நூல் அறிமுகம்: புறந்தள்ளப்பட்ட வாழ்வைச் சுமக்கும் பொதி முட்டைகள் – நந்தன் கனகராஜ்

நூல் அறிமுகம்: புறந்தள்ளப்பட்ட வாழ்வைச் சுமக்கும் பொதி முட்டைகள் – நந்தன் கனகராஜ்

எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாரின் “கழுதைப்பாதை” நாவல் பற்றிய எனது நூல் அறிமுகம்.
“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது. மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது.”
பரந்த வாசிப்பு, கள அனுபவம் மற்றும் உழைப்பின் வழியாக மலையையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் அவர்களது வாழ்வியல் பற்றிய திறப்புகளையும் “கழுதைப்பாதை” நாவலின்
மூலமாக நம்மிடம் வைத்துள்ளார். எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார். அழுத்தித் திணிக்கப்பட்ட, கழுதைகளின் சுமைப்பொதிகளையும், கழுதையோட்டிகளின் அன்றாட வாழ்வியல் பாடுகளையும் இந்நாவல் பேசுகிறது.
பணத்தோட்டங்களாக நாமறிந்து வைத்திருக்கும் காபித்தோட்டங்கள் ,அதன் தொழிலாளர்கள், அவர்களுக்கு தரைக்காடு எனப்படும் கீழுள்ள ஊர்களிலிருந்து பொருட்களை ஏற்றிப்போவது
அங்கிருந்து இறங்கு சுமையாக காபித்தளர்களை கொண்டு வருவது என்கிற ஒரு சரடின் வழியாக நாவல் பயணிக்கிறது. பல்வேறு வகையான சித்திரங்களை வாசிப்பவர்களிடம் வரைந்தளிக்கிறது. கொல்லத்திலிருந்து ஐம்பது கூலியாட்களுடன் உப்பு வாங்க வரும் பெரிய ராவுத்தர் மாடுகள் மூலமாக மழைப் பாதையில் செல்லும் தொடர் பயணம் எவ்வாறு சிதைந்து அழிவுறுகிறது என்பதையும் கூலிகள் மீது ராவுத்தருக்கு இருக்கும் கரிசனம் அடக்கல் என்ற இடத்தின் புனைவை அழகாக விவரித்துள்ளது நாவல்.
“கழுதை ஓட்டுறது லேசுப்பட்ட காரியமா? முதல்லே அது சொல்லுற பேச்சை நாம கேட்டாத்தான்,
நம்மோட பேச்சை அது கேட்கும்.அதுவரைக்கும் பொறுமையா இருக்கணும். கழுதையும் மனுசன்
மாதிரிதாண்டா”.- மூவண்ணா, சுப்பண்ணா என்ற இரு சகோதரர்களும் கழுதைகளை
வைத்துக்கொண்டு மழைத்தோட்டங்களுக்கு ஏறு சுமை, இறக்கு சுமைக்குப் போகின்றனர். இதன் வழியாக கழுதைகளின் குண இயல்புகள் தோட்ட முதலாளிகளின் ஆதிக்க மன இயல்புகளையும் நாவல் எடுத்துரைக்கிறது. பஞ்ச காலமொன்றில் ரயிலில் வரும் குருணையைத் தின்று
கொண்டு ,பிழைக்க வழியற்ற அக்கா தங்கச்சி இருவர் சேர்ந்து மலையில் நிலம் திருத்தி….அவ்வாறாக காபித் தோட்டம் உருவான வரலாறை புனைவுகளோடு விவரித்து
நம்மை உருக்குகிறது.
“அராபிகா,ரொபஸ்டா என காபி பயிர் விதைகள், காட்டு விலங்குகளை ஜீவாத்தி என அழைக்கும் மக்கள் முதுவாக்குடி குடியிருப்புகள் முதுவான்கள் என்கிற மலை மக்கள் பற்றிய விவரணைகளும் நாவலில் வருகின்றன.
 ஐந்து கல் முதுவாக்குடி மக்கள் அவர்களது பழக்க வழக்கங்கள், இறப்பின்போது செய்யும் செய்முறைகள் விரிவாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசவத்திற்காக பெண்களை
டோலிகட்டி கீழே ஊருக்குள் கூட்டி வருவது ,பெண்ணின் வயிறை வைத்தே குழந்தையின் இருப்பைக் கணிக்கும் அவர்களது இயற்கை அறிவு பற்றியெல்லாம் வரும் தகவல்கள் வாசிப்பாளருக்கும் கிடைக்கும் அனுபவங்களாக மாறுகின்றன.
பொதுக்குரல் என்பது ...
எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் | photo courtesy hindu tamil
மலைகளினூடே உப்பு மூடைகளைக் கொண்டு செல்லும் மாடுகளின் பாதை அழிந்த வரலாறைப் போலவே,பின்பு தலைச்சுமையாக ஏற்றிச்சென்ற கூலியாட்களின் வருகையும் நூலில் வருகிறது. இக்கூலியாட்களின் அற்ப வாழ்வை “தொப்பண்ணா, தொம்மண்ணா,கீசரு,கெப்பரு,வெரசை” ஆகிய பாத்திரப் படைப்புகள் சித்தரிக்கிறது. தலைச்சுமைகூலிகள் சாப்பிட சாம்பாருக்கு ஏங்குவதையும், “குட்டம் மட்டம் பார்த்து நில்லுங்கடா” என இவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் முத்துச்சாமி நாய்க்கனின் ஆதிக்கம்,மலைக்காடுகளுக்கு ஏறி இறங்கும் பாதைகள், இதையெல்லாம் விவரிக்கும்
பகுதிகள் ,இதுவரைக்கும் அநேகம் பேசப்படாத ஒரு இருண்ட வாழ்வின் பகுதிகளைப் பேசுபவையாக இருக்கின்றன.
பின்னர் இத்தலைச்சுமைக் கூலிகளின் அழிவு நிலையில் மலைக்கு கழுதைப்பாதை எப்படி அவசியமாகிறதென செளடையன் செட்டியார் அவர் மூலமாக மூவண்ணா, சுப்பண்ணா வந்து ஒண்றிணைகிற நடுமத்தி அத்தியாயங்களை நாவல்விவரிக்கிறது. செல்வம்× கோமதி காதல்,நாகவள்ளி× எர்ராவூ காதல், கெப்பரூ× பெங்கி மண உறவு,முத்தையா × வெள்ளையம்மாள், மணி× சரசு இவர்களது தகாத உறவு இப்படியான நிறைய உறவுகள் நாவல் பேசும் கதையோட்டத்தின் வழியில் இயல்பான புனைவுகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நிறைய பாத்திரப்படைப்புகளின் மன அவஸ்தை குழந்தையின்மை பற்றிய ஒரு மெல்லிய கோட்டையும் இழுத்து வருகிறதை அறிய முடிகிறது.
“செவ்வந்தி” என்னும் கதைசொல்லியின் பாத்திரம், கதைகளை கேட்டு விட்டு ஊர்மக்கள் தேயிலை(காபி) தண்ணி வாங்கித்தராமல் ஏமாற்றி விடுவது என்ற இப்பாத்திரப்படைப்பினுள்ளிருந்து நிறைய சம்பவங்களை ஒன்று சேர்க்கிறார் நாவலாசிரியர். “இராமாயணக் கதை கேட்கணும்னா எங்காவது சத்திரம்,சாவடிக்கு போங்கடா” என ஊர்மக்களிடம்
செவ்வந்தி கோப பட்டுப் பேசும் இடம்கூட முக்கியமானது. காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்பு ஊர் மக்களால் படுகொலை செய்யப்பட்டு தெய்வங்களாக வழிபடப்படும் ராக்கப்பன்× கங்கம்மா கதை, உப்பு வியாபரி ராவுத்தர் கதை இப்படி நடைமுறை வாழ்வின் மனித மன அகச் சிக்கல்களை செவ்வந்தி பாத்திரம் செவிவழிக்கதைகளாக,ஊரில் உலவும் புனைவுக் கதைகளாக
நம்மிடமும் சேர்ப்பிக்கிறது.
ஊருக்கும் ,கழுதைகளுக்கும் நீராதாரமாயிருக்கும் உப்பு நீர் கிணற்றை மூட முனிசிபாலிடி
எடுக்கும் நடவடிக்கைகள், அப்படியாக வந்து சேரும் குடிநீர் வரி எதிர்த்துப் போராடும் கருப்பணசாமி கேரக்டர் அதன் யதார்த்தம் இதையெல்லாம் நாவலில் கச்சிதமாகப் பொருத்தியுள்ளார் நாவலாசிரியர்.கூடவே மலங்காட்டின் சன்னாசி,மருது இவர்களின் பிள்ளைகள் படிக்க ஆசைப்ப்பட்டு தரைக்காட்டுக்கு வருவது, இங்குள்ள கிறித்தவ மிசனரிகளின் கல்விப்பணி,ரயிலின் வருகை எல்லாமும் ஒன்று சேர்ந்து பொருந்திவிடுகிறது. வக்கப்பட்டி,போடிப்பட்டி,மல்ல பட்டி..இப்படியாக ஊர்களும், ராசப்பன் செட்டியார், ரங்கசாமி செட்டியார், ராமசாமி செட்டியார் போன்ற அச்சு அசல் முதலாளிகளின் வாழ்வும் சொல்லப்பட்டிருக்கிறது.
எழுத்துப்பிரசுரம் / ஜீரோ டிகிரி ...
“ரெங்கசாமி செட்டியார் கணக்கை கண்ணில் எழுதி கூலித்துட்டை பேச்சில் தருபவர்” என அங்கலாய்க்கும் சுப்பண்ணாவையும், முதலாளி ஆள் அனுப்பி கூப்பிட்ட பதைபதைப்பில் அல்லாடும் மூவண்ணாவையும் கடக்க நமக்கு வெகுநேரமாகிறது. சுப்பண்ணாவின் மகன் செல்வம் தன் திருமண அழைப்பிற்கு வெற்றிலை பாக்கு கொடுத்து வர முதலாளிகளின் வீட்டிற்குச் செல்வதும்,அந்த நேரத்திலுங்கூட அவனிடம்  அவர்கள் எடுபிடி வேலை ஏவுவது,முதலாளிக்கு பிட்டத்தைக்காட்டாமல், பின்னுக்கு நகர்ந்துகொண்டே நடப்பதாக கூலியாட்களின் தலைமுறை அவலங்களை நுட்பமாகச் சித்தரிக்கிறார் நாவலாசிரியர்.
மூவண்ணா, சுப்பண்ணா சகோதரர்களின் துணைவிகளான அங்கம்மா× தங்கம்மா இருவரும் செய்யும் சூழ்ச்சி நாவலின் மையச்சரடாக இருந்து கொண்டு நாவல் முடிவுறுகிறது.எல்லா வகையிலும் நாவலில் ஒரு கனெக்டிவிட்டி தொடர்ந்து வந்து நாவல் பேச விழையும் பொருளை நம்மிடம் கடத்தி விடுகிறது. திடீர் காட்டுத் தீக்கு மூவண்ணாவின்  கழுதைகள் பலியாகின்றன.தீயை அணைக்க மலைமக்கள் எடுக்கும் முயற்சிகளிலும், தப்பித்தோலுரிந்து நிற்கும் ஒற்றைக் கழுதையிடம்,கழுதை மேய்க்கும் பாண்டி”வைத்தியர் பொன்னப்பன் கிட்ட மருந்து போட்றலாம் சரியாகிடும்” என உருகுவதிலும் நாமும் கரைந்துதான் போகிறோம்.
பொதியிறக்கிப் போட்டுவிட்டு உடல் உலுப்பி நிற்கும் கழுதையின் மனநிலைக்கு ஊரைக் காலிசெய்து புறப்படும் மூவண்ணாவின் மனநிலை பாடாய்படுத்தி விடுகிறது.
“எல்லாப் பாதையும் ஒண்ணுதாண்டா,நடக்கிறவன்தான் வேற வேறன்னு தோணுது”
“செம்மறிக்குட்டிகளைப் பட்டியில் திறந்து விட்டதைப்போல ,இருளுக்குள்ளிருந்து வெளிச்சம் குதித்து குதித்து ஓடி நகர்கிறது.”
“சாமியாவது,பூதமாவது. தின்னா குண்டி வழியா வருது. காய்க்குது,பூக்குது,பழமாகுது. இதில  சாமி எங்க விளக்கு பிடிச்சுக்கிட்டு வந்தாரு” இப்படி நுட்பமான வரிகள் நாவல் முழுதும் நிறைய வருகின்றன.
உண்மையில் புத்தகத்தின் அட்டைப்பட வடிவமைப்பையும் பேசித்தான் ஆக வேண்டும். முன்னூறு பக்கங்களில் நாவல் பேசும் வாழ்வியலின் மையத்தை ,பரந்த மலையின் பின்னணியில் தனித்துத் தெரியும் பாதை நம்மிடம் உரைக்கிறது.அப்பாதையின் செம்மண் தடம் நமக்கு
உணர்த்துவதெல்லாம்.. ஒடுக்கப்பட்ட அம்மக்களின் செங்குருதி சொட்டும் வாழ்வையும், உழைப்பையுமன்றி  வேறில்லை. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்.
ஜீரோ டிகிரி பப்ளிசிங்
எழுத்து பிரசுரம் வெளியீடு
கழுதைப்பாதை நாவல்
ஜனவரி 2020
விலை: ரூ. 375/
போன்: 98400 65000
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *