கனலெரியும் வேய்ங்குழல் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : கனலெரியும் வேய்ங்குழல்
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
ஆசிரியர் : கௌ.ஆனந்தபிரபு
பக்கம்: 118
விலை:150/-
நூலைப் பெற : +919585517592
கவிஞர் கௌ.ஆனந்தபிரபுவின் முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது,பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு மிக நேர்த்தியான அட்டைப்படத்துடனும் உள்ளே இடம்பெற்றிருக்கும் தாள்களும் மிக அழகாகவும் தரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது,
தனது நட்பு வட்டங்களுக்கு தேடித்தேடி தனது நூலை அனுப்பி மகிழும் கவிஞருக்கு நன்றியும் வாழ்த்துகளும்,
இத்தொகுப்பில் இடம்பிடித்திருக்கும் சில கவிதைகளை முகநூல் தளத்திலும் அவரது படைப்புகள் வெளியான இதழ்களிலும் ஏற்கனவே வாசித்துள்ளேன், இருப்பினும் தொகுப்பில் வாசிக்கும் போது முன்பைவிட இது கூடுதல் மகிழ்வைத் தருகிறது.
கனலெரியும் வேய்ங்குழல் இந்த கவிதை தொகுப்பை வாசிக்க ஆரம்பித்த முதல் கவிதையால் கண்களையும் மனதையும் ஈரப்படுத்தி விடுகிறார், வளர்ச்சி குறைபாடுள்ள கருவை சுமக்கும் மனைவிக்கு கருக்கலைப்பு செய்யும் போது கொடுக்கப்பட்டுள்ள மயக்க மருந்துகளைத்தாண்டி தன் வயிற்றைத்தடவிப் பார்ப்பதும், அழுவதுமாக அந்த அறைக்குள் கணவன் மனைவி இருவருக்குள்ளும் உருவான வலியையும் உணர்வையும் காட்சியாக முன்னிறுத்துகிறார், இந்த கவிதையை வாசிக்கும் போதும், வாசித்து முடித்த பிறகும் மனதை விட்டு விலகாமல் பாரமாகவே இருக்கிறது.
இயற்கை வளங்களை பற்றியும், அம்மாவின் அன்பைப் பற்றியும் எழுதிய கவிதைகளால் கட்டிப்போட்டவர்,தான் கண்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் மருத்துவமனையில் இறப்பின் ஓலம் கேட்டவர்கள், அதே சமயம் அங்கு வேறொருவர் தனது இணை கருத்தரித்திருப்பதை உறுதி செய்த சிவப்புக்கோடுகள் பதிந்த அட்டையுடன் நகர்வதையும் மருத்துவமனை சூழலை வரிகளாக்கியிருப்பது சிறப்பு.
திருமணமானதும் தன் கணவனுக்கு ஏற்கனவே காதல் இருந்திருக்கிறதா? இல்லையா? என்பதையறிய மனைவி செய்யும் தந்திரங்களால் நிகழும் எதிர்வினைகளை இக்கவிதை வெளிக்காட்டுகிறது,
மனைவியின் மேல் உள்ள காதலால் தன் முன்னாள் காதலியை பற்றி உளறிக் கொட்டிய கணவனுக்கு நேரும் கொடுமைகளையும் இக்கவிதை அழகாக படம் பிடித்து காட்டுகிறது, இதை வாசிக்கும் போது, இல்லை இனிமேல் இதை வாசிப்பவர்கள் எக்காரணம் கொண்டும் தன் மனைவியிடம் தனது இளமைக்கால காதலை வெளிப்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்,
இதோ அந்த கவிதை….
“முதலிரவில் நீ காட்டிய முகம் வேறு
காதலும் கனிவுமாய்
நீ உதித்த சொற்களை நம்பியிருக்கக் கூடாது.
ஒளிவு மறைவு கூடாதென்று
நீ ஒப்பித்தவற்றில் மயங்கியிருக்கக் கூடாது. முன்னாள் காதலைப்பற்றி கண்ணீர் கசிய நீ சொன்னதை நம்பி
என் ரகசியந் திறந்திருக்கக் கூடாது
நஞ்சுப்பை கொண்ட நாகம் பன்னீர் துளியா தெளிக்கும்? எந்தச்சண்டை வந்தாலும் எதற்குச் சண்டை வந்தாலும் சந்தேக நாக்கினால் தீண்டி தீண்டி உடலெங்கும் நீலம் பூத்து விட்டது”
என்று நீளும் இந்த கவிதையை வாசிக்கும் போது பலர் தன் மனைவியிடத்தில் அந்த காதல் ரகசியத்தை மறைத்திருப்பதும் தவறில்லை என்று தோன்றுகிறது.
மகள்கள் செய்யும் குறும்புத்தனங்களைப்பற்றி புகார் செய்யும் மனைவியின் முன் மகள்களிடமும் முத்தங்களைப்பெற்றுக்கொண்டு வழக்கினைத் தள்ளுபடி செய்யும் அப்பா குறித்த கவிதை அப்பாவின் பாசத்தை வெளிக்காட்டும் நெகிழ்ச்சியான வரிகள்.
“நின்று நிதானிக்க நேரமில்லாமல்
போகிற வழியில்
கும்பிட்டுப் போகிறவனை எந்த கணக்கில் வைப்பதெனக்
குழம்புகிறார் கடவுள்”
இதுபோன்ற குறுங்கவிதைகளால் வாசிப்பவர்களை வெவ்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்கிறார் கவிஞர்.
கூச்சம் என்ற தலைப்பிலுள்ள கவிதையை வாசிக்கும் பொழுது கிராமப்புறங்களில் கொடிகளில் உலர்த்தும் கணவனின் துணிகளுக்கு கீழே மறைவாக உள்ளாடைகளை உலர்த்தும் பெண்களை நினைவு படுத்துகிறது,இன்றும் இது போன்ற காட்சிகளை கிராமங்களில் காண முடிகிறது, அதேசமயம் இங்கிதமற்றவர்கள் சுற்றியிருப்பவர்களை நினைவில் கொள்ளாமல் விசேஷம் ஏதும் இல்லையா எனக் கேட்பவர்களும் உண்டு
என்பதை முகத்தில் அறைகிறது.
“கடந்து போகிறவர்கள் கூச்சப்படக் கூடாதென கணவனின் உடைகளுக்கு கீழே உள்ளாடையைக்
காயப்போடுகிறவளிடம்தான் கூச்சமே இல்லாமல்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
விசேஷம் ஏதுமில்லையாவென்று”
எவ்வளவு வலிமிகுந்த வரிகள்
கடன் அதிகாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் குறுங் கவிதைகளில் ஒன்று
“கடன் தந்தவர் விடாமல் அழைக்கிறார்
மிகப் பிடித்த பாடல்
பிடிக்காத பாடலாகி விட்டது”
என்று அலைபேசியில் ஒலிக்கும் பாடல் குறித்தும் கடன் வாங்கியவர் மன நிலை குறித்தும் மிக அழகாக மூன்று வரிகளில் பதியமிட்டு இருக்கிறார்.
புத்தனாகிறேன் என்ற தலைப்பில் ஒரு கவிதை
“கடுஞ்சண்டை
பெரும் வாக்குவாதம்
மனம்வெதும்பி
புத்தனைப்போல்
இல்லறத்திலிருந்து
விடுதலையடைய எண்ணி
அவனைப்போலவே
நடு இரவில் வீடுதுறந்து
தெருவின் எல்லையைத் தொட்டுவிட்டேன்.
கிட்டத்தட்ட ஏழெட்டு பைரவர்கள்
தொலைவில் நின்றிருந்தார்கள்.
இல்லறத்தையே தொடராலாமென்று
வீடு திரும்பிவிட்டேன்.”
சாதாரணமாகவே ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி சண்டை வரும்போது இயல்பாகவே ஆணின் மனதிற்குள் தோன்றும் சிந்தனை புத்தனைப்போல் துறவறம் சென்றுவிடலாமென்று, ஆனால் காலம் அவ்வளவு எளிதாக இல்லறத்திலிருந்து வெளியேற விடுவதில்லை என்பதை இங்கு பைரவர் உருவத்தில் காட்டியுள்ளார்.
அதேசமயம் பாமியான் புத்தர் என்ற தலைப்பில் புத்தனுக்கு நேரும் மதவாத இன்னல்களையும் வெளி கொண்டுவந்துள்ளார்.
சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் விளைவிப்பதை காணொளிகள் வாயிலாகவும், செய்திகள் வாயிலாகவும் தினம் தினம் கண்டு கொண்டிருக்கிறோம்,
அதை அழகாக கவிதையில் வெளிப்படுத்தி இருக்கிறார்
“வாழ்விடத்தைப் பறிகொடுத்து பரிதவிக்கும் யானைக்கு அகதியின் சாயல்”
என்று மூன்று வரிகளில் கவிதையை தந்திருக்கிறார்,
பொதுவாகவே தனது இருப்பிடத்தை இழந்த மனிதர்கள் மட்டுமில்லை, விளங்கினங்களும் அகதிகள்தான் என்பதை இக்கவிதை வலியுறுத்துகிறது,
மேலும் இதே சாயலில் இன்னொரு கவிதையும் எழுதி இருக்கிறார் இந்த கவிதையை வாசிக்கும் பொழுது வயநாடு மண் சரிவில் சிக்கி தன் உடைமைகளையும் உறவுகளையும் இழந்த ஓர் மூதாட்டி தன் பேத்தியுடன் வனத்திற்குள் ஓடி அங்கு சுற்றி திரியும் யானை கூட்டங்களுக்குள் அகப்பட்டுக் கொள்கிறாள், அப்படி அகப்பட்டவள் யானையிடம் எல்லாம் பறிகொடுத்து வெறும் உயிருடன் மட்டும் தான் வந்திருக்கிறோம், எங்களை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று கையெடுத்து கும்பிடுவதாக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. அந்த நிகழ்வினை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இந்தக் கவிதை அமைந்திருக்கிறது வாசிக்கும் போதே மனம் வலிக்கிறது
“காட்டு இலக்கா மூன்று நாள்
முயன்றது
தண்டனிட்டு
போ சாமி போ சாமி என்கிறாள் பெருங்கிழவி. தலையாட்டி விட்டு போய்விட்டது”
என்று வயநாடு நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது இக்கவிதை.
கானலெரியும் வேய்ங்குழல் என்னும் தலைப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தின் பொருளாதார நிலையை பாடுபொருளாக இக்கவிதை பேசுகிறது, இது எல்லாக் குடும்பங்களிலும் நிகழக்கூடியதாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளோடு பேசுகிறது.
இறுதியாக இன்னொரு கவிதை “பெயரிடப்பட்ட அரிசி” என்ற தலைப்பில்
“ நாளெல்லாம் யாசித்தும் வெற்றுக் குடலோடு படுப்பவனின் பெயரிடப்பட்ட அரிசி யாரிடம் இருக்கும்”
என்று கேள்விக்கணைகளால் கேட்கிறார், இந்த கவிதையை வாசிக்கும் பொழுது சாலை ஓரங்களிலும் மும்முனை சந்திப்புகளிலும் கையேந்தி யாசிப்பவர்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில்லை, அப்படிப்பட்டவர்கள் பல நாட்கள் ஏதாவது ஒரு கட்டிட நிழலிலோ சாலையோரங்களிலோ வயிற்றுப் பசியோடு தஞ்சமடைந்து தவிப்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது இக்கவிதை.
இச்சமூகத்தில் கண்டதையும், தன் வாழ்வில் அனுபவப் பூர்வமாக பார்த்ததையும் நிகழ்ந்ததையும் கவிதைகளாக கொட்டி தீர்த்துள்ளார், அதேசமயம் ஒவ்வொரு கவிதையும் உணர்வு பூர்வமாக கவிதை வாசிப்பவர்களின் உள்ளத்தை தட்டி எழுப்புகிறது, பல்வேறு நிகழ்வுகள் மனதிற்குள் காட்சியிலாகவும் விரிகிறது, தன்னுடைய முதல் தொகுப்பிலேயே தனி முத்திரை பதித்திருக்கும் கவிஞர் கௌ .ஆனந்த பிரபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்…
நூல் அறிமுகம் எழுதியவர் :
கோவை ஆனந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.