கள்ளி மடையான்
தொண்டைக்குள் இனிப்பாகவும் கசப்பாகவும்..
எத்தனை குரலெடுத்து பேசினாலும்..
கத்தினாலும் எடுபடாத  எளியவர்களின்;
போராட்டமாகிக் கிடக்கும் அவர்களின்
உயிர்வதையை; வாழ்வினை கதைகளாக்கி
“கள்ளி மடையான்”  14 சிறுகதைகளை
கொடுத்திருக்கிறார் பேராசிரியர் க.மூத்த்தி அவர்கள்.
கள்ளி மடையன் தொகுப்பினை நல்லதொரு முறையில் வெளிக் கொணர்ந்திருக்கிறார் “புலம்” பதிப்பகத்தின் வழியாக தோழர் லோகநாதன் அவர்கள்.
இருவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
“நான் புதுச் சட்டை போட முடியலனா
ஏன் தீபாவளியும் பொங்கலும் வரனும்” என்கிற கேள்வியோடு சிதம்பரத்தின்
என்ன ஒட்டத்தின் வழியாக “உடுக்கைப் பாடல்” ஒலிக்கிறது.
ஊர் சோறு வாங்குவதற்கு தன் அப்பன் ராத்தினத்துடன் பகலை இருட்டு மொத்தமாக விழுங்கிய பொழுதினில் தோள்பட்டையில் புட்டியையை தொங்கவிட்டு ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறத்தில் “சோறு போடுங்கோய்” என்று கூவி வாங்கித் தின்றது சுகமாய் இருந்தது;  5 ம் வகுப்பிற்கு பிறகு, கூடபடிக்கும் மாணவர்கள் “ஏய் புட்டிச் சோறு, இங்க வாடா” என்றழைக்கும் போது
வலியாக மாறிய வாழ்வதனை சிதம்பரத்தின் நிலையிலிருந்து பதிவாக்கியிருப்பார்.
ஆண்டைகளின் வீட்டில்  எப்போது எழவு விழுந்தாலும் அன்றைய ராப்பொழுது முச்சூடும், உடுக்கையிலிருந்து விரல்  தெறிக்கவிடும் ஒலியினாலும் உச்சஸ்தாயில் குரலெடுத்து பாடும் ரத்தினத்தின் பொன்னருக்கும், சங்கருக்கும் ஆண்டைகள் விழித்திருப்பார்கள்.
குரல்வளை நரம்பு  தெரிக்கப்பாடினாலும் ராப்பொழுது தூக்குச் சட்டியோடுதான் போய் நிற்கும்  ரத்தினத்தின் உடுக்கை ஒலி ஒரு நாள் இரவில் தான் வாழும் குடிசைப் பகுதியில் எழவு ஏதும் இல்லாத போதும் புதிய பாடல்களை இசைக்கத் தொடங்கியது..எதனாலே.. யாராலே..?
ரத்தினத்தின் எண்ண ஓட்டத்தின் வழியாக
பதிவு செய்திருப்பார் கதையாசிரியர்.
_____
நரவல் காடென்றாலும் எல்லோராலும்
ஒரே இடத்திற்கு சென்றிடமுடியாது.. “இன்னாருக்கு இந்த இடம்” என்பதை ஊரின் ஒவ்வொரு திசையும் சொல்லிடும்..
எந்த ஊரு.. அந்த ஊர்ல எந்த தெரு, அந்த தெருவுல யார் புள்ளை இந்த மூன்று கேள்விக்குள் எதிரில் நிற்பவன் எங்கிருது வருகிறான்.. எந்த சாதி.. என்பதை கண்டு பழகிடும், மிதித்திடும் எண்ணம் மிகுந்த மனிதர்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தையா ஆசிரியர்,
இருக்கும் வெள்ளைத்தாளில் அவர் எழுதி
ஆவணப்படுத்துவதே அந்த மாணவனின் சமூக நிலைதனை; எதிர்காலத்தை தீர்மானிக்கும் கொண்டு செல்லும். தான் மாட்டுக்கறி, பன்றிக் கறி தின்னுகிறவன் என்று தெரிந்தால் தன் மகன் கவியரசனை எப்படி இந்த சாதிச் சமூகம் பார்க்கும் என்பதை தன் அனுபவத்தில் உணர்ந்தும் நேர்மையாக ஆவணப்படுத்துவர் பள்ளியின் வெள்ளைத்தாளில்.
“சலவன் குட்டிகள் வீரமானவைதான்.. அவை யாருக்கும் பயப்படுவதில்லை. அனலாய் எறியும் கண்களுக்கு மத்தியில், தெருக்களில் தங்களின் வால்களை விறைத்தபடி எளிதாகப் புகுந்து கொள்கின்றன. ஒரு வகையில் அவைதான்
எனக்குப் பிறகானவர்களுக்கு அந்தத் தெருக்களில் நுழைய வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறது” என முத்தையன் என்கிற நேர்மையான ஆசிரியராக எதிர்காலத்தை பதிவு செய்திருப்பார்
” வெள்ளைத்தாள்” என்கிற கதையில்.
_______
மலைகளை தன் உழைப்பால் சிதறடித்து
எந்திரங்களோடு எந்திரமாக வாழ்வை தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
ஆயிரக்கணக்கான எளியவர்களில், சவுடு அடிக்கும் இளங்கோ, சரோஜா குடுபத்திற்குள், முதலாளி படிக்காசுவின் பணத்திமிரில் இளங்கோ செத்துப்போக
“மண்ணோடு போனவங்க எல்லோரையும்
மனசிலேயே வச்சிகிட்டிருந்தா மனுசங்க எப்படித்தான் வாழறது”  நினைப்பு மேலோங்க தன் மகள் அழகிக்காக வாழ்ந்தாகவேண்டிய கட்டாயம் ஏற்படும் சூழலில், மொதலாளி படிக்காசு கம்பளிப் பூச்சியாக அவளின் உடலை சீரழிக்க, கம்பளிப்பூச்சி சரோஜா இல்லாத நேரமதில்
அழகியிடம் ஊர்ந்து வர.. அன்றைய ராப்பொழுதில் நடந்ததென்ன.. விடியற்காலை படிகாசுவின் குறி அறுத்தெறியப்பட்டு குவாரியில் முகம் சிதைந்திருக்க பாறைகளூடாக பிணமாக கிடத்தியது யார் என்பதை “சனீஸ்வர வதைப் படலம்” வாசிக்கும் போது அறியலாம்.
சாதி மாறி திருமணம், பீ அள்ளும் தொழிலாளியின் மரணம்; தொடர்ந்து அவன் குடும்பம் அரசு நிர்வாகத்தால் அலைகழிக்கப்படும் எதார்த்தம்,
ஆடு மேய்க்கும்போதான காதல்; இருவரும்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் போதான நேசம் மிக்க, அக்கறை மிக்க மனவோட்டங்கள்.. இப்படி 14 கதைகளிலும்
எளிய மக்களின் வாழ்நிலையோடு பயணித்திருப்பார் கதையாசிரியர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதைக் களத்தில்; துயரம் தாங்கிடும் மனிதர்களை பார்த்திடலாம்.
கதை வாசிக்கும் போது மிகப்பெரிய பலஹீனமே பொருந்தாத உவமைகளும்,
வர்ணனைகளுமே.. கதையாசிரியர் அவைகளை கைக்கொள்ளும்போது
வாசகனை பிடித்து உள்ளே இழுக்கவேண்டும்.. ஆனால் இதில் பல இடங்களில் கவனத்தை சிதறடிபதாகவே உணர்கிறேன்.. எதிர்காலத்தில் ஆசிரியர் கவனத்தில் கொள்வது சிறப்பு..
அருமையானதொரு முன்னுரையை
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வழங்கி இருக்கிறார்.
“கள்ளி மடையான்”  சிறுகதைத் தொகுப்பை வழங்கிய பேராசிரியர் க.மூர்த்தி அவர்களுக்கும், சிறப்பான முறையில் வெளிக்கொணர்ந்த “புலம்” பதிப்பகத்தார்க்கும் பேரன்பும் வாழ்த்துகளும்.
கள்ளிமடையான் சிறுகதைகள் 
பேராசிரியர்.க.மூர்த்தி
புலம் வெளியீடு.
கருப்பு அன்பரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *