ ஊர்சுற்றுவது  மனதுக்கு  மாற்றத்தை தரும் என்று கரசேவகர்களுடன் போனேன். ஆறா துயருக்கு  , தீராபழிக்கு ஆளாக இருந்தேன். நம்ம ஊர் ஆள்களை முதலில்  ஹரிதுவாருக்கு  அழைத்துச் சென்றார்கள். அங்கே  பெருக்கெடுத்தோடும் கங்கையின்  உக்கிரம் போல வந்தவர்கள் எல்லாம்  மசூதியை இடிக்கப் போகிறோம் என்று ஆர்பரித்தார்கள். பாபர்மசூதியை இடிப்பதே முதல்கட்ட கரசேவை. பிறகு ராமர்கோயில் கட்டுவது இரண்டாவது கட்டசேவை என்று உற்சாகமாகப்  பேசினார்கள். நம் விரலைக்கொண்டே நம் கண்களைக் குத்தப் போகிறார்கள். நாம் தாயா பிள்ளையா மாமன் மச்சானா பழகி  உறவுகொண்ட  முஸ்லிம் மக்களுக்கு  துரோகம் இழைக்கச்   செய்யப் போகிறார்கள் என்று நொந்தோம். மனசில் தீப்பற்றியது. நானும் என்னுடன் வந்த சாமியார்களும்  அந்த கும்பலிலிருந்து பிரிந்து  இமயமலை பக்கம் நடந்தோம்.                                                                  

அங்கே சாமியார்களுக்கு ஏகப்பட்ட மரியாதை. விதவிதமான சாமியார்கள் திரிந்தார்கள். சாமியார்  போர்வையில் என்ன தப்பு செய்தாலும் கேட்பார் யாருமில்லை.  ஆனால் நாங்கள் உண்மையான சாமியாராக இருக்க  நினைத்தோம் . இமயமலை  வனங்களுக்குள்  திரிந்தோம். என்னுடன் வந்த இருவர் குளிர் தாங்காமல் ஜீவசமாதி அடைந்தார்கள். நானும் இன்னொருவரும்  ரிசிகேசுக்கு  மேற்புறம் உள்ள ஆசிரமத்தில் இணைத்தோம் . பிராணாயமம் முதலான தியானம் மற்றும் யோகா பயிற்சிகள்  பெற்றோம். அதிலே  மூழ்கினோம்.ஒரு சந்தர்ப்பத்தில்  அந்த ஆசிரமத் தலைமையும் அடிப்படைவாதக் கும்பலுடன்  தொடர்பு இருந்ததை  அறிந்தோம். ஊருக்கு திரும்புவதாக கிளம்பி  வேறுபகுதிக்கு சென்று  குடிசை அமைத்து  தியானத்தில் ஆழ்ந்தோம். எனது முகப்பொலிவையும் , சிந்தனையையும் உணர்ந்த   பல ஐரோப்பியர் என்னிடம்  சீடர்களாக சேர்ந்தனர். எனது ஆன்மிக உரைகளுக்கு நான் படித்த  திருமூலர்,சித்தர்கள் , வள்ளலார், டால்ஸ்டாய், புத்தர், காந்தி நூல்கள் உதவியாக இருந்தன. என்னிடம்  ஞானம் பெற்றதாக சொன்னவர்கள் ஆசிரம விரிவாக்கத்துக்கு  உதவி செய்வதாக உறுதி அளித்தனர். ஆஸ்ரமம் அமைத்து  தனக்குள்ளே ஓடுங்குவதற்கு பதிலாக , பசி பட்டினியில் வாடும் மக்களுக்கு உதவுவதே  இறைவனை அடையும் சிறந்தவழி  என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி  அத்தகைய இறைபணிக்கு உதவுங்கள்  என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். எங்கோ தெரியாத இடத்தில்  சேவை செய்வதற்கு , நாம் பிறந்த மண்ணில் துயருற்றோருக்கு  உதவ முடிவு செய்துள்ளேன். 

