கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அந்த பாத்திரமாக உருமாறவைத்து உணர்வுகளை உள்ளத்துள் பதியவைத்து மலைக்கும் தரைக்கும் நடைப்பயணமாக, சுமைதூக்கியாக, பொதி மாடுகளாக, காப்பித்தோட்ட முதலாளிகளாக, முதுவாக்குடிகளாக,தரைக்காட்டுக்காரர்களாக, ஜீவாத்திகளாக, காணிக்காரராக, உமையாள் விலாஸ் மெஸ்ஸாக,ராக்கப்பன், கங்கம்மா, மூவண்ணா, அங்கம்மாள் சுப்பண்ணா,தங்கம்மாள்,பொன்னப்பன், மணிப்பயல், சரசு, சாமிக்கண்ணு,ராவுத்தர்,சடையன், வெள்ளையம்மா,செளடையன், முத்துச்சாமி நாகவள்ளி,எர்ராவூ, தெம்மண்ணா, தொப்பண்ணா, கீசரு,தர்மர் பச்சைக்கிளி, செல்வம், கோமதி லெட்சுமி ஜிட்டக்கா, பரமன், ராசப்பன்,ராமசாமி, போஜம்மாள், ராமலிங்கம்,சன்னாசி, மருது, டேவிட் ஐயா, பாண்டியோடு மட்டுமல்லாமல் சுமைதூக்கும் கழுதைகளாகவும் நமைமாற்றி, குதிகால் பிளவுக்கு கழுதை விட்டை நல்ல மருந்தெனக்கூறி நமது காலில் தடவிவிட்டு கழுதைப்பாதையில் கழுதைக்காரனாக ஆசிரியர் பொறுப்பேற்று “த்தே த்தே தெர்ட்டூட்” எனக் கத்தி நமை நிக்காமல் அடிக்கடி தேயிலைத்தண்ணி கொடுத்து சோர்வடையாமல் பயணிக்கவும், தண்ணித்தாகமெடுக்கும்போது எலுமிச்சம்பழத்தைக் கடிக்கச்செய்து மூச்சுவிடாமல் மலையேற வைத்துள்ளார்.

தேனிப்பக்கமுள்ள மலைகளை நாம் பார்த்திருக்காவிட்டாலும் மூங்கில் தோட்டம்,குரங்கணி, சென்ட்ரல் ஸ்டேசன்,டாப் ஸ்டேசன், சித்தாறு, முட்டம், போடிபட்டி, மல்லிப்பட்டி,வக்கப்பட்டி எனப் பல இடங்களை நேரில் காணச்செய்துள்ளார்.

முதலாளிகள் முன் கைகட்டி குனிந்து அவர் முகத்தைப் பார்க்காமல் பதில் சொல்லி முதுகைக்காட்டாமல் திரும்பாமல் வெளியேறவேண்டும் என்ற இடத்தில் நம்மையும் நிலையில் தலை தட்டாமல் குனிந்து பின்னோக்கி நகரச்செய்திருப்பார்.

வேப்பமரத்திற்கு கீழேயும் பூவரசமரத்திற்கு கீழேயும் இதைச் செய்யக்கூடாதென்பதையும், பனை நுங்கினை ஆசிரியரின் பார்வையில் வாசித்துத் தெரிந்துகொள்க.

மலைப்பாதை வழியாக உப்புமூட்டை சுமந்து செல்லும் 100 மாடுகள் கடந்துசெல்லும் பாதையில் புழுதி வானம் வரைக்கு எழும்பி நம் கண்ணை மறைத்துவிடும் என்பதை விளக்க நமையும் மாடுகளோடு நடக்கவைத்துள்ளார்.

என் கதாபாத்திரங்களுக்கும் ...

பரிசம் போட்டகல்யாணப்பெண்ணை கல்யாண மாப்பிள்ளை கல்யாணத்திற்கு முன்பே… என நாவலை வாசிக்கும்போது நாம் முதுவாக்குடியில் பிறக்காம போய்விட்டோமேயென ஏங்கவைத்துள்ளார்.

காதலினால் கழுத்தறுபடுவதும், சாதியினால் காதலறுபடுவதும் இப்பூமிவுள்ளவரைத் தொடருமென்பதை இவரும் தொட்டுச்சென்றுள்ளார்.

விசம் கலந்து குடிக்க வைத்து கொலை செய்வதை அறிந்திருப்போம் அனைவரும், விசம் தடவி கொலைசெய்யும் செயலினை அறிந்தபின் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக்கூடாதென்பதையும் ஒருவித அச்சத்தையும் நமக்குள் பாய்ச்சுகிறது.

கிணத்துத்தண்ணியக்குடிச்சு வளந்தவங்களை நகராட்சிக்கு வரி கட்டி நல்ல தண்ணியை விலைக்கு வாங்க வைக்க அடாவடித்தனத்தோடு கிணத்தை மூடிய சர்வாதிகாரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

சாதிக்காரர்களின் தோரணையான பொல்லாப் பேச்சுகளையும், திமிரினையும் சமரசமில்லாமல் காட்டியவிதம் அருமை.

கூலிக்காரன் பிள்ளைக்குப் படிப்பு ஒரு கேடாயென ஆணவத்தோடு பேசும் முதலாளியின் முன் தலைகுனிந்து நின்ற பெத்த தாய்களின் கண்ணீர்த்துளிகள் நம் கன்னத்தில் வழிந்தோடும்.

கல்யாணத்திற்கு முதல் நாள் மணிப்பயல் யாருக்கும் தெரியாமல் ஓடிமறைந்தபின் இப்போ அவன் என்ன செய்கிறான், சுமைதூக்கிகளின் மறைவுக்குப்பின் சுமைகளைச் சோர்வின்றி திறம்படப் பொருட்களைச் சுமந்துசென்று மனிதர்களிடம் ஒப்படைக்கும் கழுதைகளின் நிலை இப்போ என்ன என்பதையும், கழுதைகள் சுமை நழுவாமல் நெஞ்சுக்கவுறுகட்டு புட்டத்தில் புண்ணாக்கினாலும் வேதனையோடு கழுதைகள் மேடேறும் கம்பீரமான காட்சிகளையும், மனுச வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்னுதான் என்பதை வாசித்து தெரிந்துகொள்வோம்.

நாவல்: கழுதைப்பாதை

ஆசிரியர்: எஸ்.செந்தில்குமார்

வெளியீடு: ஜனவரி 2020

விலை: ரூ. 375/-

பதிப்பகம் : ஜீரோ டிகிரி பப்ளிசிங்

நூல் விமர்சனம்:

செல்வக்குமார் இராஜபாளையம் 

2 thoughts on “நூல் அறிமுகம்: சுமை இறக்கி சுகம் காணலாம் “கழுதைப்பாதையில்” – செல்வக்குமார்”
  1. நூல் அறிமுகம்: சுமை இறக்கி சுகம் காணலாம் “கழுதைப்பாதையில்” – செல்வக்குமார் – அருமையான மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Selvakumar Rajapalayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *