புக்கர் டி வாஷிங்டன் – ‘கைகள் மூளை மற்றும் இதயத்திற்கான ஒருங்கிணைந்த கல்வி முறை’  (Educating the hands ,head and  the heart) 

பத்தொன்பதாம் நூற்றாண்டின்  இறுதியில் உலகம் முழுவதிலும் உள்ள அடிமைத்தனங்கள்  கொஞ்சம் கொஞ்சமாக விலகி சுதந்திர காற்று வீசத்தொடங்கியது. அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட மக்களை கல்வியின் துணைகொண்டு  மீட்டெடுக்க  அந்த அடிமை வர்க்கத்தில் இருந்தே  எழுந்த  தலைவர்களுள்  ஒருவர் தான் புக்கர் டி வாஷிங்டன். சிறுவயதில்  உப்பு ஆலை,  சுரங்கத்தொழில்  என  பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளராக இருந்து தனது சொந்த முயற்சியால்  கல்வி கற்று  முன்னேறியவர். தன் இனமக்களை  முன்னேற்ற, வித்தியாசமான கல்விமுறையை  கையில் எடுத்தார்.

 மேமாதம், 1881 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின்,  அலபாமா மாகாணத்தில், டஸ்கிகீ நகருக்குச் செல்கிறார் வாஷிங்டன். அப்பகுதியில் பள்ளி என்று தனியாக எதுவும் இல்லாததை கவனிக்கிறார். தேவாலயங்களிள் முறைசாரா கல்வி வழங்கப்பட்டு வந்தது.  ஒரு புத்தகத்தை 5 மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் காட்சியையும் அவர் கண்டார். இப்பகுதியில் மக்களுக்கு என்று ஒரு பள்ளிக்கூடம் நிறுவ எத்தனித்தார். அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்த இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கல்வி ஒன்றே உதவும். அதுவும் அக்கல்வி எண்ணையும் எழுத்தையும் மட்டும் கற்றுத்தரும் கல்வியாக இல்லாமல் உடனடியாக அம்மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் வாழ்க்கை கல்வியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆங்கிலேய கல்வி முறை, ஒடுக்கப்பட்ட இம்மக்களை உயர்த்த உதவாது, வெறும் புத்தகப் படிப்பு மட்டுமே இவர்களுக்கு போதாது, தற்போது இச் சமூகத்திற்கு தேவையானவர்கள் ஆசிரியர்கள்,விவசாயிகள், தொழில் முனைவோர், மொத்தத்தில் நல்ல மனிதர்கள். ஏழ்மையில் மூழ்கி இருந்த அம்மக்களுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வி முறை தேவை. அதன்படி ‘கைகள், மூளை மற்றும் இதயத்தை பயிற்றுவிக்கும் கல்விமுறையை’ இம்மக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார். 

தொழில் கல்வி மூலமாக இம்மக்களை அடிமை வாழ்விலிருந்தும், ஏழ்மை நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதியும் நிதியும் அப்போது இல்லை. எனவே அவற்றை உருவாக்க வேண்டும். குதிரை கொட்டகை, கோழி பண்ணையில் தனது பள்ளியை துவங்கினார் வாஷிங்டன். அந்நிறுவனத்தின் பயிலும்  மாணவர்களைக் கொண்டே  பள்ளி கட்டிடங்கள்  எழுப்பப்பட்டன.  செங்கல் தயாரித்தல் முதல்  கட்டிடத் தொழில் வரை மாணவர்கள் பாடமாக கற்றபடியே பள்ளி  கட்டிடத்தை  எழுப்பினர். அவ்வாறு துவங்கப்பட்ட பள்ளியே இன்று உலகத்தரம் வாய்ந்த டஸ்கிகீ பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது.

டஸ்கிகீ நகரின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்தது. மாணவர்களுக்கு அவர்கள் சார்ந்த பகுதியில் உள்ள தொழிலை கற்பித்தல் என்று முடிவெடுத்திருந்தார். முதன் முதலாக டஸ்கிகீ பள்ளி துவங்கும் போது வெள்ளையர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. வெள்ளையர்களின் கவலை ‘இந்த அடிமை மக்கள் படிக்க சென்றுவிட்டாள் அவர்கள் தற்போது செய்யும் வேலைகளை யார் செய்வது?’ என்பதே.

இந்த எதிர்ப்புகளை தாண்டி பள்ளி செயல்பட ஆரம்பிக்கிறது. இப்பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தைகளுக்கு முதலில் ‘தன் சுத்தம் பேணுதல், தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுதல், சமுதாயத்தில் ஒழுக்கமுள்ள நல்ல மனிதனாக எவ்வாறு வாழுதல், தன் வாழ்வியலுக்கு தேவையான பொருளை எவ்வாறு ஈட்டுதல்’ போன்றவற்றிலிருந்து கற்பிக்கத் துவங்குகின்றனர்.

“ஒவ்வொரு மாணவரும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். கிராமத்தில் இருந்து கற்று அங்கே விவசாயம் செய்ய வேண்டும்” என்று கூறினார். சில மாணவர்கள் இதுபோன்ற கைத்தொழில் கற்பதை வெறுத்தனர். அதற்கு வாஷிங்டன்னின் பதில் ‘எந்த தொழிலும் மதிப்பு குறைந்ததாக பார்க்கக்கூடாது’ என்பதே. இவர் பரிந்துரைத்த தொழிற்கல்வியின் மூன்று முக்கிய தளங்கள் கைகள், மூளை மற்றும் இதயம் இவற்றுக்கான ஒருங்கிணைந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதே.

கைகளுக்கான கல்வி என்று இவர் கூறுவது ஒவ்வொரு மாணவரும் கட்டாயமாக ஒரு தொழில் கல்வியை பயில வேண்டும் அதன்படி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும்‌.

மூளைக்கான கல்வி என்று கூறுவது மாணவர்கள் தங்கள் அறிவை தாங்களே கட்டமைத்தல்‌.  அவர்கள் பேசும் மொழிக்கான இலக்கணத்தையும், வாழ்க்கைக்கு தேவையான கணிதத்தையும் அவர்களே வகுத்தல். இதன் மூலமாக தங்கள் அறிவை தாங்களாகவே கட்டமைக்க முடியும்.

மாணவர்களின் நன்னடத்தை ஒழுக்கம் சார்ந்த பண்பு மற்றும் அழகுணர்வு ஆகியவற்றை இதயத்திற்கான கல்வி என்று கூறுகிறார்.

வளர்ச்சி என்பது இரண்டு முக்கிய காரணிகளை கொண்டது ஒன்று தற்சார்பு மற்றொன்று சுயமரியாதை. இவர் பள்ளியில் வழங்கப்பட்ட தொழில் கல்வி ஆப்பிரிக்க- அமெரிக்க மக்களுக்கு இந்த இரண்டையும் அளித்தது. அப்பள்ளி மாணவிகள் தொழில் கல்வி மூலமாக வேதியல் சமன்பாடுகளை மட்டும் அறியவில்லை. மாறாக வேதியலை பயன்படுத்தி எவ்வாறு மண்வளம் பெருக்குதல், விவசாய உற்பத்தி பெருக்குதல், கால்நடை வளர்ப்பு என அனைத்திலும் வேதியலின் பயன்பாடு குறித்து மாணவர்கள் கற்கின்றனர். வடிவியல் மற்றும் இயற்பியல் கற்கும்போது இரும்புத் தொழில், செங்கல் சூளை, விவசாயம் போன்றவற்றில் இத்துறைகளில் செயல்முறை பயிற்சியையும், பயன்பாடுகளையும் மாணவர்கள் கற்கின்றனர். அக்காலகட்டத்தில் இது ஒரு கல்விப் புரட்சியாகவே கருதப்பட்டது. ஏனெனில், தொழிற்கல்வி என்பது அப்போது வெள்ளையர்களுக்கானதாக மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட தொழில் கல்வியை அடித்தட்டு வர்க்கத்தினருக்கு கொண்டு சேர்த்தவர் வாஷிங்டன் அவர்கள்.

இதயத்தை பயிற்றுவிக்கும் கல்விமுறையில் மாணவரிடையே நற்பண்புகளை விதைத்து மற்றவர்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்றார். 

உண்மையான கல்வி அறிவாளன் என்பவன் இச்சமூகத்தில் உள்ள மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது கருனையாகவும் அன்போடு நடந்து கொள்பவனே. இந்த குணத்தை வளர்க்காத கல்வி யாருக்கும் பயன்படாமல் போகும் என்கின்றார்.

தற்போதைய சூழ்நிலை செயல்பட்டுவரும் மிகவும் பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாற்றும் முறைகளாக விளம்பரப்படுத்தப்படும்  holistic education, eco education, schooling for sustainability, project based learning, education for sustainable development போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதே வாஷிங்டன் கூறிய கல்வி முறையாகும்

 தனக்கென கைப்பிடி மண் கூட இல்லாத அடிமையிலிருந்து மீண்டுவந்த ஒரு இனத்தை பொருளாதார முன்னேற்றம் அடைய வைத்தல் இந்த வகை கல்வி முறையால் தான் முடியும் என்று உணர்ந்திருந்தார்.நாளடைவில் டஸ்கிகீ நிறுவனத்தின் மாணவர்கள் வெற்றிகரமான விவசாயிகளாகவும், பயிற்சி பெற்ற உற்பத்தியாளர்களாகவும் இன்னும் அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களாகவும் பன்முகத் தன்மையோடு விளங்கினர்.

புக்கரின் கல்வி முறையை முடிப்பதற்கு முன் இதே தொழிற்கல்வி முறையை நம் நாட்டில் செயல்படுத்த முடியுமா என்ற எண்ணம் தோன்றுகிறது. காந்தியடிகள் கூறிய ஆதார கல்விமுறையும், ஜாகீர் உசேன் பரிந்துரைத்த கல்விமுறையும் ஏன் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் போனது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.தற்போது கூட புதிய கல்விக் கொள்கை 2020 தொழில் கல்வியை விரிவுபடுத்தப் போவதாக வந்த அறிவிப்பும் பொதுமக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பைப் பெற்றது. அமெரிக்காவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறை நம் நாட்டில் ஏன் வெற்றி பெறவில்லை?

இதற்கு காரணம் கல்வியின் நோக்கம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். அந்நாட்டிலுள்ள பழக்கவழக்கங்கள்,சமூக பொருளாதார தேவை போன்றவற்றைப் பொறுத்தே கல்வியின் நோக்கம் அமையும். அப்படி பார்க்கும்போது நம் நாட்டில் உள்ள வலுவான  சாதிய கட்டமைப்பு இந்த தொழில் முறைக் கல்வியையும்,  அதன் நோக்கத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறது. சாதிக்கு ஏற்ற தொழில் என்று வகுத்து வைத்துள்ள ஒரு சமூகத்தில் தொழில்முறை கல்வி என்பது சாதிய முறையை தூக்கிப் பிடிக்கும் ஒரு சக்தியாகவே இருக்கும். அதனால்தான் காலம் காலமாக இந்தியாவில் தொழில்முறைக் கல்வி தோல்வி அடைந்து வருகிறது. இந்திய சமூகம் உண்மையிலேயே  தொழிற்கல்வி அளித்து மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த விரும்பினால் அதற்கு முதற்கட்டமாக சாதிய கட்டமைப்பை சமூகத்தில் இருந்து நீக்கும் வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும். 

இவை அனைத்தையும் மனதில் கொண்டே டாக்டர் அம்பேத்கர் “சாதி ஒழிப்பு” (Annihilation of caste)  சிந்தனையை தன்  வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி வந்தார். அவர்  தான் மறைந்த பின்பும் தன் எழுத்துக்கள் மூலமாக இன்றுவரை நம்மை வழி நடத்தி வருகிறார். அந்த ஜாதி ஒழிப்பு சிந்தனையை நம் இந்திய சமூகத்தில் பரவலாக்கும் போது தொழிற்கல்வி என்ற கனவு நனவாகும். இதை செய்யாமல் இந்தியாவில் தொழில் கல்வி என்பது என்றுமே மிளிராது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இரா. கோமதி, ஆசிரியை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *