இரண்டு தலைமுறைகளினது வாழ்வினை சொல்லக்கூடிய நாவல் கல்மண்டபம்.  இந்த கல் மண்டபத்தின் நாயகன் தேசு. அவருடைய அப்பா ராமன்ஜி. அவர் நொடி நேர கௌரவ ஆக்ரோஷத்தில் வைதீகத் தொழிலில் கால் வைப்பதில்லை என்று சபதம் செய்து  பாரிசாரனக மாறுகின்றார். அவரது மனைவி சௌந்தரத்துக்கும் அது சம்மதமே. இருவருக்கும் உள்ள அந்த அன்னியோன்யமும், சௌந்தரம்  அதிர்ச்சியான முடிவும் பேசப்படுகிறது. இராமனுடைய சூழ்நிலை கைதியாக இருந்து எடுத்த  நடவடிக்கைகள், அதன் பிரதி பலன்கள் அனைத்தும் இந்த கதையில் பேசப்பட்டிருக்கிறது.
 ஶ்ரீரங்கத்தில் நடக்கின்ற இந்த நிகழ்வு அப்படியே புலம் பெயர்ந்து சென்னைக்கு வருகிறது. சௌந்தரம் ரங்கா ரங்கா மன்னித்துவிடு என்று கேட்கும் பொழுது நாமும் அவருடன் இணைந்து கரம் கூப்பி அரங்களை அவளது வாழ்வுக்கு அருள் புரிய வைக்க யாசிக்கிறது. தேசு மற்றும் ரெங்கன், ரங்கநாயகி என இரட்டை குழந்தைகள். சென்னைக்கு வரும் பொழுது இவர்களுடைய அண்டைவீட்டுக்கு புதிதாக குடிவரும் விசாலம் மாமி வேம்பு. அவர்கள் இருவரும் இந்த குடும்பத்தின் மேல் காட்டுகின்ற பாசமும் இவர்கள் அவருடைய குடும்பத்தின் மேல் காட்டுகின்ற பாசமும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விசாலம் மாமி பாடும் பாடலுக்கு இணையாக மிருதங்கம் வாசிக்கும் வேம்பும் அழகு. தேசுவும் அப்பாடலில் மயங்கி அவர்களோடு இணைந்து பாடுகின்றான்.  அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே போட்டி நடக்கும். வேம்பு தோற்றதாக  நடிப்பது, விசாலம் மாமி  அவனை பகடி செய்வது என ஒரு தாய் தந்தை மகனுடைய அன்னியோன்னியம் இங்கே இந்த கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
இப்படியாக போய்க்கொண்டிருக்கையில் வேறு திசையை நோக்கி பயணிக்க வைத்து ஒரு மனச்சுமையை நம்முள் இறக்கி வைக்கிறார் வழக்கறிஞர் சுமதி. தேசுவினுடைய மாற்றங்கள்ஒ, வேறு வழியின்றி போகுமிடம் அந்த கல்மண்டபம். அந்தக் கல் மண்டபம் என்பது என்ன? அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதனை அப்படியே நம் கண் முன்னே காட்சிமைப்படுத்தியிருக்கிறார்.
தேசு தன்னுடைய நண்பனுக்கு திருமணம் பேசப் போக, அங்கே காணும் கல்யாணி மனதில் இடம் இடம் புக இருவருக்கும் திருமணம் நடைபெறுகின்றது. ஒரு கட்டத்தில் தேசு செய்கின்ற பணியினை கல்யாணி காண அவள் எடுக்கும் முடிவு, வேறு இடத்திற்கு போவதாகவும் அந்த வேதனை தாங்காமல் தேசு அடையும் வருத்தமும் உணர்ச்சிப் பிழம்பு காட்டும் படி இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 சௌந்தரம் கல்யாணி என்ற இரு கதாநாயகிகள் பாத்திரங்களை இவர் வடித்திருப்பது அத்தனை நேர்த்தி. அவர்கள் இருவரும் பேசும் அந்த வார்த்தைகள் தன்மானத்தின் பெருமையை உணரச் செய்கிறது. சூழ்நிலையால் தடம் மாறி போகிற மாதிரி அமைக்கப்பட்ட வேறு இரு கதாபாத்திரங்களையும் அவர் விட்டுக் கொடுக்காமல் தேசுவின் வழியாகவே அவர்கள் ‘ஐயோ பாவம்!’ என்று சொல்லும்படியாக அமைத்திருப்பது சிறப்பு.
 தேசு படும் கஷ்டங்களும் நிறைவாக அவன் செய்யக்கூடிய அந்த முடிவும் கல் மண்டபத்தின் உடைய அந்த அடிகல்லைப் போல ஒரு கனத்தை நமக்குத் தருகிறது. வெகு யதார்த்தமாக கதையினை நகர்த்தி எந்த இடத்திலும் சிறிதும் தொய்வில்லாமல் காட்சிப்படுத்தியிருப்பது இந்த நாவலுக்கு கூடுதல் பலம்.
பிராமணர்கள் பேசும் பாஷை, அவர்களுடைய அன்றாட நிகழ்வுகள் மற்றும் வாழ்வியலை கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கின்றார்.
சூழ்நிலை ஒருவரை எவ்வாறு மாற்றுகிறது. அந்தச் சூழலிலிருந்து  அவன் மீள்கிறானா? வெற்றி அடைகிறானா?  என்பதை  இந்தக் கதை நமக்கு இயம்புகிறது.
தன்னுடைய தாத்தாவின்  மறைவின் போது  தோள் கொடுத்த பிச்சுக்குட்டிதான் இந்த கதையின் நாயகன் என்று கூறி, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின் அவரை சந்தித்து அவர் வழியே அந்த நிகழ்வுகளை இவர் உள்வாங்கி இந்த நாவலைப் படைத்திருக்கிறார் வழக்கறிஞர் சுமதி. இதனையே அவர் தன்னுரையாகத் தந்திருக்கிறார்.
 ‘மேட்டுக்குடி தலித்துகள்’ பற்றிய நாவல் என்று வெங்கட் சாமிநாதன் அடைமொழி தந்து நாவல் பற்றி எழுதியிருப்பது முற்றிலும் உண்மை.
‘நம்முடன் வாழ்ந்து கொண்டு, அழுகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பெரும் மனித குழுவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது பாராட்டத்தகும் கலை உழைப்பு’ என்று முதல் பதிப்பிற்கு அணிந்துரை தந்திருக்கின்ற பிரபஞ்சன் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. அவர் கூறியது போல் ‘தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் எழுதப்படாத அல்லது காணப்படாத மனிதர்களைப் பேசும் படைப்பாக இது இருக்கிறது’ என்பதில் துளியும் ஐயமில்லை.
 ‘உழக்கன்’ என்பது காரணப்பெயர். அந்த உழக்கனைப் பற்றி நான் எதுவுமே அறிந்தவன் இல்லை. அறிய தலைப்பட்டதும் கிடையாது. அந்த உழக்கனின் விரல்களை வேறு எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது என்ற  சொற்றொடர்களால் சுமதி எழுதி இருக்கின்ற இந்தக் கல்மண்டப மூன்றாம் பதிப்பிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார் வண்ணதாசன். இப்படியாக மரணம் சார்ந்து எழுதப்பட்ட கதைகளில் ‘அன்று வேறு கிழமை’ என்ற  ஞானக்கூத்தன் கவிதையும், ‘பிணத்துக்காரர்கள்’ என்ற வண்ணநிலவனின் சிறுகதையும் ஒரு அழியாச்சுடர் எனில் சுமதியின் இந்த கல் மண்டபமும் மற்றொரு அழியாச்சுடரே என்று வண்ணதாசன் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ‘பொலிக பொலிக’ என்று சுமதி இக்கல்மண்டபத்தில் பாடும் அந்தப் பாடல் வரிகளைக் கொண்டே அவருக்கு வாழ்த்துரையாக  அணிந்துரை தந்திருக்கின்றார் வண்ணதாசன்.
இரண்டாயிரத்தில் எழுதி 2021ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பு காண்கிற சுமதி எப்படி இந்த இருபது ஆண்டுகளில் மேலும் ஒரு நாவலைக் கூட எழுதாமல் இருக்கிறார் என்ற வினாவினை வண்ணதாசன் இணைந்து நானும் தொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
 இதுபோன்றதொரு நாவல்களை தொடர்ந்து படைக்க வேண்டும் என்று வேண்டுகோளும் வைக்கின்றேன. சமீபத்தில் அமுதசுரபியில் வெளிவந்த சிறுகதைகள் அனைத்தையும் விரைவாக தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பாக கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோளையும் வைக்கிறேன்.
சமீபத்தில் வாசித்த ஆகச் சிறந்த நாவல்களில் இக்கல்மண்டபமும் ஒன்று . இதன் வடு நிச்சயம் என் மனதை விட்டு அகலாது. எப்பொழுதும் நெகிழ்வான  நிகழ்வுகள் நம் மனதிலே அதுவும் ஆழ்மனதில் இருந்து கொண்டு ஒருவித அழுத்தத்தை தந்து கொண்டிருக்கும். அது ஆனந்தவலி.  இந்தப் படைப்பும் அப்படி எனக்கு அப்படித் தருகிறது.
                 நூலின் தகவல்கள் 
நூல் : “கல்மண்டபம்”
ஆசிரியர் : வழக்கறிஞர் சுமதி 
வெளியீடு : சிறுவாணி வாசகர் மையம்
மூன்றாவதுபதிப்பு : பிப்ரவரி2022
விலை : ரூ.250
                           அறிமுகம் எழுதியவர் 
                   
             
                                  தானப்பன் கதிர் 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *