நூல் அறிமுகம்: அம்பேத்கர்  பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்

நூல் அறிமுகம்: அம்பேத்கர்  பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்

 (கலகம் வெளியீட்டகத்தின், ‘அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? – கழுவப்படும் பெயரழுக்கு’ என்ற யாக்கன் எழுதிய நூல் குறித்த பதிவு.)

    அம்பேத்கர் என்னும் பெயரை ‘அம்பேத்கார்’ என்று நீட்டி ஒலிக்கும், எழுதும் பழக்கம் தமிழில் இருக்கிறது.  இது ஒருபுறமிருக்க இந்தப் பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியடையது என்கிற கதையும் இந்தியாவெங்கும் நெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை யாரும் கேள்வி கேட்டதில்லை.

    யாக்கன் இது குறித்த வினாத் தொடுத்து ஆசிரியருடையதல்ல; அவருடைய தந்தையாரின் பெயரின் பின்னொட்டுதான் என்பதை உரிய ஆதாரங்களுடன் இந்நூலில் விவரிக்கிறார்.

    அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் தனஞ்செய் கீர். இவர் அம்பேத்கருக்கு மட்டுமல்ல, சாவர்க்கர் உள்ளிட்ட மராட்டிய மண்ணின் மைந்தர்கள் பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அம்பேத்கரின் வரலாறு இதுகாறும் சொல்லப்பட்டு வருகிறது.

     சதாராவில் இரு பிராமணர்கள் அம்பேத்கருக்கு உதவியதாகவும் அவர்களின் ஒருவர், அம்பேட்கர் என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒருவர், பீமா ராவ் ராம்ஜி என்ற பெயருக்குப் பின்னாலிலிருந்த ‘அம்பவடேகர்’ என்ற குடும்பப்பெயரை நீக்கி தனது குடும்பப் பெயரான ‘அம்பேத்கர்’ என மாற்றி எழுதியதாகக் தனஞ்செய் கீர் குறிப்பிடுகிறார்.

   அடுத்து அம்பேத்கர் வரலாற்றை எழுதிய டி.சி.அஹிர் இந்த பெயர் மாற்றத்தைக் குறிக்கிறார். ஆனால் பிராமண ஆசிரியர் என்பதற்குப் பதிலாக ஆசிரியர் என்று மட்டும் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது.

நீரிசை ...: அம்பேத்கர் பெயர் பார்ப்பன ...

   அம்பேத்கர் மறைவிற்குப்பின் அவரது எழுத்துகளைத் தேடித் தொகுத்த அறிஞர் வசந்த் மூன் எழுத்துகளில், அம்பேத்கர் என்ற குடும்பப்பெயர் கொண்ட பார்ப்பன ஆசிரியர் பெயர் மாற்றம் செய்ததையும் 1927 அம்பேத்கர் அவரைச் சந்தித்தாகவும் அவர் எழுதிய எழுதிய கடிதம் ஒன்றை பாதுகாத்ததாகவும் குறிப்பு வருகிறது. ஆனால் அக்கடிதம் எங்கும் கிடைக்கவில்லை.

   இந்த வரலாறுகளைக் கொண்டுதான் அம்பேத்கரை நாம் அறிந்து வந்திருக்கிறோம்; இவைகள்தான் நமக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.

   1900 சதாரா பள்ளியில் 9 வது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது பீவா ராம்ஜி ஆம்பேட்கர் என்று ‘மோடி’ எழுத்தில் கையெழுத்திட்டுள்ளார். பிறந்த நாள் 14.04.18991 என்று பதிவாகியுள்ளது. தபோலில் இருந்த பள்ளியில் ஏற்கனவே இரண்டாண்டுகள் படித்திருந்ததால் அவரால் மோடி எழுத்தில் கையெழுத்திட முடிந்திருக்கிறது என்ற விவரங்கள் நூலில் (பக்.38) விளக்கப்படுகின்றன. (‘மோடி’ என்பது தேவநாகரி வரிவடிவத்தைச் சுருக்கி, மராத்தி மொழியை எழுதினர். தஞ்சை மராட்டியர்களின் சரஸ்வதி மஹால் நூலகத்தில் மராட்டிய மோடி ஆவணங்கள் இருக்கின்றன.)

  பள்ளியில் சேரும்போது பெயர்ப்பதிவு மற்றும் கையெழுத்தில் ஆம்பேட்கர் என்று இருக்கும்போது பிராமண ஆசிரியர் மாற்றினார் என்பதெல்லாம் கட்டுகதையன்றி வேறென்ன?

   Surname என்பது சாதிப்பெயர் அல்லது பட்டத்தைக் குறிக்கும் ஒன்றாகும். அம்பேத்கர் என்ற பட்டப்பெயர் பிராமணர்க்கு இல்லை என்பதும் இதை வலுவாக்குகிறது.

     “சி.பி.கேர்மோட் என்பவர் 14 தொகுதிகளில் மிக விரிவாக அம்பேத்கரின் வாழ்வை மராத்தி மொழியில் தொகுத்துள்ளார். 1968 தொடங்கி 2000 வரை ஒவ்வொரு தொகுப்பாக அவை வெளியிடப்பட்டன. இன்னும் அவை ஆங்கிலத்தில் பெயர்க்கப்படவில்லை. நாம் அறிந்திராத பல செய்திகள் அம்பேத்கர் குறித்து அவற்றில் கிடைப்பதாகத் தெரிகிறது. கெய்ல் ஒம்வேத், கிறிஸ்டோப் ஜேப்ரிலோ முதலான அம்பேத்கரிய ஆய்வாளர்கள் சமீபத்தில் எழுதியுள்ள (Ambedkar, Towards an Enlightened India, 2004; Dr. Ambedkar and untouchability, 2005) சில நூற்களிலும், வேறு சில கட்டுரைகளிலும் (S.M.Gaikwad, Ambedkar and Indian Nationalism, EPW, March 7, 1998) நமக்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. அவை அம்பேத்கர் குறித்த வேறு பல பரிமாணங்களை வெளிக்கொணர்கின்றன”, (பக்.216, பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் – அ.மார்க்ஸ், உயிர்மை வெளியீடு, ஜூன் 2016 மற்றும் பக்.13, அம்பேத்கர் வாழ்வில் அறிந்துகொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள் – அ.மார்க்ஸ், புலம் வெளியீடு, டிச. 2009)

அம்பேத்கர் கைபட்ட குளத்தை ...

     அ.மார்க்ஸ் கூறும் அந்த நூல்தொகுப்புகள் ஆங்கிலத்தில் வந்ததா என்றும், அதன்பிறகு தமிழில் வர எவ்வளவு காலமாகுமோ தெரியவில்லை. நமக்கு இதுவரையில் சொல்லப்பட்ட வரலாறுகளையும் புனைவுகளையும் மீளாய்வு செய்து பிரித்தறிய  வேண்டியிருக்கிறது. அவ்வகையில் இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும்.

     பீமாராவ் என்று பெற்றோர் பெயரிடல், ‘பீவா’ என செல்லமாக அழைத்தல், எல்பின்ஸ்டன் கல்லூரியில் பயிலும்போது எழுதிய கடிதம் ஒன்றில் அம்பேட்கர் பீவ்ரன் ராம்ஜி என்றும் கையெழுத்திடுதல்,    கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் “என் முழுப்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். என் தந்தையின் பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்”, (பக்.54) என்று குறிப்பிடும் ஆதாரங்களும் நூலில் உள்ளன. நியூயார்க் தூதரின் பரிந்துரைக் கடிதத்தில் பீமாராவ் என்ற பீவ்ரம் அம்பேத்கர் என்றும் குறிக்கப்படுகிறது. லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் நிறுவனத்தில் அவர் கைப்பட எழுதிய விண்ணப்பத்தில் (1916) அம்பேத்கர் பீமாராவ் ஆர் (Ambedkar Bhimarao R) என்று எழுதியுள்ளார். நூற்றாண்டு நினைவில் (2016) இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. (பக்.64)

    பெயரில் என்ன இருக்கிறது? என்றில்லாமல் சுமையாகத் தொடரும் கறையை அகற்றியுள்ளார் யாக்கன். ஒடுக்கப்பட்ட மனிதர்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களுடன் இம்மாதிரியான அழுக்குகளையும் கற்பிதங்களையும் அகற்ற நீண்ட கருத்தியல் போராட்டம் நடத்த வேண்டிய தேவையை இது நமக்கு நினைவூட்டுகிறது.

நூல் விவரங்கள்:

நூல்  பெயர்:  ‘அம்பேத்கர்’ என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையதா?
கழுவப்படும் பெயரழுக்கு
ஆசிரியர்: யாக்கன்

 

வெளியீடு: 

 கலகம் வெளியீட்டகம்

வெளியீடு எண்: 50

முதல் பதிப்பு: 23 ஜூலை 2018

இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2018

பக்கங்கள்: 64

விலை:  50

 

 தொடர்பு முகவரி: 

 கலகம் வெளியீட்டகம்,

1/7, அப்பாவு தெரு,

எல்லீசு சாலை,

சென்னை – 600002,

பேச: 044-42663840

 

நன்றி.

தோழமையுடன்…

மு.சிவகுருநாதன்

திருவாரூர்

9842402010

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *