Kalapaniyil Communistugal | களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் – 3 பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள்

ஒரு சுதந்திர நாட்டில் வாழும் மக்களை நெறிப்படுத்தவும் அவர்களுக்கான அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை உருவாக்கித் தரவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முறையான கட்டமைப்பும் தலைமைப் பண்பும் தேவைப்படுகிறது. நமக்கான செயல்திட்டங்களை வகுக்கவும் அவற்றை முறையான வழியில் நடைமுறைப்படுத்தவும் அரசியல் அமைப்பும் அதன் வழியே கட்சிகளும் உருவாக்கப்பட்டன

கட்சிகள் உருவானதன் அடிப்படையே மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களை பொருளாதாரம் கல்வி தொழில் போன்ற அடிப்படை வசதிகளை அடைய வைக்க உதவி செய்யும் நோக்கத்தை வளர்த்தலே எனலாம்.

முறையற்றும் கட்டமைப்பில்லாமலும் வாழும் மக்களிடையே எவ்விதமான திட்டங்களையும் செயல்படுத்துதல் மிகக் கடினம். இத்தகு சூழலில் கட்சிகள் உருவாக்கப்பட்டு முறையான தேர்தல்கள் வழியே நிலையான அரசுகள் அமைந்தன. நாட்டின் வளர்ச்சியையும் அதன்வழியே மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதும் ஓர் அரசின் தலையாயக் கடமையாகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் மூலம் சமூகம் மற்றும் பண்பாடுகள் சிறந்து விளங்கவும் கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. வாகனத்திலும் வானத்திலும் வலம் தரும் தலைவர்களால் மட்டுமே கட்சிகள் உயிர் பெறுவதில்லை.வளர்ந்து நிற்பதுமில்லை. தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தான் சார்ந்த கட்சிக்காக தியாகம் செய்யவும் துணிந்து நிற்கும் தொண்டர்களாலேயே கட்சிகள் உயிர் வாழ்கின்றன. ஒவ்வொரு தேர்தலையும் தொண்டனின் மீது கொண்ட நம்பிக்கையாலேயே கட்சிகள் எதிர் கொள்கின்றன.அத்தகு தொண்டர்களின் இடைவிடாத உழைப்பும் கட்சியை வளர்க்க அவர்களின் தீவிர முயற்சியும் தலைவர்களை உலகறிய வைக்கின்றன.

பொருளாதாரத்தை எதிர்நோக்கி வாழ்வை அமைத்துக் தொண்டு வசதிகளைக் கூட்டும் இன்றைய அவசரத் தேடல்கள் நிறைந்த உலகத்தின் இயக்கத்தில் கட்சிகளின் கொள்கைகளும் மாறி விடுகின்றன.கட்சிகளை நம்பி வாழ்வையே ஒப்படைத்த தொண்டர்களும் தமது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கத் துவங்குகின்றனர். அரசியலின் வழியே இன்றைக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற மனக்கணக்குகளுக்குள் கட்சிகள் இயங்கத் தொடங்கி விட்டன. இதன் காரணமாக சமூகத்திற்கான தேவைகளைக் கேட்டு அடிப்படை வசதிகளைப் பெருக்கி தனது சுற்றுப்புறத்தை கிராமத்தை வலுப்படுத்திக் கொள்ளும் எண்ணத்தை செயல்படுத்திட கட்சிகளை யாரும் அணுகுவதில் மிகுந்த சுணக்கம் ஏற்படுகிறது. .லாபம் செழிக்கும் வணிகமாக கொள்ளை அடிக்கும் சுயநலமாக இன்றைய அரசியல் மாறிவரும் சூழலில் இந்த நூல் கூறும் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கட்சியாகத் தொடங்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை மக்களுக்கு சேவை ஆற்றுவதன் கடமையை கைவிடாமல் செயல்படும் பொதுவுடமைக் கட்சிகளின் அடிப்படை உயிர்நாடிகளாக வாழும் செயல்வீர்களை உலகத்திற்கு அறிமுகம் செய்கிறது இந்நூல்.

விவசாயியாக, பஞ்சாலை ஊழியராக, பொதுத்துறை ஊழியராக, தையல் காரராக, விவசாயக் கூலியாக, தொலைபேசித்துறை ஊழியராக,ராணுவ வீரராக எழுத்தாளராக, சண்டைக் கலைஞராக என பலதரப்பட்ட மக்களும் இவ்வியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு சமூகத்தின் முன்னேள்றத்திற்காக தமது வாழ்வின் எல்லா நிலையிலும் உழைத்திருக்கின்றனர். போராட்டத்தில் முன்நின்று தமது குருதியையும் இம்மண்ணில் சித்தியிருககின்றனர்‌. காவலர்களின் கைத்தடிகளுக்கு தமது உடல்களை உணவென ஒப்படைததிருக்கின்றனர். பொதுப் பிரச்சனைகளின் தீவிரப் போக்கில் கைதாகி சிறைச்சாலைகளில் தம் சுவடுகளைப் பதித்திருக்கின்றனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேணடி களம் காணும் இவர்கள் தங்களது அரசு வேலைகளைத் துறந்தும் அதிகமாகச் சேரும் நிலையில் பணம் வருகையிலும் மனம் மாறாது கொள்கையின் பின்னே கொடி பிடித்தும் தமது நோக்கங்களை உலகிற்கு வெளிப்படுத்திய சாதாரணத் தொண்டர்களின் மீதான வெளிச்சம் பாய்ச்சும் நூல் இது.

கட்சியை வளர்த்து அதன் வழியே தமது வாழ்வையும் வளமாக்கிக் கொள்ளும் பொதுத் தன்மையிலிருந்து விலகி அப்போதும் இப்போதும் (எப்போதும்) பொதுப் பிரச்சனைகளுக்காக ஒன்றுகூடி தீர்வை நோக்கி நகரும் அடிப்படையை மாற்றாமல் வாழும் கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்வை வரலாறாக்கும் இந்நூலில் சுமார் 60க்கும் மேற்பட்ட தொண்டர்களின் களப்பணியும் அதன் வழியே அவர்கள் தங்களது சொந்த வாழ்வில் இழந்திட்ட வாய்ப்புகளையும் துறந்திட்ட வசதிகளையும் இனிவரும் தலைமுறையினருக்கு காட்சிப்படுத்தும் ஆவணமாக அமைந்துள்ளன இந்நூலின் வாழ்வுப் பெருவெளிகள்.

தலைவர்களின் வரலாறுகள் பெருகி விட்ட இன்றைய காலகட்டத்தில் தொண்டர்களின் வரலாற்றைத் தேடி அலைந்து ஆராய்ந்து கண்டறிந்து ஆவணப்படுத்தும் எழுத்தாளரின் பொதுநலச் சிந்தனையை நூல் சிறப்புற வெளிப்படுத்தியிருக்கிறது. நூலாசிரியர் குறிப்பிடுவது போல இந்நூலில் இடம்பெறும் பலர் தமது சொந்த வாழ்வைப் பற்றி தகவல் தர மறுத்திருக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இயக்கத்தின் போக்கும் அதன்மூலம் மக்களின் நிம்மதியான வாழ்வுமே முக்கியம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கத்தில் இருந்து சேவை ஒன்றையே லட்சியமெனக் கொண்டு வாழ்ந்து வரும் இத்தோழர்களின் வாழ்வில் இடமபிடித்த ஏற்ற இறக்கங்களை நூல் முழுமையாக படம்பிடித்துக் காட்டுகிறது.

நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு அவநம்பிக்கையைத் துடைத்தெறியப் போராடும் இன்றைய நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்நூல் காட்டும் நாயகர்களின் வாழ்க்கை மிகச்சிறந்த பாதைகளைக் காட்டும். எவ்வளவு துயர்கள் வரினும் சோதனைகள் இடரினும் நமக்காகக் காத்திருக்கும் வாழ்வின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையிலும் தமது உழைப்பின் மீது கொண்ட உறுதியிலும் இவர்கள் வாழ்ந்து காட்டும் வாழ்வு தானே இன் வரும் தலைமுறையினருக்கான நல்லதொரு வழிகாட்டியாகும் என்பதை நூல் நெறிப்படுத்துகிறது.

பள்ளி செல்ல முடியாத சூழலில் வேலையில் இருந்தபடி தாமே சுயமாக கல்வியைக் கற்றுக்கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் ஆங்கிலம் சிறப்புப்பயிற்சி கொடுத்த தோழர் எம்.செல்லாராம் அவர்களது முயற்சி எவ்வளவு வீரியமானது என்பதை உணரவேண்டும்.

இந்திய விடுதலை தொடர்பான செய்தியை முன்கூட்டியே வெளியிட்டமைக்காக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு ஓய்வூதியம் பெற முடியாமல் போனாலும் தோழராகவே தொண்டு புரியும் ரெட் சல்யூட் சுப்பையாவின் வாழ்வை வாசிக்கையில் விழிகளில் மட்டுமல்ல மனதிலும் கண்ணீர் கசிகிறது.

மத்திய அரசுப் பணியான ரயில்வேயில் வேலை பார்த்த போதும் வெள்ளைச் சட்டை வேட்டி செருப்பு குடை என நடக்கையில் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தவர் தோழர் ராக்கையா. அவர் தனது வாரிசுகளையும் பொதுவுடமைவாதிகளாகவே லளர்ததார் என்பது அவரது வைராக்கியத்தின் வெற்றியைப் பறை சாற்றுகிறது.

காந்தியின் பேத்தி இலாகாந்தி ஆப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட் இயக்க வீராங்கனை என்ற செய்தியும் வாசிக்கும் நமக்கு வியப்பையே தருகிறது.

தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களது காலகட்டங்களில் வெவ்வேறான சூழல்களில் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக பலவித வடிவிலான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இழந்தவை எத்தனையோ. சொத்துகளை இழந்தவர்கள் வேலையைத் துறந்தவர்கள் தமது இளமைக் காலத்தை இழந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் என இவர்கள் தமது வாழ்வில் இழந்தது எல்லாமே மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அவர்களின் பாதைகள் சிறப்புறவுமே என்பதை இனிவரும் தலைமுறை உணர்ந்து கொள்ள இந்நூல் வழிகாட்டும்.

நூல் பேசும் தோழர்களின் எல்லா வரலாற்றையும் விவரிக்கும் விருப்பம் இருப்பினும் ஒற்றைக் கட்டுரைக்குள் அடக்கி விட முடியாத ஆழவயப்பட்டவை அவை.இயக்கத்தின் ரத்தநாளங்களாகவும் உயிர்நாடிகளாகவும் விளங்கும் இவர்களின் தன்னலமற்ற சேவையையும் தியாக மனப்பான்மையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் இப்பணி சிறப்படையும் என்பதுவே நூலின் இலக்கும் அதன் வெற்றியும். அவ்வகையில் களப்போராளிகளை நமக்கு முழுமையாகப் படம்பிடித்துக் காட்டி பொதுநலத்தில் தன்னையும் பிணைத்துக் கொள்கிறது நூல்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் – 3 பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள் 

ஆசிரியர் : ஜி. ராமகிருஷ்ணன்

வெளியீடு  : பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2022

பக்கம் : 352

விலை : 250

 

நூலறிமுகம் ஏழுதியவர் 

இளையவன் சிவா

கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *