கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் | கல்வி | கல்வியை | சமூக | kalvi valarchiyin munnodikal | https://bookday.in/

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்

 

புதிய விடியலுக்கான பாதை புத்தகங்களில் இருந்தும் கல்வியில் இருந்தும் மட்டுமே கிடைக்கும் என்ற அடிப்படையில் மாற்றுக் கல்வி குறித்த பன்முகப்பட்ட பார்வையையும் முற்போக்குக் கல்விக்கான புதிய அணுகுமுறைகளையும் உலகிற்கு வழங்கிய கல்வியாளர்கள் ஜான் ஆமோஸ் கொமேனியஸ், ஜீன் ஜாக்கஸ் ரூசோ, ஜோகான் ஹென்றிஸ் பெஸ்டலோசி, ஃபிரட்டரிக் வில்லியம்ஸ் அகஸ்ட் ஃபுரொபல், ஜான் டுயுயி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் கூடிய கல்விச் சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பு இது.

சமூக நாகரீக அரசியல் நிலைப்பாடுகளில் கல்வியின் தாக்கம் எப்படி மக்களுக்கு புதிய புதிய சிந்தனைகளை வழங்கி அதன் மூலம் புதிய புதிய அனுபவங்களை கொடுக்கிறது என்பது கண்கூடாக அறிந்த உண்மை.. அவ்வழியில் முற்போக்குக் கல்விக்கான திறவுகோல்களை உலகத்தின் கல்வி தொடர்பான நிகழ்வுகளுக்குள் விதைத்த ஆறு முக்கியமான வாழ்வியல் முற்போக்கு வாதிகளை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது.

கல்வியில் முற்போக்கு என்பது சரித்திரத்தில் நிலை பெற்றிருக்கும் சமூக அரசியல் சந்தர்ப்பங்களில் கொழுந்து விட்டு எரியவும் செய்த விசாலமான ஒரு எதிர்ப்பு நடவடிக்கை..அத்துடன் குழந்தைகளின் மன இயல்புகளுக்கேற்ப கல்வியை எவ்வாறு வழங்குதல் என்பதை இந்த அறிஞர்கள் தங்களின் கருத்துகளில் வெகுசிரத்தையுடன் பதிவு செய்திருக்கின்றனர்.

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் | கல்வி | கல்வியை | சமூக | kalvi valarchiyin munnodikal | https://bookday.in/

பலரும் கருதுவதைப் போல கல்வியில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கும் எந்த ஒருவரும் உடனடியாக அதில் சிறப்பான விளைவுகளை எதிர்பார்த்தல் கூடாது. கல்வி என்பது விதை போன்றது நாம் குழந்தைகளின் மனதில் எழும் எண்ணங்களை சிறப்பாக்கி அவற்றை ஒருமுகப்படுத்தி நேர்வழியில் சிறப்பான பாதையில் அவர்களை நடத்திக் காட்டினாலே மிகச் சிறந்த எதிர்காலம் சமூகத்திற்கு கிடைக்கும் என்பதை இந்த கல்வியியல் நிபுணர்கள் தங்களின் வாழ்க்கையின் வழியே எடுத்துக் கூறுகின்றனர். இதில் இடம்பெற்றிருக்கும் தத்துவவாதிகள் தங்களின் வாழ்க்கையின் மூலமாகவே வறுமையிலும் புறக்கணிப்பிலும் உழன்று கொண்டு தங்களுக்கான எதிர்காலத்தைத் தாமே கட்டமைத்துக் கொண்டவர்கள். அந்த வகையில் சமூகத்திற்கான எதிர்காலத்தை நிலை நிறுத்துவதற்கான சிறப்பான பங்கு கல்விக்கு உண்டு என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள்.

கல்வி எப்படி அமைய வேண்டும் என்பதை கொமேனியஸ் பின்வருமாறு வரையறுக்கிறார். வகுப்பிற்குள் கல்வி கற்பது பாதி நேரமாக்கப்பட வேண்டும். மீதமுள்ள பாதி நேரம் குழந்தைகள் சொந்தமாய் படிக்க வேண்டும் குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டாத எந்த பாடத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தன்னுடைய நீண்ட நெடிய நடைமுறை செயல்பாட்டின் மூலமே குழந்தை முழுமையாக கற்றலை உணர்தல் அவசியம். கொமேனியஸ் பார்வையில் கல்வி பற்றி மேலும் நாம் அறிந்து கொள்வது “” நாடு பொருளாதார நிலை வர்க்கம் மதம் பாலினம் ஆகியவை துல்லியமான கல்வி கற்றலுக்கு தடையாக இருத்தல் கூடாது”” என்பதை வலியுறுத்தும் அவரது பொதுநலப் பார்வை.

