கலப்பைச் சிலுவை
•••••••••••••••••••••••••
விழாவைக் கொண்டாட வேண்டியவன்
தெருவில் இறங்கிப்போய்க் கொண்டிருக்கிறான்
முதல் முதலாய் அவனுக்கு ஒரு விழா மறுக்கப்பட்டிருக்கிறது.
அவன் தன் ஆயுதத்தை நிலத்தில் மட்டுமே பிரயோகிப்பவன்.
சகோதரர்கள் மீது போர் தொடுத்ததில்லை.
மனிதர்கள் போலிருக்கிறவர்கள்
அவன்மீது தொடுத்திருக்கும் போர் மூன்றாம் உலக யுத்தம்
தத்துவத்தின் பிள்ளைகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
கலவரங்களின் ரதயாத்திரையில்
இதெல்லாம் சகஜமப்பாவென
கண்டும் காணாமல் போகப்பழகிய
உங்கள் பெருந்தன்மையின் கோவணத்தை
இறுக்கிக் கட்டியபடி
விழாவைக் கொண்டாடுபவன்
தெருவில் இறங்கிப் போய்க்கொண்டிருக்கிறான்
நெடும்பயணம் நிகழ்த்தியவன்
தனது நெடுநாள் பசிக்காக மடியில் வைத்திருந்த
ஒவ்வொரு விதைநெல்லையும் ஊன்றியபடியே
துயரங்களின் சாயலென நடந்து போகிறான்.
தனது கண்களின் கண்மாயிலிருந்து
கால காலப் பொங்கலுக்காகக்
கண்ணீர்ப்பாசனம் நடத்தியபடியே.
எளிய பூனைகளை வஞ்சிக்கும் குரங்குகளின் தேசத்தில்
எனது ரத்தம் கலந்திருக்கும் இந்தக்கவிதை
களவு போகாத அப்பம் ஆகுமென நம்புகிறேன்.
அவனும் யேசுதான் ஆமென் சொல்வீர்களா?
நா.வே.அருள்
Leave a Reply
View Comments