எளிய மனிதர்களின் வாழ்வியலை காமுத்துரை தோழரை தவிர வேறு யாரால் இவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியும் என்பதை ‘கலவை’ நாவல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். கட்டுமான பணியாளர்களின் தினசரி நடவடிக்கைகள், அவர்களின் உழைப்பு, கட்டுமான பணிகளின் படிப்படியான வளர்ச்சி, அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், ஆதாயங்கள் என ஆரம்பித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை ஒரு விரிவான பார்வையை தருகிறது இந்நாவல். கதையின் மையமாக பூங்கொடி, குமாரின் உறவையும், அதனால் இரு குடும்பங்களுக்கு ஏற்படும் பூசலையும் மிக சுவாரசியமாக எடுத்து எழுதியுள்ளார்.
நாவலை வாசித்து முடித்திருக்கும் பொழுது ஒரு வீடு கட்டி முடித்துப் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார் ஆசிரியர். கதையில் வரும் மணல் லாரி தெரியாமல் நமது தெருவுக்குள் வந்தது போன்று ‘வரட்டூ… வரட்டூ… என்ற வார்த்தை காதில் ஒலிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. கட்டுமான பணிக்கு ஆட்களை சேர்த்து வேலை முடித்து அனுப்பும் வரை கங்காணிக்கு இருக்கும் பொறுப்பை, குமார் கதாபாத்திரம் மூலம் சரியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். சரியான நேரத்திற்கு கலவை மிஷின் வராமல் பதறி காத்திருப்பதும், செய்த வேலைக்கு ஒழுங்காக கூலி கொடுக்காமல் அலைய வைப்பதும், உள்ளூர் ஆட்களை விட்டு வெளியூர் ஆட்களை வேலையில் அமர்த்துவது என கட்டிட பணியாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் வரிசை படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
வேலை பார்க்கும் இடத்தில் குழந்தைகளை கூட்டி வந்து அவர்களையும் கவனித்த படி வேலை பார்க்கும் சித்தாள் பெண்களின் நெருக்கடியை வாசிக்கும் பொழுது நமக்கே அழுத்தத்தைக் கொடுக்கிறது. வேலையின் ஊடே சிறுநீர் கழிக்க இடம் கிடைக்காமல், கட்டுமான வீட்டில் உள்ள ஒரு சிறு அறையை பயன்படுத்தும் போது, ‘அது பூஜை அறை ‘ என அய்யாம்மா சொல்லும்பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை. பூஜைஅறை, கழிவறை என எந்த வித்தியாசமும் காணாமல் அவர்கள் புழங்கும் இடமாக நம் வீடுகள் இருக்கிறது என்பதை போகிற போக்கில் ஆசிரியர் குறிப்பிட்டு இருப்பது சிறப்பு.
கட்டிட வேலையில் கங்காணியாக ஒரு பெண் இருக்கமுடியும் என்பதை உணர்த்துகிறது அய்யாம்மா கதாபாத்திரம். தடாலடியான பேச்சும், மற்றவர்களை வேலை வாங்கும் அதிகார தோரணையும் மட்டுமல்லாது மகன் குமாரை காபந்து பண்ணி அவனுக்கு திருமணம் செய்து வைக்க அவள் செய்யும் சூழ்ச்சிகளும் அவளது குணத்தை எடுத்துக்காட்டுகிறது. பூங்கோடி விஷயத்தில் அவள் எடுக்கும் முடிவு உவப்பாக இல்லை.
குமார் – பூங்கோடி உறவில், பூங்கொடியின் காதல் உண்மையாக இருந்தாலும் குமாரின் நடத்தை அது உடல் தேவைக்காக மட்டுமே இருப்பதாக தெரிவதால், பூங்கொடி அவனுடன் சேராமல் இருப்பதே நல்லதாக படுகிறது. இருந்தாலும் தனக்கு ஒரு நியாயம் கிடைக்க அவள் எடுக்கும் பிரயத்தனங்கள் அபாரம். இறுதியில் அவளுக்கு கைகூடும் வாழ்வு மகிழ்ச்சியாக அமைவது திருப்தியைத் தருகிறது.
குமாரின் கேரக்டர் ஒழுக்கமற்றதாக இருப்பதை ஒத்துக் கொள்ளாதது போல் அதை பேலன்ஸ்டாக ஆசிரியர் கையாண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதெல்லாம் கட்டுமான பணியாளர்களிடம் சகஜமான விஷயம் என்பதை போன்ற கருத்தியலை திணிப்பது போல் உள்ளது. கதையின் இறுதி முடிவு சுபமாக இருந்தாலும் நம்பகத்தன்மையுடன் இல்லாமல் இருப்பதும் உறுத்துகிறது.
கதை முழுவதும் எளிய மக்களின் பேச்சு வழக்கில் எழுதி இருப்பது காட்சியும், மனிதர்களும் உணர்வுபூர்வமாக நம் கண் முன் கொண்டு வந்து சேர்க்கிறது. கதாபாத்திரங்களின் மன உணர்வுகளை அவர்களையே கூட யோசிக்க விடாமல், அவர்களையும், நம்மையும் சேர்த்து இழுத்துக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். கையில் எடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடும் அளவு எந்த தேக்கமும் இல்லாமல் கதை நகர்வது சிறப்பு. நன்றி.
நூலின் தகவல்கள்
நூல் : ” கலவை”
ஆசிரியர் : ம. காமுத்துரை
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
தொடர்புக்கு : 9500068144
விலை : ரூ.230
எழுதியவர்
கு. ஹேமலதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.