இது தொடர்பாக நமது மாவட்ட ஆட்சியரிடம் பேசினோம். அவர் உதவுவதாக  உறுதி அளித்திருக்கிறார். கம்பத்திற்கு அருகே சுருளி போகும் சாலையில்  ஒரு ஆஸ்ரமம் அமைக்க உள்ளோம் . நாம்  தற்போது பழைய நாகையா இல்லை.  பூஜ்யஸ்ரீ அன்பானந்தசாமிகள். நீங்களும்  இனி அப்படியே அழைக்கவேண்டும். நமது பால்யம் மறக்க இயலாதது. வேறு பிறவி எடுத்து மக்களுக்கு உதவவே  விரும்புகிறோம். இக்கடிதத்தை  நீங்கள் கிழித்து விடுவதே நம் பால்ய அன்புக்கு செய்யும் கடமை. பூஜ்யஸ்ரீ அன்பானந்தசாமிகள். இறைப்பணி இயக்கம்.”

இது  எனது நினைவிலுள்ள கடித வரிகள். இருபது வருசங்களுக்கு மேலாக தம் ஆஸ்ரமத்தின் மூலம் இந்த மாவட்டத்தின் முகத்தையே மாற்றிய  அவரைத்தான் இப்போது பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன். ஊர் முழுவதும் காவலர்களது   தலைகளாகத் தெரிகிறது. முச்சந்திக்கு  முச்சந்தி  அதிரடிப்படை வாகனங்கள்  நிற்கின்றன. இன்னைக்கு என்ன விபரீதம் நடந்தது. சந்தேகம் வரவே, ஆஸ்ரமத்துக்குத் திரும்பும் வழியில் உள்ள டீக்கடை அருகே  வண்டியை  நிறுத்தி  விசாரித்தேன். “  இன்னைக்கு பாபர்மசூதி இடிப்பு தீர்ப்பு வந்திருக்கில்ல. கலவரம் எதுவும் வரலாமுன்னு போலிசை குமிசிருக்காய்ங்க “

அட, இந்த மனுசர்  இன்னைக்குப் போய் , மௌனத்தைக் கலைக்கிறேன் என்று சொல்றாரே. என்று நினைவு ஓடிக்கொண்டிருக்கும் போது  என்னைக் கடந்து  நாலு ஊடகக்காரர்கள் காமிரா, மைக் பைகளோடு ஆஸ்ரமம் நோக்கி இருசக்கரத்தில் பறந்தார்கள். மணியைப் பார்த்தேன். ஐந்து ஐம்பது. நானும் விரைந்தேன். எனக்கு முன்னால் போனவர்கள் ஆஸ்ரம நடுஅரங்க மேடையின்  முன் காமிரா மைக்குகளோடு நின்றார்கள். முகக்கவசம் அணிந்த ஆஸ்ரமப் பனியாளர்கள் நால்வர் வந்தவருக்கெல்லாம்  டீ கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் முன்வரிசையில் இடம் தேடி  அமர்ந்தேன்.

சரியாக ஆறுமணி ஒலிக்க ,முகக்கவசம் பூண்ட  பூஜ்யஸ்ரீ அன்பானந்த சாமிகள் மேடைக்கு வந்தார். எல்லோரும் எழுந்து நின்றோம்.  அவர் கையமர்த்த உட்கார்ந்தோம். அவர் , “ அன்பர்கள் எல்லாருக்கும் இறைப்பணி அமைப்பின் சார்பாக வணக்கமும் ,ஆசிகளும். இன்றைய நாள் நிகழ்வொன்று  எமது மௌனத்தை கலைக்கச் செய்து விட்டது. இனி மௌனம் இல்லை ,உரக்க ஒலிப்பதும் , மக்களை இணைத்து மக்களது சௌஜன்யா வாழ்வுக்காக  செயல்படுவதும்  தாம் . இதுவே  எமது இன்றைய செய்தி ! நன்றி. நீங்கள் போய் வாருங்கள்   “

ஒரு ஊடகவியலாளர் ,” சாமி, வேறு செய்தி இல்லையாங்க சாமி. “ 

“ உண்டு. நீங்கள் இனி களத்தில்  எம்மோடும் , நம் மக்களோடும் எப்போதும் இருப்பீர். அப்போது அறிந்து கொள்வீர் ” என்று வணங்கி உள்ளே சென்றார்.