‘எவ்வளவு வெயிலோ அவ்வளவு நிழல்’ கவிதை தொகுப்பு – நூல் அறிமுகம்
சேய்மைக்காட்சிகளும் அண்மைக்காட்சிகளும்
பாவண்ணன்
ஆறு மாடிகளைக் கொண்ட பெரியதொரு வணிகவளாகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். ஆறாவது மாடியில் நண்பருடைய ஓவியப்பயிற்சிக்கூடம் இருந்தது. அவரைப் பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காகத்தான் அங்கு போயிருந்தேன். நான் போன நேரத்தில் அவர் இல்லை. அங்கு ஓவியம் வரைந்துகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் என்னிடம் காத்திருக்கும்படி சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய நாற்காலியில் அமராமல் அவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.
அங்கிருந்து சிறிது தொலைவில் படிக்கட்டை ஒட்டியிருந்த கம்பித்தடுப்பில் முதுகைச் சாய்த்த நிலையில் கைப்பேசியில் கவனம் குவித்த நிலையில் ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அந்தப் பெண்ணைத்தான் அவர்கள் இருவருமே ஓவியமாக வரைந்துகொண்டிருந்தனர். கண்ணெதிரில் நிகழும் அந்த அதிசயத்தைக் காணும் ஆர்வத்தோடு நான் சதுரச்சட்டகத்தில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளைத்தாளில் இருவரும் வரையும் இரு ஓவியங்களையும் மாறிமாறிப் பார்க்கத் தொடங்கினேன்.
ஒருவர் அப்பெண்ணின் தோற்றத்தை ஓர் அண்மைக்காட்சியாக வரைந்துகொண்டிருந்தார். இரண்டடிக்கு இரண்டடி உள்ள அந்த வெள்ளைத்தாளில் அப்பெண்ணின் முகம் துல்லியமாக உருப்பெற்று வந்தது. இன்னொரு ஓவியர் அதே பெண்ணின் தோற்றத்தை ஒரு சேய்மைக்காட்சியாக வரைந்துகொண்டிருந்தார். வளாகத்தின் கடைமுகப்பு, வெளியே நீண்டிருக்கும் கம்பிகளில் தொங்கும் ஆயத்த ஆடைகள், படிக்கட்டில் ஏறி வருபவர்கள், இறங்கிச்செல்பவர்கள், அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பூத்தொட்டிகள் என அனைத்தையும் தீட்டி, அவற்றுக்கிடையில் தனக்கேயான தனி உலகத்தில் திளைத்து நிற்கும் இளம்பெண்ணின் தோற்றத்தை வரைந்துகொண்டிருந்தார்.
எனக்கு அவ்விரு ஓவியங்களையும் பார்க்கப்பார்க்க அதிசயமாகவும் பரவசமாகவும் இருந்தது. அப்பெண்ணை வரைய வேண்டும் என்பதுதான் இரண்டு ஓவியர்களுடைய இலக்கு. ஒருவருடைய தேர்வு அண்மைக்காட்சியாக இருக்க, இன்னொருவருடைய தேர்வு சேய்மைக்காட்சியாக அமைந்துவிட்டது. இரண்டு ஓவியங்களிலும் அந்தப் பெண்ணின் தோற்றம் அற்புதமாக அமைந்திருந்தது.
கல்யாண்ஜி எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘எவ்வளவு வெயிலோ அவ்வளவு நிழல்’ கவிதைத்தொகுதியை வாசித்தபோது திடீரென நான் அந்த ஓவியங்களைத்தான் நினைத்துக்கொண்டேன். கல்யாண்ஜி தன் பெரும்பாலான கவிதைகளில் சேய்மைக்காட்சிகளை வரையும் ஓவியராகவும் ஒருசில கவிதைகளில் அண்மைக்காட்சிகளை வரையும் ஓவியராகவும் இருப்பதை உணரமுடிந்தது.
இந்தக் கிளையில்தான் அமர்ந்திருந்தது
ஆடாத ஒற்றை இலையையே பார்த்தது
இந்தக் கிளையில் இருந்து போய்
மேல் கிளையில் அமர்ந்தது
முண்டும் முடிச்சும் அதிகம் அங்கு
நுனிக்கிளைக்கு
பக்கவாட்டில் நகர்ந்தது
தேவையே இல்லாமல்
பத்தடி உயர அந்தரத்தில் பறந்தது
மீண்டும் ஆரம்ப அடிக்கிளைக்கு
வந்து அமர்ந்தது
காணோம்
பறந்துபோய்விட்டது
சிறகுகள் இருந்தாலே
இப்படி ஒரு அவஸ்தைதான்
இந்தக் கவிதை முன்வைக்கும் சித்திரம், முதலில் எல்லாத் திசைகளிலும் கிளைபரப்பி நிற்கும் மரத்தை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது. பிறகு அம்மரத்தைச் சுற்றிப் பறக்கும் ஒரு பறவையைக் காட்டுகிறது. அப்பறவை ஆடாத ஒற்றை இலையைப் பார்த்தபடி ஒரு கிளையில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காட்டுகிறது. அதே பறவை சில கணங்களுக்குப் பிறகு அக்கிளையிலிருந்து பறந்து வேறொரு கிளையை நாடிச் செல்லும் போது, அந்த இடம்பெயர்வையும் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து அப்பறவை மற்றொரு கிளைக்குச் செல்கிறது. இறுதியில் கிளைமாறி கிளைமாறி அமர்ந்து பொழுதைக் கழித்துவிட்டு அம்மரத்தைவிட்டுப் பறந்துபோய்விடுகிறது. இத்தனை அசைவுகளையும் ஒருங்கிணைத்த சேய்மைக்காட்சி ஓவியமாக இக்கவிதை காணப்படுகிறது.
ஒரு மரம், சில கிளைகள், ஒரு பறவை, அதன் அசைவுகள் ஆகியவற்றை மட்டுமே கொண்ட இச்சொல்லோவியம் அளிக்கும் அனுபவம் மகத்தானது. பறத்தல் அப்பறவையின் சுதந்திரம். அந்தச் சுதந்திரத்தைத்தான் அது அனுபவிக்கிறது. பறவையாக இருப்பதன் மகிழ்ச்சியே அதன் சுதந்திரம்தான்.
சுதந்திரம் அளிக்கும் அனுபவத்தை ஒரு பறவை வழியாக உணர்த்தும் கணத்தில் அக்கவிதை ஏதோ ஒரு தருணத்தில் மானுட சுதந்திரத்தைப்பற்றிய ஒன்றாகவும் மாறிவிடுகிறது. பறவைக்கு இருக்கிற சுதந்திரம் மனிதருக்கு இல்லையா, இருக்கிறதா என்றொரு வினா பேருருகொண்டு நம் முன் நிற்கிறது. இருக்கிறது என்றால், அது எத்தகையதாக இருக்கிறது, அதை மானுடன் எப்படி பயன்படுத்துக்கிறான், ஒருவேளை இல்லை என்றால், அது எத்தகையை சூழலில் நம்மைவிட்டுத் துறந்துசென்றது என எண்ணற்ற கேள்விகள் வரிசையாக எழுகின்றன.
அருவிக்கரைக்குப் போக
இன்னும் தூரம் இருக்கிறது
அய்யனாரைக் கும்பிட வந்த
காது வளர்த்த கிழவி
ஒன்றுமில்லாத கையை நீட்டி
விடாமல் பேசிக்கொண்டிருந்தாள்
குரங்குக்குட்டியிடம்
கொஞ்சல் என்றால்
அப்படி ஒரு கொஞ்சல்
தயங்கித் தயங்கிப் பக்கத்தில்
நகர்ந்துவந்த குட்டி
நீண்டிருந்த வெற்றுக்கையில் இருந்து
எடுத்துக்கொண்டது
இந்த உலகத்தில் பழுத்திருந்த
அத்தனை கனிகளையும்
இக்கவிதையும் ஒரு சேய்மைக்காட்சிக் கவிதையே. தொலைதூரத்தில் அருவி, அதை ஒட்டியிருக்கும் ஐயனார் கோவில், அக்கோவிலை நோக்கி நீண்டு செல்லும் ஒரு பாதை, அதில் நடந்துசெல்லும் ஒரு கிழவி, அந்தப் பாதையோரத்தில் ஒரு மரம், அம்மரக்கிளையில் ஆடிக்கொண்டிருக்கும் குட்டிக்குரங்கு, புன்னகை பூத்த முகத்தோடு வெறும் கையை நீட்டி அக்குட்டியை அருகிலழைக்கும் கிழவி, தடையில்லாமல் நெருங்கிவந்து தன் முன்னால் நீட்டப்பட்ட பழத்தை எடுப்பதுபோல நடித்து கிழவிக்கு மகிழ்ச்சியூட்டும் குட்டிக்குரங்கு என பல சலனங்களோடு காணப்படுகிறது இச்சொல்லோவியம்.
கொஞ்சிப் பேசியபடி கைநீட்டும் கிழவி, புன்னகைத்தபடி தொட்டெடுக்கும் குரங்கு என இரு உருவங்கள் மட்டுமே இக்கவிதையில் தென்படுவதாகத் தோன்றினாலும், கண்ணால் பார்க்கமுடியாத, புலன்களால் மட்டுமே உணரக்கூடிய முக்கியமானதொரு உண்மை அடங்கியிருக்கிறது. எடுப்பதுபோல கைதொட்டுச் சென்ற குட்டிக்குரங்கின் தீண்டலின் சிலிர்ப்பை அசைபோட்டபடி அக்கிழவிக்கு அருவிக்கரையின் தொலைவைக் கடந்துவிட முடியும். கிழவியின் கொஞ்சிப்பேசிய முகத்தை அசைபோட்டபடி அக்குட்டிக்குரங்கு அன்றையை பொழுதைக் கழித்துவிடமுடியும். மானுட வாழ்க்கைக்குத் தேவையானதெல்லாம் ஆதரவான ஒரு குரல். மேலும் ஆதரவான ஒரு தீண்டல். அவற்றை நாம் பிறருக்கு வழங்குகிறோமா அல்லது பிறரிடமிருந்து பெறுகிறோமா என்பது நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. கல்யாண்ஜி கிழவியையும் குட்டிக்குரங்கையும் காட்டும் அந்தச் சேய்மைக்காட்சியை கண்ணிமைக்கால் பார்க்கும்தோறும் இக்கேள்வி பேருருகொண்டு எழுகிறது.
நேற்றிரவு பின்வாசல் வழியாக வந்தபோது
அந்தப் பூனையிடம் இருந்தது
திருடனைப்போல, ஒரு பதுங்குதல்
இன்று காலை அதே பூனை
முன்வாசல் வழியாக வந்தது
தெருவில் மீன் வாங்கிவிட்டு
தளர்வாடையுடன் வரும் பெண்ணின் சிர்ப்பு
அதன் முகத்தில்
ஒன்றுமே தெரியாததுபோல
பின் மதியத்தில்
சன்னல் வழி தரையில் விழும்
இலைநிழலைப் பிடித்து விளையாடுகிறதே
எப்படி அதை நம்புவது?
ஒரே விதமான தருணத்தின் சேய்மைக்காட்சியையும் அண்மைக்காட்சியையும் இணைத்து இக்கவிதையைத் தீட்டியிருக்கிறார் கல்யாண்ஜி. ஒரு காட்சியில் இரவு நேரத்தில் தன்னந்தனியாக வரும் பூனை. இன்னொரு காட்சியில் பகல் வெளிச்சத்தில் வரும் பூனை. இரவு நேரப் பூனையின் நடையிலும் பார்வையிலும் ஒரு கள்ளம் தெரிகிறது. பகல் நேரப் பூனையின் நடையிலும் பார்வையிலும் ஒரு குழந்தைமை தெரிகிறது. ஆனால் எதை நம்புவது என்றொரு கேள்வி உடனடியாக எழுந்து எண்ணங்களைக் குழப்புகிறது.
எப்படி, எதை நம்புவது என்றொரு வினா, பூனையை மட்டும் முன்னிறுத்தியதல்ல. பிறரை, உலகை எப்படி நம்புவது என்கிற புள்ளி வரைக்கும் அவ்வினா விரிந்துசெல்கிறது. ஆனால், கணக்கியல் புதிர்களுக்கு இருப்பதுபோல ஒற்றைவிடை கொண்டதல்ல இவ்வினா. ஒவ்வொருவருடைய அனுபவம் சார்ந்தும் ஒரு விடை என ஏராளமான விடைகளைக் கொண்டது. அதுதான் உலக இயல்பு. அந்த இயல்பை அசைபோட வைக்கிறது இக்கவிதை.
உலக இயல்பை முன்வைத்து ஒரு தெளிவை நோக்கி அழைத்துச் செல்லும் சில கவிதைகளும் இத்தொகுதியில் உள்ளன. அவை அண்மைக்காட்சிகளாக அமைந்துள்ளன.
நேற்றுப் பூத்த பூ
நேற்று மிக அழகாக இருந்தது
இன்று அப்படியில்லை
வாடிவிட்டது
பூ ஒரு போதும்
அழகாக இருப்பதுபோல்
பாவனை செய்வதில்லை
அது நேற்றை மறந்துவிடுகிறது.
ஒருபக்கம் மலர்ந்திருக்கும் பூவையும் மறுபக்கம் வாடிய பூவையும் கொண்டிருக்கும் ஒரு சிறிய காட்சியை மட்டுமே இக்கவிதை காட்டுகிறது. ஆனால் அக்காட்சியில் ஒரு பேருண்மை சொல்லாத செய்தியாக அடங்கியிருக்கிறது. பூ நடிக்கவில்லை, பூ தனக்கு உண்மையாக இருக்கிறது என்பதைத்தான் அக்காட்சி சொல்லாமல் சொல்லி நிறுவுகிறது. பூ பாவனை செய்வதில்லை என்னும் வரி அக்கவிதையை மானுட வாழ்க்கையுடன் இணைத்துவிடுகிறது.
நேற்றைய பெருமை, நேற்றைய வாழ்க்கை, நேற்றைய செல்வம், நேற்றைய கோபம், நேற்றைய துரோகம், நேற்றைய போட்டி என நேற்றுகளை எப்போதும் சுமந்தபடி வாழ்வதையே உயர்வான வாழ்க்கை என மனிதர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் இன்று என்கிற புத்தம்புதிதான நிலையை ஒருபோதும் அடைவதே இல்லை. இன்றில் நின்றுகொண்டு நேற்றில் வாழ்கிறவர்களாகவே இருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக நேற்றின் சுமையோடு நடப்பவர்கள் இன்றின் வாசல் வரைக்கும் மட்டுமே வரமுடியும். அவர்கள் இன்றுக்குள் அடியெடுத்துவைத்துச் செல்லமுடியாது. நேற்றுகளை உதிர்க்கத் தெரிந்தவர்கள் மட்டுமே இன்றைக் கடந்து நாளைக்குள் செல்லமுடியும். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் புதிதாகப் பார்க்கமுடியும். பாவனை செய்வதில்லை என்னும் ஒற்றை வாக்கியம் நெடுந்தொலைவு சிந்திக்கவைக்கிறது.
எங்கள் வீட்டில் ஒரு கிளிக்கூண்டு இருந்தது
நான் அம்மாவிடம் கேட்டேன்
நம் வீட்டில் யார் கூண்டில் கிளி வளர்த்தார்கள்?
அப்பாவா, தாத்தாவா?’
அம்மா ஒரே வார்த்தையில் சொன்னாள்
எல்லோரும்தான்
கிளிக்கூண்டு தொடர்பான ஒரே ஒரு சின்ன உரையாடலையே காட்சியாகக் கொண்டிருக்கும் கவிதை இது. ”யார் கிளி வளர்த்தார்கள்?” என்பது கேள்வி. “எல்லோரும்தான்” என்பது பதில். ஒருவரையும் சுட்டாமல் பொதுவாக எல்லோரும்தான் என சொல்லும் பதில் அப்பாவையும் தாத்தாவையும் கடந்து சென்றுவிடுகிறது. ஆணினத்தையும் பெண்ணினத்தையும் கூட கடந்து சென்றுவிடுகிறது.
அடிப்படையில், மனிதர்களிடையில் ஒருவரோடொருவர் அன்போடு பழகி, ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்டு அன்பில் திளைக்கத்திளைக்க வாழும் கனவே இல்லை. மாறாக, செல்லப்பிராணிகளைப்போல ஒருவரை ஒருவர் வளர்க்கவும் பாதுகாக்கவும் மட்டுமே விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்கள் பெண்கள் அனைவரையும் தம்மால் பாதுகாக்கப்படவேண்டியவர்கள் என்றும் பாசம் காட்டப்படவேண்டியவர்கள் என்னும் பிழையான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆற்றாமையை வெளிப்படுத்தும் குரலைத்தான் அம்மாவின் பதில் எதிரொலிப்பதாகக் கருதலாம்.
பாகனுக்குத் தெரியும்
யானையை ஒருபோதும்
நூறு சதம்
வசக்கிவிடமுடியாதென்று
யானைக்கும் தெரியும்
பாகனிடம் ஒருபோதும்
முற்றிலும்
கீழ்ப்படிந்துவிடக் கூடாதென்று
ஆனாலும்
பாகம் சொல்கிறான் என்று
ஒவ்வொரு முறையும் யானை
தும்பிக்கையால் ஆசீர்வதிக்கிறது
அம்மா இடுப்புக் குழந்தையை
எல்லாம் நிகழ்வது அந்த
மிச்ச விகிதத்தின் கருணையில்
கல்யாண்ஜியின் அண்மைக்காட்சிக் கவிதைகளில் இதுவும் ஒன்று. பாகனுக்கும் யானைக்கும் இடையிலான உறவை விவரிப்பதுபோன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அதற்கும் அப்பால் சென்று மானுட உறவின் கட்டமைப்பை உணர்த்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. யானையிடம் தன் அதிகாரம் எதுவரை செல்லும் என்று பாகனுக்கும் தெரிகிறது. பாகனின் சொல்லுக்கு எதுவரை கீழ்ப்படியலாம் என்கிற வரையறை யானைக்கும் தெரிகிறது. எல்லாமே ஏதோ எழுதாத ஓர் உடன்படிக்கையின்படி நடக்கிறது. அந்த உடன்படிக்கைதான் யானையைக் கருணை கொண்டதாக நடந்துகொள்ள வைக்கிறது.
கருணை என்னும் புள்ளியைத் தொடும்போது, யானை- பாகன் உறவுக்கு அப்பால் சென்று குடும்ப உறவையும் உலக உறவையும் தொட்டுக்காட்டும் புள்ளியாக மாறிவிடுகிறது கவிதை. கருணையை அழிக்கும் தெய்வமாக மாற்றாமல் நம்மைக் காக்கும் தெய்வமாக பேணிக் காப்பது நம் கையில்தான் இருக்கிறது.
இவ்விதமாக, அண்மைக்காட்சிகளாகவும் சேய்மைக்காட்சிகளாகவும் எண்ணற்ற சொல்லோவியங்களைக் கொண்டிருக்கும் இத்தொகுதி கல்யாண்ஜியின் இருபத்தோராவது கவிதைத்தொகுதியாகும். ஒவ்வொரு காட்சியிலும் நாம் காண்பது ஒன்றாகவும் உணர்வது அந்த ஒன்றிலிருந்து விரிந்துசெல்லும் பிறிதொன்றாகவும் அமைந்திருக்கிறது. அதுவே கல்யாண்ஜியின் கவித்துவமாக மலர்ந்திருக்கிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ‘எவ்வளவு வெயிலோ அவ்வளவு நிழல்’ கவிதை தொகுப்பு |
| ஆசிரியர்: | கவிஞர் கல்யாண்ஜி |
| வெளியீடு: | சந்தியா பதிப்பகம், 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை -83. |
| விலை: | ₹.130 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻பாவண்ணன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