முறைப்படி கல்வி கற்காத ஒருவர் ஒரு கல்வி நிறுவனத்திலும் படிக்காதவர் இன்றுவரை கல்வி தொடர்பான அனைத்து படிநிலைகளிலும் வைத்துப் போற்றப்படும் சாதனையாளராக மாறி இருக்கிறார் என்றால் அது ரூசோ அவர்களுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பான புகழ். அனாதையாகி இளம் பருவத்திலேயே தனித்துவிடப்பட்டவர் பற்பல வேலைகளைச் செய்து பித்தனைப் போல் உருமாறி பிறகு கல்வியின் மீதான தாக்கத்தால் தன்னை உணர்ந்து கொண்டு கல்வி தொடர்பான தத்துவங்களை நிலைப்பாடுகளை வெளிக் காட்டியவர். குழந்தைப் பருவத்திற்கு என அதனுடைய பார்வைகளும் சிந்தனைகளும் உணர்ச்சிகளும் உள்ளன. அவற்றுக்கு பதிலாக நம் முறைகளைத் திணிக்கும் அளவு முட்டாள்தனம் நிறைந்தது வேறொன்றுமில்லை. முதிர்ந்தவரை முதிர்ந்த ஆளாகவும் குழந்தையை குழந்தையாகவும் பார்த்துத் தான் காரியங்களை கைக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும்
இயற்கையின் மூலமாக கல்வி
மனிதன் மூலமாக கல்வி
பொருட்களின் மூலமாக கல்வி
என மூன்று விதமான கல்வி முழுமையாக கிடைத்தால் அது மிகச் சிறப்பான ஆளுமையாக வெளிப்படும் என்பது ரூசோவின் வாதம். மனிதன் சுதந்திரமானவனாகப் பிறக்கிறான். ஆனால் எல்லா இடங்களிலும் அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளான். என்பது ரூசோவின் மிகச்சிறந்த பொன்மொழி.

கல்வியின் நவீன பயன்பாட்டை முழுமையாக உணர்த்தியவர் பெஸ்டலோசி. குழந்தையினுடைய நெருக்கமான சூழ்நிலையில் இருந்தும் வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் பாடத்தை துவக்க வேண்டும் என்பது பெஸ்டலோசியின் வழிகாட்டும் நெறிமுறை. பயன் தரக்கூடியதான அறிவு கொடுத்தல், புத்தியினுடைய கவனப் பூர்வமான நெருக்கம், மனிதனுடைய உடல், புரிந்து கொள்ளும் சக்தி, சன்மார்க்கம் ஆகியவற்றை முறைப்படி குழந்தைகளிடம் வளர்த்தல் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் என்கிறார் பெஸ்டலோசி. இன்று நாம் பயன்படுத்தி வரும் கல்வி முறைகளில் பின்பற்றப்படும் பல சிறப்புகள் பெஸ்டலோசியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
குழந்தையை மையப்படுத்திய கல்வி அனுபவங்கள் வாயிலான கல்வி செயல்முறைகளுடன் கூடிய கல்வி அனுமானம் முறையில் உள்ள கல்வி
குழு படிப்பு முறை
தனிமனித வேறுபாட்டிற்குத் தகுந்த கல்வி முழு வளர்ச்சியை லட்சியமாகக் கொண்ட கல்வி
சமூக நீதியை பெறுவதற்கான கல்வி தரத்தை மையப்படுத்திய மதிப்பீட்டு முறை
என இத்தனை சிறப்புகளையும் பல நூற்றாண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் பெஸ்டலோசி.

இன்று பரவலாக செயல்படுத்தப்படும் பால்வாடி என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான கிண்டர் கார்டன் முறையை அறிமுகப்படுத்தியவர் ஆகஸ்ட் ஃப்ரோபல். இவர் தனது கல்வி முறையின் வாயிலாக
சுதந்திரமான செயல்பாடுகள்
ஆக்கும் பங்களிப்பு
சமூகப் பங்களிப்பு
உடல் அசைவுகளால் ஆன வெளிப்படுத்துதல்
போன்ற முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு கல்வியை வழங்குதல் அவசியம் என்று உணர்த்துகிறார்.

இருபதாம் நூற்றாண்டில் உலகம் கண்ட மிகச்சிறந்த கல்விச் சிந்தனையாளர் உளவியல் நிபுணர் சமூக விமர்சகர் அரசியல்வாதி போன்ற பல்வேறு சிறப்புகளுக்கு காரணமானவர் 40 புத்தகங்களையும் 700க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர் கல்வி சிந்தனையாளர் ஜான் டுயுயி. மனிதப் பண்பாட்டியல் சோதனை இயல் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றின் பிரதிநிதியாக கல்வியை அடையாளம் காட்டும் இவர் செய்து படித்தல் என்னும் அணுகுமுறையை முன்வைத்து கல்வியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர். “”‘ சரியான சமூக சிந்தனைகளை கைக் கொள்ளவும் அப்படிப்பட்ட சிந்தனையை சரியான விதத்தில் செயல்படுத்தவும் குழந்தையை தயார் படுத்தவும் பிரத்தியேகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சமூக அங்கத்தினர் தான் ஆசிரியர் “”என்பது ஜான் டுயியின் கணிப்பு

அகிம்சை சத்தியம் போன்ற சிறப்பான கருத்துக்களின் வழியே கல்வியையும் இந்தியாவில் எல்லா மக்களுக்கும் முழுமையாக வழங்குவதற்கு அடிகோலியவர் மகாத்மா காந்தி. ஆனால் இன்றைய சூழலில் அவர் விரும்பிய கிராமப்புற தன்னிறைவு கல்வி எங்குமே பின்பற்றப்படவில்லை என்பது நமது தேசத்தில் மிகப்பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.
தாய் மொழியில் கற்பித்தல் பள்ளிக்கூடத்தையும் வீட்டுச் சூழ்நிலையையும் தொடர்புப்படுத்துகின்ற கல்வியை வழங்குதல்
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்படியான கல்வியை வழங்குதல்
தேசிய கல்வி முற்றிலும் இலவசமானதாய் இருத்தல்
ஆசிரியர்கள் திறமையானவர்கள் ஆக இருப்பதைவிட நற்குணங்களை உடைய சமூக முன்னேற்றத்திற்கான அங்கமாக இருத்தல் அவசியம்

என்பது போன்ற காந்தியின் கல்விக் கொள்கைகள் இன்று எத்தனை சதவீதம் நமது கல்வியில் புகுத்தப்பட்டு பின்பற்றப்படுகிறது என்பது நமக்கு நாமே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.

“””தங்களுடையதல்லாத ஒரு மொழியில் கல்வியைக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு நாட்டில் குழந்தைகள் தற்கொலை தான் செய்து கொள்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது அவர்களுடைய பிறப்புரிமையை அபகரிப்பது ஆகும். ஒரு வெளிநாட்டு மொழி சிறுவர்களின் மீது பெரும் பாரத்தைச் சுமத்துகிறது. அது அவர்களுடைய சாதாரணமான சக்திகளை அபகரிக்கிறது. வளர்ச்சி தடை படுகிறது. அதனால் அவர்களைச் சொந்த வீட்டில் இருந்து தனிமைப்படுத்துகிறது. அப்படிப்பட்ட காரியத்தை மிக முக்கியமான ஒரு தேசிய விபத்தாகவே நான் கருதுகிறேன்””””. என்று காந்தியடிகள் கூற்றை இன்று நாம் இன்றைய கல்வியோடு பொருத்திப் பார்க்கும்போது நாம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி முறையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கிறோம் என்பதை உணர முடிகிறது.

குழந்தைகளின் பிஞ்சு மனதிற்குள் எதுவுமே முழுமை பெறாமல் வெற்றுத்தாள் போல நம்மிடம் வருவார்கள் அவர்களுக்கு செயல்பாட்டின் வழியேயும் சிந்தனைகளைத் தூண்டும் விதமாகவும் கல்வியை அறிமுகப்படுத்துதல் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மனித ஆற்றலை அவர்களுக்குள் உருவாக்கும் என்பதை கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் நூல் நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

நூலின் தகவல்கள் 

நூல் : கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்

ஆசிரியர் : டி.வி. புருஷோத்தமன்

தமிழில் : மு. ந. புகழேந்தி

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் மற்றும் இந்திய மாணவர் சங்கம்

முதல் பதிப்பு : நவம்பர் 2008

மூன்றாம் பதிப்பு : ஜூன் 2015

பக்கம் : 80

விலை : ரூ.70

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் | கல்வி | கல்வியை | சமூக | kalvi valarchiyin munnodikal | https://bookday.in/

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *