நூல் அறிமுகம்: “கலப்பைப் புரட்சி” – வில்லியம்ஸ்கவிஞர் Williams Antony அவர்களுக்கு நன்றி. ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துவரும் விவசாயிகளின் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்கப்படுவதைப்போல “கலப்பைப் புரட்சி” நூல் விமர்சனம் எழுதியிருக்கிறார். தொகுப்பைச் சாத்தியமாக்கிய அனைத்துக் கவிஞர்களுக்கும், அவசியமான தருணத்தில் அழகாக அச்சிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் புக் டே இணைய இதழ் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கலப்பை புரட்சி நூல் விமர்சனம் – கவிஞர் வில்லியம்ஸ் ஆன்டனி
————————————-

ஒரு கண்ணோட்டம்
” உழவே தலை”
” Agriculture is the backbone of India”
சரி.. சரி. கொஞ்சம் யதார்த்தம் நோக்கித் திரும்புவோம்.
தலைநகரின் கடும் குளிரையும், வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், பெருந்தொற்றையும் கண்டு அஞ்சாமல், தங்களது உரிமைகளை மீட்க, நெஞ்சுரம் மிக்க விவசாயிகள், எஃகு போன்ற உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தேவருக்கும் அசுரர்களுக்கும் 18 ஆண்டுகள் போர் நடந்ததாம். பாரதப் போர் முடிந்தது 18 நாட்களில். சேரன் செங்குட்டுவனுக்கும், கனகவிசயர்களுக்குமிடையே நடந்த போர் 18 நாளிகைக்குள் முடிந்திருக்கிறது. 18 மாதங்களுக்குள்ளாகவாவது முடியுமா என ஆதங்கத்துடன் கேட்க வேண்டியிருக்கிறது சரித்திரத்தில் இடம்பெறப் போகும் எழுச்சிமிக்க விவசாயிகளின் அறப்போர்.

பொதுப்புத்தியிலோ, தேசம் முழுமைக்குமோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சமூக அக்கறை கொண்ட, சிந்திக்கத் தெரிந்த படைப்பாளர்களாலும், கவிஞர்களாலும் இதனை எப்படி இன்னொரு செய்தியாக, தூரத்து நிகழ்வாக கடந்து செல்ல முடியும்.

கவிஞர்கள் எப்போதும் அநீதிக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் அங்கமாகவே இருந்து வந்துள்ளார்கள். தமிழ் மன்னர்கள் போருக்கு கிளம்பிச் செல்கையில் பல்துறை விற்பன்னர்களும், புலவர்களும் வாழ்த்துக்கள்

பாடி வழியனுப்பி வைத்துள்ளதாக இலக்கியங்கள் பகர்கின்றன. இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதி ஆற்றிய பங்கை பங்கை நாமறிவோம்.
அவ்வழியில் உரிமைகளை வென்றெடுக்க, அறப்போரில், தர்ம யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துச் சொல்லவும், மரியாதை செலுத்தவும் கவிஞர் நா. வே. அருள் அவர்களின் சீரிய முயற்சியில் உருவானதே “கலப்பைப்புரட்சி” எனும் ஏற்றமிகு கவிதைத் தொகுப்பு.

கவிதை வெள்ளாமையின் முன்னத்தி ஏர்களான சிற்பி பாலசுப்பிரமணியம், இந்திரன், ஸர்மிளா ஸெய்யித், ஆதவன் தீட்சண்யா, யவனிகா ஸ்ரீராம், யுகபாரதி, பாலைவன லாந்தர் உள்ளிட்ட 60 கவிஞர்களின் உணர்வு மயமான, எழுச்சியூட்டும் கவிதைகளின் தொகுப்பு கலப்பை புரட்சி.

கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயத்தை ஒப்படைப்பதற்கு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரும் அறப்போராட்டத்தை ஆதரித்தும், வாழ்த்தியும் எழுதியுள்ள கவிதைகளில் பொங்கி வழிகிறது உழுகுடிகளுக்கான அக்கறையும், ஆதங்கமும்.
அடைமழையாய் பொழியும் கவிதைகள் இடிமுழக்கமென ஆர்ப்பரிக்கிறது.

No description available.

“பொறுமை கலைந்து
புதுநீதி படைக்க
புறப்பட்டு வருகிறோம்
இறுகிய மனங்களில்
ஈரத்தைப் பொழிய
மழையாய் வருகிறோம்” என்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம்.

“நிலங்கள் போர்க்களங்கள்
டிராக்டர்கள் பீரங்கிகள்”
என முழங்குவது தொகுப்பாசிரியர் கவிஞர் நா.வே.அருள்.

“தகர்க்கும் குரல்களால்
தலைநகர் நடுங்கும் ”
என்பது யவனிகா ஸ்ரீராம்.

” துயில் புறந்தள்ளி
குளிர் காயும் தீக்கொழுந்து
மலர்ந்தொளிர அதிர்கிறது” இது அன்பாதவன்.

” அதிகாரத்தின்
திறவாதிருக்கும் கதவுகளை
நுகத்தடிகளால் உடைத்தெறிய
அவர்கள் முன்னேறி வருகிறார்கள்” என கட்டியம் கூறுகிறார் பாரதி கவிதாஞ்சன்.

முண்டாசுக் கவிஞன் பாரதியின் விடுதலைப் போராட்ட எழுச்சி கீதங்களுக்கு இணையாக இன்னும் பல. எனக்கொரு கனவுண்டு என்றுரைத்த அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங் என்ற மகத்தான தலைவனைப் போல், போராடும் விவசாயிகளுடன் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்ட உணர்வுமயமான கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

No description available.
கவிஞர் வில்லியம்ஸ் ஆன்டனி

“பசியெனும் நோய்க்கு
மருத்துவம் பார்த்தோம்
எங்கள் வியர்வையை
டிராக்டர்களுக்கு
டீசலாய் ஊற்றினோம்”
என்கிறார் இந்திரன்.

“இக்கவிதை
அவர்களது வெறுங்காலுக்கு செருப்பு
வெடித்த பாதங்களுக்கு களிம்பு
வீங்கிய கால்களுக்கு
ஒத்தடத் தவிடு”
என்பார் ஆதவன் தீட்சண்யா.

” அவர்களது பாதங்களை
மூத்த தாயொருத்தியின் ஆசியுடன்
முத்தமிட்டு இளகி வழிவிடுகிறது
நெடுஞ்சாலை ”
இது சந்துரு.

“கோதுமைக்கும் கோவணத்துக்கும்
வாக்கப்பட்ட குலம்கூடி
வாதைகளைத் தீர்க்கச் சொல்லி
நேரங்கணக்கா தவங்கெடக்கேன்” என உரைப்பது ஜே. ஜே. அனிட்டா

“வியர்வையைத் துடைக்கும் ஒரு நீளத்துண்டு
தோளில் கிடந்தாலென்ன
தலையில் டர்பனாக
சுற்றிக் கட்டப்ட்டிருந்தாலென்ன
நீயும் நானும் பங்காளி”
என்பார் பாலைவன லாந்தர்.

எடுத்துரைப்பதும் இடித்துரைப்பதும் தானே அறிவுடையோர் கடமை.

” கோதுமை வயல்களில்
கோல்ஃப் விளையாடும்
உங்கள் கனவு பலிக்காது ”
என்னும் ஸர்மிளா ஸெய்யித்தும்

” அவர்கள் கொடியில் இருந்த
ஏர்உழவர்கள்
இன்று தெருவில் கிடக்கிறார்கள் ”
என்றுரைக்கும் தொகுப்பாசிரியரும்,
“விவசாயத்தை அழிக்காம இருந்தா சரி, ஏன்னா
வாக்கரிசிக்கின்னு
நாலு நெல்லு மணியாவது
தேவை சாமி ”
என்கிற நிஷா வெங்கட்டும்
அதைத் தான் செய்திருக்கிறார்கள்.

கவிஞர்களின் உள்ளக்குமுறலாக, உணர்ச்சிக் குவியலாக 120 பக்கங்களில் நிறைந்திருக்கும் துடிப்பான கவிதைகள் அனைத்தும் “கலை மக்களுக்கே”என்பதை மீண்டும் வலியுறுத்தி, உரக்கச் சொல்கிறது.

கவிஞர்களிடமிருந்து பிரதிகளைப் பெற்று, கவனமாகத் தொகுத்து, எழுத்துப் பிழையின்றி செப்பனிட்டு, அழகான அட்டைப்படத்துடன் வடிவமைத்து, தற்பெருமை ஏதுமின்றி, தமிழுக்குத் தந்துள்ள கவிஞர் நா.வே.அருள் அவர்களின் அர்ப்பணிப்புள்ள பணி பாராட்டுதலுக்குரியது.  பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள இப்புத்தகத்தின் விலை ரூ. 110. பிரதிகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் : 044-24332424, 24332924.

வில்லியம்ஸ்