நூல் அறிமுகம்: மு.நியாஸ் அகமதுவின் ‘களவு போகும் கல்வி’ – முனைவர் சு.பலராமன்இனி உங்கள் குழந்தைகள் ‘கிராக்கிகள்’

உயர்கல்வி தொடர்பான GATS ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் ஏற்படப் போகும் பேராபத்தைக் குறித்து பேசும் நூல் ‘களவு போகும் கல்வி’. இந்த நூல் குறித்த பதிவுகளைப் பார்ப்போம்.

இந்திய அரசு, உலக வர்த்தக அமைப்பின் 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் இந்தியாவில் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் வணிக நிறுவனங்களாக அமைத்துக் கொள்வதற்கு இடம் அளிக்க முன்வந்துள்ளது. அதனடிப்படையில், சேவை துறையில் வர்த்தக உடன்படிக்கையில் உலக வர்த்தக அமைப்பு (WTO)கென்யா நாட்டில் தலைநகர் நைரோபியில் 2015 டிசம்பர் 15 முதல் 18 வரை நடத்தவிருக்கும் 10ஆவது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் சேவையின் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் (GATS) இறுதி செய்யப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டால் ஏற்படப்போகும் விளைவுகளை எச்சரிக்கையோடு கலந்துரையாடி விவரிக்கிறது இந்தப் புத்தகம். அதன்பால் கல்வி குறித்த பிரச்சினைகளைப் பேசிய நூல்களுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்த நூலாக களவு போகும் கல்வி உள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும், சந்தையில் நாம் அடிமைகளை உற்பத்தி செய்வோம், உயர் கல்வி என்பது பண்டமாக மாறும், மாணவர்கள் நுகர்வோர் (கிராக்கிகளாக) மாறுவார்கள், உள்ளூர் பெருமுதலாளிகளின் கையில் இருந்த கல்வி இனி உலகப் பெருமுதலாளிகளின் கையில் செல்லும் என்பதை வேதனை கலந்த பொறுப்போடு பேசுகிறார் நியாஸ் அகமது. இனி உங்கள் குழந்தைகள் கிராக்கிகள் என அழைக்கப்படுவார்கள், உங்கள் வீட்டுப் பெண்ணை அரசன் படுக்கைக்கு அழைத்தால் சம்மதமா?, காந்தியும் பகத்சிங்கும் தேசத் துரோகிகள் உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் தலைப்புகளில் கல்வி பறிபோகும் அபாயத்தை முன்வைக்கிறார்.

கல்வியும் மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் ஒட்டு மொத்த உயர்கல்வியும் நம் கையை விட்டுப் போகும். இதனால் ஏழை மாணவர்களுக்குக் கல்வி மறுக்கப்படும் என்பதை உணர்த்துகிறார் நியாஸ் அகமது. மேலும் உள்ளூர் கல்வி வியாபாரிகள் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை எதிர்க்கப் பெயரளவிலாவது சட்டம் உள்ளது. ஆனால் பன்னாட்டுக் கல்வி வியாபாரிகளை எதிர்க்க சட்டம் உள்ளதா? என்பதான வினாவை நம் முன் வைக்கிறார்.

கட்டற்ற அந்நிய முதலீடு உள்ளே வருவதால் இந்திய உயர்நிலைத் துறை பெரும் பன்னாட்டுச் சந்தையாக மாறும். விரைவில் கல்வித்துறை சேவை என்பதிலிருந்து விலகி முழு வணிக நிறுவனமாக மாறும் என்பதை உறுதிபட கூறுகிறார். அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என இந்தப் புத்தகம் வினா எழுப்புகிறது. பன்னாட்டுக் கல்வி வியாபாரிகள் நம் நாட்டுக்குச் சூழலுக்கு எதிரான கல்வியை வழங்கினால் கூட, நம் அரசால் எதிர்த்து வினா எழுப்ப முடியாத நிலை ஏற்படும். இது குறித்து யுனெஸ்கோ, சர்வதேச வணிக மையம், உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கைகளையும், தகவல்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார் நியாஸ் அகமது. ஆப்பிரிக்க நாட்டில் கல்வியாளர்கள் ஒன்றிணைந்து இந்த ஒப்பந்ததிற்கு எதிராகக் குரல் கொடுத்து எச்சரிக்கை செய்துள்ளனர். அதனடிப்படையில் ஆப்பிரிக்கா அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்னும் பதிவையும் முன் வைத்துள்ளார்.

உயர்கல்வி குறித்த விழிப்புணர்வில் நீண்டதொரு போராட்ட பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் எனக் கவலையோடு தெரிவிக்கிறார் நியாஸ் அகமது. மேலும், உயர்கல்வி குறித்த விழிப்புணர்விற்காகப் பல்வேறு வினாக்களைத் தொடுப்பது நம்மைத் தட்டி எழுப்புவதாக உள்ளன. இந்திய அரசிற்கு அழுத்தம் தந்து வாக்குறுதிகளைத் திரும்ப பெற வைப்போம் என்னும் சூலுரை நம் முன் வைக்கிறார் நியாஸ் அகமது.

இந்த புத்தகமானது எதிர்நிலையில் வாசிக்கும் வாசகர்களின் மனநிலையில் வினாக்களை எழுப்பியும் அவர்களது கருத்தை உள்வாங்கியும் ஒரு கலந்துரையாடல் முறையில் கல்வி குறித்த சிக்கலை விவாதித்துச் செல்கிறார். அதன்பால் இந்நூலானது வாசிப்பில் நம்பகத் தன்மையை உள்வாங்கி நகர முனைகிறது எனக் கூறலாம். மு.நியாஸ் அகமது எழுதிய 30 பக்கங்கள் கொண்ட களவு போகும் கல்வி என்னும் நூலை இயல்வாகை பதிப்பகம் 2015இல் வெளியிட்டுள்ளது.

முனைவர் சு.பலராமன்
அலைபேசி-99423 29290.

நூல் : களவு போகும் கல்வி
ஆசிரியர் : மு.நியாஸ் அகமது
விலை : ரூ.₹20
வெளியீடு : இயல்வகை
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.