பச்சை சட்டை போட்டு
பச்சையை வெட்டுவதால்
நீ வெட்டுக் கிளியல்ல
நீ ஒரு வேட்டு கிழி
பாலைவனத்தில் வாழ்வதோடு நிறுத்திக்கொள்
பாலைவனத்தை உருவாக்க முயற்சிக்காதே
அதை மனிதர்கள் பார்த்துக்கொள்வார்கள்
நீ புகவேண்டிய இடம்
உழவர் சந்தையல்ல
கள்ளச்சந்தை
அங்கு நீ பாடவேண்டிய ராகம்
சுருட்டி அல்ல
செஞ்சுருட்டி
நீ நடக்க வேண்டிய நடை
மணிப்பிரவாளம் அல்ல
மணி பிறழ் வாழம்
உழைப்பவனுக்கு ஒரு காசு
அவனிடம் பெறுபவனுக்கு இரு காசு
மறைப்பவனுக்கு பல காசு
இந்த மந்தி போராட்டத்தினை
மறக்காமல் வெட்டுக்கிளி நீ பேசு
உருவாக்குபவனும் லாபமில்லை
உட்கொள்பவனுக்கும் மீதமில்லை
முதலில் பெறுபவனுக்கு ஒன்றுமில்லை
இடையில் மறைப்பவனுக்கு வெட்கமில்லை
இந்த துக்கத்தை தடுக்க யாருமில்லை
இந்த பக்கத்தை எடுத்து
வெட்டுக்கிளி நீ பக்குவமாக பேசு
கூட்டமாக பறந்து வா
கள்ள சந்தையை நோட்டமிட மிகுந்து வா
உழைப்பவன் பாட்டையெல்லாம் படிக்க வா
விலை ஏற்றத்தை குறைக்க வா
கறுப்பாட்டை கடிக்க வா
அந்த கைக்கூலிகளை ஓழிக்க வா
மறைத்து வைப்பவர்களை
மலைக்க வைக்க நீ வா
பொய்மை திணித்து விற்பவர்களின்
குரல் பறித்து வைக்க நீ வா
ஜென்மம் எடுத்து நிற்கும் பொருள் மறைப்பை
உரல் எடுத்து நசுக்க நீ வா
மக்களுக்காக நீ பேசு
வெட்டுக்கிளி
உன் மனதைத் திறந்து உரை வீசு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.